இசையானவள்

இசையானவள்

11 mins read

சிறுகதை

பிரதீபா

நூல­கத்­தில் அவளை மீண்­டும் சந்­திப்­பேன் என்று சற்றும் நினைக்­க­வில்லை. என் நண்­ப­னுக்­கா­கக் காத்துக்கொண்­டி­ருந்­த­போ­து­தான் அவ­ளைப் பார்த்தேன்.

முகக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­த­தால் அவள்­தானா என்ற சந்­தே­கம் எழும்ப உற்­றுப் பார்த்­தேன். அகன்ற விழி­யும், ஆல விழு­து­போல நீண்டு கிடந்த கரிய கூந்­த­லும், அளவான உய­ர­மும் அவளை எனக்கு அடை­யா­ளம் காட்டின.

காலம் அவ­ளின் தோற்­றத்­தில் பெரி­தான மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி இருக்­க­வில்லை. அவ­ளைக் கண்டதும் எட்டு ஆண்­டு­க­ளா­கச் மனச்­சி­றைக்­குள் அடைப்­பட்­டுக்கிடந்த காதல் என்­னும் பட்­டாம்­பூச்சி மெல்­லத் தன் சிற­கு­களை அசைக்க அடக்­கிக்­கொண்­டேன்.

அவ­ளி­டம் சென்று பேசு­வதா? வேண்­டாமா? என்று மனம் பட்டி­மன்­றம் நடத்­திக்­கொண்­டி­ருக்­க கால்­கள் அனிச்­சை­யாக அவளை நோக்­கிச் சென்­றன. அதற்குள் அவள் புத்­த­கங்­களை இர­வல் பெற்­றுக்­கொண்டு நூலகத்தைவிட்டு வெளி­யேறிக்­கொண்­டி­ருந்­தாள்.

வேக­மாக அவ­ள­ரு­கில் சென்று 'ஹாய் இசை' என்­றேன்.

சற்றே குழப்­பத்­தோடு புரு­வத்­தைச் சுருக்கி என்­னைப் பார்த்­த­வள், பிறகு என்னை அடை­யா­ளம் கண்­டு­கொண்ட பின்பு அவள் கண்­களில் தெரிந்த மலர்ச்சி என்­னை­யும் தொற்­றிக்­கொண்­டது.

"ஹாய் அசோக்"

"பர­வா­யில்­லையே இன்­னும் என் பெயரை மறக்­காம ஞாப­கம் வெச்­சி­ருக்க. எங்க என்­னைப் பார்த்­த­தும் பேசாம போயி­டு­வி­யோன்னு பயந்­துட்­டேன்," என்­ற­தும் அது­வரை அவள் கண்­களில் தெரிந்த மலர்ச்சி மின்­சா­ரம் இல்லா விளக்கு­போ­லச் சட்­டென்று மறைந்­தது.

அவ­ளின் முகமாற்­றம் என்­னைச் சற்றே நோகடிக்க, நான் பேச்சை மாற்­றி­னேன்.

'எப்­ப­டி­யி­ருக்க இசை? இது யாரு உன் பொண்ணா? பேரு என்ன? என்ன படிக்­கி­றாங்க?

"ம்ம்.... நான் நல்­லா­யி­ருக்­கேன். பொண்ணு பேரு மதி­வ­தனா. பாலர் பள்­ளி­யில படிக்­கி­றாங்க."

"அப்­பு­றம் சொல்லு இசை. எங்கே இருக்கே? என்ன பண்ணுற?"

"அசோக், இப்போ நான் அவசரமா போய்க்­கிட்டு இருக்­கேன். மதி­யோட அப்பா காத்­திட்டு இருக்­காரு. அடுத்த முறை சந்­திச்­சோம்ன்னா அப்போ பேச­லாம். நான் வர்­றேன்," என்று பட்­டென்று பதி­ல­ளித்­து­விட்டு செல்­ப­வ­ளைப் பார்த்­துக்­கொண்டே நின்­றேன்.

காலம் அவ­ளி­டம் மாற்­றத்­தைக்­கொண்டு வந்­தி­ருக்­கும் என்று நினைத்­தேன். ஆனால், என்­னு­டைய நம்பிக்கையை அவ­ளின் செயல் தவிடுபொடியாக்கியது.

"ஒரு காதல், முடிஞ்சா முடிஞ்சதா இருக்­க­ணும். பல வரு­ஷங்­க­ளுக்­குப் பிறகு, எதிர்­பா­ராத இடத்­தில் தற்­செ­யலாகப் பார்த்து, அதிர்ந்து­போய் நிற்­கி­ற­தெல்­லாம் பெரிய வலி," என்று சொன்ன நண்­ப­னின் வரி­கள் ஏனோ அப்போது என் நினை­வுக்கு வந்­தது.

கனத்த மனத்­து­டன் மெல்ல நடந்து மீண்­டும் நூல­கத்­தி­னுள் நுழைந்து வாகான ஓர் இடத்­தில் அமர்ந்­து­கொண்­டேன்.

நூல­கத்­தின் அமை­தி­யும், குளி­ரூட்­டப்­பட்ட அறை­யின் குளிர்ச்­சி­யும் என் மனத்­தின் வெப்­பத்­தைச் சற்­றுத் தணித்­தது.

இசை என் மனம் முழு­வ­தும் இசைத்­துக்­கொண்­டி­ருந்­தாள். இசை­யின் நினை­வு­களை இசைத்துப் பார்க்க மனம் விழைய நினை­வி­டுக்­குகளில் படிந்து கிடந்த இசை­யு­ட­னான காலங்­களில் மூழ்கிப் போனேன்.

'இசை' பெய­ருக்­கேற்ப இனி­மை­யா­ன­வள். தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தக­வல் தொழில்­நுட்­பத்­து­றை­யில் இரண்­டாம் ஆண்டு படித்­துக்­கொண்­டி­ருந்­த­போது­தான் இசை­யைச் சந்­தித்­தேன்.

இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­குப் படிக்க வந்­தி­ருந்­தாள். அவ­ளு­டைய துறை தாவி­ர­வி­யல். ஆனால், நாங்­கள் இரு­வ­ரும் ஒரே விடு­தி­யில் தங்­கி­யி­ருந்­­தோம்.

அந்­தச் சம­யத்­தில் விடு­தி­யில் தங்­கி­யி­ருந்த மாண­வர்­கள் எல்­லாம் ஒன்றுசேர்ந்து மூத்­தோர்­க­ளைப் பரா­ம­ரிக்­கும் தொண்டு நிறு­வ­னத்­திற்கு நிதி திரட்­டும் நட­வ­டிக்­கைக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தார்­கள்.

அத்­து­டன் அந்­தத் தொண்டு நிறு­வ­னத்­திற்­குக் குழு­வாக இணைந்து வார இறு­தி­யில் சென்று அவர்­க­ளுக்கு உதவி செய்ய வேண்­டும். அந்த நிகழ்­வில்­தான் இசையை முதன் முத­லா­கச் சந்­தித்­தேன்.

வீட்­டில் வய­தான அப்­பத்­தா­வுக்­குத் தேவை­யான வேலை­க­ளைச் செய்து பழ­கி­யி­ருந்­ததால் அங்­கே­யி­ருந்த மூத்­த­வர்­க­ளுக்கு உணவு ஊட்டி விடு­வது, அவர்­க­ளைக் கழி­வ­றைக்கு அழைத்­துச் செல்­வது என்று அருவருப்பில்லாமல் என்­னால் அவர்­க­ளுக்­குச் சேவையாற்ற முடிந்­தது.

இதைக் கவ­னித்த அவள் எப்­படி அவ­னால் மூத்­த­வர்­க­ளின் உணர்வு­க­ளைப் புரிந்­து­கொண்டு செயல்­பட முடி­கிறது என்­பதை அவ­னி­டம் கேட்­டாள்.

சிறு வயது முதல் பெற்­றோர்­கள் வேலைக்­குச் சென்­ற­தால் அப்­பத்­தா­வி­டம்­தான் வளர்ந்­தேன். அப்­பத்­தா­வுக்கு உடல்­ந­லம் சரி­யில்­லை­யென்­றால் நான்­தான் பார்த்­துக் கொள்­வேன். ஆகை­யால் என்­னால் அவர்­க­ளின் தேவை­க­ளைப் புரிந்­து­கொள்ளமுடி­கிறது என்­றேன்.

இப்­ப­டித்­தான் எங்­க­ளுக்­கி­டை­யே­யான நட்பு தொடங்­கி­யது. ஆரம்­பத்­தில் தற்­செ­ய­லா­கச் சந்தித்­த­போது சிற்­சில உரை­யாடல்­க­ளோடு ஆரம்­பித்த பழக்­கம் பின்­னர் நெருங்­கிய நட்­பாக மலர்ந்தது. அதன் பின்பு இணைந்து உண­வ­ருந்­து­வது, கடைக்­குப் போவது என்று எங்­க­ளின் நட்பு மெல்ல வளர்ந்­தது.

இசை என்­பது அவள் பெய­ரில் மட்­டு­மல்ல, அவ­ளின் குர­லி­லும் கலந்­தி­ருந்­தது. சின்­னக் குயில் சித்­ரா­வின் சாயல் அவ­ளின் குர­லில் இழை­யோ­டும்.

மனம் சோர்­வாக உண­ரும் தரு­ணத்­தில் அவளை இரண்டு வரி­கள் பாடச்சொல்லிக் கேட்­பேன்.

சோக ராகம் பாடிக்­கொண்­டி­ருக்­கும் என் மனம் அவ­ளின் குரல் இனி­மை­யில் ஆனந்த ராகத்தை இசைக்­கத் தொடங்­கும்.

உனக்கு இசைன்னு பேரு வச்­ச­தால பாட ஆரம்­பிச்­சியா இல்ல, நீ இனி­மையா பாடு­ற­து­னால உனக்கு இசைன்னு பேரு வச்­சாங்­களா என்று அப்­பொ­ழு­தெல்­லாம் கேட்­பேன். அதற்கு அவள் சிறு புன்­ன­கையை மட்­டும் பதி­லாக அளிப்­பாள்.

அவள் படிக்­கும் தாவர­வி­யல் துறை என்­பது இயற்­கை­யோடு கலந்த ஒரு கல்வி.

எப்­பொ­ழும் மண், செடி, கொடி, மலர் என்று உயிர்ப்­போடு இருப்பாள். ஆனால் நானோ எப்­பொழு­தும் இயந்­தி­ரங்­க­ளைப்­பற்­றி­யும், தொழில்­நுட்­பத்­தைப்­பற்­றி­யும் என்று அதற்கு எதி­ரா­கப் பய­ணிப்­ப­வன். அத்­து­டன் உணவு, உடை, பழக்­கம் என்று பலவிதங்­களில் அவ­ளு­டைய இர­ச­னைக்கு எதி­ராக இருந்­தது என்­னு­டை­யது. ஆனா­லும், எங்­க­ளுக்­குள் எந்­தக் கருத்து வேறு­பா­டும், சண்­டை­யும் வந்­த­தில்லை. அவ­ர­வர் கருத்­துச் சுதந்­தி­ரத்­திற்­கும், உணர்­வுக்­கும் மதிப்­ப­ளித்து எங்­க­ளுக்­கான பாதை­யில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்­தோம்.

அது­மட்­டு­மல்ல, நான் ஓர் இராக்­கோழி. அதி­கா­லை­யில் விழிப்­பது என்­பது என்­னால் இய­லாத ஒன்று.

ஆனால், அவ­ளு­டைய வேலையே அதி­கா­லை­யில்­தான் தொடங்­கும். அடர்ந்த மரங்­கள், செடி கொடி­கள் என்று கண்­க­ளுக்­குக் குளிர்ச்­சி­யைத் தரு­கின்ற வகை­யில் இயற்கை அரண்­க­ளால் சூழப்­பட்­டது எங்­க­ளு­டைய பல்கலைக்­க­ழ­கம்.

ஏரி, பூங்கா என்று பல்­க­லைக்­கழக வளா­கத்­தைச் சுற்றி இயற்கை வளம் கொஞ்­சும்.

ஒரு நாள் அதி­காலை வேளை­யில் என்­னைக் கட்­டா­யப்­ப­டுத்தி வெளியே அழைத்­துச்சென்­றாள்.

சாலை­யில் மெல்­லிய பனித்­திரை படர்ந்­தி­ருக்­க, சில்­லென்று வீசிய காற்று ஊசி­போல உட­லைத் தைக்­க, சிங்­கப்­பூ­ரில் இத்­தனை ஆண்­டு­கள் பிறந்து வளர்ந்­தா­லும் அத்­த­கைய காட்­சியை அப்­பொ­ழுது­தான் முதன்முத­லில் நான் பார்க்­கிறேன்.

சில்­வண்­டு­க­ளின் ரீங்­கா­ரம், பற­வை­க­ளின் கீச்­சி­டும் ஒலி, மண் வாசனை, மலர்ந்து மணம் வீசும் மலர்­க­ளின் மணம், இலை­க­ளின்­மேல் படர்ந்­தி­ருந்த பனித்­து­ளி­கள் என்று அற்­பு­த­மான இயற்கை உல­கத்தை எனக்கு அடை­யா­ளம் காட்­டி­னாள்.

அதி­கா­லை­யில் மெது­வோட்­டம் ஓடிக்­கொண்டே படர்ந்து கிடக்­கும் செடி­களில் ஒவ்­வொன்­றாய் அடை­யா­ளம் காட்­டு­வாள்.

"இது­தான் கொடி வேலி. கால் ஆணி இருக்­கு­ற­வங்க இதன் வேர்ப்­பட்­டையை அரைச்­சுத் தூங்­கப்­போ­ற­துக்கு முன்­னாடி பூசி வந்தா கால் ஆணி குண­மா­யி­டும். இது தூது­வளை. இதன் இலையைப் பறிச்சு நல்லா சுத்­தம் செஞ்சு துவை­யல் அரைத்துச் சாப்­பிட்டு வந்தா உட­லுக்கு வலு கொடுப்­ப­தோட இரு­மல், இரைப்பு, சளி எல்­லாம் வராது," என்று பார்க்­கும் செடி­க­ளுக்கு எல்­லாம் விளக்­கம் கொடுப்­பாள்.

"'எப்­படி? உனக்­குத் தாவ­ரங்­களின் மேல் இத்­தனை ஆர்­வம்' என்று அவ­ளி­டம் கேட்­டேன்.

"என்­னு­டைய தாத்தா ஒரு மூலிகை மருத்­து­வர். அவரு கோயம்­புத்­தூர் பக்­கத்­துல ஒரு கிராமத்­துல நாட்டு வைத்­தி­யம் பார்த்­துக்­கிட்டு இருந்­தாரு. தாத்தா வீட்­டுக்­குப் போகும்­போ­தெல்­லாம் அவர் என்­னை­யும் மூலிகை பறிக்க, கூடக் கூட்­டிட்­டுப் போவாரு. அப்போ அதைப்­பத்தி சொல்­லிக் கொடுப்­பாரு. சின்ன வய­சுல விளை­யாட்டா கத்­து­கிட்­டேன்.

"ஒரு­நாளு மலைக்­குப் போன­வரை பாம்பு கடிச்­ச­தால இறந்­துட்­டாரு. அவரு இருந்­தி­ருந்தா இன்­னும் நிறை­யக் கத்­துக்­கிட்­டி­ருப்­பேன். அது­ல­யி­ருந்து எனக்­குத் தாவ­ரங்­கள் மேல ஒரு காதல்.

"அம்­மா­வுக்கு நான் மருத்­து­வரா ஆக­ணும்னு ஆசை. ஆனா எனக்கு இயற்கை மேல ஆர்­வம் அதி­க­மா­யி­ருந்­த­தால தாவ­ர­வி­யல் ஆராய்ச்­சில ஈடு­ப­ட­ணும்னு விருப்­பம்," என்று தாவ­ரங்­க­ளின்­மேல் அவ­ளுக்கு உள்ள உற­வினை விவ­ரிக்­கும்­போது அகன்று விரிந்­தி­ருக்­கும் அவள் கண்­கள் மேலும் விரிந்து மல­ரு­வதை அவன் ரசிப்­பான்.

அவ­ளின் அருகண்மை அந்­தத் தாவ­ரங்­க­ளைப் போலவே அவ­னுக்­குள் குளிர்ச்­சி­யைத் தந்­தது.

சில நேரங்­களில் படிப்­புச் சுமை அவர்­க­ளைச் சந்­திக்க இய­லாத அளவு செய்­யும். அப்­போது வாழ்க்கை இயந்­தி­ரத்­த­ன­மாக இயங்­கு­வ­தா­கத் தோன்­றும். இப்­படி அவ­ளு­ட­னான நட்பு காத­லாக மலர்­வதை அவ­னால் உணர முடிந்­தது.

இத்­த­கைய சூழ­லில் ஒரு சம­யம் அவ­னு­டைய பெற்­றோர் இந்­தி­யா­விற்­குச் சென்­றி­ருந்­த­னர்.

நன்­றாக இருந்த அப்­பத்தா குளி­ய­ல­றை­யில் வழுக்கி விழுந்­த­தால் கால் எலும்பு முறிந்­து­விட்­டது. ஒற்றை ஆளாய் இருந்­து­கொண்டு அவ­னுக்கு என்ன செய்­வது என்று தெரி­ய­வில்லை.

அப்­போது மருத்­து­வ­ம­னை­யில் இருக்­கும் அப்­பத்­தா­வைச் சென்று பார்த்து அவ­ருக்­குத் தேவை­யா­ன­தைச் செய்­வது என்று அவ­னுக்­குத் துணை­யாக நின்று அந்­தச் சூழலை அவள் சமா­ளித்­தாள்.

மூலிகை இலை­க­ளின் சாறு­களைக்­கொண்டு அவள் செய்த கை வைத்­தி­யத்­தால் பாட்­டி­யின் உடல்­நலத்­தில் நல்ல முன்­னேற்­றம் கண்­டது.

வீட்­டி­லி­ருப்­ப­வர்­க­ளுக்­கும் இசை­யைப் பிடித்­துப்­போ­னது. அதன் பிற­கு­தான் அவன் தன் விருப்­பத்தை அவ­ளி­டம் சொன்­னான்.

சற்று நேரம் அமை­தி­யாக இருந்­த­வள், "அசோக் உங்க அப்­பத்தா உங்­களை எப்­படி வளர்த்­தாங்­களோ அப்­ப­டித்­தான் என்­னை­யும் என் அத்­தை­தான் வளர்த்­தாங்க. என் பெற்­றோர்­கிட்ட அவ்­வ­ளவு வச­தி­யில்லை. அத­னால என் அத்­தை­தான் என்­னைப் படிக்க வெச்­சாங்க. இப்­ப­வும் சிங்­கப்­பூ­ருக்கு அனுப்பி அவங்­க­தான் என்­னைப் படிக்க வெச்­சு­கிட்டு இருக்­காங்க. எனக்கு என்ன தேவையோ அத நான் கேக்­கா­மயே அவங்க செய்வாங்க. அவங்­க­ளோட ஒரே ஆசை நான் அவங்­க­ளுக்கு மரு­மகளா வர்­ற­து­தான். என் பெற்­றோ­ருக்­கும் அது­தான் விருப்­பம். எனக்­கும் என்­னோட அத்தை மகன்­கிட்ட குறை சொல்ற மாதிரி எது­வும் இல்ல.

"சின்ன வய­சு­லேயே இந்த முடிவு எடுத்த­தால எனக்­கும் படிப்­பைத் தவிர எதி­லை­யும் சிந்­தனை வந்­தது இல்ல. எப்போ நட்­பா­யி­ருந்த நம்ம உறவு காதலா மாறிச்சோ அதன் பிறகு இந்த நட்­பைத் தொடர்­ற­துல எனக்கு விருப்­ப­மில்ல. இதன் பிறகு நீங்க சாதா­ர­ணமா செய்­யுற சின்ன விஷ­யங்­க­ள் கூட எனக்­குத் தப்பா தோணும். அதுக்கு ஒரே வழி நாம இனிமே சந்­திக்­காம இருக்­கு­ற­து­தான். படிப்பு முடிய இன்­னும் ஆறு­மா­சம்­தான் இருக்கு. என் மேலே நீங்க மதிப்பு வெச்­சி­ருந்­தீங்­கன்னா இனி­மேல் வாழ்க்­கை­யில எப்­ப­வும் என்­னைப் பார்க்­கவோ, சந்­திக்­கவோ, தொடர்புகொள்­ளவோ முயற்­சிக்­கா­தீங்க. இது உங்­க­ளுக்கு நான் கொடுக்­குற தண்­ட­னை­யில்ல. எனக்கு நான் கொடுத்து­கிற தண்­டனை. காரணம் எனக்­கும் உங்க மேல ஈர்ப்பு வர ஆரம்­பிச்­சி­ருச்சு. அது­மட்­டு­மில்­லாம உங்­க­ளோட பண்­பும் அன்­பும் என்­னைக் கோழை­யாக்கி நானும் உங்­க­ளைக் காத­லிக்க ஆரம்­பிச்­சு­டு­வே­னோன்னு பய­மா­யி­ருக்கு. என்ன நம்பி இருக்­கு­ற­வங்­க­ளை ஏமாத்த விரும்­பல. அதே சம­யம் உங்­க­ளை­யும் என்­னால ஏமாத்த முடி­யாது. ஆகை­யால, நாம இதோட நிறுத்­திக்­கி­ற­து­தான் நமக்கு நல்­லது என்று கண்­ணீ­ரு­டன் விடை­பெற்றுச் சென்­ற­வ­ளின் முகம் இன்­றும் அவன் மனத்­தி­ரை­யில் நிழலாடிக்­ கொண்­டி­ருந்­தது.

அதன்பின் சிற­கு­கள் பிய்த்து எறி­யப்­பட்ட பட்­டாம்­பூச்­சி­யாய் அவன் துடித்­துப் போனான். அவ­ளின் நினை­வு­க­ளி­லி­ருந்து விடு­பட அவ­னுக்கு வெகு காலம் ஆனது. அதன்பின் அவ­னும் அவ­ளைச் சந்­திக்க முயற்சி செய்­ய­வில்லை.

படிப்பு முடிந்­த­தும் அவ­னும் அமெ­ரிக்­கா­வுக்­குச் சென்­று­விட்டான். அவளை அவன் மறக்­க­வும் இல்லை. அதே சம­யத்­தில் அவ­ளைப்­பற்றி நண்­பர்­க­ளி­டம் விசா­ரிக்­க­வும் விரும்­ப­வில்லை.

வாழ்க்­கை­யின் ஓட்­டத்­தில் ஆண்டுகள் உருண்­டோ­டின. ஆண்டுக்கு ஒருமுறை சிங்­கப்பூருக்கு வரு­வான்.

அப்­பத்­தா­தான், 'ஐயா! நான் கண்ணை மூடு­ற­துக்கு முன்­னாடி உன்­னைக் மணக்­கோ­லத்­துல பார்க்­க­ணும்ன்னு ஆசையா இருக்கு' என்று நச்­ச­ரிப்­பார். இவ­னும் பிடி­கொ­டுக்­கா­மல் நழுவி வந்­தான். ஆனால், இந்த முறை அவர்­க­ளின் விருப்­பத்தை அவ­னால் மறுக்க முடி­ய­வில்லை. இப்­ப­டிப்­பட்ட சூழ்­நிலை­யில்­தான் அவன் இசை­யைச் சந்­தித்­தான்.

நினை­வு­ல­கில் மூழ்கிக் கிடந்­த­வ­னின் தோளைத்தொட்டு யாரோ உலுக்­கு­வதை உணர்ந்த பிறகே அவன் நன­வு­ல­கிற்­குத் திரும்­பி­னான். அவன் நண்பன் கவின் நின்று கொண்டிருந்தான்.

என்னாச்சு? என்று சைகையில் கேட்டவன், அவனைக் கூட்டிக்கொண்டு நூலகத்தைவிட்டு வெளியே வந்தான்.

"என்னாச்சு அசோக்? இரண்டு தடவை 'கால்' பண்ணுனேன், நீ எடுக்கல. உள்ள வந்து பார்த்தா ஏதோ நினைவுல உன்னையும் மறந்து இருக்க.."

"ஒன்­னு­மில்ல கவின். ஏதோ யோச­னை­யில அப்­ப­டியே உட்­கார்ந்­துட்­டேன்."

"சரி. புத்­த­கம் எடுக்­க­ணும்னு வந்­தியே. புத்­த­கம் எடுத்­துட்­டியா?"

"எடுத்­துட்­டேன்"

"அப்­பு­றம் உடம்பு சரி­யில்­லையா? ஏன் ஒரு மாதிரி இருக்க?"

"ஒன்­னு­மில்லை. லேசா தலை­வலி அதான்?"

"உனக்­குத் தலை­வ­லின்னா நீ வீட்­டுக்­குப்­போயி ஓய்வு எடு. நான் உன்னை வீட்­டுல டிராப் பண்­ணு­றேன். வேணும்னா நாம இன்­னொரு நாள் வெளியே போய்ச் சாப்­பி­டப் போக­லாம்."

"பர­வா­யில்ல கவின் என்­னால சமா­ளிக்க முடி­யும். நாம இப்போ சாப்­பிட போக­லாம்."

அதன்­பி­றகு வண்­டி­யில் ஏறும்­வரை கவி­னும் அசோக்­கி­டம் ஏது­வும் கேட்­க­வில்லை. வண்­டியை இயக்­கி­ய­தும் வானொ­லி­யில், 'கண்­ணா­ளனே எனது கண்ணை நேற்­றோடு காண­வில்லை' என்று சித்ரா காதலை இழைத்­துப் பாடிக்­கொண்­டி­ருந்­தார். உடனே, இசை­யின் குர­லும் அவன் மனத்­தில் ஒலிக்­கத் தொடங்­கி­யது.

"சரி அசோக். தேக்­கா­வுல எந்­தக் கடை­யில் போயி சாப்­பி­ட­லாம்ன்னு சொல்லு," என்று வண்டியை ஓட்­டிக்­கொண்டே கவின் கேட்­ட­போது அசோக் அமைதி­யாக இருந்­தான். உடனே கவின் அவ­னின் தோளைத்­தொட்டு, "அசோக், என்­னாச்சு. தலை­வலி அதி­க­மா­யி­ருக்கா?" என்று கேட்ட பிறகே சுய­நி­னை­வுக்கு வந்­தான்.

"ஓ! சாரி. அதெல்­லாம் ஒன்­னு­மில்லை. பாட்­டுல லயிச்­சுட்­டேன்."

"இதுக்­குத்­தான் சீக்­கி­ரமா கல்­யா­ணம் பண்­ண­னும்னு சொல்­றது. அப்­பு­றம் உன் கல்­யா­ணம் விஷ­யம் என்­னாச்சு?"

"பொண்ணு பார்த்­துட்டு இருக்­காங்க. இந்­தத் தடவை ஊருக்­குப் போற­துக்கு முன்­னாடி நிச்­ச­யம் பண்­ணி­ட­னும்னு வீட்­டுல முடிவா இருக்­காங்க."

"இப்­பெல்­லாம் பள்­ளில படிக்­கிற பசங்­களே லவ் பண்­ணிட்டு திரி­யு­றாங்க. நீ என்­ன­டான்னா லவ்­வும் பண்­ணாம கல்­யா­ண­மும் பண்­ணாம இன்­னும் சுத்­தி­கிட்டு இருக்க. சீக்­கி­ரமா கல்­யாண சாப்­பாடு போடுற வழி­யப்­பாரு. இப்போ தேக்­கால எந்­தக் கடைக்­குச் சாப்­பிட போக­லாம்ன்னு சொல்லு."

"ஏன்? இங்கே எங்­க­யா­வது பக்­கத்­துல சாப்­பி­ட­லாமே? இதுக்­காக எதுக்­கு தேக்கா போக­ணும்?"

"இல்ல தேக்­கா­வுக்­குப் போனா வீட்­டுக்­குத் தேவை­யான காய்­கறி வாங்­கிட்டு அப்­ப­டியே நாட்டு மருந்து கொஞ்­சம் வாங்­க­ணும் அதான்."

"என்ன மருந்து? யாருக்கு என்­னாச்சு?"

"நீ பயப்­ப­டுற மாதிரி ஒன்­னு­மில்ல அசோக். ஆவா­ரம்­பூ­வைத் தின­மும் கொஞ்­சமா சுடு­தண்­ணில குடிச்­சிட்டு வந்தா சளி, இரு­மல் அண்­டவே அண்­டா­தாம். இப்போ கொரோனா கால­கட்­டத்­துல நம்­மள ஆரோக்­கி­யமா வச்­சிக்­க­ணும். அதே சம­யத்­துல நாட்டு மருந்தா இருந்தா பக்க விளை­வும் இருக்­காது இல்­லையா அதான்."

"பர­வா­யில்­லையே! உனக்கு நாட்டு மருத்­து­வத்­துல இவ்­வ­ளவு நம்­பிக்கை இருக்கா?"

"ஆரம்­பத்­துல இத பத்தி பெரிய ஈடு­பாடு இல்ல. ஆனா, என் மனைவி­யோட தோழி இசைன்னு ஒருத்­த­வங்க இருக்­காங்க அவங்க இந்த மூலிகை மருத்­து­வத்­தைப் பத்தி நிறையா படிச்­சி­ருக்­காங்க. நடை­முறை வாழ்க்­கை­யில நம்­மைச் சுத்தி இயற்­கை­யில கிடைக்­கிற மூலி­கை­களை வைத்து எப்­படி ஆரோக்­கி­யமா வாழ்­றது அப்­ப­டிங்­கி­றத பத்தி நிறை­யச் சொல்­லு­வாங்க. அவங்க சொன்­ன­தைக் கடைப்­பி­டிச்­சு­கிட்டு வர்­றோம். இந்த இரண்டு வரு­ஷமா நாங்க யாரும் மருத்­து­வர்­கிட்­டயே போக­லையே."

இசை­யின் பெய­ரைக் கேட்­ட­தும் அவ­னுக்­குள் இசை­வெள்­ளம் பர­வத் தொடங்­கி­யது. அவ­ளைப்­பற்றி அறி­யும் ஆவ­லில் பட­ப­டப்பை முகத்­தில் காட்­டாது மறைத்­துக்­கொண்டு, "இசையா? பேரே நல்லா இருக்கே?"

"பெயர் மட்­டு­மல்ல அவங்­களும் அழகா இருப்­பாங்க. நல்ல பொண்ணு. தாவ­ரங்­கள் மேலே ஆர்­வம் அதி­கம். இயற்­கையை அதி­கமா நேசிக்­கி­ற­தால என்­னவோ இன்­னும் கல்­யா­ணம் பண்­ணிக்­காம இருக்­காங்க."

இதைக் கேட்­ட­தும் அசோக்­கிற்கு ஆச்­ச­ரி­ய­மும் பட­ப­டப்­பும் ஒரு சேர "என்­னாச்சு? ஏன் கல்­யா­ணம் பண்­ணிக்­கல?" என்று கேட்­கும்­போதே அவன் குரலே அவ­னுக்­குக் கேட்­க­வில்லை.

"அதுவா? அத்தை பைய­னைக் கல்­யா­ணம் செய்­யு­ற­துக்­குப் பேசி வச்­சி­யி­ருக்­காங்க. ஆனா அவன் என்­ன­டான்னா படிக்­கி­றப்போ ஒரு பொண்ணை காதலிச்சு கல்­யா­ணம் பண்­ணிட்டுப் போயிட்­டான். அதுக்­குப்பிறகு இவங்­களும் கல்யாணமே வேணாம்­னுட்டு மேற்­ப­டிப்­புக்கு வந்­த­வங்க இங்­கயே வேலை­யில சேர்ந்­துட்­டாங்க. இப்போ, அவங்க அண்­ணன் வீட்டு­ல­தான் தங்கி இருக்­காங்க. நீயும் பொண்ணு தேடி­கிட்டு இருக்கே. நான் வேணா இசை­கிட்ட பேசிப் பார்க்­கவா?'

"பார்க்­க­லாமே" என்று சொல்லும்­போதே அவன் மனத்­தில் பட்­டாம்­பூச்சி தன் சிற­கினை விரித்­துப் பறக்­கத் தொடங்­கி­யது. அப்­போது வானொ­லி­யில்...

"வான் மேகம்

பூப்­பூ­வாய்த் தூவும்,

தேகம் என்­ன­வா­கும்

இன்­ப­மாக நோகும்.."

என்று சித்­ரா­வின் தேன்குரல் ஒலிக்க அவன் மனத்­தி­லும் இசை மழை பொழி­யத் தொடங்­கி­யது.