"அறிவு, அறிவு, சீக்கிரம் இங்கே வா."
திருவாசகத்தின் குரல் கேட்டு அறிவழகன் மட்டுமல்ல, அவனது மனைவி நந்தினியும் அறைக்குள் அரக்கப்பரக்க ஓடிவந்தனர்.
"என்னப்பா என்ன ஆச்சு?"
மகன் அறிவு பரபரப்புடன் கேட்டான்.
"அம்மாவுக்கு மூச்சுத் திணறலா இருக்காம்." மனைவி அபிராமியைத் தன் நெஞ்சில் சாய்த்திருந்த திருவாசகம், கண்களில் கண்ணீருடனும் பதற்றத்துடனும் கூறினார்.
"அம்மா! என்ன பண்ணுது?"
மகனின் கேள்விக்கு அபிராமி அம்மாளால் பதில் சொல்ல முடியவில்லை.
"நந்தினி, உடனே ஆம்புலன்சுக்குப் போன் பண்ணு"
அறிவழகன் தன் மனைவியிடம் கூறினான்.
நந்தினி 995 எனும் எண்ணுக்குத் தொடர்புகொண்டு விவரத்தைக் கூறி, தங்களின் அங் மோ கியோ முகவரியையும் சொன்னாள்.
ஆம்புலன்ஸ் 15 நிமிடங்களில் வந்துவிட்டது. அதில் முகக்கவசங்கள் அணிந்துவந்த மருத்துவ ஊழியர்கள், அபிராமி அம்மாளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவருக்கு உயிர்வாயு செல்லும் முகக்காப்பை முகத்தில் அணிவித்தனர். அதனால் அவரது மூச்சு சீரானது. அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து 10வது மாடியிலிருந்து மின்தூக்கி மூலம் கீழே கொண்டு சென்றனர். அதே ஆம்புலன்சில் திருவாசகமும் ஏறிக்கொள்ள, ஈசூனில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாகத் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.
அறிவழகனும் நந்தினியும் ஒரு டாக்சியை வரச்சொல்லி அதில் அந்த மருத்துவமனைக்கு விரைந்தனர். இருவருமே வேலை செய்வதால் தங்கள் அலுவலகங்களுக்குத் தொடர்புகொண்டு விவரத்தைத் தெரிவித்து அன்று விடுப்புப் பெற்றுக்கொண்டார்கள்.
அது கொரோனா காலம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல் சாதாரணமாகச் சளி பிடித்தாலே கொரோனா அறிகுறியாக இருக்குமோ என்ற அச்சம் அனைவருக்குமே ஏற்பட்டது.
அதனால், அறிவு கேட்டான், "கொரோனாவாக இருக்குமோ?"
"அத்தான் ஏன் அப்படிச் சொல்றீங்க? நாமே, ஒரு முடிவுக்கு வரக்கூடாது" என்று பதிலளித்தாள் நந்தினி.
கடந்த இரண்டு மூன்று நாள்
களாகவே அபிராமி அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை. முதலில் அவருக்குச் சளி பிடித்தது; மறுநாள் இருமல் ஏற்பட்டது; மூன்றாம் நாளான இன்று அபிராமி அம்மாளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அத்துடன் மூச்சுத் திணறலும் சேர்ந்துகொண்டது.
மருத்துவமனையை அடைந்ததும் தந்தையின் கைபேசிக்குத் தொடர்புகொண்டு அம்மா எங்கிருக்கிறார் என்று கேட்டான் அறிவு. அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகச் சொல்லவே அந்தப் பிரிவுக்குச் சென்றனர் அறிவழ
கனும் நந்தினியும்.
'டிரேஸ்டுகெதர் கியூஆர்' குறியீட்டில் தங்கள் கைபேசிகள் மூலம் வருடி வருகையைப் பதிவுசெய்த பிறகு உள்ளே சென்றனர்.
"அப்பா, டாக்டர் என்ன சொல்றாரு?"
"இன்னும் எதுவும் சொல்லலை. உள்ளே சோதனை செஞ்சிக்கிட்டு இருக்காங்க," என உடைந்த குரலில் சொன்னார் திருவாசகம்.
அப்போது அங்கு வந்த தாதி ஒருவர், "அந்த அம்மாவை உள் நோயாளியா சேர்க்கணும். சேவை முகப்பிலே போய் பதிவு செய்துட்டு வாங்க," என்று கூறி ஒரு சீட்டைக் கொடுத்தார்.
"என் மனைவிக்கு என்ன ஆச்சு? அவங்கள ஏன் உள் நோயாளியா சேர்க்கச் சொல்றீங்க?" பதற்றத்துடன் கேட்டார் திருவாசகம்.
"அவங்களுக்குக் கொரோனாவா இருக்கலாம்னு சந்தேகப் படுறோம். சோதனைகள் நடந்திருக்கு. முடிவு நாளைக்குத்தான் தெரியும். அதுவரை அவங்க இங்கேதான் இருக்கணும்," என்று சொல்லிவிட்டு அந்தத் தாதி உள்ளே சென்றுவிட்டார்.
"அடக் கடவுளே! தடுப்பூசி போட்டுக்க, போட்டுக்கன்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். கேட்டாளா உங்க அம்மா," என மகனிடம் சீறினார் திருவாசகம்.
"சரி, விடுங்கப்பா! இப்ப என்ன பண்ண முடியும்? சோதனை முடிவு வரட்டும். நான் போயி பதிவு செஞ்சிட்டு வர்றேன்," என்று சொல்லிவிட்டுச் சேவை முகப்புக்கு விரைந்தான் அறிவழகன்.
நல்ல வேளையாக புறப்படும்போது அவன் மறக்காமல் தன் அம்மாவின் பணப்பையை எடுத்துவந்தான். அதில்தான் அவரது அடையாள அட்டை இருந்தது.
சேவை முகப்பிற்குச் சென்று, தாதி கொடுத்த சீட்டைக் காட்டி, பதிவு செய்து, பணத்தைக் கட்டி, ரசீதை வாங்கிக்கொண்டு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள தாதியிடம் கொடுத்தான் அறிவு.
அவர் சற்று நேரத்தில் அபிராமி போட்டிருந்த தாலி உள்பட, நகைகள் அனைத்தையும் கொண்டுவந்து திருவாசகத்திடம் கொடுத்துவிட்டு, "நீங்க வீட்டுக்குப் போங்க, நாங்க உங்களுடன் தொடர்பு கொள்கிறோம்", என்று சொன்னார்.
"அம்மா, நான் என் மனைவியைப் பார்க்க முடியுமா?" என்று கேட்டார் திருவாசகம்.
"அவங்களுக்கு கொரோனா இல்லேன்னு உறுதியாகிற வரைக்கும் யாரும் அவங்களைப் பார்க்க முடியாது."
மனச்சோர்வுடன் வீடு வந்து சேர்ந்த அவர்களை வரவேற்றான் அறிவழகன்-நந்தினியின் 10 வயது மகன். தன் தந்தையின் பெயரிலுள்ள திரு என்பதை மாறனுடன் இணைத்துத் திருமாறன் என்று மகனுக்குப் பெயரிட்டிருந்தான் அறிவு. அவன் அப்போதுதான் பள்ளியிலிருந்து திரும்பியிருந்தான்.
"அம்மா, அப்பத்தாவுக்கு என்ன ஆச்சு? அவங்களுக்கு உடம்பு சரியில்லேன்னு ஆம்புலன்சிலே கூட்டிக்கிட்டுப் போனதா ராணி அக்கா சொன்னாங்க,"
ராணி அந்த வீட்டின் பணிப்பெண். மகனின் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியாமல் குழம்பி நின்றாள் நந்தினி.
"அது ஒண்ணுமில்லைடா! அப்பத்தாவுக்குக் காய்ச்சல். அதான் மருத்துவமனையிலே சேர்த்திருக்கு. ரெண்டு மூணு நாள்லே வந்திடுவாங்க," என்று அவனுக்குப் பதில் சொன்னான் அறிவழகன்.
அப்போதைக்கு அந்தப் பதிலை திருமாறன் ஏற்றுக்கொண்டானே தவிர, அவன் முழுமையாகச் சமாதானம் அடையவில்லை. அவன் அப்பத்தாவின் செல்லம்.
எப்போதும் அபிராமி அம்மாளுடன்தான் பொழுதைக் கழிப்பான். பத்து வயதானாலும் அப்பத்தாதான் அவனுக்கு உணவு பரிமாற வேண்டும்.
இரவில்கூட அவருடன்தான் அவன் படுத்துக்கொள்வான். அப்பத்தாவும் பேரனுக்குக் கதை சொல்லி அவனைத் தூங்க வைப்பார்.
இப்போது அப்பத்தா இல்லாமல் அவனால் சாப்பிட முடியவில்லை. அவனைக் கடிந்துகொள்ள வேண்டாம் என்றும் அவன் போக்கில் விட்டுவிடுங்கள் என்று மகனிடமும் மருமகளிடமும் கூறினார் திருவாசகம்.
மறுநாள் மருத்துவமனையிலிருந்து தொடர்புகொண்டு அபிராமி அம்மாளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்
பதாகவும் யாரும் அவரைப் பார்க்க வரவேண்டாம் என்றும் தகவல் தெரிவித்தார்கள்.
மேலும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது சுகாதார அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டு, அறிவழகனின் தொடர்பு எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் தாங்கள் கொடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சிலிருந்து தொடர்பு கொள்வார்கள் என்ற கூடுதல் தகவலையும் தெரிவித்தார்கள்.
"நம்மையும் தனிமைப்படுத்திடுவாங்கன்னு நெனக்கிறேன்," என்றாள் நந்தினி.
"வீட்டிலேயே தனிமையிலே இருக்கச் சொல்லுவாங்களா? இல்லே, வேற எங்காவது கூட்டிட்டுப் போயி வச்சுருவாங்களா?" சந்தேகத்தை எழுப்பினார் திருவாசகம்.
"வீட்டிலேதான் இருக்கச் சொல்லுவாங்கன்னு நெனக்கிறேன்," என்றான் அறிவு.
திருவாசகம் தன் மனைவியின் பிடிவாதம் குறித்துப் புலம்பிக்கொண்டே இருந்தார். தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அறிவழகனும் நந்தினியும் தவித்தனர். அபிராமி அம்மாளையும் திருமாறனையும் தவிர வீட்டிலுள்ள மற்ற அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். திருமாறன் சிறுவன் என்பதால் அவனுக்குத் தற்சமயம் தடுப்பூசி போடவில்லை. ஆனால் பெரியவர்கள் அனைவரும், அதிலும் குறிப்பாக முதியவர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நாள்தோறும் வலி
யுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் அது கட்டாயமாக்கப்படவில்லை. விருப்புரிமையின் பேரிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டது.
திருவாசகம் பல வகைகளில் தன் மனைவியிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்திப் பார்த்தார்.
"உன்னைவிட எனக்கு வயது கூட. நான் ரெண்டு தடவை தடுப்பூசி போட்டுக்கிட்டேன். எனக்கு ஏதும் ஆச்சா? நான் நல்லாத்தானே இருக்கேன். உன்னைத் தவிர மத்த எல்லாரும் போட்டுக்கிட்டாங்க."
"இல்லே, எனக்குப் பயமா இருக்கு நான் போட்டுக்க மாட்டேன்."
"போட்டுக்கலைன்னா கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகம்."
"என்னை ஏன் கொரோனா தாக்கப் போகுது?"
"உன் உடம்பு என்ன இரும்பு உடம்பா? நீதான் சந்தைக்குப் போறியே அங்கே யாருக்கிட்டேருந்தாவது தொற்றிக்கிடாதா?"
"நான் முகக்கவசம் அணிஞ்சுக்கிட்டுத்தானே போறேன். எப்படி கொரோனா தொற்றும்?"
"முகக்கவசம் ஓரளவுக்குத்தான் பாதுகாப்பு; முழுமையான பாதுகாப்புத் தராது. தடுப்பூசிதான் முழுமையான பாதுகாப்பு."
"எனக்கு ஊசின்னாலே பயம். நான் இதுவரைக்கும் ஊசி போட்டுக்கிட்டதே இல்லை."
"தடுப்பூசி போட்டுக்கலைன்னா எங்கேயும் போக முடியாது. ஊருக்குக்கூட போக முடியாது. தடுப்பூசி போட்டுக்கிட்ட சான்றிதழ் இருந்தாத்தான் விமானத்திலேயே ஏற அனுமதிப்பாங்க."
"பரவாயில்லை. அந்த மாதிரிக் கட்டுப்பாடு வரும்போது பார்த்துக்கலாம்."
திருவாசகம் தன் மனைவியிடம் பேசிப் பார்த்துக் களைத்துப்போய் இனி கடவுள் விட்டபடி ஆகட்டும் என்று அமைதியாக இருந்துவிட்டார். தடுப்பூசி போடுவதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்றுகூட அவர் நினைத்தார். அப்போதாவது அபிராமி போன்றவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என்று அவர் கருதினார்.
மகனும் மருமகளும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அபிராமி அம்மாள் அசைந்து கொடுக்கவில்லை. அதன் பயனை இன்று அவர் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தனக்கு கொரோனா தொற்றாது என்ற அவரது குருட்டு நம்பிக்கை பொய்த்துவிட்டது.
சற்று நேரத்தில் அறிவழகனின் மின்னஞ்சலுக்குச் சுகாதார அமைச்சிலிருந்து தனிமைப்படுத்தும் ஆணை வந்து சேர்ந்தது. அதில் வீட்டிலுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாட்டைச் செய்யும்படியும் வீட்டைவிட்டு யாரும் வெளியில் வரக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டிருந்தது.
அறிவழகனும் நந்தினியும் தங்கள் அலுவலகங்களுக்குத் தகவல் தெரிவித்து 14 நாள்களுக்குத் தாங்கள் வேலைக்கு வரமுடியாது என்
பதையும் கூறினர்.
"நம்ம ரெண்டு பேரும் நம்ம அறையிலே தங்கிக்கலாம். திருமாறனும் ராணியும் மற்றோர் அறையிலே தங்கட்டும், அப்பா அவங்க அறையிலே தங்கிக்கொள்ளட்டும்," என்று தெரிவித்தான் அறிவு.
வீடு முழுவதையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னர் இருப்பதைக்கொண்டு அன்று இரவு உணவை முடித்துக்கொண்டனர். மறுநாளிலிருந்து அனைவருக்கும் உணவைக் கடையிலிருந்து கொண்டுவரச்சொல்ல முடிவு செய்தனர்.
அனைவரும் தத்தம் அறை
களுக்குள் தங்களை அடைத்துக் கொள்வதற்குமுன் "எத்தனை தெர்மாமீட்டர் இருக்கிறது?" என்று
நந்தினி கேட்டாள்.
"ஆமா, ஒவ்வொரு நாளும் காலைலேயும் மாலைலேயும் உடல் வெப்பத்தைச் சோதனை செய்யணுமில்லே?" என்றார் திருவாசகம்.
"அப்பா, மூணு இருக்கு," என்றான் திருமாறன்.
"அப்படின்னா அறைக்கு ஒண்ணு கொடுத்திடு," என்று சொன்னான் அறிவழகன்.
"ஏங்க, மாறன் எப்போதும் அத்தைக்கிட்டதானே ஒட்டிக்கிட்டு இருப்பான். அவனுக்கும் கிருமி தொற்றியிருக்குமோ?" என்ற அச்சத்தைக் கேள்வியாக எழுப்பினாள் நந்தினி.
"அப்படியெல்லாம் இருக்காது, பயப்படாதே," என்று பதிலளித்தான் அறிவு.
"எதுக்கும் நாளைக்குச் சுகாதார அமைச்சுக்குத் தொடர்புகொண்டு எல்லாருக்கும் கொரோனா சோதனை செய்யச் சொல்லுவோமா?" என்று கேட்டாள் நந்தினி.
"சரி, பார்க்கலாம். பேசாமல் தூங்கு", என்றான் அறிவு.
மறுநாள் காலையில் இவர்கள் சொல்லாமலேயே சுகாதார அமைச்சிலிருந்து அதிகாரிகளும் தாதிகளும் வந்துவிட்டனர். அனைவரின் எச்சிலையும் சளியையும் சோதனைக்காக எடுத்துச் சென்றனர். திருமாறனையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
போகும்போது வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரித்துவிட்டுச் சென்றனர்.
மறுநாள் பேரிடியான அந்தச் செய்தியுடன் வந்தனர் சுகாராத் துறை அதிகாரிகள்.
திருமாறனுக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவனை உடனடியாக மருத்துவ
மனையில் சேர்க்க வேண்டும் என்றும் ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர்.
அறிவழகனும் நந்தினியும் நச்சரவம் தீண்டியது போன்ற அதிர்ச்சிக்கு ஆளாயினர். திருவாசகம் நிலைகுலைந்து போனார்.
"என்னப்பா இது. இடிமேல் இடி விழுந்தது போல ஆயிட்டதே. அம்மாவுக்குத் தொற்று ஏற்பட்டதையே தாங்க முடியலே. இப்ப மாறனுக்கும் தொற்றுன்னா என்ன பண்றது?" திருவாசகம் பேசுவதற்கே திணறினார்.
அவருக்குக் கண்ணீரையே பதிலாக அளித்தனர் அறிவழகனும் நந்தினியும்.
திருமாறன் கதி என்ன என்பது தெரியவில்லை. மருத்துவமனைக்குத் தொடர்புகொண்ட அறிவு, மகனைப் பற்றித் தகவல் அறிய முயன்றான். ஆனால் பையனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று பதில் மட்டுமே கிடைத்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து நாள்களுக்குப் பிறகு மாறனின் நிலைமை மோசமாகிவிட்டதாகவும் அவனைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்
பதாகவும் மருத்துவமனையிலிருந்து அறிவழகனுக்குத் தகவல் தெரிவித்தார்கள். இதனால் அனைவருக்கும் அச்சம் அதிகமாயிற்று.
சிறு வயது. இளம் பிஞ்சு. அவனது உடல் இந்த கொரோனாவின் தாக்குதலைச் சமாளிக்குமா என்ற ஐயம் அனைவருக்கும் ஏற்பட்டது. ஆண்டவனை வேண்டுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. ஒரே மகன் பிழைக்க வேண்டுமே என்று நந்தினி உண்ணாமல், உறங்காமல் வழிபாட்டு அறையே கதியாகக் கிடந்தாள். அறிவும் திருவாசகமும் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தும் அவள் கேட்பதாக இல்லை.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட திருமாறனுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு உடல்நிலை மேலும் மோசமாகிவிட்டது என்றும் அவனுக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைத் தாதி ஒருவர் தொலைபேசி வழி தெரிவித்த தகவல் அனைவரையும் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இப்போது திருவாசகமும் அறிவழகனும் உணவையும் உறக்கத்தையும் மறந்தனர். மருத்துவமனைக்குச் சென்றாலும் மாறனைப் பார்க்க முடியாது என்ற நிலையில் என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்தனர்.
அதே வேளையில் அபிராமி அம்மாளின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. ஊசியே போட்டுக்க முடியாது என்று மறுத்த அவரின் உடலில் ஊசிகளால்தான் அந்த முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால் மாறனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. செயற்கை சுவாசக் கருவியுடன் மூன்று நாள்கள் மட்டுமே அவனால் போராட முடிந்தது.
நான்காம் நாள் காலையில் கைபேசியில் வந்த பேரதிர்ச்சியான அந்தச் செய்தியைக் கேட்ட அறிவழகன் "மாறா" என்று அலறிக்கொண்டே தரையில் விழுந்தான்.
"என்னங்க! என்ன? மாறனுக்கு என்ன ஆச்சு?" என்று சத்தம் போட்டுக்கொண்டே ஓடிவந்தாள் நந்தினி.
"நந்தினி! மாறன் நம்மளையெல்லாம் தவிக்கவிட்டுட்டு போயிட்டான் நந்தினி!" என்று மனைவியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதான் அறிவு.
"என்னப்பா சொல்றே?" என்று பெருக்கெடுத்த கண்ணீரை அடக்க முடியாமல் கேட்டார் திருவாசகம்.
"ஆமாப்பா! உங்க பேரன் நம்மளையெல்லாம் விட்டுட்டு ரொம்ப தூரம் போயிட்டாம்பா," என்றான் அறிவு.
தலையில் இடி விழுந்த நிலையில் அனைவரும் தவித்துப் போயினர்.
அரை மணி நேரங்கழித்து மீண்டும் மருத்துவமனையிலிருந்து அழைத்து பிற்பகலில் மாறனின் உடலைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளுடன் இறுதிச்சடங்கை நடத்தவேண்டும் என்றும் கூறினர்.
அது குறித்துத் தந்தையுடன் கலந்தாலோசித்தான் அறிவழகன். மாறனின் உடலை வீட்டிற்குக் கொண்டுவரவேண்டாம் என்றும் இறுதிச்சடங்குகள் ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் சொல்லி அவர்கள் இடத்திலேயே வைத்திருந்து நாளை மண்டாயில் இறுதிச்சடங்கை நடத்திவிடலாம் என்றும் முடிவு செய்தனர்.
அதன்படி இறுதிச்சடங்கு நடத்தும் நிறுவனத்திடம் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு, அவர்களை மருத்துவமனைக்கு வரச்சொல்லிவிட்டு, இவர்கள் மூவரும் ராணியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்.
மாறனை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அதிகாரிகள் வந்தபோது வீட்டிலுள்ள மற்றவர்
களுக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கான தனிமைப்படுத்தும் ஆணை மீட்டுக்கொள்ளப்படுவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லவேண்டாம் என்று கூறிவிட்டுச் சென்றிருந்தனர்.
மருத்துவமனை நடைமுறைகள் எல்லாம் முடிந்த பிறகு மாலை 4.00 மணியளவில் இவர்களிடம் மாறனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவனின் உயிரற்ற உடலைப் பார்த்தவுடன் மூவரும் கதறி அழுதனர். ஆனால் அருகே செல்ல முடியவில்லை.
இறுதிச்சடங்கு நடத்தும் நிறுவனம் மாறனின் உடலைப் பெற்றுக்கொண்டு தங்கள் இடத்திற்குக் கொண்டு சென்றனர். இதற்
கிடையே மாறனின் மறைவு குறித்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்தான்
அறிவழகன். அவனது பள்ளிக்கும் கூறினான். இறுதிச்சடங்குகளின் விவரங்கள் பற்றி செய்தித்தாளிலும் விளம்பரம் செய்தான். அதில் அவன் மாறனின் உடல் வைக்கப்படடிருந்த இடத்தின் முகவரியையும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே அஞ்சலி செலுத்த முடியும் என்ற விவரத்தையும் தெரிவித்தான்.
"ஏம்ப்பா, இந்த விவரத்தை அம்மாவிடம் சொல்ல வேண்டாமா?" மகனிடம் கேட்டார் திருவாசகம்.
"இல்லேப்பா, நான் மருத்துவமனையிலே கேட்டேன். அவங்க அம்மாவின் உடல்நலத்தைக் கருதி இப்ப சொல்ல வேண்டாம்ணு சொல்லிட்டாங்க," என்று பதிலளித்தான் அறிவழகன்.
மறுநாள் மண்டாயில் இறுதிச் சடங்குகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய திருவாசகம், அறிவழகன், நந்தினி மூவருக்கும் வாழ்க்கையே வெறிச்சோடிப் போய்விட்டதாகத் தோன்றியது. தங்கள் வாழக்கையின் வருங்காலம் என்று நினைத்த மகன் கடந்தகாலமாகிப் போனதால் நிகழ்காலம் இருண்டு விட்டதாகத் தோன்றியது அறிவழகனுக்கும் நந்தினிக்கும்.
ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருக்காது. அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். அதனால் அப்படி, இப்படி என்று எப்படியோ ஒரு வாரத்தை ஓட்டிவிட்டார்கள் அவர்கள் மூவரும்.
அதன் பிறகு ஒருநாள் அபிராமி அம்மாள் உடல்நிலை தேறிவிட்டதாகவும் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றும் மருத்துவ
மனையிலிருந்து தகவல் வந்தது.
திருவாசகம் மகனையும் மருமகளையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்று தன் மனைவியை அழைத்து வந்தார். வரும் வழியில் "மாறன் எப்படி இருக்கிறான்?" என்று அபிராமி அம்மாள் கேட்ட கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை.
மின்தூக்கி வழியாக 10வது மாடியிலுள்ள வீட்டிற்கு வந்து சேர்ந்து அழைப்பு மணியை அழுத்தியதும் ராணி வந்து கதவைத் திறந்தாள். வீட்டிற்குள் நுழைந்த அபிராமி அம்மாளைப் பார்த்து "அம்மா எப்படிம்மா இருக்கீங்க?" என்று கேட்டாள் அவள்.
அவளுக்குப் புன்னகையை மட்டும் பதிலாக அளித்துவிட்டு உள்ளே நுழைந்த அபிராமி அம்மாள், சுவரில் மாட்டப்பட்டிருந்த மாறனின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உறைந்து போய் நின்றார்.
"அறிவு என்னப்பா இது?"
"மாறன் நம்மளையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாம்மா!" என்று கூறிய அறிவு, அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டுக் கிளம்பியதை அடக்க முடியாமல் கதறினான்.
"அத்தே உங்க பேரன்..." அதற்கு மேல் சொல்ல முடியாமல் நந்தினி தேம்பினாள்.
"என்னங்க? எப்படி இது?" கணவரைப் பார்த்துக்கேட்டாள் அபிராமி அம்மாள்.
"நீ மருத்துவமனையிலே அனு
மதிக்கப்பட்ட கொஞ்ச நாள்லேயே அவனுக்கும் கொரோனா வந்திடுச்சு. மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டுப் போனாங்க. ஆனால் போனவன் போனவன்தான். வீடு திரும்பலை," தழுதழுத்த குரலில் கூறினார் திருவாசகம்.
"என்னாலேதான் பேரனுக்கும்..." முடிக்கவில்லை அபிராமி அம்மாள். அப்படியே சரிந்து விழுந்தார்!
***
சிறுகதை
நா. ஆண்டியப்பன்
தலைப்பு: அம்மா வந்தாள்
தொகுப்பு: தி. ஜானகிராமன்
பதிப்பாளர்: சென்னை : ஐந்திணைப் பதிப்பகம், 2008.
குறியீட்டு எண்: Tamil JAN
அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
மனித மனங்களை முன்னிலைப்படுத்தி எழுதுவதில் வல்லவரான தி.ஜானகிராமனின் தனிமுத்திரை பதித்த நாவல்களுள் ஒன்று, 'அம்மா வந்தாள்'. காவிரி ஆற்றங்கரையில் தனது ஓட்டத்தைத் தொடங்குகிறது கதை.
மத்தியதர பிராமணக் குடும்பத்து அப்பு, வேதபாடசாலையில் 16 ஆண்டுகள் படித்துவிட்டு வேத விற்பன்னனாக வெளியேறும் தருணத்தில், தன் கண்முன் விரியும் வாழ்க்கையின் முரண்களை எப்படி எதிர்கொள்கிறான் என்பதைக் காட்டுவதுதான் கதைக்கரு. அவன் அம்மா அலங்காரத்திற்கும் தினசரி வீட்டிற்கு வந்துபோகும் சிவசுவுக்குமான உறவு, இதைக் கண்டுங்காணாமல் வாழப்பழகிக்கொண்ட அப்பா தண்டபாணியும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இதயத்தில் பெரும் உராய்வை ஏற்படுத்துகிறார்கள்.
1960களில் ஆண், பெண் உறவுகள், சமூகத்தில் பெண்களுக்கான கட்டமைப்பு, திருவல்லிக்கேணியின் பிராமண வீடுகள், வீதிகள், அவர்
களின் உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை வாசகருக்கு வெளிச்சமிட்டுக் காட்டு
கிறார் நூலாசிரியர்.
தான் படித்த வேதங்களுக்கு முரணாகச் சில விஷயங்கள் தன் வீட்டில் நடப்பதை எதிர்கொள்ள முடியாமல் பவானியம்மாளிடம் திரும்பிச் செல்கிறான்.
இளம் விதவையான, தனக்காகக் காத்திருக்கும் இந்துவை ஏற்றுக்கொள்
கிறான். அதன்மூலமாக அவன் அம்மாவையும் ஏற்றுக்கொள்கிறான் என்ற அழகான செய்தி பூடகமாக வைக்கப்பட்டுகிறது.
அப்புவைத் தேடி வந்த அம்மா உண்மையில் தேடி வந்தது என்ன என்பதைத்
தெரிந்துகொள்ள நூலை வாசியுங்கள்.
இந்த நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

