சிறுகதை
ஆர் ராஜேந்திரம்
பாலன், வீட்டு வாசலுக்கும் சமையலறைக்கும் இடையே குறுக்கும் நெடுக்குமாகப் பொடிநடை போட்டுக் கொண்டிருந்தார். வழக்கமாக ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடும் இனியவன், எட்டு மணியாகியும் வீடு திரும்பவில்லையே என்ற கவலை அவரது முகத்தில் தெரிந்தது.
'யசோதா... பையனோட வாகனம் தங்க நிறம்தானே?', வாசலில் நின்றிருந்த தன் மனைவியிடம் மீண்டும் ஒரு முறை கேட்டார். கடந்த இரண்டு மணி நேரத்தில் எத்தனை தடவைதான் பதில் சொல்வது என்று ஆதங்கப்பட்டாலும் தன் கணவருக்கு விடைகொடுக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு இருந்தது.
'ஆமாங்க.., வாகன எண் ஐம்பது எழுபது', வாகனத்தின் வண்ணத்தோடு அதன் எண்ணையும் வாயிற் கதவருகே வந்துவிட்ட பாலனின் பக்கத்தில் வந்து கூறினாள். அவருக்குக் காது சரியாகக் கேட்காது என்பது ஐம்பது வருடங்களுக்கு மேலாக அவருடன் குடும்பம் நடத்திவருபவளுக்குத் தெரியாமலா இருக்கும்.
'மணி... எட்டாகப்போவுது... இன்னும் பையன் வரலையே... அதான்..', என்று இழுத்தார் பாலன். பாலன், கால அட்டவணை போட்டு வாழ்க்கை நடத்துபவர். பணத்தை இழந்தால் மீண்டும் அதைத் தேடிப்பெறலாம். ஆரோக்கியத்தை இழந்தால் மீண்டும் அதைப் புதுப்பித்துக் கொள்ளலாம். நேரத்தை இழந்தால் மீண்டும் அதைத் திரும்பப் பெற முடியாது. காலத்தைப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கே காலம் உதவி செய்யும் என்பதை குறிக்கோளாகக் கொண்டவர்.
"எங்க போயிடப்போறாரு?
வாரம் ஒருமுறை நமக்கு காய்கறிகளையும் மளிகைச் சாமான்களையும் வாங்கத்தானே தேக்கா வரை போவாரு.. வந்திடுவாரு," யசோதா சமாதானப்படுத்தினாள்.
"இல்ல... வாகனம் புதுசு... அவனும் இப்பத்தான் ஓட்ட ஆரம்பிச்இருக்கிறான்," பாலனுக்கு இருந்த அச்சத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்.
"பையன்தான் நல்லா ஓட்டிப் பழகியிருக்கானே!" அவரது பயத்தை இந்த வார்த்தைகள் போக்கும் என்ற நம்பிக்கையில் யசோதா பதிலளித்தாள்.
"ம்..ம்..ம்.., இன்னும் எத்தனை நாளுக்குத்தான்... இப்படி வெளிய தெருவ போகாம.. அடைஞ்சு கிடக்குறது..", இது பாலனின் புலம்பல்.
பாலனுக்கு ஆசிரியர் வேலையில் இருந்து ஓய்வுகொடுத்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தத் தள்ளாத வயதில் எங்கு வெளியில் போகப்போகிறார்? அதிகபட்சம் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் பூங்கா வரை நடந்துவிட்டு வருவார். இல்லையேல் அருகில் இருக்கும் காப்பிக்கடையில் அவர் வயதையொத்த நண்பர்களோடு அரட்டை அடித்துவிட்டு வருவார். இந்த வயதில் அவருக்கு வேறு என்ன தலைபோகிற வேலை இருக்கப்போகிறது?
"எல்லாத்தையும் அவன் பார்த்துக்குவான்", அண்ணாந்து இருள் கௌவிக்கொண்டிருக்கும் வானத்தைக்காட்டி இறைவன் இருக்கிறான் என்பதுபோல் இரு கைகளையும் உயர்த்திக் காட்டினாள் யசோதா. உலகில் அனைத்தும் இறைவனின் ஆணைப்படி நடக்கிறது என்பது ஆத்திகர்களின் நம்பிக்கை. அந்த இறைவனில்லாவிட்டால் ஒரு சிறு அணுவும் அசையாது. இறைவனின் அருட்சக்தியால்தான் அனைத்தும் நடைபெறுகிறது என்பது அவளின் நம்பிக்கை.
டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் வட்டாரத்தில் தொடங்கிய கொரோனா என்ற கிருமித்தொற்று உலகெங்கும் பரவி பல நாடுகளை முடங்க வைத்துவிட்டது. அதில் சிங்கப்பூரும் ஒன்று. பெரும்பாலும் மூக்கு, வாய் வழியாக தொண்டைக்குள் சென்று அதன் வழியாக நுரையீரலைத் தாக்கி மக்களை செயலிழக்கச் செய்து வருகிறது இந்த கொவிட்-19 எனும் கொடிய நோய்.
இந்நோய் முதியவர்களையே அதிகம் பாதிக்கிறதாம். அதனால் முதியோர்கள் கூடுமானவரை வீட்டைவிட்டு வெளியே செல்லவேண்டாம் என அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.ஆதலால் பாலன் வீட்டிலேயே முடங்கிக்கிடக்க வேண்டியதாயிற்று.
பாலன் மீண்டும் வாயிற் கதவை சற்று திறந்து வலதுப் பக்கம் எட்டிப் பார்த்தார். அது ஒருவழிச் சாலை. வரிசையாக இருபுறமும் இரண்டு மாடி வீடுகள்.
வீடுகளுக்கு அருகிலேயே வாகனங்களை நிறுத்திவைக்க வசதி இருந்தது. கண் எட்டும் தூரம் வரை பார்த்தார். பையன் இனியவனின் வாகனம் தென்படவில்லை.
வீட்டுக்குள் நுழைந்து சமையலறை நோக்கி நடந்த மனைவியை பின்தொடர்ந்தார் பாலன்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்தான் வேலையில் சேர்ந்தான் இனியவன். வேலையில் சேர்ந்த ஆறு மாதத்திலேயே புதிய வாகனத்தை வாங்கிவிட்டான்.
முன்னேற்றத்திற்கான முதல் அடியை சொந்த முயற்சியின் மூலம் எடுத்து வையுங்கள்.
முதல் அடி எடுத்து வைத்ததின் சுவாரசியமும் வெற்றிக்களிப்பும் அடுத்த அடியை எடுத்து வைக்க அது உங்களைத் தூண்டும் என்பதுபோல்தான் வேலை செய்து சேர்த்து வைத்த பணத்தில் முதல் படியாக அந்த வாகனத்தை வாங்கினான்.
அடுத்தபடியாக, பகுதி நேரமாக படித்து முனைவர் பட்டம் பெறவேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தான்.
தங்கம் இனியவனுக்குப் பிடித்த நிறமாதலால், வாகனத்தின் நிறமும் அதுவானது. தற்செயலாக வாகனத்தின் எண்ணும் அவனது வாழ்வோடு பின்னிப் பினைந்திருந்ததை அவன் உணராமலில்லை. அவனுடைய தந்தை பிறந்த வருடம் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது. அவருக்கு இந்த ஆண்டு எழுபது வயது. ஆக, வாகன எண் ஐம்பது எழுபது என்றிருந்தது இனியவனுக்கு மகிழ்ச்சியே! அதுமட்டுமல்லாமல் அந்த வாகன எண்ணில் மேலும் சில சிறப்பு அம்சங்கள் அமைந்திருந்தன. இவ்வாண்டு அவனது பெற்றோர் அவர்களது ஐம்பதாவது ஆண்டு திருமண பொன்விழாவை கொண்டாடுகின்றனர். அவர்களது வீட்டு முகவரி எழுபது. நல்லனவற்றோடு அவனது வாகன எண்ணுடன் தொடர்பாக உள்ளது அனைவருக்குமே மகிழ்ச்சிதான்.
ஓரிரு மாதங்கள் வேலை இடத்துக்கும் இதர இடங்களுக்கும் வாகனத்தை ஓட்டி மகிழ்ச்சியடைந்தான் இனியவன். இடையே கொவிட்-19 எனும் தொற்றுநோய்ப் பரவலால் முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. அதனால் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் வேலை செய்து வந்த இனியவன் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டியதாயிற்று. அந்த சமயங்களில் வாகனத்தை ஓட்ட அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை இனியவனுக்கு. வாரத்துக்கு ஒருமுறை தேக்காவுக்கு சென்று பொருட்கள் வாங்க மட்டும்தான் வாகனத்தைப் பயன்படுத்த முடிந்தது.
"ஐயா...", வாசலில் இனியவனின் குரல். இரு கைகளில் பைகளுடன் நின்றிருந்தான் இனியவன்.
"என்னப்பா... வழக்கமா ஆறு மணிக்கெல்லாம் வந்திடுவ... இன்னிக்கு இவ்வளவு நேரங்கழித்து வர்ரே?", என கேட்டவாறே அவனிடமிருந்து பைகளை வாங்கி மனைவியிடம் கொடுத்தார்.
"அலுவலகம் வரை போக வேண்டிய வேலை இருந்தது. அதான், கொஞ்சம் நேரங்கடந்துதான் தேக்காவுக்கே போனேன்," என்றான் இனியவன்.
"உள்ள வாயேன், சாப்பிட்டுட்டு போகலாம்," என வீட்டுக்குள் அழைத்தார் பாலன்.
"பரவாயில்லை.. ஐயா.., சாப்பாடு வாங்கிட்டு வந்துட்டேன். பக்கத்துல இருக்கிற இலியாஸ் ஐயாவும் காய்கறிகள் வாங்கச் சொல்லியிருந்தார். அவருக்கிட்ட கொடுத்துட்டு வீட்டுக்கு போகணும். பிறகு வர்றேன்", என்றான்.
பாலனின் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்தது இனியவனின் குடும்பம். இனியவனின் தந்தையும் பாலனும் பால்ய சினேகிதர்கள். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருவரும் "மண்ணுமலை" என்கிற இந்த வட்டாரத்தில் தனியார் வீடு வாங்கினார்கள். ஒரு சில மாதங்களுக்கு முன்தான் இனியவனின் பெற்றோர் அவர்களது மூத்த மகளின் பேறுகாலத்திற்காக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்துக்கு சென்றிருந்தார்கள். ஆனால் கொவிட்-19 நோய்ப்பரவலால் அவர்கள் சிங்கப்பூர் திரும்ப முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள்.
"அப்பா, அம்மாகிட்ட பேசினியா... நல்லா இருக்கிறாங்களா?" பாலன் விசாரித்தார்.
"நன்றாக இருக்கிறார்கள்", என்பதற்கு அறிகுறியாக தலையசைத்துவிட்டு, "இப்ப கொவிட்-19 தொற்று அதிகமா பரவிக்கிட்டிருக்காம். ஏதாவது வாங்கணும்னா என்னைக் கூப்பிடுங்க. நீங்க வெளியே போகவேணாம், முதியோர்களை அதிகம் பாதிக்கிறதாம்", என்றான் இனியவன்.
"முதியவர்களைத் தாக்கும் என்பது ஒரு அனுமானம்தான். நீயும்... அதிகமா வெளிய தெருவ போகவேண்டாம். உடம்பை பார்த்துக்க..." என ஆலோசனை கூறினார் பாலன்.
"எங்க வீட்டுக்கு முன்னாடி வாகனத்தை நிறுத்த இடம் கிடைக்கல. உங்க வீட்டு முன்னாடியே போட்டிருக்கேன்...", என்று கூறி விடைபெற்றான் இனியவன்.
"தங்கமான பையன்..." என்று கூறியவாறு பொருட்களுடன் சமையலறைக்குச் சென்றாள் யசோதா.
"நமக்கு உதவணும்னு அவனுக்கு என்ன தலையெழுத்தா? இந்தக் காலகட்டத்துல வயசான நாம வெளியே போகவேண்டாம்னு சொல்லி கடந்த மூனு மாசமா, வாராவாரம் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கிறான். நம்ம பிள்ளைங்க தனிக்குடித்தனம் போகாம இருந்தா... அந்தப் பையன தொந்தரவு செய்ய தேவை இருக்காது...", என்று தனது ஆதங்கத்தை யசோதாவுடன் பகிர்ந்துகொண்டார் பாலன்.
திருமணத்திற்குப் பிறகு தம் இரு மகன்களும் தங்களுடன் தங்கவில்லையே என்ற கவலை மனத்தை உறுத்தியது அவருக்கு. 'இல்லையே" என்பது ஒருவகைக் கவலை. 'இருந்தும் இல்லையே" என்பது மறுவகைக் கவலை. 'அருகில் இருந்தும் ஆதரவு இல்லையே" என்பது சித்திரவதை. அதை அவர் உணராமலில்லை.
கடைசிக் காலத்துல மகன்கள் பக்கத்தில் இல்லையே என்ற கவலையிருந்தாலும் அதை பாலன் காட்டிக்கொள்வதில்லை.
தன் மனைவிக்கு எந்தவித மனச்சங்கடமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தாலும் சில வேளைகளில் மனத்தில் உள்ளது அவரறியாமல் வெளிப்படுவதுண்டு.
திருக்குறளில் ஒவ்வொரு குறளையும் இருவரிகளுக்கு மேல் எழுதவில்லை திருவள்ளுவர். அதற்கு காரணம், ஒரு வரி கணவனையும் மற்றொரு வரி மனைவியையும் குறிக்கத்தானோ? கணவனும் மனைவியும் இவர்களைப்போல் நல்ல புரிதலோடு இருந்தால், வீட்டின் கதவை சொர்க்கம் தட்டுமே!
அப்போது தொலைபேசி அலற அதை எடுத்தார் பாலன். மறுமுனையில் இனியவனின் குரல் தழுதழுத்தது. "ஐயா..." அவன் பேசமுடியாமல் தடுமாறினான்.
"என்னப்பா... சொல்லு.. சொல்லுப்பா," என வற்புறுத்தினார் பாலன்.
"ஐயா... அப்பா... நம்மைவிட்டு போயிட்டாரய்யா...
அவரையும் இந்த கொரோனா கிருமி விட்டுவைக்கலையா...!"
இனியவன் துக்கம் தாளாமல் அலறினான்.
செய்தி அறிந்த பாலன் அதிர்ந்து சிலையாய் நின்றார். பிறப்பு ஒரு வழி ஆனால் மரணம் பல வழி என்பார்கள். அந்தப் பல வழிகளில், கொரோனா தொற்றும் ஒன்றாகி விட்டதை எண்ணி அவரது நெஞ்சு பதைபதைத்தது.
ஒரு சில தினங்களுக்கு முன்தான் பாலன் அவரோடு தொலைபேசிவழி உரையாடி இருந்தார். நன்றாக கலகலப்பாக பேசிக்கொண்டிருந்த மனிதர் இப்போது இல்லையே என்று எண்ணி கண் கலங்கினார். நாளைய வாழ்க்கை இதுதான் என்று இன்றே தெரிந்துவிட்டால் மனிதர்கள் விழித்துக்கொள்கிறார்கள்.
மனிதர்கள் விழித்துக்கொண்டால் கடவுள் இயக்கம் செயலற்றுப் போகும். ஆகவேதான் சிலவற்றை ஆண்டவன் ரகசியமாகவே வைத்திருக்கிறான் போலும்.
அவசர அவசரமாக உடையை மாற்றிக்கொண்டு இனியவனின் வீட்டுக்குப் போக ஆயத்தமானார் பாலன். வீட்டின் வாசலுக்கு வந்துவிட்ட பாலன், வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இனியவனின் வாகனத்தைப் ஏறிட்டுப்பார்த்தார். வாகனத்தின் எண் கண்முன் நிழலாடியது. கைக்கடிகாரத்தைப் பார்த்தார். அவருக்கு தூக்கிவாரிப்போட்டது.
அன்றைய தேதி ஐந்து, ஏழாம் மாதம் என்று காட்டியது. அந்த வாகனத்தின் எண் பல நல்லனவற்றுக்குச் சாதகமாக இருந்ததோடு ஒரு துன்பகரமான நிகழ்வுக்கும் பொருந்திவிட்டதே என வேதனைப்பட்டார்.
முற்றும்

