உலகமெனும் பெருவெளியில் உலவு கின்ற
உயர்பிறவி மானுடமே உண்மை கண்டீர்!
திலகமெனத் தமிழ்மொழியின் சிறப்பு மிங்கே
திசையெல்லாம் செழித்திருக்கச் செருக்கு முற்றீர்!
நிலவுலகில் தமிழினத்தின் மாட்சி தன்னை
நினைந்துருகிக் கற்பனையில் கலந்து போனீர்!
குலவுகின்ற உறவிடத்தே அன்பை விட்டு
கூடாத செயல்களிலே கவனம் வைத்தீர்!
தேடாமல் பெருஞ்செல்வம் வாய்க்கு மென்று
தெளிவற்ற மனத்தோடு வாழு கின்றீர்;
போடாமல் விதையொன்றும் முளைப்ப தில்லை;
போனஉயிர் மீண்டுமிங்கே வருவ தில்லை;
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி விட்டு
அடங்குவதில் இலாபமொன்றும் இல்லை யில்லை;
மேடாக இருந்தாலும் முகடு எட்டும்
முயற்சியதே முன்னேற்றும் மறக்க வேண்டா!
பிறவியிதைப் பெற்றதற்கு நன்றி சொல்லி
பெற்றதையும் உற்றதையும் காத்து நிற்பீர்!
மறதியது மானுடர்க்கு வேண்டு மிங்கே
மறக்காமல் தமிழ்காக்க எழுவீர் இன்றே!
நிறத்தாலும் மதத்தாலும் பிரிதல் விட்டு
நிலவுலகில் மனிதமதைப் பூக்கச் செய்வீர்!
திறத்தாலே ஆக்கமது உயிர்க்கும் போது
திசையெல்லாம் தமிழோசை ஒலிக்கும் காண்பீர்!
- ஆர்வி

