தனக்கு தவாத தரிசு நிலமெனத் தள்ளிவைக்க
இணக்க நெறியில் இருந்தவர்க் குள்ளே இருகொடிகள்!
வனப்புகள் மிக்க வளங்கள் குறைவுதான் வாழ்வதற்கு!
மனத்தால் தளர்ந்து மயங்கியா விட்டது மாய்வதற்கே?
நெருக்கும் கடலலை நிர்கதி யற்ற நிலப்பரப்பு
மருகித் தவித்து மனத்தால் உருகிய மக்களெல்லாம்
வருத்தம் ஒதுக்கிநல் வாழ்வு செழிக்கும் வழியறிய
நெருப்பாய்த் தகித்திடும் நெஞ்சில் பிறந்தது நிம்மதியே.
நல்ல தலைமையில் நாட்டினர் ஒன்றிய நற்செயலும்
பல்லின ஒற்றுமைப் பார்புகழ் பெற்றிட பங்கெடுத்தும்
துல்லிய திட்டமும் தூய்மை உழைப்புடன் தோள்கொடுக்க
வல்லமை கொண்ட வடிவினில் சிங்கையை வார்த்ததுவே.
கட்டமைப் பில்நல் கவனம் செலுத்திக் கடமையாற்ற
சட்ட ஒழுங்கு சமரச மற்றதோர் சாட்டையாகப்
பட்ட மரத்தில் பசுமை துளிர்த்துப் படர்ந்ததனால்
எட்டிடா வானுயர் தொட்டுப் புகழினை எட்டியதே!
- சி.கருணாகரசு

