சாரதா சொல்­லப்­ப­டாத கதை

சாரதா சொல்­லப்­ப­டாத கதை

8 mins read

சிவ­கு­மார் கே.பி

"வணக்­கம் ஆசி­ரியை" என்று எல்­லோ­ரும் ஒன்று சேர்ந்து சொல்­லி­ய­போது, மாண­வர்­க­ளின் பார்வை தமிழ் ஆசி­ரியை கையில் வைத்­தி­ருந்த சிவப்பு வண்ண விளம்­ப­ரத் தட்­டி­யின் மீது விழுந்­தது.

"என்ன? எல்­லா­ரும் ரொம்ப ஆவலா இருக்­கீங்க போலி­ருக்கு?" என்று ஓர் ஆசி­ரிய­ருக்கே உரிய தொனி­யில் தமிழ் ஆசி­ரியை உரக்கச் சொன்­னார்.

அடுத்த சில நிமிடங்களில் நிகழ்ச்சி நிரலைப் படித்­து­விட்டு, "அப்­பு­றம் ஒரு முக்­கி­ய­மான விஷ­யம். பாரதியார் விழாவில் ஒரு போட்டி அறி­விச்­சு­ருக்­காங்க. உயர்­நிலைப் பள்ளி மாண­வர்­க­ளுக்காக பேச்­சுப் போட்டி. தலைப்பு 'பாரதி கண்ட புதுமைப்பெண்'," என்று ஆசி­ரியை சொல்லி முடித்­த­தும் வகுப்­பில் ஒரே அமைதி நில­வி­யது.

"என்ன இவ்­வளோ அமைதி? போட்­டினு சொன்­ன­தும் ஆவல் எல்­லாம் போயி­டுச்சா? தைரி­யமா கலந்­துக்­க­ணும்" என்று சொல்­லிக்­கொண்டே மீனா­வின் பக்­கம் திரும்­பி­னார்.

மீனா, அந்த பள்­ளி­யின் சிறந்த பேச்­சா­ளர். அவள் ஏறாத மேடை இல்லை, வாங்­காத பரி­சு­கள் இல்லை. அப்­ப­டிப்­பட்ட மீனா ஏதோ சிந்­த­னை­யில் மூழ்கி இருந்­த­தைக் கண்டு தமிழ் ஆசி­ரி­யைக்கு ஆச்­ச­ரி­யம் கலந்த பயம் உண்­டா­யிற்று.

"மீனா, உன்­னைத்­தான் நம்பி இருக்­கேன். தலைமை ஆசி­ரி­யர் கிட்ட கண்­டிப்பா நம்ம மீனா கலந்­துக்­கு­வான்னு சொல்­லிட்­டேன். என்னை கைவிட்­டு­டா­தேம்மா!!" என்று ஆசி­ரியை மீனா­வி­டம் கெஞ்சு­வ­தைக்கேட்டு, சக மாண­வர்­கள் சிரிப்­பில் மூழ்­கி­னர்.

இதில் மீனா­வின் அரு­கில் இருந்த அவள் தோழி, "சரி சின்­னம்­மானு சொல்­லிடு," என்று சிரித்­துக்­கொண்டே முணு­மு­ணுத்­தாள்.

மீனா­வும், எல்­லோ­ரும் தன்­னைப் பார்த்து ஏதோ சிரிப்­பது கண்டு, ஆசி­ரி­யை­யி­டம் மெல்ல தலை அசைத்­தாள்.

பள்­ளிப்­ப­ரு­வத்­தில் ஆசி­ரி­யர்­களுக்கு மாண­வர்­கள் புனை­பெ­யர் வைப்பதுண்டு. தமிழ் ஆசி­ரி­யைக்கு 'சின்­னம்மா' என்­றும், தலைமை ஆசி­ரி­ய­ருக்கு 'ஹிட்­லர்' என்­றும் அவர்­கள் மறை­மு­க­மாக புனை­பெயர் வைத்து அவர்­க­ளுக்­கி­டையே பேசு­வ­துண்டு.

அன்று மதி­யம், போட்­டி­யில் கலந்­து­கொள்ள பதி­வு­செய்ய மீனா­வும் அவள் தோழி­களும் பள்ளி அலு­வ­ல­கத்­திற்குச் சென்­ற­னர். அங்கே 'ஹிட்­லர்' அவர்­களை வர­வேற்­றார்.

"என்ன மீனா, இந்த ஆண்­டும் போட்­டி­யில நீ கலந்­துக்­க­ப்போ­றேன்னு கேள்­விப்­பட்­டேன். மகிழ்ச்சி. போட்டி கடு­மையா இருக்­கும். நம்ம பள்ளி பெயரை உயர்த்­த­ணும். ஒரு புகழ்­பெற்ற பெண்­ம­ணி­யைப் பற்றி பேச­ணும். சரியா?" என்று 'ஹிட்­லர்' சொல்­லிக்­கொண்டே அங்­கி­ருந்த அலு­வ­ல­கப் பணி­யா­ள­ரைப் பார்த்து "அந்த போட்டி விண்­ணப்­பப் படி­வத்தை எடுத்து மீனா­கிட்ட கொடுங்க," என்­றார்.

அந்த அலு­வ­லகப் பெண்­மணிக்கு மாண­வர்­கள் வைத்­தி­ருந்த பெயர் "இரு­மல் பாட்டி".

இப்­போ­தும் அவர் இரு­மிக்­கொண்­டே­விண்­ணப்­பப் படி­வத்தை எடுத்து மீனா­வி­டம் கொடுத்­தார். அவள் தோழி­கள் அவரைப் பார்த்து சிரித்­துக்­கொண்டே அவர்­க­ளுக்­குள் ஏதோ முணு­மு­ணுத்­துக்­கொண்­ட­னர்.

மீனா அமை­தி­யாக அந்­தப் படி­வத்தை பணி­யா­ள­ரி­டம் வாங்­கிக்­கொண்டு "நன்றி" என்று மெல்ல அவர் காது­பட மட்­டும் சொல்­லி­விட்டு நகர்ந்­தாள்.

அடுத்த சில நாட்­களில் அவள் மன­தில் ஓடிக்­கொண்­டி­ருந்த ஒரே கேள்வி 'யாரைப் பற்றி பேச­லாம்?' என்­ப­து­தான்.

தலைமை ஆசி­ரி­யர் ஒரு பிர­ப­ல­மான பெண்­மணியைப் பற்றிப் பேசு என்று சொல்­லி­விட்­டார். தற்­கா­லத்­தில் வாழும் வெற்றி கண்ட பெண்­களைப் பற்­றிப் பேசு­வதா, அல்­லது சரித்­தி­ரம் படைத்த நாய­கி­க­ளைப் பற்­றிப் பேசு­வதா என்று குழப்­பம்.

அவ­ளுக்குக் குழப்­பம் வரும்­போ­தெல்­லாம் அவள் அணு­கு­வது அவள் அப்­பா­வைத்­தான்.

அப்பா எப்­போ­தும்­போல் அலு­வலக வேலை­யில் மூழ்கி இருந்­தார்.

"அப்பா, இந்த ஆண்டு பாரதியார் விழா­வில நான் பேசப்­போறேன். இதுல எல்லாப் பள்ளி மாண­வர்­களும் கலந்­துக்­கப் போறாங்க. பேச­வேண்­டிய தலைப்பு, 'பாரதி கண்ட புதுமைப் பெண்'" என்று மீனா தலைப்பைச் சொன்­ன­தும், அப்பா அவளை நிமிர்ந்து பார்த்­தார்.

"நல்ல தலைப்பு. யாரைப் பற்றி பேசப்­போற?" என்று அவள் அப்­பா­வி­டம் கேட்க நினைத்த கேள்­வியை, அவர் அவ­ளி­டமே திருப்பி கேட்­ட­தும், அவள் மேலும் குழப்­பி­னார்.

"அப்பா! கொஞ்­சம் உதவி பண்­ணுங்­க­ளேன். யாரைப் பற்றிப் பேச­லாம்? அன்னை தெரசா, மலாலா யூசுப்­சாய், இந்­திரா நூயி இவங்­களப் பற்றி பேச­லாமா?"

அப்பா பதில் சொல்­லா­மல் இருந்­தது, அவர் மன­தில் ஏதோ ஓடிக்­கொண்­டி­ருந்­தது என்­ப­தற்கு அர்த்­தம். சற்று யோச­னைக்­குப் பிறகு "அவங்­களப் பற்றி நிறைய பேர் பேசு­வாங்க. நாம கொஞ்­சம் மாத்தி யோசிக்­க­ணும்னு நினைக்­கி­றேன்," என்று மட்­டும் சொல்­லி­விட்டு அவர் மீண்­டும் வேலைக்­குள் மூழ்­கி­விட்டார்.

'மாத்தி யோசிக்­க­ணும்னு மட்­டும் சொல்­லிட்டா போதுமா. கொஞ்­சம் துப்புக் குடுக்­க­வேண்­டாமா?' என்று அவ­ளுக்கு அப்­பா­வின் மேல் அன்பு கலந்த கோபம் வந்­தது.

அம்மா சொல்­ற மாதிரி, 'இந்த அப்பா எப்­ப­வுமே இப்­ப­டித்­தான். நேர­டியா பதில் எது­வும் சொல்­லவே மாட்­டார்,' என்று நினைத்­தாள். பின்பு சற்று நேர யோச­னைக்­குப்­பி­றகு, '...ம் வாழ்க்­கை­யில் எது­வுமே நேர­டியா எளி­தில் கிடைக்­க­ற­தில்லை. அப்பா சொல்­ல­ற­மா­திரி கொஞ்­சம் மாத்தி யோசிச்­சா­தான் கிடைக்­கும்போல," என்று மீண்­டும் சிந்­த­னை­யில் ஆழ்ந்­தாள் மீனா.

*

போட்டி நாள் வந்­தது.

அரங்­கில் நல்ல கூட்­டம்.

சிங்­கப்­பூ­ரின் முக்கிய பள்­ளி­களின் பேச்­சா­ளர்­கள் வந்­தி­ருந்­த­னர். பள்­ளித் தலைமை ஆசி­ரி­யர்­கள், அவர்­க­ளின் உத­வி­யா­ளர்­கள், போட்­டி­யில் கலந்துகொள்­ளும் பேச்­சா­ளர்­க­ளின் பெற்­றோர்­கள் என்று அரங்­கமே நிரம்பி வழிந்­தது.

பேச்­சா­ளர்­கள் ஒரு தனி அறை­யில் உட்­கார்ந்­தது அவர்­க­ளுக்­கு இடையே பேசிக்­கொண்­டி­ருந்­த­னர்.

"ஏய், நீ யாரைப் பற்றி பேசப்­போற?" என்ற ஒரே கேள்விதான் அங்கே வலம் வந்­தது.

ஒரு சிலர் அவள் நினைத்­தது போல், சரித்­திர நாய­கி­கள், பெண் பிர­த­ம­ர்கள், கார்ப்ப­ரேட் நாய­கி­கள் என்று பெயர்­களைச் சொன்­னார்­கள்.

ஒரு சிலர் திரைப்­பட நடி­கை­க­ளின் பெய­ரைக்­கூட சொன்­னார்­கள்.

எல்­லோ­ரும் அவர்­கள் யாரைப் பற்­றிப் பேசப்­போ­கி­றார்­கள் என்று சொன்ன பிறகு, கடை­சி­யில் மீனா பக்­கம் திரும்­பி­னர்.

"மீனா, நீ யாரை பற்றி பேசப்­போற?" என்ற கேள்­விக்கு, மீனா ஒன்­றும் சொல்­லா­மல் மௌனம் சாதித்­தாள்.

அரு­கில் இருந்த மாணவி, மீனா கையில் வைத்­தி­ருந்த காகி­தத்தை எட்­டிப்­பார்த்­தாள். காகி­தத்தில், 'சாரதா - சொல்­லப்­ப­டாத கதை' என்று எழு­தி­யி­ருந்­தது.

"ஏய்... இவ யாரோ சாரதா பற்றி பேசப்போறா­ளாம்" என்று எல்­லோ­ரும் கேட்கும்படி சொன்­னாள். "யாரும்மா இந்த சாரதா? நாங்க கேள்­விப்­பட்­டதே இல்­லையே?" என்று நமட்டுச் சிரிப்­போடு அவளை அனை­வ­ரும் கேட்­ட­னர். அதே நேரத்­தில், ஒரு சிலர் 'கூகலை' அணு­கி­னர்.

இந்தத் தலை­மு­றை­யி­ன­ருக்கு எந்தக் கேள்­வி­யாக இருந்­தா­லும் பதில் தெரிய அணு­கும் ஒரே இடம் 'கூகல்'. இணை­யத்­த­ளத்­தில், எந்த சாரதா பற்­றி­யும் வரா­தது அவர்­க­ளுக்கு ஏமாற்­றத்தை அளித்­தது.

*

பேச்சுப்போட்டி ஆரம்­பித்­தது. பல மாண­வர்­கள் பேசி­ய­பி­றகு, மீனா­வின் முறை வந்­தது.

மேடை ஏறும் எல்­லோ­ருக்­கும் கிடைக்­கும் வர­வேற்பு, கைதட்­டல்­கள் ஓய்ந்த பிறகு அரங்­கத்­தில் அமை­தி­யும் எதிர்­பார்ப்­பும் நில­வி­யது. மீனா மெல்ல தன் பேச்சை ஆரம்­பித்­தாள்.

"சென்ற நூற்­றாண்­டின் எண்­ப­து­களை, பொது­வாக 'கோல்­டன் எயிட்­டிஸ்' என்று ஆங்­கி­லத்­தில் கூறு­வது வழக்­கம். அதற்குப் பல கார­ணங்­கள் உண்டு. வர்த்­த­கம், விஞ்­ஞா­னம், விளை­யாட்டு என்று பல துறை­கள், மனித வர­லாற்­றில் அது­வரை காணாத முன்­னேற்­றப்­பா­தை­யில் வேக­மாக வளர்ந்­து­கொண்­டி­ருந்­தன.

ஜப்­பான், சீனா, இந்­தியா போன்ற ஆசிய நாடு­கள் அமெ­ரிக்­கா­வின் இரு­நூறு ஆண்­டு­கால வளர்ச்­சிக்கு சவால் விட்­டுக்­கொண்­டி­ருந்­தன. ஏன்? நம்ம சிங்­கப்­பூர் கூட உலக அள­வில் ஒரு வள­ராத நாட்­டி­லி­ருந்து வளர்ந்த நாடக மாறிக்­கொண்­டி­ருந்த காலம். நாட்­டின் வளர்ச்­சி­யோடு, தங்­கள் வாழ்க்கை முறை­யும் வளர்ச்­சி­யின் பாதை­யில் பய­ணித்துக்கொண்­டி­ருந்த கால­கட்­டத்­தில், ஒரு நாள்..அந்த நாள், சாரதா என்று நம்மை போன்ற சாமா­னிய மனி­தர்­க­ளுக்கு இடையே வாழ்ந்­து­கொண்­டி­ருந்த ஒரு பெண்­ம­ணிக்கு, வாழ்க்கை முற்­றுப்­புள்­ளி­யாக மாறும் சவால் விட்­டது.

மீனா தன் பேச்­சில் இப்­போது விட்ட இடை­வெ­ளி­யில் அரங்­கத்­தின் எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­தது. யார் இந்த சாரதா என்ற கேள்வி பலர் மன­தில் எழ தொடங்­கி­யது.

"சாரதா, இரண்­டாம் உல­கப்­போர் காலத்­தில் இந்­தி­யா­வில் பிறந்­த­வள். பெண் கல்வி, பெண் சுதந்­தி­ரம் போன்ற சமு­தாய மாற்­றங்­கள் நிக­ழாத காலம் அது. அவள் பிறந்த நாள் முதல், காலம் அவ­ளின் வாழ்க்­கை­யோடு எப்­போ­தும் விளை­யா­டிக்கொண்டே இருந்­தது.

சிறு வய­தில் தந்­தையை இழந்­தாள். குடும்­பச் சூழ்­நி­லை­யால் தன் படிப்பை உயர்­நிலை படிப்­போடு நிறுத்­தி­விட்­டாள். பிறகு, அந்தக் காலத்­தில் எளிய குடும்­பங்­களில் பிறந்த எல்லா பெண்­க­ளையும் போல் சிறுவயதிலேயே திரு­ம­ணம் என்ற காலத்­தின் கட்­டா­யத்­திற்கு அடி­பணிந்து, அறு­ப­து­களில் இந்­தி­யா­வி­லி­ருந்து பல கன­வு­க­ளோடு சிங்­கப்­பூ­ரில் குடி­புகுந்த குடும்­பங்­களில் அவ­ளும் அவள் கண­வ­னும் அடங்­கு­வர்.

கண­வன், இரு குழந்­தை­கள் என்று வாழ்க்கை துளிர்­விட்டு கொண்­டி­ருந்த நேரத்­தில் மீண்­டும் காலம் அவள் வாழ்க்­கை­யோடு விளை­யா­டத் தொடங்­கி­யது.

எண்­ப­து­களில் ஒருநாள், அந்த நாள். அவள் தன் கண­வனை இழந்­தாள். எங்கோ பிறந்து, வேறு எங்கோ வாழ வந்­த­வள்.

இப்­போது யாரும் இல்­லாத ஒரு தனி மர­மாக நின்­றாள். தன் இரு பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லத்தை எவ்­வாறு உருவாக்கப்­போகி­றோம் என்று செய்­வ­தறியா­மல் திகைத்­தாள்.

அடுப்­பூ­தும் பெண்­ணிற்குக் கல்வி எதற்கு என்ற காலத்­தில் பிறந்­த­தால், தன் காலில் தனி­யாக நிற்­கும் அள­விற்கு படிப்­பும் இல்லை, காப்­பீ­டும் இல்லை!

இத்­தோடு தம் வாழ்க்­கைக்கு முற்­றுப்­புள்ளி வைப்பதைத் தவிர வேறு வழி­யில்லை என்று நினைக்­கும் பல பெண்­க­ளுக்கு நடுவே, அதே முற்­றுப்­புள்­ளியை ஒரு காற்­புள்­ளி­யாக மாற்ற நினைத்­தாள் சாரதா.

ஒரு சின்ன மருந்­துக் கடை­யில் வேலைக்குச் சேர்ந்­தாள். அந்­தக் கடை­யில் கிடைத்த வரு­மா­னத்­தில் வாழத்­தான் முடி­யுமே தவிர, வளர முடி­யாது. தன் இரு பிள்­ளை­க­ளின் உயர் படிப்­பிற்­கும் எதிர்­கா­லத்­திற்­கும் இன்­னும் பணம் தேவைப்பட்டது.

'ஆணும் பெண்­ணும் நிக­ரெ­னக் கொள்­வ­தால் அறிவிலோங்கி இவ் வையம் தழைக்­கு­மாம்' என்ற பார­தி­யின் கனவை பூர்த்­தி­செய்­வ­து­போல், தனது கல்வித்தகுதியை உயர்த்திக்கொண்டு ஆசி­ரி­யர் பயிற்சி மேற்­கொண்­டாள். பிறகு ஒரு பள்­ளி­யில் வேலைக்­கும் சேர்த்­தாள். ஒவ்வொரு பொழு­தும் சவா­லா­கவே இருந்­தது.

பகலில் பள்­ளி­யி­லும், இர­வில் மருந்­துக் கடை­யில் வேலை­யு­மாய், தன் குடும்­பத்­துக்­கா­கவே உழைத்­தாள்.

இப்­ப­டியே பல வரு­டங்­கள் கழிந்­தது. மெல்ல காலம் அவள் கன­வைப் பூர்த்தி செய்­யத் தொடங்­கி­யது. இன்று சார­தா­வின் குடும்­பம் சீரும் சிறப்­பு­மாக சிங்­கப்­பூ­ரில் வாழ்­வ­தற்கு அவ­ளின் உழைப்­பும் தியா­க­மும்தான் அடித்­த­ளம்," என்று மீனா நீண்ட நேரம் பேசி­ய பி­றகு சற்று நீர் பரு­கி­னாள்.

மீனா­வின் கதைபோல் வர்­ணித்த இந்தப் பேச்­சுக்கு, ஆவ­லும், அமை­தி­யும் தான் அரங்­கத்­தின் பதி­லாக இருந்­தது.

"பாரதி கண்ட புதுமை பெண் சமு­தா­யத்­தில் எல்­லோ­ரும் அறிந்த முக­மா­கத்­தான் இருக்க வேண்­டு­மென்ற அவ­சி­யம் இல்லை. முற்றுப்­புள்­ளியை காற்­புள்­ளி­யாக மாற்றி, பல குடும்­பங்­களை தங்­கள் தியா­கத்­தா­லும், உழைப்­பா­லும் முன்­னுக்கு கொண்­டு­வ­ரும் ஒவ்­வொரு சார­தா­வும், பாரதி கண்ட புது­மைப்­பெண் தான் என்­பது என் கருத்து.

இப்­படி நம்­மி­டையே, நம் வீடு­களில், நம் சமு­தா­யத்­தில் பல சார­தாக்­கள் இருக்­கி­றார்­கள்.

ஏன்? எங்­கள் வீட்­டி­லும், பள்­ளி­யி­லும்கூட ஒரு சாரதா உண்டு," என்று அவள்­ சொன்­ன­போது அரங்­கத்­தில் எதிர்­பார்ப்பு மேலோங்கி இருந்­தது.

"எங்­கள் பள்­ளி­யில் எல்­லோ­ரும் மறை­மு­கமாகப் பேசும் 'இரு­மல் பாட்டி'தான், நான் இன்று பேசிய அந்த சாரதா. சாரதா, நிஜ வாழ்­வில் என்­னு­டைய பாட்­டி­யும் கூட. அவ­ரின் முகத்தையும் கதையையும் அறிய, இன்று பலர் 'கூகலை' தேட முயன்­ற­னர். ஆனால் அவர் முக­மும், கதை­யும் ஒரு நாள் 'கூகலில்' வர­வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான், நான் அவரின் வாழ்க்­கை­யில் சொல்­லப்­படாத கதையை இன்று உங்­க­ளி­டையே சொன்­னேன். 'இரு­மல் பாட்டி' என்று எல்­லோ­ரா­லும் அழைக்­கப்­படும் என் பாட்டி, என்­னைப் பொறுத்தவரை­யில் ஒரு 'இரும்பு' பாட்டி'.

அவ­ரும் பாரதி கண்ட புதுமைப் பெண்தான்" என்று பெரு­மி­தத்­தோடு சொல்லி மீனா தன் பேச்சை முடித்­தாள்.

இந்தப் பேச்சைக் கேட்­டுக்­கொண்­டி­ருந்த மீனா­வின் தலைமை ஆசி­ரி­யர் 'ஹிட்­லர்' கண்­களில்கூட நீர் பெரு­கி­யது. ஆனால் அவர் அருகே இருந்த அந்த 'இரும்புப் பாட்டி' சார­தா­வின் கண்­களில் நீர் வர­வில்லை. அவர் பாரதி கண்ட புதுமை பெண். அழ­மாட்­டாள்.