தேடல்

தேடல்

10 mins read

சிறுகதை

ஷோபா குமரேசன்

உறக்­கத்­தி­லி­ருந்து கண்­வி­ழித்த துளசி, மெது­வாக எழ எத்­த­னிக்க அரு­கில் தூங்­கிக்­கொண்­டி­ருந்த செல்ல மக­ளின் பிஞ்­சுக்­கால்­கள் தன் மீது கிடப்­பதை உணர்ந்து சுதா­ரித்­தாள்.

அவ­ளின் கால்­களை மெது­வாக அகற்றி மெத்­தை­யில் வைத்­த­வள், குழந்­தை­யின் தலை­மு­டியை ஆசை­யு­டன் கோதி­விட்­டாள்.

துள­சி­யின் ஒரு­வ­யது மக­ளான அபி மாநி­றத்தை விட சற்று அதிக நிறம், பௌர்­ணமி நிலவு போன்ற வட்ட முகம், முகத்­தில் சிறிய நெற்­றிக்கு அழகு சேர்க்­கும் நீள­மான மை பொட்டு, குட்டி நாசி­யு­டன் விழி­கள் இரண்­டும் கொஞ்­சம் பெரி­ய­தாய் பார்ப்­ப­தற்கு 'துரு­துரு' வென இருப்­பாள். வலது கையின் கட்டை விரலை சூப்­பிக்­கொண்டு நித்­தி­ரை­யி­லேயே அவ்­வப்­போது சிரித்த தன் குழந்­தையை ரசித்­துக்­கொண்­டி­ருந்த துளசி, கடி­கா­ரத்தை நோக்க மணி காலை 6.30ஐ நெருங்­கிக்­கொண்­டி­ருந்­தது.

அலு­வ­ல­கத்­துக்கு கிளம்­ப­ணுமே, நேர­மாச்சே என அவ­ச­ர­மாக எழுந்­த­வள், காலைக்­க­டன்­களை முடித்­து­விட்டு அடுக்­க­ளைக்­குள் நுழைய, அங்கு அறு­பது வயதைக் கடந்­து கொண்­டி­ருக்­கும் துள­சி­யின் அம்மா பார்­வதி தேநீர் கலக்­கிக்­கொண்­டி­ருந்­தார்.

சூடான தேநீரை துள­சி­யி­டம் நீட்­டி­ய­வர் அபி தூங்­கிக்­கிட்டு இருக்­கும்­போதே சீக்­கி­ரம் கிளம்பு துளசி, சமை­யலை அப்­பு­றம் பாத்­துக்­க­லாம், எனத் துரி­தப்­ப­டுத்­தி­னார்.

அம்­மாவை நிமிர்ந்­து பார்த்த துள­சி­யின் மனம் கலங்­கி­யது.

இது என்ன சாபமா? என அவ்­வப்­போது துளசி யோசித்­துப் பார்த்­த­துண்டு.

பார்­வதி எப்­படி தனி­யா­ளாய் நின்று துள­சியை வளர்த்து ஆளாக்­கி­னாரோ, இப்­போது அதேநிலை­மை­யில் துள­சி­யும் இருக்­கி­றாள்.

யோச­னை­யி­லி­ருந்து மீண்­டெ­ழுந்­த­வள், அம்மா சொல்­வ­தும் சரி­தான், அபி எழுந்­து­விட்­டால் பிறகு கிளம்­பு­வது கடி­னம்.

மதிய சாப்­பாட்­டைக்கூட உண­வ­கத்­துல பாத்­துக்­க­லாம் என அவ­ச­ர­மாக புறப்­பட்­ட­வள் அறைக்­குள் இருக்­கும் கைப்­பையை எடுக்­கப்­போக, குழந்தை தன் கொலுசு அணிந்த கால்­களை உதைத்து துள­சி­யைப் பார்த்து சிரித்­தது.

முளைத்து வரும் இரண்டு பால்­பற்­க­ளைக் காட்டி, இனிய மழ­லைக் குர­லால் சிரிக்­கும் மகளை வாரி அணைத்து முத்­த­மிட்­ட­வள் ஒரு­பு­றம் மகிழ்ச்­சி­ய­டைந்­தா­லும் மறு­பு­றம் இவளை சமா­ளிச்சு கிளம்­ப­ணுமே என்­னும் பதற்­றத்­திற்கு ஆளா­னாள்.

வேற வழி­யில்லை, வழக்­கம் போல பாத்­துக்­க­லாம்' என தனக்­குத்தானே ஆறு­தல் கூறிக்­கொண்டு அறை­யி­லி­ருந்து அபி­யைத் தூக்­கிக்­கொண்டு வெளி­யே­றி­னாள் துளசி.

சுட்டி அபி­யும் தன் அம்மா கிளம்பி­விட்­டதை உணர்ந்­தாளோ என்­னவோ துள­சி­யின் தோள் மீது சாய்ந்­துகொண்டு சிணுங்க ஆரம்­பித்­தாள்.

சத்­தம் கேட்டு அடுக்­க­ளை­யி­ல் இ­ருந்து வெளியே வந்த பார்­வ­திக்கு இந்த காட்­சி­யைக் கண்­ட­தும் தூக்கி­வா­ரிப்­போட்­டது.

அவ­ரின் நிலை­மையை நினைத்­தா­லும் துள­சிக்கு பரி­தா­ப­மா­கத்­தான் இருந்­தது. இனி­மேல் இவர்­பாடு சிர­மம்­தான்.

பார்­வ­திக்கு பேத்தி அபி என்­றால் கொள்­ளைப் பிரி­யம். அது அவ­ரின் பேச்­சி­லேயே அடிக்­கடி வெளிப்­படும்.

'துளசி உன்னை சின்ன வய­சுல திரும்­ப­வும் பார்க்­கிற மாதி­ரியே இருக்கு' என பேத்தி செய்­யும் ஒவ்­வொரு செய­லை­யும் அவ்­வப்­போது ஒப்­பிட்­டுக் கூறி சிலா­கித்­துப் பேசு­வார்.

இப்­போ­து­தான் சில கால­மாக துளசி வேலைக்­குக் கிளம்­பும் நேர­மான காலை 7.30 மணி­ய­ள­வில் பேத்­தியைச் சமா­ளிக்க முடி­யா­மல் திண­றிப்­போ­கி­றார்.

அபியை கீழே தூக்­கிக்­கிட்­டுப் போய் குறைந்­தது ஒரு மணி நேர­மா­வது சமா­தா­னப்­ப­டுத்த வேண்­டும்.

பாவம் அம்மா, மூட்­டு­வலி வேறு அவரை ஒரு பக்­கம் பாடாய்ப்படுத்­து­கிறது.

நானா­வது இன்­னும் கொஞ்­சம் சீக்­கி­ரம் கிளம்­பி­யி­ருக்­க­லாம் என தன்­னைத்­தானே நொந்து கொண்­ட­வள், போக மறுத்த குழந்­தையை வலுக்­கட்­டா­ய­மாக அம்­மா­வி­டம் கொடுத்­து­விட்டு கனத்த இத­யத்­தோடு வீட்டைவிட்டு வெளி­யே­றி­னாள்.

மின்­தூக்­கிக்­காக காத்­தி­ருந்­த­வ­ளின் நினை­வில் அபி­யின் மழலை முகம் ஊச­லா­டி­யது. காலை­யில் தின­மும் அலு­வ­ல­கம் கிளம்­பும் போது இப்­படி தேம்பி தேம்பி அழு­கி­றாளே?

இது இன்­னக்­கின்னு இல்லை, கடந்த இரண்டு மாதங்­க­ளாக குழந்­தைக்கு கொஞ்சம் விவ­ரம் புரிய வந்ததில் இருந்து இப்­ப­டித்­தான் நடக்­கிறது.

ஏற்கெ­னவே அப்­பா­வின் அன்பை இழந்து வள­ரும் குழந்தை, இப்­போது தாயின் அர­வ­ணைப்­புக்­காக ஏங்­கு­கிறது.

துளசி வேலைக்கு கிளம்­பும் நேரம் ஒவ்­வொரு நாளும் சமா­ளிப்­ப­தற்­குள் பெரிய சவா­லாகி விடு­கிறது. ஆனால் ஒற்­றைப் பெற்­றோ­ரான துள­சி­யால் பொரு­ளா­தா­ரச் சிக்­கல் கார­ண­மாக வேலைக்­குச் செல்­வதை ஒத்­திப்போட முடி­ய­வில்லை.

சிந்­தித்­த­வாறே வந்துநின்ற மின்­தூக்­கிக்­குள் நுழைய முற்­பட்ட துள­சி­யின் செவி­களில் அபி­யின் அழு­கு­ரல் கேட்­கத் தொடங்­கி­யது.

*

அன்று அலு­வ­ல­கத்­தில் வேலை செய்து கொண்­டி­ருந்த துள­சி­யின் சிந்­தனை முழு­வ­தும் அபி­யைச் சுற்­றியே வலம் வந்­தது.

பொது­வாக எல்லா குழந்­தை­க­ளுமே பெற்­றோர் வேலைக்­குச் செல்­லும் நேரத்­தில் பிரி­வைத் தாங்­கா­மல் அழு­வது இயற்­கை­யாக இருந்­தா­லும்கூட, அபி­யின் செய்கை கொஞ்­சம் கூடு­த­லான கவ­லை­யைத் தரு­வ­தாக இருந்­தது.

அவ­ளின் சத்­த­மான அழு­கு­ரல் யாருக்­கா­வது இடை­யூ­றாக இருக்­குமோ என்று பயந்து பார்­வதி தின­மும் காலை குடி­யி­ருப்­பின் கீழே உலாவ வேண்­டிய கட்­டா­யத்­திற்கு ஆளா­னார்.

இப்­ப­டியே சென்­றால் என்ன செய்­வது? குழப்­பத்­தில் ஆழ்ந்­தி­ருந்த துள­சியை தோழி ரியா­ஸின் குரல் தட்­டி­யெ­ழுப்­பி­யது.

"என்ன தீவிர யோசனை? உண­வ­கத்­துல உங்­க­ளைப் பார்க்­க­லையே, சாப்­பிட வர­லையா?" என்று கேட்ட ரியா­ஸி­டம் தன் மனப்­பாரத்தை முழு­வ­து­மாக இறக்க ஆயத்­த­மா­னாள் துளசி.

"ஒரே குழப்­பமா இருக்கு ரியாஸ், வர­வர அபி நான் அலு­வ­ல­கம் கிளம்­பு­றப்ப ரொம்ப அழுது அடம் பண்றா.

"அம்­மா­வுக்­கும் சில உடல் உபா­தை­கள் வேறு இருக்கு. அவுங்­களும் சமா­ளிக்க முடி­யா­மல் சிர­மப்­ப­டு­றாங்க," எனக் கூறி பெரு­மூச்­சு­விட்­டாள்.

அவள் கூறு­வதை முழு­வ­து­மாக செவி­யுற்ற ரியாஸ், "கவ­லைப்­ப­டா­தீங்க துளசி, இது­போல் குழந்­தை­க­ளைப் பற்றி சில தோழி­கள் சொல்லி கேள்­விப்­பட்­டி­ருக்­கேன், இன்­னும் இரண்டு மூன்று மாதங்­களில் தானா­கவே சரி­யா­கி­வி­டும்," என்று ஆறு­தல் கூறி­னாள்.

அதைக்கேட்ட துளசி சற்றே நிம்­மதி அடைந்­தா­லும், மருத்­து­வ­ரி­டம் ஏதா­வது ஆலோ­சனை கேட்­க­லாமா என்று ரியா­ஸி­டம் வினவ, கொஞ்ச நாட்­கள் பொறுத்­துப் பாக்­க­லாமே துளசி. வீட்­டுல இருக்­கும்­போது கூடு­மா­ன­வரை குழந்­தை­யோ­டையே இருங்க. இரண்டு பேரும் வேலைக்குப் போற வீட்ல பெரும்­பா­லும் இதே பிரச்­சினை­தான்.

இது மாதிரி குழந்­தையை விட்­டுட்டு வரும்­போது பெற்­ற­வர்­க­ளுக்­கும் மனது கலங்­கும்­தான். என்ன செய்­யி­றது? இந்த ஓட்­ட­மெல்­லாம் அவுங்க எதிர்­கா­லத்­திற்­குத்­தானே? என்று சொல்லி ரியாஸ் துள­சி­யைத் தேற்­றி­னாள்.

ஆமாம், சரி­தான் ரியாஸ். இந்த வேலையை விட்­டுட்டு கொஞ்­ச­நாள் அபி­கூ­டவே இருந்­துட்டு பிறகு வேற வேலை தேடிக்­க­லா­மான்­னுக் கூட சில­ச­ம­யம் யோசிச்­சேன்.

ஆனா இப்போ இருக்­கிற சூழ்­நி­லை­யில இருக்­கிற வேலையை விட்­டுட்டா நல்ல வேலை கிடைப்­பது குதி­ரைக் கொம்­பா­யி­டும்.

மாதா மாதம் வாங்­குற சம்­ப­ளத்­தில கட்­ட­ணங்­களைக் கட்­டு­ற­துக்கே பாதி போயி­டுது. இதுல வீட்ல மூணு பேரோட தேவை­கள் வேறு என துள­சி­யின் புலம்­பல் நீண்­டுகொண்டே சென்­றது.

சரி, முதல்ல போய் சாப்­பிட்டு வாங்க, எல்­லாம் சீக்­கி­ரமா சரி­யா­யி­டும் என்று கூறிய ரியா­ஸி­டம், தனக்குப் பசி­யில்லை என்று பதி­ல­ளித்த துளசி மேலும் நாளைக்­குள்ள வேலையை இன்­னிக்கே கொஞ்­சம் முடிச்­சுக்­கொ­டுத்­துட்டு மேல­தி­கா­ரி­கிட்ட நாளைக்கு விடுப்பு கேட்­க­லாம்னு இருக்கேன் என்று ரியாஸ் விடை­பெற்று தன் இருக்­கைக்­குத் திரும்­பி­னாள்.

*

அன்று மாலை ரயில்­வண்டி செங்­காங் நிலை­யத்­தில் நின்­ற­தும் கத­வ­ரு­கில் காத்­தி­ருந்­த­வள் நொடி­யும் தாம­திக்­கா­மல் மின்­ப­டிக்­கட்டை நோக்கி விரைய, கையி­லி­ருந்த திறன்­பே­சி­யில் அம்­மா­வின் குறுஞ்­செய்தி ஒலித்­தது.

'சீக்­கி­ரம் வந்­து­டும்மா, பாப்பா தேட ஆரம்­பிச்­சுட்டா' குறுஞ்­செய்­தியை படித்­த­வாறே ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து அவ­ச­ர­மாக வெளி­யே­றி­னாள் துளசி.

ஒப்­ப­னை கலைந்த அவ­ளின் முகத்­தில், கண்­க­ளுக்கு கீழே­யுள்ள கரு­வ­ளை­யம் மூன்­றாம் பிறை­யாக தோன்ற ஆரம்­பித்­தது.

மதி­யம் சாப்­பி­டா­த­தால் என்னை மறந்­துட்­டியே துளசி என வயிறு கோபத்­தில் உள்­ளுக்­குள் கத­களி ஆடி­யது.

தனது ஒரு வயது செல்ல தேவ­தை­யின் மழலை முகம் நினை­வில் வந்து நிழ­லாட, அவ­ளின் இளஞ்­சி­வப்பு நிற பையில் குழந்­தைக்­கென்று வாங்­கிய 'ஒலி­யெ­ழுப்­பும் பொம்­மை­கள்' ஒன்­றோ­டொன்று உரசி மெல்­லிய இசையை எழுப்ப, அது அவ­ளின் வலு­வி­ழந்த காலின் வலியை மறக்­க­டித்­தது.

சற்று நேரத்­தில் குடி­யி­ருப்பை நெருங்­கி­ய­வள், விளை­யாட்டு மைதா­னத்­தில் அவ­ளின் அம்மா, குழந்­தையை வண்­டி­யில் வைத்து ஆட்­டிக்­கொண்டே தனது வய­தை­யொத்த இரு கூட்­டா­ளி­க­ளு­டன் உரை­யா­டிக்­கொண்­டி­ருப்­பதைக் கண்டாள்.

சிங்­கப்­பூ­ரின் இன நல்­லி­ணக்­கத்தை இந்தக் கூட்­டத்­தில் கண்­கூடாகக் காண­லாம்.

துள­சிச்செடி­யின் நறு­ம­ணம் காற்­றில் கமழ்­த­லைப்போல, குழந்தை தன் தாய் துள­சி­யின் வாசத்தை நுகர்ந்­ததோ என்­னவோ சற்றுத் தொலை­வில் அவள் வரும்­போதே அடை­யா­ளம் கண்டு கொண்­டது. அவ்­வ­ள­வு­தான் உடனே தன் கை கால்­களை ஆட்டி தன் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்த, அப்­போ­து­தான் மும்­மு­ர­மாக பேசிக் கொண்­டி­ருந்த துள­சி­யின் அம்மா திரும்பி என்ன துளசி இன்­னைக்கு தாம­தம் என்­றார்.

காலையில அபி மிக­வும் அழு­த­தால் மனதே சரி­யில்லை என வருந்­தி­ய­வள், அத­னால் கூடு­த­லான நேரம் வேலை செய்து கொடுத்­த­தோடு நாளை விடுப்பு சொல்­லிட்டு வந்துவிட்­ட­தாக பதி­ல­ளித்துவிட்டு கை சுத்­தி­க­ரிப்­பா­னால் கையைக் கழுவிய பின் குழந்­தை­யைத் தூக்கிக்கொண்­டாள்.

அம்­மா­வும் தனது கூட்­டா­ளி­க­ளி­டம் விடை­பெற வீட்டை அடைந்­தார்­கள்.

மறு­நாள் காலை பதி­னோரு மணி­ய­ள­வில் வீட்­டின் அழைப்பு மணி ஒலிக்க, யாரது கடைக்­குப் போன அம்மா அதுக்­குள்ள திரும்­பிட்­டாங்­களா? என்ற யோச­னை­யு­டன் கத­வைத் திறந்­த­வள் சற்றே தடு­மா­றிப்­போ­னாள்.

வெளியே இரண்டு காவல் அதி­கா­ரி­கள் நின்று கொண்­டி­ருந்­த­னர். என்ன இது, நம்ப வீட்­டுக்கு காவல் அதி­காரி?

'மழை­யில திடீர்னு முளைக்­கிற காளான் மாதிரி பிரச்சினை மட்­டும் வாழ்க்­கை­யில புதுசு பதுசா முளைக்­கிது' எண்ண அலை­கள் உள்­ளுக்­குள் உறுத்த பட­ப­டப்­பா­னாள்.

இந்த நேரம்னு பார்த்து அம்மா வேற கடைக்­குப் போயிட்­டாங்­களே, அவங்க இருந்­தா­வா­வது கொஞ்­சம் தைரி­யமா இருக்­கும் என சிந்­தித்­துக்­கொண்­டி­ருக்­கும்­போதே, துள­சி­யின் நிலை­மையை உணர்ந்த ஒரு அதி­காரி, சின்ன விசா­ர­ணைதான். கவ­லைப்­ப­டா­தீங்க என்­றார்.

எ... என்­னது விசா­ர­ணையா என்று கேட்ட துள­சி­யின் வார்த்­தை­கள் எரி­பொ­ருள் இல்­லா­மல் திக்­கித் திணறி நிற்­கும் வாக­னத்­தைப் போல் வெளி­வந்­தன.

வீட்ல எத்­த­னை பேர் இருக்­கீங்க என அதி­காரி கேட்க அதற்கு துளசி குடும்ப உறுப்­பி­னர்­க­ளைப் பற்றி கூறி­னாள்.

அதைக் கேட்ட அதி­காரி அடுத்­தது பணிப்­பெண் பற்றி விசா­ரிக்க, துளசி இரு­பு­ற­மும் தலை­ய­சைத்து இல்­லை­யென்­றாள்.

அவ­ளால் இன்­னும் எதற்கு இந்த விசா­ரணை என்­பதை யூகிக்க முடி­ய­வில்லை.

காவல் அதி­காரி திரும்­ப­வும் தொடர்ந்­தார். பயப்­ப­டுற மாதிரி ஒண்­ணு­மில்லை.

இந்த வீட்­டில் இருந்து தின­மும் ஒரு குறிப்­பிட்ட நேரத்­தில இடை­வி­டாம குழந்­தை­யின் அழு­கு­ரல் கேட்­ப­தா­க­வும், யாரா­வது துன்­பப்­ப­டுத்­து­றாங்­க­ளோன்னு சந்­தே­கிப்­ப­தா­க­வும் எங்­க­ளுக்குப் புகார் வந்­தி­ருக்கு என்று கூறி­ய­தும் அதிர்ச்­சி­யின் விளிம்­புக்கே சென்­றாள் துளசி.

என்­னது குழந்­தையைத் துன்­புறுத்­து­றோம்னு புகாரா?

"யார் கொடுத்­தாங்­கன்னு தெரிஞ்­சிக்­க­லாமா?" என்று கேட்ட துள­சி­யி­டம் அதை தங்­க­ளால் குறிப்­பிட்­டுக் கூற இய­லாது என மறுத்­த­னர் அதி­கா­ரி­கள்.

பிறகு துளசி அவர்­க­ளி­டம் தான் தின­மும் காலை 7.30 மணி­ய­ள­வில் அலு­வ­ல­கம் கிளம்­பும் போது, பிரி­வைத் தாங்க முடி­யாம தன் குழந்தை அழு­வ­தா­க­வும், சிறிது நேரத்­தில் தன்­னு­டைய அம்­மாவே கீழே தூக்­கிட்டுப் போய் அவள் சமா­தா­ன­மா­ன­வு­டன் கூட்­டிக்­கிட்டு வரு­வார் என்­றும் விளக்­க­மா­கக் கூறி­னாள்.

கேட்ட அதி­கா­ரி­கள் துள­சி­யின் உணர்­வு­களைப் புரிந்துகொண்­ட­தா­க­வும் ஆனால் புகார்னு வந்தா விசா­ரிக்க வேண்­டி­யது எங்க கடமை என்­றும் கூறி­னர்.

மேலும் அவர்­கள் இந்தப் புகார் குறித்து குடும்ப சேவை மையத்­துல சொல்லி உத­வச் சொல்­வ­தாக கூறி­ய­தோடு, அந்த மையத்தை நாளையே தொடர்புகொண்டு பேசு­மா­றும் அறி­வு­றுத்­தி­னர். அவர்­க­ளின் இணை­யம் வழி ஆலோ­ச­னை­கள் துள­சிக்குப் பய­னுள்­ள­தாக இருக்­கும் எனக் கூறி அதற்­கான அட்­டையைக் கொடுத்துவிட்டு அங்­கி­ருந்து நகர்ந்­த­னர்.

இந்த செங்­காங் வட்­டா­ரத்­தில் அவர்­கள் குடி­வந்து ஏறக்­கு­றைய எட்டு ஆண்­டு­கள் முடி­யப்­போ­கிறது.

இங்கு வசிக்­கும் எல்­லா­ருமே கிட்­டத்­தட்ட நன்­றாக அறி­மு­க­மா­ன­வர்­களே! அப்­ப­டி­யி­ருக்க நம்­மி­டமே நேர­டி­யாக வந்து புகார் சொல்­லி­யி­ருக்­க­லாம். காவல்­து­றையை அணு­கி­யி­ருக்க வேண்­டி­ய­தில்லை. புகா­ர­ளித்­தது யாராக இருக்­கும்? என்ற கேள்­விக்­கான பதி­லைத் தேடி கத­வைத் திறந்து வெளித் தாழ்­வா­ரத்­திற்கு வந்த துளசி, சுற்­றும் முற்­றும் பார்­வையைச் சுழ­ல­விட்டு சத்­தம் அதி­க­மாகக் கேட்க வாய்ப்­பு­கள் உள்ள வீட்டை மனக்­கண்­ணால் அல­சி­னாள்.

ஒரு­வேளை பக்­கத்து வீட்டுத் தாத்­தாவோ? எப்போ குழந்தை கத்­தி­னா­லும் வெளியே வந்து எட்­டிப்­பார்ப்­பார் என அம்மா கூறி­யது நினை­வில் வந்­தது.

சில சம­யம் மிட்­டா­யைக்கூட குழந்­தை­யி­டம் நீட்டி சமா­தா­னப்­படுத்த முயன்று தோற்­றுப் போய் திரும்­பி­யி­ருக்­கி­றார்.

தாத்தா அவர் வீட்டு பேரக்­குழந்­தை­க­ளி­டம் அதி­க­மான பாசத்­தைக் காட்­டு­ப­வ­ரா­யிற்றே? அவ­ராக இருக்­காது.

ம்ம்... அவர் இல்­லை­யென்­றால் நேர் கீழ்­வீட்­டுப் பாட்டி? சன்­னல் வழி­யாக சத்­தம் அங்கு அதி­க­மா­கக் கேட்க வாய்ப்­புண்டு. ஆனால் அவர் அம்­மா­வின் நெருங்­கிய கூட்­டாளி ஆயிற்றே, அப்­படி ஏதும்னா அம்­மா­வி­டம் வந்து நேர­டி­யா­கவே கேட்­டி­ருப்­பார்.

பிறகு? அதற்கு பக்­கத்து வீட்டு பெண்­ம­ணியோ? அவரை அதி­க­மாக வெளி­யில் பார்க்க முடி­யாது. அவ­ருக்கு சத்­தமே ஆகா­தாம். இது­வும் அம்மா சொன்ன தக­வல்­தான்.

யோசித்து யோசித்து தலை­வலி வந்­த­து­தான் மிச்­சம். சரி, யாராக இருந்­தா­லும் பர­வா­யில்லை. குழந்­தையை எப்­படி சமா­ளிப்­ப­துன்னு பார்ப்­போம்.

நாளைக்கு மட்­டும் விடுப்பு கிடைச்சா அதுக்­குள்ள குடும்ப சேவை மையத்­தோட பேசிப் பாக்­க­லாம், ஏதா­வது ஆலோ­சனை தரு­வாங்க.

ஆனால் இன்­னிக்கி வேற விடுப்பு எடுத்­தாச்சு. நாளைக்­கும் கேட்டா மேல­தி­காரி கண்­டிப்பா சத்­தம் போடு­வாரு.

சரி வீட்­டி­லி­ருந்து பணிபுரிய அனு­மதி கேட்டு பாக்­க­லாம்னா அதுக்­கும் சரி­யான கார­ணம் இல்­லேன்னா ஒத்­துக்க மாட்­டாரு....என்ன சொல்லி விடுப்பு கேட்­க­லாம்?

அப்­போது கூடத்­தி­லி­ருந்த திறன்­பேசி கிணு­கி­ணுத்­தது. அரு­கில் சென்று முகத்­தி­ரை­யைப் பார்த்­த­வள் அதிர்ந்­தாள். என்ன இது, இந்த நேரத்­துல மேல­தி­காரி கூப்­பி­டு­றாரு?

எல்லா கோப்­பு­க­ளை­யும் நேத்தே சரி­பாத்­துக் கொடுத்­துட்­டேனே, என்ன பிரச்­சினைன்னு தெரி­ய­லையே.

எதுவா இருந்­தா­லும் சரி, பேசிட்டு அப்­ப­டியே நாளைக்­கும் விடுப்பு கேட்­டுப் பார்ப்­போமா? என சிந்­தித்­தபடி அழைப்பை ஏற்­றாள். மறு­மு­னை­யில் மேல­தி­காரி பதற்­றத்­து­டன், துளசி, ரியாஸ் கண­வ­ருக்கு இன்று தொற்று உறு­தி­யா­யி­ருக்­காம். அத­னால விதி­முறைப்­படி, ரியா­ஸோட கடைசி ஒரு வாரத்­துல நேர­டித் தொடர்­பில் இருந்­த­வங்க எல்­லா­ரும் பத்து நாட்­கள் வீட்­டி­லி­ருந்து பணி செய்துகொண்டே தங்­களைக் கண்­காணித்­துக் கொள்ளவேண்டும் என்­றார்.