சிறுகதை
சிவக்குமார் கே பி
நல்ல தூக்கத்தில் இருந்தவனை அடுக்களையிலிருந்து வந்த அந்த பாத்திரம் உருட்டும் சத்தம் 'தடால்' என்று எழுப்பியது. மெல்ல தலையைத் திருப்பி அரைத் தூக்கத்தில் சாளரத்தின் வழியே பார்த்தவனுக்கு இன்னும் இருள் படர்ந்திருந்தது சற்று மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அந்த உருட்டிய பாத்திரத்தின் சத்தம் தன்னை முற்றிலும் எழுப்பியது நினைத்து கொஞ்சம் ஆத்திரம்தான் வந்தது.
'தீபாவளி அன்னிக்கிகூட காலையில எட்டு மணிக்குத்தான் நான் எழுந்திரிப்பேன்!!' என்று மார்தட்டிக்கொள்ளும் சிங்கப்பூரில் வசிக்கும் கணேசுக்கு, அந்த வாரக்கடைசியில் ஆறுமணிக்கே முழிப்பு வந்தது கொஞ்சம் கடுப்பேற்றியது.
ஷார்ட்ஸ், டீ ஷர்ட்டில் கலைந்த முடியோடு அறையின் வெளியே வந்தவனைப் பார்த்து. "டேய் கணேசு!! ஏன்டா இவ்வளவு லேட்டு? இன்னும் குளிக்கலையா?" என்று அவன் பேசுவதற்குள் தன் வாழ்நாள் முழுக்க சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளம் அருகே காலம் கழித்த அவன் தந்தை வெங்கடேசன் அவனைப் பார்த்து ஒரு 'பவுன்சர்' எறிந்ததில் 'கப்சிப்' ஆகிவிட்டான்.
"ஏன்னா, குழந்தை கொஞ்சம் நேரம் கழிச்சு குளிக்கட்டுமே. என்ன அவசரம்? வாடா கணேசு. பல் தேச்சுட்டு வந்து காப்பி குடி," என்று அவன் அம்மா ராஜி அவனை 'காப்பிக்கு' அழைத்தபோதுதான் அவன் அதைப் பார்த்தான்.
"...ம்மா!! என்ன இது? ஒரு வாரம் இங்க என்னோட இருக்கப்போறதுக்கு நீங்க டவரா டம்ளர் கூடவா சென்னையிலிருந்து சிங்கப்பூர் தூக்கிண்டு வந்திருக்கேள்?" என்று ஆச்சர்யத்தோடு கேட்டவனை, "இது என்னடா சுண்டக்காய்? ஒரு நாளைக்கு நாலு வேளை காப்பி குடிக்கிற எங்களுக்கு, ஒரு கிலோ பில்டர் காப்பிபொடியும், காப்பி டிகாஷனும் போட பில்டர் கூட கொண்டுவந்திருக்கோம்!" என்று அவன் அப்பா வெங்கடேசன் சொன்னபோது, அவனுக்கு தூக்கம் சுத்தமாகக் கலைந்துவிட்டது.
கணேசு, மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் எல்லோருக்கும் அவனை அப்படித்தான் தெரியும்.
அவன் வேலைக்காக சிங்கப்பூர் வந்து இரண்டு வருடம் ஆகியிருந்தது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
சிங்கப்பூரில் வேலைக்கு வந்து தனியாக இருக்கும் எல்லா பசங்களையும்போல் அவனுக்கும் தன் அப்பா அம்மாவை கூட்டிக்கொண்டு சிங்கப்பூர் சுற்றிக்காட்டவேண்டும் என்ற ஆசை.
அப்போதானே, அவனைப் பற்றி வாழ்நாள் முழுக்க 'மக்கு பிளாஸ்திரி', என்று பட்டம் கட்டி, எப்போதும் திட்டிக்கொண்டிருந்த அவன் அப்பா, அவனைப் பற்றி ஊரில் கொஞ்சம் பெருமையாகப் பேசுவார்.
அதனால் அடித்து பிடித்து பாஸ்போர்ட் வாங்கி, யாரோ தெரிந்தவரோடு சேர்ந்து ஒரு வழியாக 'ஏர் இந்தியாவில்' அவர்களை சிங்கப்பூர் வரவழைத்தாயிற்று.
"டேய், என்னடா பேந்த பேந்த முழிச்சுண்டு தூண் மாதிரி நிக்கற? சீக்கிரம் போய் பல்ல தேச்சுட்டு காப்பியைக் குடி. சூடு ஆறிட போறது," என்று அரக்கப்பரக்க தன் உதடுகள் படாமல் அந்த டம்ளரைத் தூக்கி அண்ணாக்க காப்பி குடித்த அப்பாவைப் பார்த்தான். அவர் இன்னும் மாறவேயில்லை என்று நினைத்தான்.
அவசரமாக பல் தேச்சு, முகம் கழுவி வந்தவனை அந்த பளபளக்கும் பித்தளை டவரா டம்ளர், சுடச்சுட காபியோடு வரவேற்றது.
"டேய், எச்சில் பண்ணாம குடி!!" என்று அசரீரி போல் அவன் அப்பாவின் குரல் கேட்டு, மெல்ல அந்த டம்ளரிலிருந்த காப்பியைத் தூக்கிக் குடித்தான்.
அது நேரே அவன் நாக்கில்கூட படாமல் தொண்டையில் போய் இறங்கியது.
தொண்டையில் ஒரு வாய் இறங்கியது தான் தாமதம், "நீங்க வாழ்நாள் முழுக்க இந்த காப்பிய தவிர வேற எந்த காபியும் குடிச்சதேயில்லையா?" என்று அவர்களைக் கேட்டான்.
இந்தக் கேள்வி ராஜிக்கும் வெங்கடேசனுக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
அப்படி ஆச்சரியத்தோடு பார்த்தவர்களை, "நீங்க 'கப்புசினொ' காபி குடிச்சிருக்கேளா?" என்று கேட்டதும், "ஏதுடா? நம்ம ரெண்டு தெரு தள்ளி இருக்கற, சீனு காப்பி போடுவானே, அந்த காப்பியை சொல்லறீயா?" என்று வாழ்நாளில் மயிலாப்பூர் எல்லை தாண்டாத அவன் அம்மா ராஜி சொன்னதற்கு அவன் சிரித்துவிட்டான்.
"ஏம்மா, காப்பிய சீனு போட்டா, அது 'கப்புசினொ' ஆயிடுமா? சரி, இன்னிக்கு நான் உங்க ரெண்டு பேரையும் அமெரிக்க காபி ஷாப் கூட்டிண்டு போறேன். அங்க கிடைக்கிற அந்த 'கப்புசினொ' குடிச்சுப் பாருங்கோ. அப்புறம் நீங்க, இந்த டவரா டம்ளரை இங்கேயே விட்டுட்டு போயிடுவேள்!!!" என்று சொன்னபோது ராஜிக்கும் வெங்கடேசனுக்கும் அது ஆர்வத்தை தூண்டியது.
"டேய், அங்க எல்லாம் சைவம் தானே" என்று கேள்வி கேட்ட அவன் அப்பாவைப் பார்த்து, "அப்பா, அது காபி ஷாப். முதல்ல இந்த 'காப்பி காப்பி'ன்னு சொல்லறதை நிறுத்திட்டு, 'கஃபே கஃபே' சொல்ல கத்துக்குங்கோ," என்றான்.
ஏதோ பையன் தங்களை அமெரிக்கா காபி ஷாப் கூட்டிக்கொண்டு போகிறான் என்ற எதிர்பார்ப்பில் பட்டு வேட்டியும், பட்டுப் புடவையும் கட்டாத குறையோடு, வெங்கடேசனும் ராஜியும் கணேஷின் தயவோடு சிங்கப்பூர் நகர மண்டபத்தில் இருக்கும் அந்த பெரிய அமெரிக்க காபி கடைக்குள் நுழைந்தனர்.
உள்ளே நுழைந்தவர்களை, காபி, சாக்லேட் மற்றும் இலவங்கப் பட்டை வாசனை வரவேற்றது.
"என்னடா! இவ்ளோ பெரிசா இருக்கு. அந்த செவரு முழுக்க எழுதியிருக்கே. அத்தனையும் காப்பி வகையா?" என்று ஆச்சரியத்தோடு கேட்டார் வெங்கடேசன்.
"ஆமாம். ஒரு பக்கம் சூடான கஃபே, இன்னொரு பக்கம் ஜில் கஃபே" என்று கணேஷ் ஏதோ தான் அந்தக் கடையின் முதலாளி போல் பெருமையோடு சொன்னான்.
"காப்பியை எந்த மடையனாவது ஜில்லுனு குடிப்பானா? ஜலதோஷம் வராது!" என்று இன்னும் அவனை சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்லும் அவன் அம்மா இதற்கு நடுவே சொன்னதற்கு, அவனுக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியவில்லை.
காப்பி வகைகள் எழுதிய சுவரையே பார்த்துக்கொண்டிருந்த வெங்கடேசனுக்கு மாரடைப்பே வந்துவிடும் போலிருந்தது.
"டேய், கணேசு!! என்னடா இது? ஒரு காப்பி ஏழு டாலர் போட்டிருக்கு," என்று சொல்லிக்கொண்டே இந்தியாவில் இருந்து முதல்முறை வெளிநாடு செல்லும் எல்லாரையும்போல வெங்கடேசன் மனக்கணக்குப் போட ஆரம்பித்துவிட்டார்.
"அய்யயோ, இந்த காப்பிக்கு போய் நானூறு ரூபாயா? சென்னை மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் டிக்கெட் கூட இவ்வளவு ஆகாதே!!" என்று வியந்தவரைப் பார்த்து, "அப்பா, இது சிங்கப்பூர். இங்க இப்படித்தான்!!. எல்லாத்துக்கும் கணக்குப் போடாதேங்கோ" என்று கணேஷ் அதட்டினான்.
"டேய், அங்க ஒரு டாலர்னு போட்டிருக்கே, பேசாம அதை வாங்கினா போதும். வீணா காசைக் கரியாக்காதே," என்று அவன் அப்பா சொல்ல, "அப்பா, அது காப்பிக்கு இல்லை. நுரைக்கு," என்றான் கணேஷ்.
அவன் சொன்னதைக்கேட்டு வெங்கடேசனுக்கு மயக்கமே வந்துவிட்டது. 'நுரைக்கு ஒரு டாலரா?' என்று மனதில் நினைத்து, அதற்கு மேல் அவர் ஒன்றும் சொல்லவில்லை. சரி, ஏதோ மாயமந்திரம் இருக்கற காப்பி போல என்று அவரும் அமைதியாக இருந்துவிட்டார்.
இதற்குள், அவர்களுக்கு பின்னால் கூட்டம் சேர ஆரம்பித்துவிட்டது கண்டு, மூவரும் சற்றுத் தள்ளிப்போய் என்ன வாங்குவது என்று ஒரு ஐக்கிய மாநாடு சபை கூட்டமே நடத்தினர்.
"டேய், பேசாம இங்க 1/3 கேட்டுடலாமா" என்று ஏதோ ஹோட்டலில் சூப் ஆர்டர் பண்ணுவதுபோல் கேட்டார் வெங்கடேசன். அவன் அப்பாவைப் பார்த்து தலையில் அடித்துக்கொள்ளாத குறையோடு, "அப்பா, மானத்தை வாங்காதீங்கோ! எல்லாம் நான் பார்த்துக்கறேன். பேசாம என் பின்னாடி மட்டும் வந்து நில்லுங்கோ," என்றான்.
"அம்மா நீ இங்க இடத்தை பிடிச்சுக்கோ," என்று சொல்லி அவனும், அவன் அப்பாவும் வரிசையில் நின்றனர்.
அவர்கள் முறை வந்ததும், அவர்களை வரவேற்ற 'சிக்' என்று இருந்த அந்த பணிப்பெண், "வெல்கம். ஹவ் கேன் ஐ ஹெல்ப் - கப்புசினொ, லாட்டே, ஸ்ப்ரெஸ்ஸோ?" என்றாள்.
"3 காபூசினோ" என்றான் கணேஷ்
"சைஸ்?"
"என்னடா, சைஸ் கேட்கறா?" என்று ஆச்சர்யத்தோடு கேட்ட வெங்கடேசனைப் பார்த்து, அவள் அந்த மூன்று வகை அளவு கப்பை காண்பித்தாள். அதை பார்த்ததும் அவருக்கு மேலும் தலை சுற்றியது.
"என்னடா இது? மாடு கழுநீர் குடிக்கற அளவுக்கு பெரிசா இருக்கு. இந்த அண்டா சைஸ் காப்பில பெரிய கல்யாணமே பண்ணிடலாம். ஒரு ஆள் எப்படி இவ்ளோ குடிக்கறது?" என்று கணேஷிடம் விடாமல் அவர் பல கேள்வி கேட்டபோது, "அப்பா, இங்க காப்பியை கொஞ்சம் மெதுவா ருசிச்சு ஒரு மணி நேரமா குடிக்கணும். அதனால அளவு பெருசு," என்று சொல்லிவிட்டு மூன்று காப்பிக்கு கணேஷ் பணம் கட்டினான்.
ஆனால் அந்தப் பணிப்பெண் என்னவோ அவர்களை விடுவதாக தெரியவில்லை.
"நேம்?" என்று கப்பில் பெயர் எழுதுவதற்காக அவள் மேலும் கேட்டாள்.
"என்னடா கணேசு, பெயரெல்லாம் கேட்கறா? எங்கிட்ட அம்மாவோடும் என்னோடும் 'ஆதார்' கார்டு இருக்கு, அது வேணுமா?" என்றார் வெங்கடேசன்.
"அப்பா, இங்க நாமதான் காபியை வாங்கிக்கணும். அதுக்காகதான் பெயர் கேட்கறா," என்று அவன் சொல்ல, அவருக்கு இந்த வினோதமான பழக்கம் புரியவேயில்லை.
'என்ன தலையெழுத்தோ! நாமளே போய் காபியை வாங்கிக்கறதுக்கு இருபத்தஞ்சு டாலர் கொடுக்கணுமா?' என்று அவர் மீண்டும் கணக்குப்போட ஆரம்பித்துவிட்டார்.
ஒரு பத்து நிமிடம் கழித்து அவர்கள் பெயரை ஒளறிக்கொட்டும் வகையில் 'கனஷ் கனஷ்' கூப்பிட்டார்கள்.
முதலில் தங்களைத்தான் கூப்பிடுகிறார்கள் என்று வெங்கடேசனுக்குப் புரியவேயில்லை.
பின் அந்தப் பெண் அவரையும் கணேசையும் பார்த்து, ''கனஷ் கனஷ்'' என்று இருமுறை சொல்ல, வெங்கடேசன், "ஐ அம், வெங்கடேசன். ரிடயர்ட் கவர்மெண்ட் செர்வண்ட்,'' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அவளுக்கு ஒன்றும் புரியாமல், லேசாக அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டு, அந்த காபி வகைகளை அவர்களிடம் நீட்டினாள்.
வந்த காபியைப் பார்த்த வெங்கடேசனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஏனென்றால், அந்த காபியின் நுரை மேல் அழகாக ஒரு இதயத்தின் படம் போட்டு இருந்தது கண்டு, அவருக்கே நாக்கில் கொஞ்சம் உமிழ்நீர் ஊறியது.
"ஹ்ம்ம், இப்ப குடிச்சுட்டு இந்த 'கப்புசினொ' எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ?" என்று சொன்ன கணேஷிடம் அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை.
அந்த கப்பின் அளவையும், அதை எப்படிச் சூடு ஆற்றுவது என்று தெரியாமல் சற்று நேரம் அமைதியாக இருந்தார்.
பின் மெல்ல அந்த கப்பின் விளிம்பில் இருந்த காப்பியை, முதல்முறையாக வெங்கடேசன் தன் வாழ்நாளில் எச்சில் பண்ணிக் குடிக்கத் தயாரானார்.
"அப்பா, கொஞ்சம் நிதானமா குடிக்கணும். அம்மாவை பாருங்கோ, இன்னும் அந்தக் குச்சியை வெச்சு காப்பியை கலக்கரா. அத மாதிரி" என்று அவன் சொன்னபோது வெங்கடேசன் ராஜியைப் பார்த்தார்.
அம்மா முதலில் சற்று மௌனமாக இருந்தாள்.
பின் கணேஷைப் பார்த்து, "டேய், கணேசு. நுரை நிறைய இருக்கு, பால்ல ஏதோ வாடையும் வரது. ஒரு வேளை, இந்த பால் திருஞ்சுபோயிடுத்தோ?" என்று அவள் கேட்டதும், கணேஷ் மயங்கியே விழுந்துவிட்டான்.
"அம்மா, இது அமெரிக்க காபி ஷாப். இங்க அந்த மாதிரி எல்லாம் நடக்காது," என்று சொன்னவனைப் பார்த்து, "என்னமோடா, எனக்கு இது பிடிக்கவேயில்லை," என்று அவள் மனதில் இருந்ததை உடைத்துவிட்டாள்.
அதுவரை ஏதாவது சாக்குபோக்கு கிடைக்காதா என்று காத்துக்கொண்டிருந்த வெங்கடேசனும், "தண்டச் செலவு ஆயிரத்தி ஐநூறு ரூபாயா?" என்று சொல்ல, அவன் அம்மாவுக்கு தூக்கிவாரிப்போட்டது.
"ஐயோ! என்னடா உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா? இந்த கழுநீர் காபிக்குப் போய்..." என்று அவள் ஆரம்பித்தபோது, கணேசுக்கு அதற்குமேல் தாங்க முடியவில்லை.
"மா, வாங்கினதுக்கப்புறம் அதை பத்தி பேசக்கூடாது," என்று அவளைப் பாதியிலே நிறுத்திவிட்டு அவன் மட்டும் காபியைக் குடிக்க ஆரம்பித்தான்.
ஒரு ஐந்து நிமிட அமைதிக்குப்பின் "ஹ்ம்ம்.. கொஞ்சம் ஆறிப் போய்தான் இருந்தது. காப்பியை விட நுரைதான் அதிகம். இந்த படம் போட்ட காப்பிக்கு இருபத்தஞ்சு டாலர் அதிகம்தான்," என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதவன்போல் அந்த காபியை முடித்தான்.
ஒரு வழியாக அந்த அனுபவம் முடித்து வெளியில் கிளம்பி ஒரு நூறு மீட்டர் தள்ளி நடந்த பின்னர், அந்த மூவரின் கண்களிலும் 'கணேஷ் பவன் - சைவ உணவகம்' கடை கண்ணில்பட்டது.
"டேய், இங்க நம்ம காப்பி கிடைக்கும். அதைக் குடிக்கலாம் வா," என்று அவன் அப்பா அவனைக் கட்டாயப்படுத்தி உள்ளே இழுத்துச்சென்றார்.
உள்ளே உட்கார்ந்ததுதான் தாமதம், "வாங்க. என்ன வேணும்?" என்று பணியாளர் கேட்டார்.
"மூணு காப்பி பா. எனக்கு கொஞ்சம் ஸ்ட்ராங், அப்புறம் இந்த அம்மாவுக்கு சர்க்கரை வேண்டாம். பையனுக்கு நல்ல சூடான காப்பியா குடுப்பா," என்று வெங்கடேசன் இப்போது 'கணேஷ் பவன்' முதலாளிபோல் ஆர்டர் போட்டார்.
இரண்டே நிமிடத்தில் சுடச்சுட மூன்று டவரா டம்ளர் பாலின் நுரை தளும்ப அவர்கள் முன்னே வந்தது.
அவர்கள் மூவரும் அதை கொஞ்சம் ஆற்றிவிட்டு அமைதியாகக் குடித்தனர்.
"சார், இந்தாங்க பில் - ஆறு டாலர்," என்று வந்து கொடுத்த பணியாளரிடம், "தம்பி, உனக்கு சொந்த ஊர் எது?" என்று அவன் அம்மா ராஜி கேட்டாள்.
"எனக்கு சென்னைதான் மா. மயிலாப்பூர் பக்கத்துல மந்தைவெளி," என்று அந்த பணியாளர் சொல்ல, அடுத்த அரை மணி நேரம் சிங்கப்பூர் கணேஷ் பவனில் அந்த மூவரும் நேரம் கழித்தனர்.
கடைசியில் கிளம்புவதற்கு முன் கொஞ்சம் தயங்கினான் நம் கதையின் நாயகன் கணேஷ்.
"என்னடா? பேந்த பேந்த முழிக்கிற. என்ன வேணும்?" என்று அவனை அதட்டினார் வெங்கடேசன்.
"அம்மா, நீ கொண்டுவந்த டவரா டம்ளர், டிகாஷன் பில்டர், காப்பி பொடி எல்லாத்தையும் இங்கேயே விட்டுட்டுப் போயேன்," என்று கணேஷ் சொன்னதும், அவனைக் கொஞ்சம் நமட்டுச் சிரிப்போடு பார்த்தார் வெங்கடேசன்.