- இரா சத்திக்கண்ணன்
தெருவோரம்
நம்பிக்கையாய்
நின்றுகொண்டிருந்த
ஆலமரம்
வேரோடு சாய்கிறது
திரும்பிவர முடியாமல்
தவிக்கின்றன
மலைக்கு
மேய்ச்சலுக்குச்
சென்ற
பசுமாடுகளும்
ஆட்டுக்குட்டிகளும்
மளமளவென
தரைமட்டமாகிறது
பழைய கட்டடமொன்று
கைகோத்துக்கொண்டே
மூழ்கின
பிறந்து இருபத்தைந்தே
நாட்களான நெற்செடிகள்
ஒதுங்க இடமில்லாமல்
திகைக்கின்றன
கோழியும் கோழிக்குஞ்சுகளும்
எங்குநோக்கினும்
நெகிழிக் கழிவுகளின்
ஊடுருவல்
எந்தவிதத் தயக்கமுமின்றி
குடிசைக்குள் நுழைந்து
இருந்த ஒன்றிரண்டு
ஓட்டை உடைசல்களை
சூறையாடிச் சென்றது
மழைவெள்ளம்
'பூமியை நேசியுங்களென்று'
ஒவ்வொருமுறையும்
சொல்லிவிட்டுத்தான்
கரையைக் கடக்கிறது
புயல்!