வெயிலும் மழையும்

சிறுகதை

வல்லிக்கண்ணன்

சொக்கம்மாளுக்கு எத்தனையோ ரகசியங்களை இனிக்க இனிக்கச் சொல்லும் ஒரே தோழி அவளுடைய கண்ணாடிதான்.

விலை குறைந்த சாதாரணக் கண்ணாடிதான் அது. இருக்கட்டுமே! சொக்கம்மா மட்டும் பட்டும் படாடோப ஆடைகளும் கட்டி மினுக்கும் சீமாட்டியா என்ன? வேலைக்காரி சீதையம்மாளின் மகள்தானே.

சீதைக்குத் தன் மகள் மீது அதிக அன்பும் ஆசையும் உண்டு. அவளைப் பற்றி தாய் கொண்டிருந்த பெருமைக்கும் அளவு கிடையாது. "எங்க சொக்கம்மா அதைச் சொன்னாள். எங்க சொக்கு இதைச் செய்தாள்" இப்படி ஒரு நாளைக்கு நூற்றெட்டுப் புகழ் பாடுவதில் அவள் மிகுந்த மகிழ்ச்சி கண்டு வந்தாள்.

சிறு வயதிலிருந்தே அப்படி, இப்போது கொஞ்ச நாட்களாக சீதையின் பெருமையும் ஆனந்தமும், பெளர்ணமி இரவின் கடல் அலைகள் போல், பொங்கிப் பொங்கிப் புரண்டுகொண்டிருந்தன.

"தாய்க்கண்ணோ பேய்க்கண்ணோ என்பார்கள். என் கண்ணே உனக்குப் பட்டுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன். சொக்கு, நீ ராணி மாதிரி இருக்கிறே. சிலுக்கும் சீட்டியுமா உனக்கு புதுப்புது டிரசுக கட்டிப் பார்க்கணுமின்னு எனக்கு ஆசையா இருக்கு. குரங்குகளும் கோட்டான்களும் என்னமா மினுக்கிக்கிட்டுத் திரியுதுக. ராசாத்தி மாதிரி இருக்கிற உனக்கு நல்லா உடுத்தி அழகு பார்க்கிறதுக்கு என்கிட்டே காசு பணம் இல்லேயடியம்மா" இவ்வாறு வெளிப்படையாகவே தனது மனக்குறையை அருமை மகளிடம் சொல்லித்தீர்த்தாள் சீதை.

சொக்கம்மா சமயம் கிடைத்த உடனேயே கண்ணாடி முன் ஓடினாள். "ஆமாம். நீ ராணியேதான். உன் அழகு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது," என்று கண்ணாடி அவளுக்கு உணர்த்தியது.

கண்­ணாடி மட்­டும்­தானா அவ்­வாறு சொல்­லும்? அவள் வீதி வழியே போகை­யில், எதிரே தென்­பட்ட ஆண்­க­ளின் கண்­களும் அதே கதை­யைத்­தானே கூறின! "நீ அழகி. ரொம்ப ஜோராக இருக்­கி­றாய்" என்று அவர்­க­ளது பார்வை புகழ் ஒளி சிந்­த­வில்­லையா என்ன? சிலர் ஒரு­த­ரம் பார்த்­த­தில் திருப்தி அடைய முடி­யா­மல், மறு­ப­டி­யும் மறு­ப­டி­யும், திரும்­பித் திரும்பி, அவ­ளைப் பார்க்­கத்தானே செய்­தார்கள்?

இதை எல்­லாம் எண்ண எண்ண சொக்­கம்­மா­ளுக்­குப் பெரு­மை­யா­கத்­தான் இருந்­தது. சந்­தோ­ஷத்­துக்­கும் குறைவு இல்லை. எண்­ணிப் பார்த்­தால், எல்­லாம் கொஞ்ச கால­மாக ஏற்­பட்டு வரு­கிற நிகழ்ச்சிகளே.

அவ­ளி­டம் அவளை அறி­யா­மலே ஏதோ ஒரு மாறு­தல் திடீ­ரென ஏற்­பட்­டி­ருக்க வேண்­டும். அல்­லது, மெது மெது­வாக உள்­ளூர ஏற்­பட்டு, திடு­மென ஒளி வீசத் தொடங்­கி­யதோ என்­னவோ! முந்­திய மாலை வரை உறங்­கு­வ­து­போல் அழ­கற்று நிற்­கும் மொக்கு அதி­கா­லை­யில் வசீ­கர வனப்­பும் இனிய மண­மும் பெற்­றுத் திகழ்­கி­றதே, அது­மா­திரி.

சொக்­கம்­மா­ளுக்கு எது­வும் விளங்­க­வில்லை. ஆனால், அந்த மாறு­தல் அவ­ளுக்கு மிகு­தி­யும் பிடித்­தி­ருந்­தது. மற்­ற­வர்­கள் அவ­ளைச் "சிறுபிள்ளை" என்று கருது­வ­தில்லை. இப்­போ­தெல்­லாம் அலட்­சி­ய­மாக மதிக்­க­வில்லை. "ஏட்டி - வாட்டி" என்ற தன்­மை­யில் ஏவு­வ­தை­யும் விட்டுவிட்­டார்­கள். அவள் பெரியவளாக வளர்ந்து விட்­டாள். அவ­ளது தந்தை கூட "வாம்மா, என்­னம்மா" என்ற முறை­யில்தான் பேசி­னார். முன்­பெல்­லாம் "ஏ முண்­டம், ஏட்டி சின்­ன­மூதி, பரட்­டைக் கழுதை" என்­றெல்­லாம் ஏசிக்கொண்­டி­ருப்­பார்.

இப்போ, எல்­லோ­ரும் "சொக்­கம்மா வளர்ந்­து­விட்­டாள். நாளைக்கே இன்­னொரு வீட்­டில் போய்க் குடி­யும் குடித்­த­ன­மு­மாக இருந்து நல்ல பேரு வாங்­கு­வாள்." எனும் ரீதி­யில் பேச்­சுக்­குப் பேச்சு சொல் உதிர்த்­தார்­கள்.

சீதை அம்­மாள் அவ­ளைச் "சின்­னப்­பொண்ணு" என்று கரு­து­வதை விட்டு விட்­டாள். தனக்­குச் சம­மா­ன­வள், தனக்­குத் துணை என மதித்­தாள். எல்லா விஷ­யங்­க­ளை­யும் மக­ளி­டம் சொல்­லு­வாள். சில விஷ­யங்­களில் மகள் தனக்கு வழி காட்ட முடி­யும் என்று கூட அவள் எண்­ணி­னாள். மக­ளின் ஆலோ­ச­னையை அடிக்­கடி நாடு­வாள்.

சொக்­கம்­மா­ளுக்கு இதெல்­லாம் மிக­வும் பிடித்­தி­ருந்­தது. இந்த வாழ்க்­கை­யில் விளை­யாட்­டுப் பிள்ளை அல்ல அவள்; அவ­ளும் முக்­கி­ய­மா­ன­வள்தான் என்ற கர்­வம் கூட அவ­ளுக்கு ஏற்­பட்­டது.

சொக்­கம்­மா­ளுக்கு வயசு பதி­னாறு.

"நீ இன்­னும் சின்­னப்­பிள்ளை இல்லை, பாவாடை தாவணி கட்­டிக்­கிட்டு அலை­யி­ற­துக்கு. இனி­மேல் சேலை­தான் கட்­ட­ணும்," என்று அம்மா உத்­த­ரவு போட்டு விட்­டாள். அம்மா விசே­ஷம், விழா நாட்­களில் அணி­வ­தற்­காக வைத்­தி­ருந்த நல்ல சீலை­யை­யும் ஜாக்­கெட்­டை­யும் உடுத்­திக்கொண்டு கண்­ணாடி முன் நின்று அழகு பார்ப்­ப­தில் அவள் அடைந்த மகிழ்ச்சி இவ்­வ­ளவா, அவ்­வ­ளவா?" கப்­பல் காணாது அதை அடக்­கிக் கொள்ள!"

தினுசு தினு­சான புட­வை­க­ளைக் கட்­டிக்கொள்­வ­தற்கு சொக்­கம்­மா­ளுக்­குப் பிடிக்­கும். எந்­தப் பெண்­ணுக்­குத்­தான் பிடிக்­காது? ஆனால் வாங்­கு­வ­தற்கு வசதி இல்லை. நாக­ரிக ஜவு­ளிக்­க­டை­க­ளின் முன்­னால், கண்­ணா­டிப் பெட்­டி­க­ளுக்­குள், நிற்­கிற ஆள் உய­ரப் பொம்­மை­கள் தன்­னை­விட அதிர்ஷ்­டம் செய்­தவை என்று அவள் நம்­பி­னாள். பின் என்ன? அப்­பொம்­மை­கள் நவம் நவ­மான சேலைகளை - விலை உயர்ந்த ஆடை­களை - அழ­கும் கவர்ச்­சி­யும் நிறைந்­த­வற்றை நாள்தோறும் கட்­டிக்­கொள்ள முடி­கி­றதே! ஒரே நாளில் அநேக தட­வை­கள் டிரஸ் மாற்­றம் செய்­ய­வும் முடி­கி­றதே! தனக்கு ஒன்­றி­ரண்டு அழ­கான சேலை, நாக­ரி­கப் புடவை கூட இல்­லையே...

இந்த வித­மாக எண்ண ஆரம்­பித்­தால்தான், சொக்­கம்மா முகத்­தில் வாட்­டம் பட­ரும். இல்­லாது போனால், அவள் முகம் ரோஜாப்பூ தான்.

சந்­தே­க­மில்லை. சொக்­கம்மா பூச்­செண்­டு­தான். கதம்­பக் கொத்து. மலர்த்­தோட்­டம் என்றே சொல்லி விட­லாம்.

பக்­கத்து வீட்­டில் குடி­யி­ருந்த சுந்­தரமூர்த்தி அப்­ப­டித்­தான் அவ­ளி­டமே சொன்­னார்.

சொக்­கம்மா ஒரு­நாள் புது வாயில் புட­வை­யும், எடுப்­பான ஜாக்­கெட்­டும் அணிந்து, அந்த வனப்­பி­லும் அது தந்த ஆனந்­தத்திலும் ஜம்­மென்று விளங்­கி­னாள். அவ­ளது கண்­ணாடி சொன்ன புகழ்ச்சி மட்­டும் அவ­ளுக்­குப் போது­மா­ன­தாக இருக்­க­வில்லை.

அக்­கம் பக்­கத்­தில் உள்­ள­வர்­களி­ட­மெல்­லாம், "எப்­படி இருக்கு? புடவை நல்­லா­யி­ருக்­குதா? எனக்­குப் பொருத்­தமா இருக்­குதா?" என்று கேட்டு, கிடைக்­கிற பாராட்­டு­ரை­களை ஏற்று, குதூ­க­லம் அடைந்து கொண்­டி­ருந்­தாள். சுந்­த­ரத்­தி­ட­மும் கேட்டு வைத்­தாள்.

"ஜோராக இருக்கு. நீயே ரோஜாப்பூ மாதிரி அரு­மை­யாக இருக்­கிறே!" என்­றார் அவர்.

பொது­வா­கவே புகழ்ச்சி பெண்­க­ளுக்கு மிக­வும் உகந்­ததாகவும் இனி­ய­தா­க­வும் அமை­கிறது. அந்­தப் புகழ்ச்சி ஆணின் வாய் மொழி­யாக வரு­வது பெண்­ணுக்கு மிகு­தி­யும் பிடிக்­கும்.

சொல்­லும் திறமை பெற்­ற­வர்­கள், சொல்­ல­வேண்­டிய நேரத்­தில், சொல்­லக்­கூ­டிய விதத்­தில் சொல்­கி­ற­போது அவள் கிறங்கிவிடு­கி­றாள். சொக்­கம்­மா­ளும் பெண்­தானே!

அவள் உள்­ளத்­தில் தேன் நிறைந்­தது. முகத்­திலே மகிழ்வு மலர்ந்­தது. அத­னால் அழ­கிய பூவின் மீது வெயி­லின் பொன்­னொளி பாய்ந்­தது போலா­யிற்று.

சுந்­த­ர­மூர்த்தி அதை ரசித்து வியந்­தார். "ஆகா, எவ்­வ­ளவு அழகு! உன்னை வெறும் பூ என்று மட்­டும் சொன்­னால் போதாது. அழகு அழ­கான பூக்­கள் பூத்­துக் குலுங்­கும் பூந்­தோட்­டம் என்றே சொல்ல வேண்­டும்..."

அவர் பேசப் பேச, சொக்­கம்­மா­ளுக்கு இனி­மை­யான பன்­னீரை அள்ளி அள்ளி மேலெல்­லாம் தெளிப்­பது போன்ற சுகம் ஏற்­பட்­டது. வெட்­க­மும் வந்­தது. "சும்மா இருங்க. கேலி பண்­ணா­தீங்க," என்று முணு­மு­ணுத்­தாள்.

"கேலி இல்லே, சொக்­கம்மா. நிச­மா­கத்­தான் சொல்­கி­றேன்," என்று சுந்­த­ரம் கூறிய விதம் அவ­ளுக்கு நம்­பிக்கை ஊட்­டுவதாகத்­தான் இருந்­தது.

அது முதல் அவள் சுந்­த­ர­மூர்த்­தி­யின் புகழ் மொழி­க­ளை­யும் இனிய பேச்­சு­க­ளை­யும் கேட்­ப­தில் ஆர்­வ­மும் ஆசை­யும் அதி­கம் கொண்­டாள்.

அடிக்­கடி அவர் வீட்­டின் அருகே வளையமிட்­டாள். வலிய வலி­யப் பேச்­சுக்­கொ­டுத்­தாள்.

சுந்­த­ரம் அவள் போக்­கு­களை ஆத­ரித்­த­தோடு, வள­ர­வும் வகை செய்­தார்.

ஏதோ ஒரு கம்­பெ­னி­யில் என்­னவோ வேலை அவ­ருக்கு. தனி­யா­கத்­தான் இருந்­தார். ஓட்­ட­லில் சாப்­பாடு.

வறண்ட பொழு­து­கள் நிறைந்த அவ­ரது வாழ்க்­கை­யில் இனிமை நிரப்­பு­வ­தற்­குப் பெண் துணை எது­வும் கிட்­டி­ய­தில்லை.

எனவே, சொக்­கம்­மா­ளின் சிரிப்­பும் பேச்­சும், வரு­கை­யும் போக்­கும், அவ­ருக்கு இனிய நிகழ்ச்­சி­க­ளாக விளங்­கின.

ஒருநாள் அவள் கேட்­டாள், "ராசா மகளே, ரோசாப்­பூவே என்று பாடு­கி­றார்­கள். ராசா­ம­கள் அப்­ப­டித்­தான் இருப்­பாளோ?" என்று.

"ராசா மகள் என்ன! நீயே ரோஜாப்பூ தான். நான் தான் அடிக்­கடி சொல்­கி­றேனே. ரோஜாப்­பூ­வைப் பார்க்­கிற போதெல்லாம் எனக்கு உன் நினைப்புதான் வரு­கிறது," என்று சுந்­த­ரம் சொன்­னார்.

"இன்று நான் வரு­கிற வழி­யில் ரோஜாப்பூ விற்­றார்­கள். நானும் அஞ்­சாறு பூ வாங்கி வந்­தேன். அழ­கான பூக்­க­ளைப் பார்த்­துக் கொண்­டி­ருப்­ப­தில் எனக்கு எப்­ப­வுமே ஆசை உண்டு. உன் தலை­யில் சூடிக்­கொண்­டால் உன் அழ­கும், பூவின் அழ­கும் இன்­னும் அதி­க­மான கவர்ச்சி பெறும் என்­றும் கூறி­னார். அவ­ளி­டம் ஒரு பூவைக் கொடுத்­தார்.

சந்­தோ­ஷத்­து­டன் அதை வாங்­கிக் கூந்­த­லில் சொரு­கிக்கொண்ட சொக்­கம்மா, "நன்­றாக இருக்­குதா? ஊம்ங்?" என்று குழை­வு­டன் கேட்­டாள்.

"அருமை, வெகு அருமை!" என்று அவர் அறி­வித்­த­தும், ஐஸ்க்ரீம் சாப்­பிட்­டது போலி­ருந்­தது அவ­ளுக்கு.

"எனக்கு அடிக்­கடி பூ வைத்­துக் கொள்ள வேண்­டும் என்ற ஆசை ஏற்­படும். கன­காம்­ப­ரம், கதம்­பம், முல்லை எல்­லாம் விற்­கும்­போது - எல்­லோ­ரும் நிறைய நிறை­யத் தலை­யில் வைத்­தி­ருப்­ப­தைப் பார்க்­கி­ற­போது - எனக்­கும் ஆசை வரும். ஆனால் காசுக்கு எங்கே போவேன்?" என்று அவள் தன் மனக் குறையை வெளி­யிட்­டாள்.

"ஏன், என்­னி­டம் கேட்­டி­ருக்­க­லாமே."

"உங்­க­ளி­டம் எப்­ப­டிக் கேட்­பது?" என்று வெட்­கத்­தோடு இழுத்­தாள் அவள்.

"பர­வால்லே. இனி­மேல் பூ வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்று நீ ஆசைப்­ப­டு­கி­ற­போது என்­னி­டம் காசு வாங்­கிக்­கொள். அழகு தன்னை மேலும் அழகுபடுத்­திக்­கொண்டு கண்­ணுக்கு இனிய காட்­சி­யாக விளங்­கு­வது ரசிக்க வேண்­டிய விஷ­யம்­தான்," என்று அவர் அளந்­தார். அதன் பிறகு, அவ்­வப்­போது சொக்­கம்மா பூவும் தலை­யுமா­கக் காட்சி தரு­வது இயல்­பாகி விட்­டது.

"ஏது பூவு?" என்று சீதை சில சம­யம் கேட்­ப­தும், "என் சிநே­கிதி ஒருத்தி வாங்­கி­னாள். எனக்­கும் தந்­தாள்," என்று மகள் சொல்­வ­தும் வழக்கமாகி விட்­டது.

சிவப்­புச் சாந்­தும், நைலான் ரிப்­ப­னும், காதுக்கு கோல்டு - கவ­ரிங் நாக­ரிக அணி­யும் வேண்­டும் என்று அவள் ஆசைப்­பட்ட போதும், சுந்­த­ர­மூர்த்தி அவற்றை அன்­ப­ளிப்­பாக அவ­ளுக்கு வாங்­கித் தந்­தார்.

"இப்­படி எல்­லாம் நீங்­கள் ஏன் எனக்­கா­கக் காசு செலவு செய்­கி­றீர்­கள்?" என்று சொக்­கம்­மாள் கேட்­டாள்.

சுந்­த­ரம் மகா ரக­சி­யத்தை எடுத்­துக்­கூ­று­வதுபோல, மென் குர­லில் பேசி­னார். "உன் மேலே எனக்கு ஆசை. அத­னால்­தான்" என்று.

அவ்­வி­தம் அவர் சொன்ன வித­மும், பார்த்த வகை­யும், சிரித்த சிரிப்­பும் அவ­ளுக்கு இன்­பக் கிளு­கி­ளுப்பு உண்­டாக்­கின. அவ­ளி­ட­மும் இனம் கண்டுகொள்ள முடி­யாத பர­வச உணர்வு கிளர்ந்து புரண்­டது.

அவர் முகத்­தையே கவ­னித்து நின்­ற­வ­ளின் கன்­னத்தை சுந்­த­ரம் தன் விர­லால் லேசா­கத் தட்­டி­னார். மோவா­யைப் பற்றி அன்­பு­டன் அசைத்­து­விட்டு, விரல்­க­ளைத் தன் உத­டு­களில் பொருத்திக் கொண்­டார்.

அவர் கைபட்ட இடத்­தில் இத­மான உணர்ச்சி படர்­வதை அவள் உணர்ந்­தாள்.

உள்­ளத்­தில் குதூ­க­லம் பொங்­கி­யது. காலை இளம் வெயிலிலே குளிர் காய்­வது போன்ற சுகா­னு­ப­வம் அவளை ஆட்­கொண்­டது. நாணம் மீதுற அவள் அங்­கி­ருந்து ஓடிப்­போ­னாள்.

தனது புது அனு­ப­வத்தை - இத­யத் துடிப்­பு­களை - யாரி­ட­மா­வது சொல்லி, எண்ணி எண்­ணிப் பார்த்து, மகிழ்­வுற வேண்­டும் என்று வந்­தது அவ­ளுக்கு.

ஆனால் யாரி­டம் சொல்ல முடி­யும்? அந்­தப் பழைய கண்­ணா­டி­தான் அவ­ளுக்­குத் துணை. அதில் தன்­னையே கண்டு, தனது உணர்வுக் கிளர்ச்சி­க­ளுக்கு விளக்­க­மும் விடை­யும் காண முயல்­வதே அவ­ளது வழக்­க­மாகி விட்­டது.

வெயிலில் நின்று இதமான அனுபவம் பெறும் ஆசை சொக்கம்மாளுக்கு இல்லாமல் போகுமா? சுந்தரத்தின் பேச்சு, பார்வை, சிரிப்பு முதலியவற்றை அடிக்கடி அனுபவிக்க வேண்டும் என்ற தவிப்பைத்தான் அவள் அடக்க முடியுமா?

"வயது வந்த பெண் இப்படி ஒரு ஆண் பிள்ளையோடு பேசுவதும் சிரிப்பதும் விளையாடிப் பொழுது போக்குவதும் நன்றாக இல்லை," என்று அக்கம் பக்கத்தினர் பேசலானார்கள்.

"பெரியவளாகிவிட்ட பெண்ணுக்குக் கொஞ்சமாவது அடக்கம் ஒடுக்கம் வேண்டாம்? நீயாவது உன் மகளை கண்டித்துவை, சீதை" என்று உபதேசமும் செய்தார்கள்.

சீதை அதைப் பெரிது படுத்தவில்லை. அவளுக்குத் தன் மகளிடம் நம்பிக்கை இருந்தது. தனது மகள் தவறான காரியம் எதையும் செய்யமாட்டாள் எனும் அகந்தையும் இருந்தது. எனினும், மற்றவர்கள் சொல்வதை மகள் காதிலும் போட்டு வைத்தாள் அவள்.

சொக்­கம்மா சிரித்­தாள். "அவர்­களுக்கு வேலை என்ன!" என்று ஒதுக்கிவிட்­டாள்.

ஒருநாள் சுந்­த­ரம் அழ­கான புது மாடல் நெக்­லெஸ் ஒன்­றைச் சொக்­கம்­மா­ளி­டம் காட்­டி­னார். அவள் சிறுமி போல் வியப்­பு­டன், "அய்யா! அரு­மை­யாக இருக்­கி­றதே? ஏது?" என்று கேட்­டாள்.

"வாங்கி வந்­தேன். உனக்­கா­கத்­தான்," என்று கூறி அவள் கையில் வைத்­தார் அவர்.

அவள் ஆர்­வத்­தோடு அதைக் கழுத்­தில் அணிந்­து­கொண்­டாள். முக­மெ­லாம் உவ­கை­யின் மலர்ச்சி. அந்த அறை­யில் கிடந்த கண்­ணா­டி­யில் பார்த்­தாள். "நல்­லா­யி­ருக்­குது. இல்லே? நீங்க சொல்­லுங்க. எப்­படி இருக்­குது?" என்று துடிப்­போடு விசா­ரித்­தாள்.

"ஜம்னு இருக்­குது. அது­வும் நல்­லா­யி­ருக்­குது. நீயும் நல்லா யிருக்­கிறே!" என்று அவர் சொன்­னார்.

அவள் அவர் பக்­கம் வீசிய பார்­வை­யில் ஆனந்­தம் இருந்­தது. பெருமை இருந்­தது. ஆசை­யும் கலந்­தி­ருந்­தது. யுவ­தி­யின் கண்­க­ளுக்கே இயல்­பான கூரிய காந்த ஒளி­யும் இருந்­தது.

அவற்­றால் வசீ­க­ரிக்­கப்­பட்ட சுந்­தரமூர்த்தி அவ­ள­ருகே சென்று அவளை இழுத்­துத் தழு­விக் கொண்­டார். அவள் கண்­க­ளுள் மறைந்­து­கி­டந்த அற்­பு­தத்தை ஆராய விரும்­புபவர் போல் உற்று நோக்­கி­னார்.

அவள் திடுக்­கிட்­டுத் திகைத்த போதி­லும் செயல் திறம் இழந்து விட்­டாள். உணர்­வு­கள் அவளை ஆட்­டு­வித்­தன. இந்­தப் புது அனு­பவம் சுக­மா­க­வும் மனோ­ரம்­மி­ய­மா­க­வும் இருந்­தது.

அவ­ளும் அவ­ரோடு இணைந்து, தலையை அவர் மார்­பில் சாய்த்­துக் கொண்­டாள். என்ன பர­மா­னந்த நிலை! இரு­வ­ருமே இன்­பச் சிறகு பரப்பி, பொன்­ம­ய­மான அற்­புத வெளி­யிலே மிதப்­ப­து­போல் பர­வ­ச­முற்று நின்­ற­னர்.

அவ்­வே­ளை­யில்­தானா சீதை­யம்­மாள் அந்­தப் பக்­கம் வர­வேண்­டும்?

தற்­செ­ய­லாக அவள் கண்­ணில்­பட்ட தோற்­றம் பகீ­ரென அவள் உள்­ளத்­தி­லும் வயிற்­றி­லும் தீ இட்­டது.

"நல்­லாத்­தா­னி­ருக்கு இந்த நாட­கம்," என்று சுடு சொல் உதிர்த்­தாள் அந்­தத் தாய். "சீ, வெட்­க­மில்லை?" என்று காறி உமிழ்ந்­தாள். இரு­வ­ருக்­கும் பொது­வான அந்­தப் பேச்சு இரு­வ­ரை­யும் சுட்­டது.

சொக்­கம்மா வேக­மாக விலகி, தன் வீட்­டுக்கு ஓடி­விட்­டாள். "அறி­யாப் பெண்ணை ஏமாற்றி, தன் வலை­யில் விழ­வைத்த அயோக்­கி­யனை" - சுந்­த­ர­மூர்த்­தியை அவள் இவ்­வி­தம்­தான் எடை போட்­டாள் - கண்­ணெ­டுத்­துப் பார்க்­க­வும் விரும்­ப­வில்லை சீதை.

மக­ளின் சமா­தா­னங்­களும் உறுதி­மொ­ழி­களும், நெஞ்­சில் அடி­பட்ட - நம்­பிக்­கைச் சிதைவு பெற்­று­விட்ட - தாய்க்கு மன ஆறு­தல் அளிக்­க­வில்லை.

அவ­ளும் அவள் கண­வ­னும் தீவி­ர­மாக முயற்சி செய்து, அவ­ச­ரம் அவ­ச­ர­மாக ஒரு கல்­யா­ணத்­துக்கு ஏற்­பாடு செய்து முடித்­தார்­கள்.

சொக்­கம்மா அழு­தாள். அரற்­றி­னாள். பட்­டினி கிடந்­தாள். சுந்­த­ரத்­துக்­குத் தன் மீது ஆசை என்­றும், தனக்­கும் அவர் மீது ஆசை என்­றும், அவர் தன்­னைக் கல்­யா­ணம் செய்­து­கொள்­வார் என்­றும் சொன்­னாள்.

அவள் பேச்சு எடு­ப­ட­வில்லை. சினி­மா­விலே, நாட­கத்­திலே பார்க்­கி­ற­படி எல்­லாம் வாழ்க்­கை­யில் நடக்­க­ணும் - நடந்­து­வி­டும் - என்று அவள் எதிர்­பார்ப்­பது பிசகு என்று தாய் போதித்­தாள். பெற்­றோர் தேர்ந்­தெ­டுத்த மண­ம­க­னையே கல்­யா­ணம் செய்­து­கொள்ள வேண்­டி­ய­தா­யிற்று.

அவன் கண் நிறைந்த கட்­ட­ழ­குக் கும­ர­னாக இல்லை. அதற்கு யார் என்ன பண்­ணு­வது? அவ­ர­வர் தலை­யெ­ழுத்­துப்­படிதான் நடக்­கும்," என்று அம்மா சொல்லி விட்­டாள். மகள் மெள­ன­மா­கக் கண்­ணீர் வடித்­துக்கொண்­டி­ருந்­தாள்.

"முதல்லே இப்­ப­டித்­தான் இருக்­கும். போகப்­போக எல்­லாம் சரி­யாகி விடும். அவள் நன்­மை­யைத்தானே நாம் விரும்­பு­கி­றோம்?" என்று சீதை­யம்­மாள் கூறி­னாள். உல­கம் தெரிந்­த­வள் இல்­லையா அவள்!

தனது வாழ்க்­கை­யில் பிர­கா­சிக்­கத் தொடங்­கிய வசந்­த­கா­லப் பொன்­னொளி திடு­மென இப்­படி வறண்­டு­வி­டும் என்று சொக்­கம்மா கனவு கூடக் கண்­ட­தில்லை.

வாழ்­வின் வானமே இருண்டு, மழை பொழி­யத் தொடங்கி விட்­ட­தாக அவள் நம்­பி­னாள்.

அறி­யாப் பிரா­யத்­தில் காலை இளம் வெயில் போல் தோன்­று­கிற காதல் அன்­றாட வாழ்­வில் சிறிது நேரம் பகட்டி விட்­டுப் போகிற அந்தி வெயில்தான்; அதன் மோக­னம் வெகு­கா­லம் நீடிக்­காது என்­பதை அந்­தப் பேதை அறி­ய­வில்லை.

சொக்­கம்­மா­ளின் சந்­தோ­ஷத்­துக்கு சாட்­சி­யாக இருந்த அவ­ளு­டைய கண்­ணாடிதான் அவ­ளது அழு­கைக்­கும் ஆறு­தல் கூறத் தெரி­யாத அப்­பா­வித் தோழி­யாக அமைந்­தது.

('அமுத சுரபி' - ஜூன் 1965)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!