வெற்றிலை வைத்தியம்

சிறுகதை

கி சுப்பிரமணியம்

பச்­சை­யம்­மா­ளுக்கு எத்­த­னையோ கவ­லை­கள். ஏழு பிள்­ளை­களை வளர்ப்­ப­தி­லும் குடும்ப பாரத்தைச் சுமப்­ப­தி­லுமே அவ­ளின் கவ­னம் முழு­தும் இருந்­தது.

கண­வ­ருக்கோ வேலை சரி­யாக அமை­ய­வில்லை. சிறு­சிறு வேலை­கள் வந்து போகும். எது­வும் நிரந்­த­ர­மாக இல்லை.

அறு­ப­து­க­ளின் ஆரம்ப காலம் சிங்­கப்­பூர் இப்­ப­டித்­தான், சிர­மங்­கள் நிறைந்­த­தாக இருந்­தது.

இருப்­பி­னும் ஒரு­நாள் நிலைமை மாறு­மென்ற நம்­பிக்கை எல்­லோ­ருக்­கும் இருந்­தது.

நாட்டு நடப்பை பற்றி அதி­கம் கவ­லைப்­ப­டாத பச்சை­யம்­மா­ளுக்­கும் இந்த நம்­பிக்கை இருந்­தது.

உழைப்­பால் நாடு உய­ரும் என்று நம்­பிய ஆரம்­ப­கால தலை­முறை அது!

எந்த வேலை­யென்­றா­லும் தயங்­காது ஏற்­கும் மன­வ­லிமை பெற்­ற­வ­ளாக இருந்­தாள் பச்­சை­யம்­மாள்.

வீட்­டில் பொரு­ளா­தார நெருக்­க­டியைச் சமா­ளிக்க இர­வெல்­லாம் சிந்­திப்­பாள்.

இந்த சிர­மத்­திற்­கும் கவ­லை­க­ளுக்கு இடை­யி­லும் ஒவ்­வொரு சனிக்­கி­ழமை இர­வி­லும் சினிமா பார்ப்­பதை விட­மாட்­டாள்.

கூடவே தூக்­கக் கலக்­கத்­தில் இருக்­கும் தன் பத்து வயது மக­னை­யும் அழைத்­துக்­கொண்டு இரண்டு கல் தொலை­வில் இருக்­கும் திரை­ய­ரங்­கிற்கு ஓட்­ட­மும் நடை­யு­மாக பறப்­பாள். அங்கு சனிக்­கி­ழ­மை­தோ­றும் இரவு தமிழ்ப்­ப­டம் திரை­யி­டு­வர்.

சில­ச­ம­யம் திரை­யிடப்பட வேண்டிய படத்­திற்குப் பதில் வேறு படத்தைப் போட­வும் செய்­வார்­கள்.

பிலிம் கடைசி நிமி­டத்­தில் வந்து சேர­வில்லை என்­பதே திரை அரங்கின் சீன உரி­மை­யா­ளர் கூறும் சமா­தா­னம். பார்க்க விரும்­பா­த­வர்­க­ளுக்கு டிக்­கெட் பணத்தைத் திருப்­பிக் கொடுக்­க­வும் செய்­த­னர்.

ஒரு­முறை இரும்­புத் திரை என்ற திரைப்­ப­டத்தைப் பற்றி வீடு வீடாக விளம்­ப­ரம் செய்­தார்­கள்.

‘நல்ல படம் குடும்­பத்­து­டன் சென்று பார்’ என யாரோ ஒரு பெண்­மணி சொல்ல, ஏழு பிள்­ளை­களை­யும் அழைத்­துக்­கொண்டு சென்­றாள் பச்­சை­யம்­மாள்.

ஆயி­னும், ‘இரும்­புத்­திரை’ என்ற படத்­திற்கு மாற்­றுப் பட­மாக ‘தாய் சொல்லை தட்­டாதே’ என்ற படத்தை திரை­யி­டவே அரங்­கில் ஒரே கூச்­சல் குழப்­பம். சிவாஜி ரசி­கர்­க­ளுக்கு ஏமாற்­றம்!

திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர் தொலை­பெ­ருக்­கி­யில், மலாய் மொழி­யில் மன்­னிப்புக் கேட்­டார். பச்­சை­யம்­மா­ளுக்­கும் வருத்­தம்தான். என்­றா­லும் இந்தப் படத்­தை­யும் முழுக்கப் பார்த்து விட்­டுத்­தான் குடும்­பத்­தோடு திரும்­பி­னாள்.

பல­ரின் துன்­பங்­க­ளுக்­கும் சோர்­விற்­கும், அக்­கா­லத்­தி­லும் சினிமா ஒரு தற்­கால மருந்­தாக இருந்­தது.

ஆளுக்கு ஐம்­பது காசு அல்­லது ஒரு வெள்ளி டிக்­கெட். இரண்­டரை மணி நேரம் எல்லா கவ­லை­க­ளை­யும் மறந்துவிடு­வாள் பச்­சை­யம்­மாள்.

சில நேரங்­களில் அவ­ளின் கண­வர் திட்டி தீர்ப்­பார். ‘வீட்­டில் இவ்­வ­ளவு கஷ்­டம் இருக்க, மாதம் நான்கு வெள்ளி படத்­துக்கே போகுதே’? என்று சீறு­வார்.

ஆனா­லும் சில நேரங்­களில் அவ­ரை­யும் வற்­பு­றுத்தி திரைப்­ப­டம் பார்க்க அழைத்துச் சென்­று­வி­டு­வாள் இந்த நாற்­பத்­தைந்து வயது பெண்­மணி. சிறிய ஆப்­பக்­கடை வைத்­தாள். காலை­யி­லி­ருந்து மதி­யம்­வரை விற்­பனை நடக்­கும். கையில் ஒரு ஐந்து வெள்ளி சேரும். இதை வைத்துக் குடும்­பத்தை ஓட்­டு­வாள்.

வார இறு­தி­யில் வடை சுட்டு குதிரைப் பந்­தய வாச­லில் கூடை­யில் கொண்டு சென்று விற்­பாள். பல­முறை காவ­லர்­க­ளால் விரட்­டப்­பட்­டும் இருக்­கி­றாள். இருந்­தும் தொடர்ந்து விடாது போரா­டி­னாள். எல்­லாம் குடும்­பத்தைக் கரை­சேர்க்க, அவள் அன்று பட்ட பாடு!

அவள் மகன் கும­ரே­ச­னுக்கு எட்டு வய­தி­லி­ருந்தே மூக்­குக்­ கண்­ணாடி போடும் நிலை. பாவம் அவன்­தான் என்ன செய்­வான்? அவனா விரும்­பி­னான்? பிறப்­பில் வந்த குறையோ என்­னவோ? சிறு வய­தில் மூக்­குக் கண்­ணாடி போட்­ட­தால், வெளி­யில் மற்ற பிள்­ளை­க­ளு­டன் விளை­யா­டு­வ­தில் மிக சிர­மப்­ப­டு­வான்.

‘நம்ம வீட்­டுல எல்­லார்க்­கும் நல்ல கண்­பார்வை இருக்க, உனக்கு மட்­டும் ஏண்டா இப்­படி?’ என்று கவ­லைப்­பட்­டுக்­கொள்­வாள்.

*

“புக்­கிட் தீமா ஆராங்­கல்­லுல ஒரு சாமி­யார் இருக்­கா­ராம். அவரு அருள் வாக்கு சொல்லி, சிகிச்­சை­யும் செய்து, பல பேரு­டைய குறையைத் தீர்த்து வைக்­கி­றா­ராம். நாளைக்கு உன்னை அழைச்­சி­கிட்டு போறேன். அவ­ரால உனக்கு நல்ல பார்வை கிடைக்­க­லாம்,” என்­றாள் பச்­சை­யம்­மாள்.

கும­ரே­ச­னுக்கு இது புதி­தல்ல. அவன் தாயா­ருக்கு மருத்­து­வரை விட சாமி­யா­டி­கள் மீதுதான் நம்­பிக்கை அதி­கம்.

நல்ல பக்­தி­யு­டன், பிற­ரின் நலம் கருதி, வைத்­தி­யம் செய்­யும் நல்­லோ­ரும் சிலர் இருக்க, போலி­களும் இருக்­கத்­தான் செய்­த­னர் அன்­றும்!

“வேண்­டாம் அம்மா. நாம இது மாதிரி சில பேரை பார்த்­தோம் இல்­லையா?” என்­றான் கும­ரே­சன்.

“ஆமாடா. ஆனா­லும் இவ­ர­பத்தி நிறைய பேர் நல்­லதா சொல்­லு­ராங்க. இவரு பல பேரோட கண்ண குணப்­ப­டுத்தி இருக்­கா­ராம். போய்த் தான் பார்ப்­போமே,” என்­றாள்.

கும­ரே­ச­னுக்கு தாயின் வார்த்­தையைத் தட்ட மன­மில்லை. ‘சரி’ என்று மெல்ல தலை­ய­சைத்­தான்.

சிறு வய­தில் கும­ரே­சன் மிக­வும் மெலிந்து இருப்­பான். அப்­பொ­ழு­தெல்­லாம் பள்­ளி­க­ளுக்கு, சுகா­தார அமைப்­பில் இருந்து மாண­வர்­களை பரி­சோ­தனை செய்­ய­வும் உட­லுக்கு உரம் சேர்க்க டானிக், மீன் எண்ணெய், உலர்ந்த கடலை மற்­றும் ஆரஞ்சுப் பழங்­கள் போன்­ற­வை­களை உட்­கொள்ள சீட்டு எழுதிக் கொடுப்­பார்­கள். அதை பெற்­றுக் கொண்டு, ஊட்­­ரம் சாலை­யில் இருந்த இன்ஸ்­டி­டி­யூட் ஆஃப் ஹெல்த் என்­னும் மருத்­து­வ­மனைக்குச் சென்று அவை­களை இல­வ­ச­மாக பெற்­றுக்­கொள்­ள­லாம்.

அந்த அடிப்­ப­டை­யில் கும­ரே­ச­னின் மெலிந்த தோற்­றத்தை பரி­சோ­தித்து அவ­னுக்­கும் சீட்­டெ­ழுதிக் கொடுத்­த­னர்.

இது மூன்று மாதத்­திற்கு ஒரு­முறை நடக்­கும். சத்துணவுகளை இல­வ­ச­மாக அரசு கொடுப்­ப­தால், பச்­சை­யம்­மாள், மற்ற வேலை­களை ஒதுக்­கி­விட்டு சீட்­டு­டன் கும­ரே­சனை அழைத்­துக்­கொண்டு போவாள்.

அவள் போகத் தூண்­டு­த­லாக இருப்­ப­தற்கு வேறு ஒரு கார­ண­மும் உண்டு. காலை­யில் ஊட்­ராம் மருத்­து­வ­ம­னைக்குச் சென்று, டானிக் போன்­ற­வற்றைப் பெற்­றுக்­கொண்டு, அங்­கி­ருந்து ஒரு பஸ் ஏறி, நார்த் பிரிட்ஜ் சாலை­யில் இறங்கி, அங்­குள்ள, டைமன்ட் அல்­லது பக்­கத்­தில் உள்ள ராயல் திரை­ய­ரங்­கில் ஏதே­னும் ஒரு தமிழ்ப் படம் பார்த்து­விட்டு, மீண்­டும், குவீன்ஸ் ஸ்தி­ரீட் பச்சை நிற பஸ் நிலை­யத்­தில் பஸ் பிடித்து புக்­கிட் தீமா ஆறா­வது கல்­லில் இறங்கி சாமி­யா­டியை மாலை­யில் பார்க்­க­லாம் என மன­தில் ஓர் அட்­ட­வணை போட்­டாள்.

“நாளைக்கு உனக்கு வேண்­டிய மீன் எண்ணெய், டானிக் எல்­லாம், ஊட்­ரம் ரோட்­டில் உள்ள ஆஸ்­பத்­தி­ரிக்கு போய் வாங்­கிக்­க­லாம்,” என்ன?

தூர பஸ் பய­ண­மென்­றால் குமரே­ச­னுக்கு மிக­வும் பிடிக்­கும். ‘சரி’ என்று தலை­ய­சைத்­தான்.

மறு­நாள் காலை­யில் வீட்டை விட்டுக் கிளம்பி பச்சை பேருந்தைப் பிடித்து ஓர் இடத்­தில் இறங்கி, மீண்­டும் ஒரு எஸ்.டீ.சி பஸ்ஸை பிடித்து, ஊட்ரம் மருத்­து­வ­மனைக்கு வந்து சேர்ந்­தார்­கள்.

அங்கு கும­ரே­ச­னுக்கு கொடுத்த எல்­லா­வற்­றை­யும் பெற்­றுக்­கொண்டு, எடுத்துச் சென்ற பையில் நிரப்­பி­ய­படி மீண்­டும் பஸ்ஸை பிடிக்க நடந்­தாள் மக­னோடு.

பையில் இருந்த மீன் எண்­ணெய்யின் வாடை கப்­பென்று அடித்­தது. கும­ரே­சன் முகத்தைச் சுழித்­தான்! அவ­னுக்கு அறவே பிடிக்­காத ஒன்று இந்த மீன் எண்ணை தான். அந்த வாடை அவ­னுக்கு உமட்­டிக்­கொண்டு வரும்.

“முகத்த சுழிக்­கா­தடா. உனக்கு இந்த மீன் எண்ண பிடிக்­கா­துன்னு தெரி­யும். ஆனா இதான்டா உன் உடம்­புக்கு நல்­லது,” என மக­னுக்கு உப­தே­சித்­தாள்.

“எப்­போ­தும் போல நாக்­கில் வெற்­றி­லையை வைத்து ஊற்றி விடு­றேன்,” என்று தீர்வு சொன்­னாள்.

வெற்­றி­லையை நாக்­கின் மீது வைத்து, அதன் மீது மீன் எண்­ணெய்யை ஊற்­றும் தன் தாயின் கண்­டு­பி­டிப்­பால், நாக்­கில் படா­மல் உள்ளே சென்­றா­லும், ஏப்­பம் வரும்­போது கூடவே வரும் அதே வாடையை நினைத்து நொந்து கொண்டே, தன் தாயின் வேக­மான நடைக்கு ஈடுகொடுத்­தான் கும­ரேசன்.

ஒரு பத்து நிமி­டம் நடந்து பஸ்­ஸில் ஏறி, குவீன்ஸ் ஸ்தி­ரீட் சாலை­யில் இறங்­கி­னார்­கள்.

“வேக­மாக நட, கொஞ்ச தூரத்­தில் தான் ராயல் மற்­றும் டைமண்ட் தியேட்­டர் இருக்கு. நல்ல படம் போட்­டாங்­கனா பாத்­திட்டு நேரா சாமி­யார பார்க்க பஸ் ஏறி போயி­ட­லாம்,” என்­றாள்.

ஏதும் பதில் சொல்­லா­மல் தாயைப் பின்தொடர்ந்து நார்த் பிரிட்ஜ் சாலை­யில் நடந்­தான் கும­ரே­சன்.

கொஞ்ச நேரத்­தில் டைமண்ட் தியேட்­டரை அடைந்­த­னர். அங்கு ‘பாவ மன்­னிப்பு’ என்ற படம் திரை­யி­டப்­பட்­டுக் கொண்­டி­ருந்­தது.

பச்­சை­யம்­மாள் முகத்­தில் மகிழ்ச்சி தென்­பட்­டது. பக்­கத்து, ராயல் திரை­ய­ரங்­கில் ‘பட்டி விக்­கி­ர­மா­தித்­தன்’ படம் திரை­யி­டப்­படு­வதைப் பற்றி சிலர் பேசிக்­கொண்­டார்­கள். ஆயி­னும் இங்குதான் கூட்­டம் அதி­கம் கூடி இருந்­தது.

பச்­சை­யம்­மா­ளுக்கு, புராண இதி­காசப் படங்­கள் அதி­கம் பிடிக்­கும். ஆனா­லும் இந்த பாவ மன்­னிப்பு படம் அப்­பொ­ழுது மக்­க­ளால் அதி­கம் பேசப்­பட்ட பட­மென்­ப­தால் இதையே தேர்ந்­தெ­டுத்­தாள்!

மாயாஜாலப் படத்தைப் பார்க்க முடி­யா­மல் போன­தில் கும­ரே­ச­னுக்கு கொஞ்­சம் ஏமாற்­றம்தான். இருப்­பி­னும் தன் தாயின் ஆசைக்கு செவி மடுத்து அவ­ளு­டன் பாவ மன்னிப்பைப் பார்த்­தான். எப்­ப­டியோ, அவ­னுக்­கும் படம் பிடித்­த­மான ஒன்­றா­கத்தான் அமைந்­தது.

திரைப்­ப­டம் பார்த்தபின், குவீன்ஸ் ஸ்திரீட் பச்சை பஸ் நிற்­கும் இடத்­திற்கு மீண்­டும் வந்து சேர்ந்­தார்­கள்.

கிட்­டத்­தட்ட ஏழு அல்­லது எட்டு பஸ் ஒன்­றன்­பின் ஒன்­றாக அணி­வகுத்து நின்­றன.

தாங்­கள் செல்­லும் இடத்­திற்குப் போகும் பேருந்தில் மக­னு­டன் ஏறி அமர்ந்­தாள் பச்­சை­யம்­மாள். பேருந்து நடத்துநர், ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் டிக்கெட் கொடுத்­துக்­கொண்டு வந்­தார்.

‘படம் நல்லா இருந்­தது இல்­லையா? என தான் தேர்ந்­தெ­டுத்த படம் சரி­யா­னது என்­பதை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள கேட்­டாள் பச்­சை­யம்­மாள். அவன் தாயாருக்குப் படம் பிடித்து இருந்­த­தால் அவனுக்கும் பிடித்­தி­ருந்­தது.

பேருந்தில் பய­ணி­கள் ஓர­ள­விற்கு நிரம்­பி­ய­வு­டன், நடத்துநர் விசில் ஊத பேருந்து புறப்­பட்­டது. சிறிது நேரத்­தில், ஓஃபிர் சாலை­யில் வளைந்து, பின் சிறிது நேரத்­தில் புக்­கிட் தீமா சாலை­யில் சற்று வேக­மாக சென்­று­கொண்­டி­ருந்­தது.

ஜன்­னல் ஓர­மாக தன் தலையைச் சாய்த்தபடி வெளி­யில் இருந்து வீசும் சில்­லென்ற ஈரக் காற்­றின் சுகத்தை அனு­ப­வித்­துக்­கொண்டு இயற்கை கட்­சி­களை ரசித்த வண்­ணம் மெய்­ம­றந்து இருந்­தான் கும­ரே­சன். அரை மணி நேர பேருந்துப் பயணம்.

‘அடுத்த ஸ்டாப்ல நாம கீழே இறங்­க­ணும்’ என்று மகனைத் தயார் செய்­தாள் பச்­சை­யம்­மாள்.

அந்த குளிர்ந்த மாலை நேரத்­தில், இரு­வ­ரும் பேருந்தைவிட்டு இறங்கி ஒற்­றை­யடி மண் பாதை வழி­யாக நடந்­த­னர்.

போகும் வழி­யில் இயற்கை ஊற்­றும், அங்கு சிறு­வர்­கள் குளித்­துக் கொண்­டி­ருக்­கும் காட்­சி­யும், கும­ரே­ச­னின் மனதை உற்­சாகப்படுத்­தி­யது.

கொஞ்­சம் தூரத்­தில் தெரிந்த சில அத்­தாப்பு வீடு­களை நோக்கி சேறும் சக­தி­யும் கொண்ட பாதை­யில் தாயும் மக­னும் நடந்­த­னர்.

எப்­ப­டியோ வீட்டைக் கண்­டு­பிடித்து­விட்­டாள் பச்­சை­யம்­மாள். அது­வும் ஒரு பழைய வீடு என்­ற­போ­தும், பெரி­தாக இருந்­தது.

அறையில் மண்­ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்­தி­ருந்­த­னர். வர­வேற்பு அறை­யில் இரு­வர் மட்­டும் அமர்ந்து இருந்­த­னர்.

எல்­லோ­ரும் சாமி­யா­ரி­டம் அருள்­வாக்கு பெற­வும், வைத்­தி­யம் செய்து­கொள்­ள­வும் வந்­த­வர்­கள் என்­பதை அவர்­க­ளின் பேச்­சி­லி­ருந்து தெரிந்­தது.

வர­வேற்பு அறை­யி­லி­ருந்து நேர்­மு­க­மான சின்ன அறை­யொன்­றில் பேச்சு சத்­தம் கேட்­கிறது.

கொஞ்­சம் சத்­த­மான குர­லில் பேசிக்­கொண்டே ஒரு நல்ல வாட்ட சாட்­ட­மான, வேட்டி மட்­டுமே கட்­டிய கறுத்த நிறமுடைய ஒரு­வர் வெளி­யில் வந்­தார்!

வந்­த­வர்­களை ஒரு­முறை நோட்­டம் பார்த்­து­விட்டு, அங்கு ஏற்­கெனவே அமர்ந்­தி­ருந்த இரு­வரை அழைத்­துக்­கொண்டு அறைக்­குள் சென்­று­விட்­டார்.

மீண்­டும் அறையில் பேச்­சுக் குரல். வெளி­யில் பச்­சை­யம்­மா­ளும் கும­ரே­ச­னும் அமர்ந்­தி­ருந்­த­னர்.

“சாமி­யார் கேட்­டார்னா, தைரி­யமா பதில் சொல்­ல­ணும்,” என்று அறி­வுரை சொன்­னாள் பச்­சை­யம்­மாள்.

இரு­பது நிமி­டத்­துக்­குப்­பின், உள்ளே சென்ற இரு­வ­ரும், சாமி­யா­டி­யி­டம் வணக்­கம் சொல்­லி­விட்டு வெளி­யே­றி­னார்­கள். சற்று நேரத்­தில் அந்த கறுத்த உரு­வத்­திற்குச் சொந்­தக்­கா­ரர் அறைக்கு வெளியே வந்­தார்.

‘என்ன விஷ­யமா வந்­தீங்க’ என்று, துண்­டால் முகத்தை துடைத்துக்கொண்டே கேட்­டார்.

“இவன் என் மகன். இவ­னுக்கு கண்­பார்­வை­யில் கொஞ்­சம் குறை­பாடு உள்­ளது. அதான்,” என்று தொடங்­கி­னாள் பச்­சை­யம்­மாள்.

“கண்­ணுல குறை­பா­டுனா கண் டாக்­டர் கிட்டே போய் காட்­ட­வேண்­டி­யதுதானே,” என்று சொல்லி வேக­மாகச் சிரித்­தார் அந்த சாமியாடி.

“காமிச்சு பார்த்­துட்­டேன். மூக்கு கண்­ணாடி போட வச்­சுட்­டார் டாக்­டர். இவ­னும் வெளி­யில் பிள்­ளை­க­ளோடு விளை­யாடி ஆறு கண்­ணாடி உடைச்­சுட்­டான். சாமிய வேண்டி நீங்­கதான் கண்­பார்­வைய திருத்த வழி­செய்­ய­ணும்,” என்று அவ­ரி­டம் வேண்­டிக்­கொண்­டாள்.

அவர் மீண்­டும் சிரித்­தார். அந்த கறுத்த வலிய மனி­தரை இங்கு வந்­த­தி­லி­ருந்தே கொஞ்­சம் பயத்­து­டன் பார்த்­தான் கும­ரே­சன்.

“நம்ம கையில என்ன இருக்கு. எல்­லாம் அவன் செயல்தான். இருந்­தா­லும் முடிஞ்­சத செய்­றேன்,” என்று சொல்லி, முரு­கே­சனை ஊடு­ருவி ஒரு பார்வை பார்த்­தார்.

முரு­கே­சன் இப்­பொ­ழுது மிரண்டே போனான்!

“சரி பையன உள்ளே அனுப்­புங்க. சோதிச்சுப் பார்க்­கி­றேன் நீங்க இங்­கேயே இருங்க,” என்று பச்­சை­யம்­மா­ளுக்­கும் உத்­த­ர­விட்­டார் அந்த முரட்டு சாமி­யாடி. இப்­பொழுது மிக­வும் பயந்தே போயி­ருந்­தான் கும­ரே­சன்.

“தைரி­யமா அவர்கூட போ. அவர் நல்லா பார்த்து தீர்வு சொல்­வார்,” என்று சொல்லி கும­ரே­சனைத் தேற்­றி­னாள் பச்­சை­யம்­மாள்.

அந்த சிறிய அறைக்­குள் முரட்டு சாமி­யா­டியைப் பின்­தொ­டர்ந்­தான் கும­ரே­சன்.

தரை­யில் அம­ரச்­சொல்­லி­விட்டு, எதிர்ப்புறத்தில் அவ­ரும் அமர்ந்­து­கொண்­டார். கும­ரே­சன் அறையை ஒரு நோட்­ட­மிட்டான்.

சுவ­ரில் பல படங்­க­ளுக்கு இடையே இரண்டு இடத்­தில் இரண்டு அரி­வாள்கள் ஒன்­றின் மீது ஒன்று குறுக்­கில் மாட்டி தொங்­க­வி­டப்­பட்­டி­ருந்­தன. இப்­பொழுது பயத்­தின் உச்­சிக்கே போய்­விட்­டான் கும­ரே­சன்.

“சொல்லு. ரொம்ப நாளா உனக்கு கண்­பார்வை குறை இருக்கா?” என கண் டாக்­டர் பாணி­யில் கேட்க ஆரம்­பித்­தார் முரட்டு சாமி­யாடி.

‘ஆம்’ என மெது­வாய் பதில் சொன்­னான் கும­ரே­சன்.

“பெலக்க தைரி­ய­மாய் பதில் சொல்லு,” என கொஞ்­சம் அதட்­ட­லாகச் சொன்­னார்

இது போதாதா கும­ரே­சனை மிர­ள­வைக்க!

“ஆமாம்” என்று குரலைக் கொஞ்­சம் சிர­மப்­பட்டு உயர்த்தி பதில் சொன்­னான்.

இப்­படிக் கேள்வி கேட்­டுக்­கொண்டே, தன் வாயில் வெற்­றி­லையை மடித்துப்போட ஆரம்­பித்­தார்.

கும­ரே­ச­னின் மூக்­குக் கண்­ணா­டியைக் கழற்­றச்­சொல்லி, வாயில் வெற்­றி­லையை குதப்­பிய வண்­ணம் ஏதோ மந்­தி­ரம் போல், கும­ரே­ச­னின் கண்­க­ளுக்கு மிக அரு­கில் சென்று முணு­மு­ணுத்­தார்.

கொஞ்ச நேரம் முணு­முணுத்துவிட்டு, ஒரு கிண்­ணத்­தில் இருந்த நீரை பளிச் பளிச் என்று கும­ரே­ச­னின் இரு கண்­க­ளி­லும் அடித்­தார்.

அடுத்து என்ன நடக்­குமோ என்று பயந்துகொண்­டி­ருந்­தான் கும­ரே­சன்.

இத்­த­னைக்கு இடை­யி­லும் சாமி­யா­டி­யின் வாய், வெற்­றி­லையை கொதகொத­வென அரைத்­துக்­கொண்டே இருந்­தது. மீண்­டும் கொஞ்­சம் குள­று­வது போல் பேச ஆரம்­பித்­தார்.

“இப்ப கண்ண திறந்து பாரு,” என்­றார்

கும­ரே­சன் மெல்ல கண்­களைத் திறந்­தான்.

“இப்ப பார்வை கொஞ்­சம் நல்லா தெரி­யுதா?” என்­றார்.

கும­ரே­ச­னுக்கு எந்த மாற்­ற­மும் தெரி­ய­வில்லை.

“அப்­ப­டியேதான் இருக்கு” என்று கொஞ்­சம் துணிச்சலை வர­வ­ழைத்­துக்­கொண்டு பதில் சொன்­னான்.

சாமி­யா­டி­யின் முகத்­தில் கொஞ்­சம் ஏமாற்­ற­மும் கடு­க­டுப்­பும் தென்­பட்­டது.

வாயில் குதப்­பிக்­கொண்­டி­ருந்த வெற்­றிலை எச்­சிலை ஒரு கிண்­ணத்­தில் துப்­பி­விட்டு, மிச்­சம் உள்ள வெற்­றிலைக் கல­வையை மெல்ல மென்­ற­படி மீண்­டும் கும­ரே­சனை உற்றுப் பார்த்­தார்.

“கண்ண நல்லா மூடிக்க,” என்று கொஞ்­சம் கண்­டிப்­பு­டன் சொன்­னார் அந்த சாமி­யாடி.

கும­ரே­ச­னின் மனம் இப்­பொ­ழுது மிக­வும் கல­வ­ரப்­பட்­டது. ஐயோ அடுத்து என்ன செய்யப் போகி­றாரோ என்ற திகில் அவனை கவ்­விக்­கொண்­டது. கும­ரே­சன், சாமி­யாடி சொன்­ன­ப­டியே கண்­களை இறுக்­க­மாக மூடிக்­கொண்­டான்.

ஒரு சில நிமி­டங்­கள் அமைதி நில­வி­யது. அடுத்து, தன் மூடிய கண்­களில், சாமி­யாடி எதையோ வைத்து அப்­பும் உணர்வு கும­ரே­ச­னால் உணர முடிந்­தது.

மெல்ல மெல்ல மூடிய கண்­களின் வழியே ஏதோ பட்டு, கண்­கள் கொஞ்­சம் எரிச்­சல் தர ஆரம்­பித்­தது. ஆ.. வெற்­றிலைக் கல­வை­யின் வாடை அதி­க­மாக அடிக்க ஆரம்­பித்­தது. அவன் கண்­ணெ­ரிச்­சல் கொண்­ட­தால் மெல்ல முனக ஆரம்­பித்­தான்.

இங்­கி­ருந்­த­ப­டியே தாயைக் கூவி கூப்­பி­ட­லாமா என்று ஒரு­க­ணம் அவன் மனம் எண்­ணி­ய­போ­தும் அவன் தன்­மா­னம் அதற்கு இடந்­த­ர­வில்லை.

“கொஞ்­சம் கண் எரிச்­சல் இருக்­கும் பொறுத்­துக்க,” என்­றார் சாமி­யாடி.

சிறிது நேரம் ஏதோ முணு­முணுத்து­விட்டு, கும­ரே­ச­னின் கண்­களில் வைத்த வெற்­றிலைச் சக்­கையை மெல்ல அகற்­றி­னார் பின்பு கொஞ்­சம் தண்­ணீரைக் கொடுத்து கண்­களைக் கழு­வச்­சொன்­னார்.

கண்­களை நீரால் கழு­வி­யும் எரிச்­சல் இன்­னும் இருந்­தது கும­ரே­ச­னுக்கு.

இந்த பாவி வெற்­றி­லை­யோடு என்­னென்ன கலந்து மென்­றானோ தெரி­ய­வில்­லையே என்று உள்­ளுக்­குள் நொந்துகொண்­டான் குமரேசன்.

“மந்­தி­ரத்த ஓதி உன் கண்­ணுல இந்த வெத்­தல சக்­கைய வச்­சேன். எல்­லாம் உன் பார்வ நல்லா வரணுமுன்னுதான். கொஞ்­சம் எரிச்­ச­லா­தான் இருக்­கும். பொறுத்­துக்க.

இதுபோல இன்­னும் சில நாளுக்­குப்­பின்­னால இரண்டு தடவ இதே­மா­திரி செஞ்சா பார்வ ரொம்­ப­வும் நல்லா இருக்­கும்,” என்று தன் அருள்­மிக்க வைத்­திய முறையை விளக்­கி­னார் அந்த முரட்டு சாமி­யாடி!

சிறிது நேரத்­திற்­குப்­பின் அவர், கும­ரே­சனை அறையைவிட்டு வெளி­யில் அழைத்து வந்­தார்.

“கண்­ணுக்கு கொஞ்­சம் வைத்­தி­யம் செஞ்­சி­ருக்­கேன். இது போல இன்­னும் இரண்டு தெடவ செஞ்சா எல்­லாம் சரி­யா­கி­வி­டும்,” என்­றார்.

கும­ரே­ச­னின் சிவந்த கண்­களை கண்டு திடுக்­கிட்­டாள் பச்­சை­யம்­மாள்

ஏன் இவன் கண்ணு சிவந்து இருக்கு என்று பதற்றத்துடன் கேட்­டாள் சாமி­யா­டியைப் பார்த்து.

“ஒன்­னும் இல்­லம்மா, பயப்­ப­டா­திங்க. ஜபம் செஞ்சி, கொஞ்­சம் வெற்­றிலைச் சக்­கையை பையன் கண்­ணில் கொஞ்ச நேரம் வச்சு எடுத்­தேன். அது சரி­யாகி விடும்,” என்­றார் அலட்­சி­ய­மாக அந்த சாமி­யாடி.

வந்­ததே பச்­சை­யம்­மா­ளுக்கு கோபம்!

“அப்­படி செய்­ய­ணும்­முனா என் கிட்ட முதல்ல சொல்­லி­யி­ருக்­க­னும்,” என்று உரக்க கத்தி பேசி, சாமி­யா­டியை நன்­றாகத் திட்ட ஆரம்­பிக்­க­வும், அக்­கம் பக்­கத்­தி­னர் கூடி விட்­ட­னர்.

இந்த திடீர் தாக்­கு­தலை சற்­றும் எதிர்­பார்க்­காத சாமி­யா­டிக்கு உடல் கொஞ்­சம் நடுக்­கம் கண்­டு­விட்­டது.

இந்த மாதிரி நேரங்­களில் பச்­சை­யம்­மாளை சாந்­தப்­ப­டுத்­து­வது கொஞ்­சம் சிர­மம்.

எப்­ப­டியோ சில அக்­கம்பக்க முதி­ய­வர்­கள் சேர்ந்து பச்­சை­யம்­மாளை மெல்ல பேசி சாந்­தப்படுத்த, அவள் கும­ரே­சனை அழைத்­துக்­கொண்டு, மீண்­டும் ஒரு­முறை சாமி­யா­டியைத் திட்­டி­விட்டு, அங்­கி­ருந்து வெளி­யேறி, சாலையை நோக்கி வந்த பாதை வழியே வேக­மாக நடந்­தாள்.

நடந்­துகொண்டே மக­னி­டம் வருத்­தத்­து­டன் பேசி­னாள், “கண்ணு ரொம்­ப­ எரியுதாப்பா,” என்று பரி­வு­டன் கேட்­டாள்.

இப்ப கொஞ்­சம் குறைவா தெரி­யுது என்று தாழ்­வான குர­லில் பதில் சொன்­னான் கும­ரே­சன்.

“இனி இந்த ஆள வந்து பார்க்க வேணாம் அம்மா,” என்று சற்று தழு­த­ழுத்த குர­லில் கேட்­டுக்­கொண்­டான் கும­ரே­சன்.

“இல்­லடா. இனி இந்த ஆள வந்து பார்க்­கவே வேணாம். போதும் இவ­ரோட வெத்­தல வைத்­தி­யம். இனி எந்த சாமி­யா­டி­யை­யும் பார்க்க வேண்­டாம்,” என்று தன் தவற்றை நினைத்து நொந்­துகொண்­டாள் பச்­சை­யம்­மாள். கொஞ்ச நேரம் நின்று சாமி­யாடி வீட்டை நோக்கி மீண்­டும் வேக­மாகத் திட்­டி­விட்டு நடக்க ஆரம்­பித்­தாள்.

மீண்­டும் சிறிது நேர மௌனம்.

“இனிமே நேரா அந்த ஆண்­ட­வனதான் உனக்­காக நம்பி வேண்டு­வேன்,” என்­றாள் கண்­கள் சற்று கலங்­கி­ய­படி!

பேருந்து வரும் சாலையை நோக்கி, அதே ஒற்றையடிப் பாதை­யில் இரு­வ­ரும் நடக்கத் தொடங்­கி­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!