தப்பித்தலின் நேரம் சபரிநாதன்

1 mins read

நகரம் அதிர்ந்து கொண்டிருக்கிறது

வெகுதூரத்தில்...

மல்லாந்து கிடக்கும் மேனியில்

முழுதாய் வீழ்ந்த மஞ்சள் வெயில்

ஏனோ எதுவும் செய்யவில்லை

அழித்து திருத்தி

கோலமிடும்

பிஞ்சுப் பெண்ணின்

கைவிரல் தீண்டுகிற போது

அள்ளித் தின்னலாம் மண்ணை

பகலெல்லாம் என்ன செய்திருக்குமென்று

ஊகிப்பதெப்படி?

கூடு திரும்புகின்றன.

பறவைகளை மட்டும்

கடவுள் படைத்திருப்பார்

மேலொரு வண்ணம்

கீழோரு வண்ணம்

நிற்கவா

புறப்படவா

சற்று நேரத்தில்

மொத்தமும் இருண்டுபோகும் என்பதை

நம்பமுடியவில்லை.