சிறுகதை
மணிமாலா மதியழகன்
'இப்படிப் படுத்தியெடுக்கும் அளவுக்கு கடினமான வேலை எதுவும் செய்யலையே. வீட்டைச் சுத்தம் செய்ததற்கா உடம்பு இப்படி வலிக்கும்? அந்தளவு பலவீனமாவா போயிட்டோம்?'
உள்ளுக்குள் அடுத்தடுத்து கேள்விகள் எழ உடனே படுக்கைக்குப் போகச் சொல்லி உடல் கட்டளையிட்டது. ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நினைப்புடன் படுக்கையில் சாய்ந்தேன்.
என்னுடைய எண்ணம் சிறிது நேரத்திலேயே பொய்த்துப்போய், எலும்பு இருக்கும் இடமெல்லாம் வலி குத்தாட்டம் போடுவதுபோலத் தோன்றியது.
தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவாகவே இருந்தது. வழக்கம்போல வீட்டைச் சுத்தப்படுத்தும் வேலைகளை முடித்துவிட்டால் பலகாரங்கள் செய்வதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாமென நினைத்துதான் முதல் வேலையாக சன்னல்களை மட்டும் துடைத்திருந்தேன்.
'அதுக்கா இப்படி விரல் மூட்டுகள்கூட வலியில் தெறிக்கும்?' நம்பவே முடியவில்லை.
'கொவிட் 19' நோய்த்தொற்றின் தாக்கத்தால் வழக்கமான உற்சாகத்தில் கொஞ்சம் குறைந்திருந்த கடந்தாண்டு தீபாவளி கொண்டாட்டத்தை இவ்வாண்டு சேர்த்து அனுபவித்துவிட வேண்டுமென நினைத்திருந்தேன்.
'ம்... எடுத்த எடுப்பில் ஆட்டம் முடிஞ்ச கதையாய் இருக்குதே' நோவு மனத்திலும் படரத் தொடங்கியது.
"ஐ லைக் யுவர் முறுக்கு," என்று சொல்லும் எதிர்வீட்டு அங்கிள் நினைவுக்கு வந்தார்.
இப்போதிருக்கும் வீட்டுக்கு குடி வந்த மாதத்திலேயே தீபாவளியும் வந்தது.
தீபாவளிக்கு மறுநாள், காரிடாரின் மூலையில் நின்று சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த அங்கிள் முறுக்கையும் சீடையையும் பற்றிச் சிலாகித்துப் பேசியது மனத்தில் அப்படியே அழுத்தமாய் இடம்பிடித்தது.
'இந்நிலையில் எப்படிப் பலகாரங்களைச் செய்வது?' யோசனை ஏற்பட்டது.
'வலி அணுஅணுவா படுத்தி எடுக்குது. தீபாவளிக்குப் பலகாரங்கள் செய்யும் நினைப்பு இப்ப தேவையா?' மனம் சாடியது.
சிறிது நேரத்தில் வலிக்குத் துணையாகக் காய்ச்சலும் சேர்ந்துகொள்ள 'பெனடால்' சமயத்துக்கு கைகொடுத்தது. அதுவும் சில மணி நேரத்திற்கு மட்டும்தான்.
என்னவோ குறை இருந்ததைப்போல உடம்பு வலி, காய்ச்சலுடன் குளிரும் நடுக்கமும் இணைந்தது. வெளியே மத்தியான வெயில் தகித்துக்கொண்டிருக்க, வீட்டில் போர்வைக்குள் சுருண்டிருந்தேன்.
"இப்படிக் காய்ச்சல், உடம்புவலின்னு இருந்தா 'டெங்கியா' இருக்கவும் வாய்ப்பிருக்கு. உடனே கிளினிக்கிற்கு கிளம்பிப் போ," எனக் கணவர் அலுவலகத்திலிருந்து போனடித்துக் கலவரத்தை ஏற்படுத்தினார்.
உடனே எழுந்து போய் இன்னொரு போர்வையை எடுத்து வந்து போர்த்திக்கொண்டு படுத்துவிட்டேன்.
நேரமாக ஆக, இது சாதாரண காய்ச்சல் இல்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.
'கணவர் சொல்வதுபோல டெங்கிக் காய்ச்சலா இருக்குமோ? அல்லது ஒருவேளை கொவிட்டா இருக்குமோ?' என்ற எண்ணம் தோன்றிய கணத்தில் உடம்பை உலுக்கிவிட்டாற்போலானது.
'நாம் அவ்வளவு பாதுகாப்பா இருக்கும்போது கொவிட் வருவதுக்கெல்லாம் வாய்ப்பில்லை. வழக்கத்தைவிடக் கூடுதலா வீட்டு வேலையைச் செய்ததுதான் என்னவோ பிரச்சினையைக் கொடுக்குது. இன்னொரு பெனடோலை போட்டா எல்லாம் சரியாகிடும்' மனத்தைத் தேற்றினேன்.
மீண்டும் மாத்திரையைப் போட்ட பிறகு காய்ச்சல் கட்டுக்குள் வந்தாலும் எழுந்து உட்கார முடியாமல் ஏதோ ஒன்று அழுத்திக்கொண்டிருந்தது.
"இன்னுமா வீட்டிலிருக்கே?" என்ற கேள்வி தொலைபேசியில் சூடாக வந்தது.
கூடவே, நாளுக்குநாள் அதிகரிக்கும் கொவிட் பற்றிய செய்திகள் விடாப்பிடியாக நினைவுக்கு வந்து இம்சித்ததில் இதற்கு மேலும் படுத்திருக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்.
அரசாங்கம் அனுப்பியிருந்த நான்கு 'ஏஆர்டி' சுயபரிசோதனைக் கருவிகள் அலமாரியில் இருந்தன.
'தேவையில்லாம ஒண்ணை வீணடிக்கிறேன்' என நினைத்துக்கொண்டே முதன்முறையாக கொவிட் சுய பரிசோதனையைச் செய்தேன்.
நொடிகள் சொட்டுச் சொட்டாக நிமிடங்களாக மாறியபோது, கருவியில் இரண்டு கோடுகள் தோன்றி என்னை உறைய வைத்தன.
'எனக்குக் கொவிட்டா?' எதுவுமே புரியவில்லை. சற்று முன்புவரை உடம்பை ஆட்கொண்டிருந்த வலி, காய்ச்சல், நடுக்கம் எல்லாவற்றையும் அச்சிறு கோடுகள் தெறித்து ஓட வைத்தன. கணவர் பணிபுரியும் நிறுவனத்தில் கிருமித்தொற்று அதிகமிருந்ததால், ஒருவேளை தனக்கு கொவிட் வந்தாலும் வரக்கூடுமென அவர்தான் சொல்லிக்கொண்டிருந்தார். 'எனக்கு இது எப்படி வந்திருக்கும்?'
யோசிக்கக்கூட முடியவில்லை. சுயபரிசோதனைக் கருவி காட்டுவது நூறு விழுக்காடு முடிவாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று படித்தது நினைவுக்கு வந்ததில் கொஞ்சம் அமைதியானேன்.
வீட்டுக்கு அருகிலிருந்த ராபிள்ஸ் மெடிக்கல்சில் எனக்கு முன்பாக இரண்டு பேர் மட்டுமே காத்திருந்தனர்.
முதல் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி லேசாக இருமினார்.
'இவருக்கும் கொவிட்டோ?' லேசாகத் தலையை உதறி துளிர்த்த நினைப்பை நீக்கினேன். இன்னும் சிறிது நேரத்தில் டாக்டரைப் பார்த்துவிடலாமென எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
சுயபரிசோதனை செய்ததில் கொவிட் பாசிட்டிவ் எனக் காட்டியது என்று நான் சொன்னதை டாக்டர் மிகச் சாதாரணமாகக் கேட்டுக்கொண்டார்.
இருமல் இருக்கிறதா என்று கேட்டதுடன் மணம் மற்றும் சுவையறிதலில் மாற்றம் ஏதும் உண்டா என்ற கேள்விக்கு இல்லையெனப் பதிலளித்தேன்.
"ஏஆர்டி, பிசிஆர் இவ்விரு டெஸ்ட்டையும் இப்போது செய்துகொள்ளுங்கள். எதற்கும் வீட்டுக்குப் போனவுடன் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். பரிசோதனையின் முடிவு அரை மணி நேரத்தில் உங்களது டிரேஸ் டுகெதர் செயலிக்கு அனுப்பப்படும். முழுமையாகத் தடுப்பூசி போட்டிருப்பதால், ஒருவேளை தொற்று உறுதியானாலும் ஒன்றும் பயப்படத் தேவையில்லை. பத்து நாளில் முற்றிலும் சரியாகிவிடும். கவலை வேண்டாம்" என மிகச் சாதாரணமாகச் சொன்னார். கிளினிக்கிற்கு வரும்போது இருந்த மனநிலை சற்று மாறியதுபோலத் தோன்றியது.
சில நிமிடக் காத்திருப்பிற்குப் பின் பரிசோதனை செய்யும் அறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. 'N 95 மாஸ்க்கும் ஃபேஸ் ஷீல்டும்' அணிந்திருந்தவர் அடுத்தடுத்து இரண்டு பரிசோதனைகளையும் செய்தார்.
முடிவுகள் பாதகமாக வந்தாலும் பயப்படத் தேவையில்லை என்றும் சொன்னார்.
ஓராண்டுக்கு முன்னர் பெயரைக் கேட்டாலே மிரள வைத்தது இன்று அற்பமானதைப்போலச் சொல்லப்படுகிறதே என்ற நினைவுடன் வெளியே வந்தேன்.
இரண்டு புதிய நோயாளிகள் காத்திருந்தனர். வரவேற்புப் பகுதியில் மருந்துகளைக் கொடுத்த பணியாளர் கட்டணம் பத்து வெள்ளி என்றார்.
ஏற்கெனவே உதடு பிரியாமல் பேசுகிறவர்கள், இதில் முகக் கவசம் வேறு. எனக்குதான் சரியாகக் கேட்கவில்லையோ என நினைத்து எவ்வளவு எனக் கேட்டேன்.
பத்து வெள்ளி மட்டும் என மீண்டும் சொன்னார்.
"கொவிட் அறிகுறியோடு எந்த கிளினிக்கிற்குச் சென்றாலும் கட்டணம் பத்து வெள்ளிதான்," என எப்போதோ கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது.
அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டே வந்தேன். வீட்டுக்கு அருகில் வந்தபோது, முகக்கவசத்தை முழங்கையில் மாட்டிக்கொண்டிருந்த எதிர்வீட்டு அங்கிள் கையில் குடையும் கழுத்தில் டிரேஸ் டுகெதர் டோக்கனுமாக மின்தூக்கியைவிட்டு வெளியானார்.
வீட்டுக்கு வெளியே வைத்துள்ள மாதுளை, கற்றாழை ஆகிய இரண்டே தொட்டிச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்குக்கூட அவ்வீட்டு ஆன்ட்டி முகக்கவசத்தோடுதான் வருவார். அங்கிள் அதற்கு நேர் மாறாகயிருந்தார்.
முகக் கவசம் அணியாததற்காக நகரில் சுற்றிவருகிற, கண்காணிப்புத் தூதுவர்களால் முதலில் எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டார்.
அதற்கடுத்து இருமுறை அபராதம் செலுத்திய பின்னும் ஆன்ட்டியின் வருத்தம் மட்டுமே கூடிக்கொண்டிருந்தது.
முன்பெல்லாம் வழக்கமாகக் காலை வேளைகளில் யோகா மேட்டுடன் அங்கிளும் ஆண்டியுமாகக் கிளம்பிவிடுவர்.
காலையில் மழை பெய்தால் உடற்பயிற்சி செய்ய மாலையில் போவதைப் பார்த்திருக்கிறேன்.
உடற்பயிற்சி என்றில்லை, எப்போது எங்கே போனாலும் இருவரும் சேர்ந்தேதான் போவார்கள். கொவிட் பிரச்சினை ஏற்பட்ட பிறகு வீட்டுக்குத் தேவையான பொருட்களை அதே வட்டாரத்தில் வசிக்கும் அவர்களது பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ கொண்டு வந்து கொடுத்தனர்.
வயதானவர்கள் வீட்டுக்குள் இருப்பது நல்லது என அரசாங்கம் சொல்ல ஆரம்பித்ததிலிருந்து அங்கிளின் அட்டகாசம் அதிகரித்தது.
ஆன்ட்டியின் வெளிப்புற நடவடிக்கைகளையும் சேர்த்து தான் செய்கிறேன் என்பதைப்போலச் சுற்ற ஆரம்பித்தார்.
தெரிந்தவர்களைப் பார்த்தால் "சௌகரியமா இருக்கீங்களா?" என்று கேட்பதைப்போல "தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா?" என்ற கேள்வி ஆறேழு மாதங்களுக்கு முன்வரை சர்வ சாதாரணமாக வலம் வந்துகொண்டிருந்தது.
"அங்கிள்தான் ஊசியே போட்டுக்கமாட்டேன்னு சொல்கிறார். ஊசி போட்டால்தான் வீட்டுக்கு வருவோம் எனப் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சொல்வதைக்கூடக் கேட்கமாட்டேங்கிறார். எங்களுக்குத் தேவையானவற்றை, என்னவோ இணையத்தில் வாங்கியதுபோல வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து வைத்துவிட்டு அழைப்பு மணியை அழுத்திச் சொல்லிவிட்டுப் போகும்போது மனம் வலிக்கிறது. அப்படிச் செய்தாலாவது இவர் வழிக்கு வருவார் என நினைக்கின்றனர். அவர்கள்மீதும் இவருக்கு கோபம் வந்ததுதான் கண்ட பலன்," என்று லேசாகக் கலங்கியவாறு ஆன்ட்டி சொன்னவை மனத்தில் எட்டிப் பார்த்தன.
'ஊசியும் போட்டுக்கொள்ளாமல், வீட்டிலும் தங்காமல் இந்த அங்கிள் இப்படிச் சுற்றுகிறாரே' என்ற நினைவோடு வீட்டுக்கு வந்தேன்.
கதவைத் திறந்ததும் கொஞ்ச நேரம் விலகியிருந்த பயம் ஓடி வந்து கவிந்துகொண்டது. 'பரிசோதனை முடிவு வரும்வரை காத்திருக்க வேண்டாம். கணவரும் பிள்ளைகளும் வீட்டுக்கு வருவதற்குள் அறைக்குள் சென்றுவிட வேண்டும்' என்ற தவிப்பு பயத்தை விரட்டிவிட்டு வேகமாகச் செயல்பட வைத்தது.
மின்கட்டண ரசீதைக் காட்டி என்டியுசியில் பெற்று வந்த முகக்கவசங்களில் பிரிக்கப்படாதிருந்த முகக்கவசம் ஒன்றை எடுத்து முதலில் மாட்டினேன். அடுத்த சில நிமிடங்களில், 'இவ்வளவு அழுத்தமாகவுள்ள முகக்கவசத்தை நாள் முழுக்க அணிந்திருப்பது எவ்வளவு சிரமம்?' என்று சுகாதாரத்துறையில் பணிபுரிபவர்களின் நிலையை சிறிதளவு உணர முடிந்தது.
கையுறைகளை எடுத்து மாட்டிக்கொண்டு கணவரது உடைகளில் பத்து நாட்களுக்குத் தேவைப்படுபவற்றை எடுத்து அறைக்கு வெளியே வைத்தேன்.
நூலகத்திலிருந்து இரவல் பெற்றிருந்த புத்தகங்களுடன், மடிக்கணினியும் அறைக்குள் போனது. இலவசமாகக் கிடைத்த 'ஆக்சி மீட்டரை' எடுத்துக்கொண்டு அறைக்குள் அடைக்கலமானேன்.
டிரேஸ் டுகெதர் செயலியில் தடுப்பூசி போட்டதை உறுதி செய்யும் டிக்கிற்குப் பக்கத்திலுள்ள பரிசோதனை முடிவு என்று இருக்கும் பகுதியில் சிவப்பு நிறத்தைக் காட்டி நோய் உறுதி செய்யப்பட்ட தகவலைத் தெரிவித்தது. எதிர்பார்த்திருந்த தகவல் என்றாலும் அதைப் பார்த்த கணத்தில் இரண்டு 'N 95' மாஸ்க்கை மாட்டியதைப்போல மூச்சடைத்தது. 'கவலைப்படுமளவுக்கு இது ஒண்ணும் பெரிய விஷயம் கிடையாது. கவனத்தை வேறு பக்கம் திருப்பு' எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
சில பக்கங்களைப் புரட்டுவதற்குள் தலைவலி, எடுத்த புத்தகத்தை மூட வைத்தது. 'பத்து நாள் இந்த அறைக்குள் இருக்க வேண்டும்' என்ற நினைவும் சேரக் களைப்பு நெஞ்சில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டது.
மறுநாள் மருத்துவர் கொடுத்திருந்த மாத்திரையின் உதவியால் காய்ச்சலும் உடம்பு வலியும் மட்டுப்பட்டது. என்னென்ன செய்ய வேண்டும் எவையெல்லாம் செய்யக் கூடாது போன்றவை குறித்த அறிக்கை குறுந்தகவல் வழியாகக் கைபேசிக்கு வந்தது. அதில் சில பக்கங்களைப் படிப்பதற்குள் தலையைச் சுற்றுவதுபோலிருக்க கண்களை மூடினேன்.
டிரேஸ் டுகெதர் டோக்கனை ஒப்படைக்க வேண்டும் என சமூக மன்றத்திலிருந்து ஒருவர் வந்திருப்பதாக கணவர் சொன்னார். அச்சாதனத்தை போட்டோ எடுத்துக்கொண்டு கொடுக்க வேண்டும். பத்து நாட்களுக்குப் பிறகு சமூக மன்றத்தில் அப்புகைப்படத்தைக் காட்டி டோக்கனைப் பெற்றுக்கொள்ளலாம் எனச் சொல்லப்பட்டது. 'எவ்வளவு எச்சரிக்கையா இருக்காங்க?!' அந்த நோவிலும் வியக்காமல் இருக்க முடியவில்லை.
கணவரது வேலையிடத்து விதிகளின்படி ஒவ்வொரு வாரமும் PCR பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். "எனக்கும் பாசிட்டிவ்" என்று மறுநாளே அறைக்குள் வந்தவரைப் பார்த்து என் இமைகள் சில நிமிடங்களுக்கு இயக்கத்தை நிறுத்தின. 'இப்படியொரு பொருத்தமா?' மனத்திற்குள் அந்நோயை சபிக்கத்தான் முடிந்தது. ஏஆர்டி பரிசோதனைக்குப் பிறகு பிள்ளைகளுக்குத் தொற்று ஏற்படவில்லை என்பது மிகவும் ஆறுதலாக இருந்தது.
பரிசோதனை முடிவு தவறோ எனச் சந்தேகிக்கும்படி கணவரது நடவடிக்கைகள் இருந்தன. பிள்ளைகளிடம் பேசுவதற்கு மட்டுமே நான் கைபேசியைப் பயன்படுத்தினேன். அவரோ உறவினர், நண்பர்களென எடுத்த கைபேசியை இறக்காமல் பேசிக்கொண்டிருந்தார். மற்ற நேரங்களில் மடிக்கணினி அவருக்கு கைகொடுத்தது. தனிமைப்படுத்திக்கொள்ளும் முன்பாக அறைக்குள் எடுத்து வைத்த புத்தகங்கள் என்னை ஏக்கத்துடன் பார்த்தன.
இரண்டு நாள் முடிவதற்குள் அறையைப் பார்க்கவே பிடிக்காமல் போனது. மூன்றாவது நாள் காய்ச்சல் விட்டுவிட, மனத்தில் சிறு நிம்மதி எட்டிப்பார்த்தது. அன்று மாலை இலேசாக ஆரம்பித்த இருமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி இரவுக்குள் பெருந்தொடராக உருவெடுத்தது. உடனே மருத்துவமனைக்குப் போவதுதான் நல்லது எனப் பிள்ளைகளும் கணவரும் சொன்னார்கள். கதவுக்கு வெளியில் இருக்கும் பிள்ளைகளுக்கும் கூடவேயிருக்கும் கணவருக்கும் பதில் சொல்வதற்குள் போதும் போதுமென்றானது. ஒருவழியாகக் காலையில் போவதாகச் சொல்லி அவர்கள் வாயை அடைத்தேன். அப்போது, எதிர் வீட்டு அங்கிளை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றதை பிள்ளைகள் சொல்லினர்.
எனக்குத் தொற்று உறுதியான சில நாட்களுக்கு முன் நானும் கணவருமாக வீட்டுக்கு வெளியே வைத்திருந்த தொட்டிச் செடிகளைச் சீரமைக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தோம். அப்போது எதிர்வீட்டு அங்கிள், "தடுப்பூசின்னு சொன்னாங்க... அப்புறம் இரண்டாவது ஊசி போடணும்னு சொன்னாங்க. இப்பப் பார்த்தா மூணாவது ஊசி போட்டுக்கிட்டாதான் கூடுதல் பாதுகாப்புன்னு சொல்றாங்க. தடுப்பூசியைப் போட்டபிறகுதான் நிறைய பேர் இந்நோயால் பாதிக்கப்படுவதாகச் செய்தி வருது. ஊசி போட்டுக்காதவங்க கடைத்தொகுதிக்கு வரக்கூடாதுன்னு சட்டம் போட்டாங்க. இப்ப என்னன்னா ஊசியைப் போடாதவங்களுக்கு நோய்த்தொற்று வந்தா மருத்துவ செலவை அவங்களே பார்த்துக்கணும்னு சொல்றாங்க. ம்... இவங்க என்னென்ன சட்ட திட்டங்களைப் போட்டாலும் ஊசி போட்டுக்கிற முட்டாள்தனத்தை மட்டும் நான் செய்யமாட்டேனே," என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
அவர் சொல்வது சரியில்லையென நாங்கள் சொன்னபோதும் தனது கொள்கையில் உறுதியாக இருந்தார்.
முகக் கவசம் அணியாமல் இருப்பவரிடம் மேற்கொண்டு வாதிக்க விரும்பாமல் மீதி வேலையைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என வீட்டுக்குள் வந்துவிட்டோம்.
'முழுமையாகத் தடுப்பூசி போட்ட நம்ம நிலைமையே இப்படியிருக்கு. அங்கிளைப்போல ஊசியைப் போட்டுக்கொள்ளாதவர்களுக்கெல்லாம் இத்தொற்று ஏற்பட்டால்...' என்ற நினைவே வலியைத் தந்தது.
சில துளிகள் கோடாலித் தைலம் போட்டு நீராவி பிடித்த ஒரு மணி நேரத்திற்கு சுவாசப்பாதையைத் துடைத்து வைத்ததைப்போலத் தெளிவானது. அரை மணி நேரத்தில் மீண்டும் இருமல் தலையெடுத்தது.
இருமல் மருந்தைக் குடித்த சிறிது நேரத்திற்குப் பிறகு இருமல் குறைந்திருந்தது. இதற்குப் போய் இவ்வளவு பயந்தோமே என்றுகூடத் தோன்றியது. எல்லாம் கொஞ்ச நேரம் மட்டும்தான்.
சிறிது நேரத்தில் மீண்டும் காகிதங்களை எரித்த காற்றைச் சுவாசிக்கும்போது ஏற்படும் கமறலைப்போலத் தோன்றிய கணமே இருமல் பிடித்துக்கொள்ளும் (கொல்லும்).
இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஆரம்பித்த இருமல் போனால் போகிறதென நடுவில் கொஞ்சநேரம் மட்டுமே விட்டிருந்தது. ஆக மொத்தத்தில், இந்தக் கணம் இருக்கும் உடல்நிலை அடுத்த கணத்தில் எப்படியும் மாறலாம் என்பதை கொவிட் கிருமி தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.
அதற்கு மேலும் என் பேச்சைக் கேட்க விரும்பாத கணவர் ஆம்புலன்சை அழைக்கும் முடிவுக்கு வந்தார்.
காணொளி வழியாக மருத்துவரைக் காணலாம் என சுகாதாரத்துறையின் அறிக்கையில் படித்தது நினைவுக்கு வர, இதையும் முயற்சி செய்து பார்ப்போம் என்றேன். உன்னைத் திருத்தமுடியாது என்பதைப்போலப் பார்த்தார்.
சுகாதாரத்துறை கொடுத்திருந்த 'லிங்கில்' பதிவு செய்த இரண்டாவது நிமிடத்தில் வாட்சப் வீடியோ காலில் அழைப்பு வந்தது.
டாக்டர், முதலில் ஆக்சிஜன் அளவு கட்டுக்குள் இருப்பதைக் கேட்டு உறுதி செய்தார். மருந்துகளை அனுப்புவதாகச் சொன்னதுடன் விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையையும் கொடுத்தார்.
மூன்றே மணி நேரத்தில் மருந்துகள் வீட்டுக்கு வந்தன. அடுத்து வந்த நாட்களில் இருமல் சிறிது சிறிதாகக் குறைந்தது.
இதற்கிடையில் எதிர்வீட்டு அங்கிளைப்பற்றி பிள்ளைகள் சொன்ன செய்தி மனப்பாரத்தை உயர்த்தியது.
எதிர்பார்த்துக் காத்திருந்த பத்தாவது நாள்.
இன்றோடு அறைவாசம் முடிந்தது என்ற எண்ணம் இமைகளை இணையவிடவில்லை.
டிரேஸ்டுகெதர் செயலியில் அச்சுறுத்தும்படி காணப்பட்ட சிவப்பு கட்டம் இரவு பன்னிரண்டு மணிக்கு, கண்களுக்கு குளுமை அளிப்பதுபோலப் பச்சையாக மாறியதில் புது மனுசியாக ஆனதைப்போலிருந்தது.
மறுநாள், வீட்டின் கதவை மெல்லத் திறந்தேன். அதற்காகவே காத்திருந்ததைப்போல முகத்தில் மோதிய காற்று மலை மேல் நிற்பதுபோன்ற உணர்வைத் தந்தது.
செம்பருத்திச் செடியில் ஒரே கொத்தில் பூத்திருந்த மூன்று இளஞ்சிவப்பு மலர்கள் தலையசைத்து என்னை வரவேற்றன. கனத்திருந்த மனம் எதையும் அனுபவிக்கவிடவில்லை.
காலை நேரத்தில் கமழும் ஊதுபத்தியின் மணம் இல்லாது போனதை உள்ளம் ஏற்க மறுத்தது.
எதிர் வீட்டுக்கு முன்புறம் சிறு மேடையின்மீது வைக்கப்பட்டிருந்த அம்மனைப்போலக் காட்சியளிக்கும் சாமி சிலை சிவப்புத் துணியால் மூடப்பட்டிருந்தது.
அவர்களது வீட்டுக் கதவிலும் சிவப்புத் தாள் ஒட்டப்பட்டிருந்தது. பார்த்தவுடன் பளீரெனச் சிரிக்கும் அங்கிள் நினைவில் வந்தார். பாழும் கிருமி. கொரோனா வதம் காண மனம் ஏங்கியது.

