யந்திரம்

சிறுகதை

ஜெயகாந்தன்

முத்­தா­யியை உங்­க­ளுக்­குத் தெரிந்­தி­ருக்க நியா­ய­மில்லை.

ஏனென்­றால் நீங்­கள் எங்­கள் கால­னி­யில் வாழ்­ப­வ­ரல்ல; வாழ்ந்­தி­ருந்­தா­லும், அல்­லது வாழ்ந்­து­கொண்­டி­ருந்­தா­லும் உங்­க­ளுக்கு அவ­ளைத் தெரிந்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

உங்­க­ளுக்கு ஐந்து வய­துக்­கு­மேல் பத்து வய­துக்­குள் ஒரு மகன் அல்­லது மக­ளி­ருந்­தால் அந்­தப் பிஞ்சு மனம் அவ­ளைத் தெரிந்து வைத்­தி­ருக்­கும்.

நீ தெரிந்­து­வைத்­தி­ருக்­கி­றாயே என்­கி­றீர்­களா? அது வேறு விஷ­யம். எனக்­குக் கூடு­விட்­டுக் கூடு­பா­யத் தெரி­யும். அதன்­படி, நான் குழந்தை, பெண், தாய், கிழ­வன், கிழவி, மிரு­கம், பறவை, அசு­ரன், தேவன்'...

அது­போ­கட்­டும்? அப்­படி முத்­தாயி என்ன தேவேந்­தி­ரப் பெண்ணா என்று கேட்­கா­தீர்­கள்.

அவளை என்­ன­வென்று சொல்­வேன்' பாச­மும் கனி­வும் அன்­பும் ஆத­ர­வும் மிக்க ஒரு பாட்டி என்று கூற­லாமா?

அல்ல; அவள் ஒரு யந்­தி­ரம்.

எங்­கள் கால­னி­யில் முப்­பது வீடு­க­ளுக்­குக் குறை­வில்லை. சரா­சரி கணக்­கெ­டுத்­தால் அவ­ளது துணை­யு­டன் பள்ளி செல்­ல­வேண்­டிய பரு­வத்­தில் உள்ள பிள்­ளை­கள் வீட்­டுக்கு ஒன்று தேறும்.

இது என் மான­சி­கக் கணிப்­புத்­தான். தவ­றாக இட­மில்லை. ஏனென்­றால் குழந்­தை­களை என்­னைப்­போல் கவ­னிக்க யாரா­லும் முடி­யாது.... --எனக்­குத்­தான் வேறு வேலை'... நாளெல்­லாம் வீட்டு வராந்­தா­வில் நின்­று­கொண்டு--அங்கு நின்று பார்த்­தால் எங்­கள் கால­னி­யில் இருக்­கும் எல்லா வீடு­க­ளை­யும் கவ­னிக்க முடி­யும்...

காய்­க­றிக்­காரி­களை, பிச்­சைக்­கா­ரர்­களை, பள்ளி செல்­லும் மாணவ மாண­வி­களை, சமயா சம­யங்­களில் குறிப்­பா­கப் பெண்­களைக் கவ­னித்­த­வாறு நிற்­பது எனக்கு ஓர் அரு­மை­யான பொழுது­போக்கு. சிலர் சில சம­யங்­களில் என்­னைப் பார்ப்­பார்­கள்... நானும் பார்ப்­பேன்.

பார்த்­துப் பார்த்­துப் பழ­கிய சிநே­கி­தி­கள் எனக்கு ஏரா­ளம். பேசவோ பழ­கவோ நான் விரும்­பி­ய­தில்லை. அவர்­களில் சில­ரா­வது விரும்­பி­னார்­களா என்று எனக்­குத் தெரி­யாது.

ஆனால் நிச்­ச­ய­மாக அந்த வட்­டா­ரத்­தில் நட­மா­டும் பெண்­கள் அனை­வ­ருக்­கும் என்­னைத் தெரி­யும். எனக்­கும் அவர்­கள் எல்­லோ­ரை­யும் தெரி­யும்.

ஆனால்?...

நான் பார்த்­தும் என்­னைப் பார்க்­காத, நான் ஒரு­வன் அங்கு நின்று விழி வட்­டம் போடு­வதை அறி­யாத ஒரு பிறவி அங்கு உண்டு என்­றால், அறு­ப­தை­யும் கடந்த அந்த முது­கி­ழவி முத்­தாயி ஒருத்­தி­தான்.

நான் அந்­தக் கால­னிக்­குக் குடி­வந்த ஏழு ஆண்­டு­க­ளாய் முத்­தா­யியை அறி­வேன்.

பஞ்­சு­போல் நரைத்த சிகை; பழுத்து வதங்­கிய சரு­மம்; குழி விழுந்த தொங்­கிய கன்­னங்­கள்; இன்­னும் பற்­கள் இருக்­கின்­றன; நல்ல உய­ர­மா­ன­வ­ளாய் இருந்­தி­ருக்க வேண்­டும்.

--இப்­பொ­ழுது, வாழ்ந்த வாழ்­வின் சுமை­யால் வளைந்து போயி­ருக்­கி­றாள்.

அவள் கண்­கள்...

அவற்­றைத்­தான் நான் பார்த்­த­தில்­லையே...

எங்­கள் கால­னி­யின் நடுவே இருக்­கும் மணிக்­கூண்டு காலை ஒன்­பது மணிக்கு ஒலிக்க ஆரம்­பிக்­கும்­போது அவள் வரு­வாள். அவள் நடை­யில் சதா ஒரு வேகம்; அவ­ச­ரம்.

--வாழ்­வைக் கடக்­கப் பறந்­தோ­டும் அவ­தியா, என்ன...? அவ­ளது இயல்பே அப்­ப­டித்­தான்.

--வாழ்வு நடக்க நடக்க மாளா­தது. ஏனென்­றால் தனிப்­பட்ட ஒரு­வ­ரு­டை­யதா வாழ்க்கை? அது மனித சமூ­கத்­தின் ஆதி அந்­த­மற்ற சரிதை.

அதைப்­பற்­றி­யெல்­லாம் அவள் சிந்­திப்­ப­தில்லை... ஏன், நேர­மில்­லையா? நேரம் உள்­ள­வர்­க­ளெல்­லாம் சிந்­திக்க முடி­யுமா? சிந்­தனை, அதன் முழு அர்த்­தத்­தோ­டும் சொல்­கி­றேன்... அது விளக்க முடி­யா­தது... சிந்­தனை ஒரு வரப் பிர­சா­தம். சிந்­த­னை­யின் ஆதி­யும் அந்­த­மும்... சிந்­திக்­கச் சிந்­திக்க வியப்­பா­கத்­தான் இருக்­கிறது.

அவ­ளைப் பார்த்­தால் எதைப்­பற்­றி­யும் சிந்­திப்­ப­வ­ளா­கத் தெரி­ய­வில்லை.

என்ன சொன்­னேன் ...ஆமாம்; முத்­தா­யி­யைப்­பற்றி... அவள் தின­சரி காலை ஒன்­பது மணிக்கு வரு­வாள். அவ­ச­ரம் அவ­ச­ர­மாக வரு­வாள். வரும்­போதே...

"பாலா...பாலா... நாழி­யாச்சே....பொறப்­ப­ட­லியா..." என்ற குரல் நாலு வீடு­க­ளுக்­குக் கேட்­கும். பாலா என்ற இளஞ்சிறு­வன் அந்த வீட்­டி­லி­ருந்து தோளில் தொங்­கும் பையு­டன் அவ­ச­ரம் அவ­ச­ர­மாக ஒரு காலில் காலுறையோடும் மற்­றொரு காலில் ஷூஸுமாக நிற்­பான்...அதை­யெல்­லாம் அவள் கவ­னிக்­க­மாட்­டாள்.

ஒரு காலில் காலுறையோடும் ஒரு கையில் ஷூஸுமாக அவ­னைத் தூக்­கிக்­கொண்டு, அதை சரி­யா­கவோ சரி­யில்­லா­மலோ அவன் காலில் மாட்­டி­ய­வாறே, அடுத்த வீட்டு வாச­லில் நின்று, "சங்­கர்... சங்­கர்" என்று அவள் கூவு­வாள்.

சங்­கர் அப்­பொ­ழு­து­தான் சாப்­பிட்­டுக்­கொண்­டி­ருப்­பான்.

"சீக்­கி­ரம்... சீக்­கி­ரம்" என்று முத்­தாயி குரல் கொடுப்­பாள். சாப்­பிட்ட வாயைக் கழு­வா­மல்­கூட அவன் ஓடி வரு­வான். அவ­னை­யும் அழைத்­துக்­கொண்டு அடுத்த வீட்­டுக்­குச் சென்று, "கௌரி...ராமு..." என்று அவள் கூச்­ச­லி­டு­வாள்.

இப்­ப­டி­யாக இரு­பது முப்­பது பிள்­ளை­கள் புடை­சூழ அரை­மணி நேரத்­தில் கால­னி­யைக் காலி செய்து­விட்­டுப் போய்­வி­டு­வாள் முத்­தாயி.

அந்­தச் சில நிமி­ஷங்­களில், அந்­தத் தெரு­வில் வானத்து மோகி­னியே கீழி­றங்கி வந்­தா­லும் என் பார்வை அவள் பக்­கம் திரும்­பாது.

குழந்­தை­கள், ஆம்; அந்­தக் கொத்­து­ம­லர்ப் பூங்­கொ­டி­கள் கும்­பல் கும்­ப­லா­கப் பவனி செல்­வ­தைப் பார்த்­துக்­கொண்டே நிற்­கும்­போது துன்­பத்­தி­லும் விரக்­தி­யி­லும் காய்ப்­பே­றிய எனது நெஞ்­சத்­தில் வாழ்­வின்­மீது நம்­பிக்கை சுரக்­கும். நெஞ்­சத்­தில் காய்த்­துப்­போன திரடு­கள் இள­கிக் கனிவு பெறும்.

ஆமாம்: குழந்­தை­கள்' அவற்­றின் அங்­கங்­களை, பவள அத­ரங்­களை, பிர­பஞ்ச சிருஷ்­டி­யின் ரக­சி­யங்­க­ளை­யெல்­லாம், கவி­ஞ­னின் கற்­ப­னை­க­ளை­யெல்­லாம் தோற்­றோ­டச் செய்­யும் மானி­டச் சாதி­யின் பிஞ்­சுப் பரு­வக் கன­வு­கள் மின்­னும் அந்­தக் குழந்­தைக் கண்­களை நீங்­கள் கூர்ந்து பார்த்­தி­ருக்­கி­றீர்­களா?

நீங்­கள் பேசும் அறி­வாற்­ற­லும் பிர­தா­பங்­களும் அந்­தக் கண்­ணொ­ளி­யின் முன்னே மண்­டி­யி­டத்­தான் வேண்­டும்.

இல்­லையா?... இல்­லா­விட்­டால்...' 'அட சீ நீ என்ன மனி­தன்'...

-- எனக்கு அந்த முத்­தா­யி­யின்­மீது அளவு கடந்த வெறுப்பு. 'ஆம்; வெறுப்­புத்­தான். அவள் என்ன மனு­ஷியா?...பெண்ணா?...தாயா?...சே யந்­தி­ரம். அந்­தக் குழந்­தை­க­ளின் முகத்தை ஒரு­முறை அவள் பார்த்­தி­ருப்­பாளா? கனிவு ததும்ப ஒரு­முறை பேசி இருப்­பாளா? சற்றே கனி­வு­டன் நய­மாக அழைத்­துச் செல்­கி­றாளா? அந்­தக் குழந்­தை­களை, ஆட்டு மந்­தை­போல் ஓட்­டிச் செல்­கி­றாள். அதே மாதிரி கொண்டு­வந்து வீடு சேர்க்­கி­றாள். அவர்­களை அலங்­கோ­ல­மாக, அவர்­க­ளின் அழ­குத் தோற்­றங்­களை எல்­லாம் கெடுத்து இழுத்­துக்­கொண்டு போகி­றாளே...

இவளை நம்பி, இவள் குரல் கேட்­ட­வு­டன் தங்­க­ளது குலக் கொழுந்­து­களை அலங்க மலங்­கக் கூட்­டி­ய­னுப்­பு­கி­றார்­களே, என்ன பெற்­றோர்­கள்.'

ஆமாம்; முத்­தாயி ஒரு யந்­தி­ரம். அந்த யந்­தி­ரம் காலை ஒன்­பது மணிக்­குப் பிள்­ளை­களை அள்­ளிக்­கொண்டு போகும்; மாலை நாலரை மணிக்கு அத்­தனை குழந்­தை­க­ளை­யும் கொண்டு வந்து கொட்­டும்'

எங்­கள் கால­னிக்கு அடுத்த தெரு­வில் இருக்­கும் 'கான்­வென்'டில் அதற்­காக அந்த யந்­தி­ரத்­திற்­குப் பதி­னைந்து ரூபாய் மாதச் சம்­ப­ளம் கொடுக்­கி­றார்­கள்.

ஆயாள் என்ற பட்­டம் பெற்ற அந்த யந்­தி­ரம்­தான் முத்­தாயி.

அன்று வழக்­கம்­போல் நான் வராந்­தா­வில் நின்­றி­ருந்­தேன். அதோ, ஒரு வான­வில் வரு­கிறது. அது ஒன்­ப­தாம் நம்­பர் வீட்­டி­லி­ருந்து வரு­கிறது...

(நான் அந்­தக் கால­னி­யில் உள்ள கும­ரி­க­ளுக்­கெல்­லாம் மான­சீ­க­மா­கப் பெயர்­கள் வைத்­தி­ருக்­கி­றேன். இவள் எப்­பொ­ழு­தும் வர்ண பேதங்­கள் நிறைந்த ஆடை­க­ளையே அணி­வாள்.)

என்­னைக் கடந்து செல்­லும்­போது அவள் நடை­யில் செயற்­கை­யாக வரு­வித்­துக்­கொண்ட ஒரு வேக­மும் 'பட­பட'ப்பும்'

என்னை நெருங்க நெருங்க அவள் தலை தாழ்ந்து தாழ்ந்து குனிந்துபோகும்.

அவளை எட்­டிப் பிடிக்க வரு­வது­போல் வரு­கி­றாளே, இவள் தான் 'லைட் ஐஸ்'.

--இவள் என்­னைப் பார்க்­காத மாதி­ரியே மார்­பில் அடுக்­கிய புத்­த­கக் குவி­ய­லைப் பார்த்­த­மா­திரி வரு­வாள். அருகே வந்­த­வு­டன் நேருக்கு நேராய் ஒரு­முறை விழி­களை உயர்த்­திப் 'பளிச்' சென்ற பார்­வை­யால் தாக்கி மீண்­டும் விழி­க­ளைத் தாழ்த்­திக்கொண்டு போவாள்...

இரு­ளில், சாலை­யில் வரும் ஒரு கார்... 'திடும்' என ஒரு சிறு பள்­ளத்­தில் இறங்கி ஏறி­னால் எப்­படி நம்­மீது காரின் வௌிச்சம் விழுந்து தாழும். அதுபோன்ற பார்வை... அத்­தனை பெரிய கண்­கள்'.

அதோ, அந்த எதிர்­வீட்­டுச் சன்­ன­லில் கையி­லொரு பத்­தி­ரி­கை­யுடன் படிக்­கும் பாவ­னை­யில் அமர்ந்து, என்­னையே பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றதே ஓர் அக­லக்­கண். அது­தான் 'போக்­கஸ் லைட்'.

நடன அரங்­கில் ஆடு­ப­வ­ளைச் சுற்றி விழுந்­து­கொண்டு இருக்­குமே ஓர் ஔி வட்­டம், அது­போல இவ­ளு­டைய கண்­கள் என்­னையே துரத்­திக் கொண்­டி­ருக்­கும்.

"பாலா...பாலா... நாழி­யாச்சு. பொறப்­ப­ட­லியா?..." என்ற முத்­தாயி­யின் வறண்ட குரல் கேட்­கிறது.இனி­மேல் நான் ஏன் இந்­தப் பெண்­க­ளைப் பார்க்­கப்போகி­றேன்?

இதோ, இப்­பொ­ழுது ஓடி வரப்­போ­கி­றான் அந்த இளம் மதலை.

எனது பார்வை முத்­தாயி நின்­றி­ருக்­கும் வீட்டு வாச­லையே நோக்கி நிற்­கிறது.

"பாலா, பாலா..."

--உள்­ளி­ருந்து பால­னின் தாய் வரு­கி­றாள்.

"ஆயா, அவ­னுக்கு உடம்பு சரி­யில்லை; இன்­னிக்கு வரமாட்­டான்..."

அவள் சொல்லி முடிக்­க­வில்லை; "சங்­கர்...சங்­கர்..." என்று கூப்­பிட்­ட­வாறு அடுத்த வீட்­டுக்­குப் போய்­விட்­டாள்.

--சீ, இவள் என்ன ஜன்­மமோ' 'குழந்­தைக்கு என்ன' என்று உள்ளே போய்ப் பார்க்­க­மாட்­டாளோ? பார்க்க வேண்­டாம், 'உடம்­புக்கு என்ன?' என்று கேட்­க­வா­வது வேண்­டாமோ?

'ஐயோ பாவம்' பால­னுக்கு உடம்­புக்கு என்­னவோ' என்று என் மனம் பதைத்­தது.

முத்­தாயி வழக்­கம்­போல் மற்­ற பிள்­ளை­களை இழுத்­துக்கொண்டு போனாள்.

மறு­நாள்...

முத்­தாயி வந்­தாள்.

"பாலா.. பாலா..."

"இன்­னிக்கு வர­மாட்­டான்..."

முத்­தா­யி­யின் குரல் அடுத்த வீட்­டில் ஒலிக்­கிறது.

"சங்­கர்... நாழி­யாச்சு..."

"மணி'"

"கௌரி... ராமு..."

முத்­தாயி போய்­விட்­டாள்.

மூன்­றாம் நாள்.

முத்­தாயி வந்­தாள்...

"பாலா... பாலா..."

"இன்­னிக்­கும் ஒடம்பு ரொம்ப மோச­மாக இருக்கு ஆயா'..."

--பெற்­ற­வ­ளின் குரல் அடைத்­தது.

"சங்­கர்... பொறப்­ப­ட­லியா?..."

"மணி..."

"கௌரி, ராமு.. உம், சீக்­கி­ரம்..."

--அந்த யந்­தி­ரம் நகர்ந்­தது.

இப்­ப­டியே, நான்கு, ஐந்து, ஆறு நாட்­களும் ஓடின...

ஆறாம் நாள் இரவு. நான் ஒரு கனவு கண்டேன். பொழு­தெல்­லாம் மழை பெய்­து­கொண்டே இருக்­கிறது.

மழை­யென்­றால்... பிர­ளய கால வருண வர்­ஷம்'.

வீதி­யெல்­லாம் வெள்­ளத்­தின் நீர் அலை­கள் சுருண்டு மடிந்து புரள்­கின்­றன.

அந்த வெள்­ளத்­தில் தலை­வி­ரி­கோ­ல­மாய் முத்­தாயி வரு­கி­றாள். முத்­தா­யி­யின் கோலம் முது­மைக் கோல­மாக இல்லை. நடுத்­தர வய­துள்ள ஸ்தி­ரீ­யாக முத்­தாயி வரு­கி­றாள்...

"ராசா...ராசா..." என்று திக்­கு­க­ளை­யெல்­லாம் நோக்­கிக் கத­று­கிறாள். வெற்­றி­டங்­களையெல்­லாம் நோக்­கிப் புலம்­பு­கி­றாள்...

"ராசா...ராசா..." என்று வாயி­லும் வயிற்­றி­லும் அடித்­துக்­கொண்டு நீரில் விழுந்து புரண்டு எங்கோ ஓடு­கி­றாள்.

வெள்­ளம் சுருண்டு புரண்டு அலை­கொ­ழித்து மேலே­றிச் சீறிப் பெரு­கு­கிறது'

அதோ. முத்­தாயி ஓடு­கி­றாள்...இடுப்­ப­ளவு நீர் மார்­ப­ளவு உயர்­கிறது... கைகளை அகட்டி வீசிப் போட்­டுப் பாய்ந்து பாய்ந்து செல்­கி­றாள்... வெள்­ளப் பெருக்­கில் மூழ்கி மூழ்­கிப் போகி­றாள்...

சற்று நேரம் ஒரே நிசப்­தம்...பெருகி வந்த வெள்­ளம், மாயம் போல், இந்­தி­ர­மா­சா­லம்­போல் வடிந்து மறை­கின்­றது.

நீரோடி ஈரம் பரந்து வரி­வ­ரி­யாய், அலை அலை­யாய் வெள்­ளத்­தின் சுவடு படிந்த மணல் வௌியில், ஓர் இளம் சிறு­வனை மார்­புற அணைத்­த­வாறு பிலாக்­க­ணம் வைத்து அழு­து­கொண்­டி­ருக்­கி­றாள் முத்­தாயி...

அவள் மடி­யில் கிடக்­கும் சிறு­வன் அடுத்­த­வீட்­டுப் பால­னைப்­போலவே இருக்­கி­றான்... நீரில் விறைத்த அச்­சி­று­வ­னின் கையில் ஒரு தூண்­டில்' ஆமாம்; அவன் மீன் பிடிக்­கச் சென்­றா­னாம்.

"தண்­ணி­யிலே போவாதே என்

தங்­கத்­தொரெ ராசாவே

பன்­னிப் பன்­னிச் சொன்­னேனே இந்­தப் பாவி சொல்­லக் கேட்­டாயோ... ஓ...ஓ..." என்ற முத்­தா­யி­யின் ஓலம் வயிற்­றைக் கலக்­கி­யது...

திடுக்­கிட்டு விழித்­தேன். கனவு கலைந்­தது... எழுந்­தேன்; உடல் நடுங்­கி­யது. சன்­ன­லைத் திறந்­தேன்...

இருள் வில­காத விடிவு நேரம்...

பாலன் வீட்டு வாச­லில் முக­மறி­யாத மனி­தர் பலர் வீற்­றி­ருக்­கக் கண்­டேன்...

தெரு­வெல்­லாம் ஏதோ ஒரு சோக இருள் கப்­பிக் கவிந்து அழு­து­கொண்­டி­ருந்­தது.

"பல் விளக்­கப் போனாயோ

பல் விளக்­கப் போக­யிலே--என் பாலாவே,

பழ­வப்­படி சறுக்­கிச்சோ

பழ­வப்­படி சறுக்­கை­யிலே

பாவி எமன் வந்­தானோ?...

மொகம் கழு­வப் போனாயோ

மொகம் கழு­வப் போக­யிலே--என் பாலாவே

முத்­துப்­படி சறுக்­கிச்சோ

முத்­துப்­படி சறுக்­கை­யிலே

மூர்க்க எமன் வந்­தானோ?"

என்ற பால­னின் தாயின் குரல் என் நெஞ்சை அறைந்து உலுக்­கி­யது...

எனக்கு ஒன்­றும் புரி­ய­வில்லை...இது­வும் கன­வாக இருக்­கக்­கூடாதா என்று மனம் தவித்­தது.

மண்­டை­யைச் சன்­ன­லில் மோதி­னேன்... வலித்­தது. ஆம்; இது கன­வல்ல.

"ஐயோ' பாலா'..."

எங்­கள் கால­னி­யின் நடுவே உள்ள மணிக்­கூண்டு ஒன்­பது முறை அடித்து ஓய்ந்­தது.

தெரு­வில் ஜனங்­கள் நட­மா­டிக்­கொண்­டி­ருந்­த­னர். மயா­னச் சங்­கின் ஓல­மும், சேகண்­டி­யின் கால நாடி­யும் சங்­க­மித்­துக் குழம்பி அடங்­கின.

பாலன் வீட்­டில் மனி­தர்­கள் நிறைந்­தி­ருந்­த­னர்.

ஆம்; சாவு விரித்த வலை­யிலே நடந்­த­வாறே, வாழ்­கி­றோம் என்று நினைத்­துக்­கொண்­டி­ருக்­கும் ஜனங்­கள்.

முத்­தாயி வந்­தாள். ...பாலன் வீட்டு வாச­லில் வந்து நின்­றாள்.

--'பாலா' என்று கூப்­பி­ட­வில்லை.

--அசை­யா­மல் வெறித்த பார்­வை­யு­டன் நின்­றி­ருந்­தாள்'

முத்­தா­யி­யைக் கண்­ட­வு­டன் "ஐயோ... ஆயா' ...பாலா போயிட்­டானே'... நம்ம பாலா போயிட்­டாண்டி'..."...அல­றி­ய­வாறு பூமி­யில் விழுந்து புரண்டு கத­றி­னாள் பால­னின் தாய்.

முத்­தாயி நின்­று­கொண்டே இருந்­தாள்.

சித்­த­வௌி­யில் எத்­தனை மேகங்­கள் கவிந்­த­னவோ?... கண்­களில் கண்­ணீர் மழை பெரு­கிக்­கொண்டே இருந்­தது.

அவள் ஒரு வார்த்தை கூடப் பேசா­மல் மர­மாய் நின்­றாள்;

நின்று கொண்டே இருந்­தாள்.

மழை­பெய்து கொண்­டி­ருந்­தது...கொட்­டு­கின்ற மழை­யில் முத்­தாயி நின்­று­கொண்­டி­ருந்­தாள்.

நேரம் ஓடிக்­கொண்டே இருந்­தது. நான் குமு­றும் இத­யத்­து­டன் உள்ளே போய்ப் படுக்­கை­யில் வீழ்ந்­தேன். பாலா­வுக்­காக, அவன் மர­ணத்­திற்­காக வருந்­தி­னேன். எனக்கு அன்று முழு­வ­தும் ஒன்­றும் ஓட­வில்லை.

ஒரு சம­யம் அழுகை பல­மாக ஒலித்­ததை உள்­ளி­ருந்­த­வாறே கேட்­டேன்...

ஆம்; அவ­னைத் தூக்­கிக்­கொண்டு போகி­றார்­கள்... நான் அதைக் காண விரும்­ப­வில்லை...

வெகு­நே­ரம் கழித்­துச் சன்­னல் வழி­யாக வௌியே எட்­டிப் பார்த்­தேன். முத்­தாயி நின்­று­கொண்­டி­ருந்­தாள்.

அவளை யாருமே கவ­னிக்­க­வில்லை; நான்­தான் கவ­னித்­தேன். அது அவ­ளுக்கு எப்­ப­டித் தெரிந்­ததோ' 'சடக்'கென்று அவள் தலை­நி­மிர்ந்து என்­னைப் பார்த்­தாள்.

அவள் கண்­களை நான் அன்று­தான் பார்த்­தேன்.

குழந்­தை­யின் கண்­கள், கண்­ணீர் நிரம்­பித் தளும்­பிற்று.

"பாலா..." என்று என் உத­டு­கள் முணு­மு­ணுத்­ததை அவள் எப்­ப­டித் தெரிந்­து­கொண்­டாளோ?

"பாலா மீன் பிடிக்­கப் போயி­ருக்­கான்," என்று என்­னைப் பார்த்­துக் கூறி­னாள்; நான் திடுக்­கிட்­டேன். அந்த வார்த்­தை­யைக் கூறி­விட்டு அவள் அடுத்த வீட்டை நோக்கி நடந்­தாள்.

"சங்­கர்... சங்­கர்... நாழி­யா­யி­டுச்சி; பொறப்­ப­ட­லியா?" என்ற அவ­ளது குர­லோசை கேட்­கும்­போது காலனி மணிக்­கூண்டு நான்கு முறை ஒலித்­தது...

ஆம்? மாலை மணி நான்கு'

எனக்கு ஒன்­றுமே புரி­ய­வில்லை... அந்த மணிக் கூண்­டின் மணி­யோசை மட்­டும் நன்­றா­கப் புரிந்­தது.

"அவள் யந்­தி­ர­மல்ல; யந்­தி­ர­மல்ல, யந்­தி­ர­மல்ல, யந்­தி­ர­மல்ல."

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!