வினை - விதை

வினை - விதை

13 mins read

சிறுகதை

சு சமுத்திரம்

அழ­கே­ச­னுக்கு, ஆண்­டுக்­க­ணக்­கில் உண்டு உடுத்து நட­மா­டிய அந்த அறை, இப்­போது அசல் சிறை­போ­லவே தோன்­றி­யது. அவ­சர அவ­சி­யச் சூழல் போட்ட தடுப்­புக்­கா­வல் அறை­போல், அதி­லி­ருந்து தப்­பிக்க நினைத்­த­வர்­போல் அங்­கு­மிங்­கு­மாய் சுற்­றி­னார். சுவ­ரோடு கவ­ராக உள்ள அந்த டெலி­போ­னையே உற்­றுப் பார்த்­தார்.

கரு­நா­கம்­போல் வளைவு வளை­வான கறுப்பு ஒயர்­கள் கவ்­விப் பிடித்த அந்த டெலி­போ­னுக்­குள், தனது மகன் ஒளிந்து இருப்­பது போல­வும், எப்­போது வேண்­டு­மா­னா­லும் அவன் வெளிப்­ப­ட­லாம் என்­பது போல­வும் அவ­ருக்கு ஒரு பிரமை.

அழ­கே­சன் பிரமை கலைந்­தார். வழக்­க­மாக இந்த கிழ­மை­யில் ஒரு மணி நேரத்­திற்கு முன்பே ஒலிக்­கும் டெலி­போன், இன்­னும் ஒலிக்க­வில்லை. ஒரு­வேளை, டெலி­போன் என்­கேஜ்­டாக' இருக்­குமோ என்று சந்­தே­கப்­பட்டு, அதன் குமிழை எடுத்து, காதிற்­குக் கொண்டு போய், அதன் டய­லிங்­கு­ரலை சரி­பார்த்­தார். பிறகு, அந்­தக் குமிழை, மினி அம்மி போல் இருந்த டெலி­போன் அடி­வா­ரக்­க­ரு­வி­யில் ஒரு குழவி போல பொருத்­தி­னார். அப்­பு­றம், அடி­யற்ற மர­மாய் கட்­டி­லின் விளம்­பில் இருந்து உள்­நோக்கி நகர்ந்து, கால்­களை நீட்­டிப்­போட்டு தலையை சுவ­ரில் சாய்த்­தார்.

அழ­கே­சன், தனது வாழ்க்­கை­யி­லேயே இப்­படி அந்த டெலி­போனுக்கு, எப்­போ­தும் முக்­கி­யத்­து­வம் கொடுத்­த­தில்லை. ஒப்­புக்கு பார்ப்­ப­வர். இப்­போது அதை மட்­டுமே வெறித்­துப் பார்த்­துக்கொண்­டி­ருந்­தார்.

அந்­தச் சம­யம் பார்த்து, டெலி­போன் ஒலித்­தது. அது வெளி­நாட்­டுச் சத்­தம் போல் ஊளை­யி­டா­மல், மணி மணி­யாய் அடித்­தது. அத­னால் அவ­நம்­பிக்கை கொண்­டா­லும், ஒரு­வேளை, அமெ­ரிக்­கக் குரல் மாறி­யி­ருக்­க­லாம் என்ற அனு­மா­னத்­தோடு, வேகவேக­மாய் எடுத்­தார். ஆனா­லும் ஏமாந்­தார். அவர் மனை­விக்கு எங்­கி­ருந்தோ ஒரு அழைப்பு. எதிர்­மு­னைக்கு கேட்­கும்­படி 'ச்சோ' போட்­டார். அது, அந்த முனைக்­கா­ரிக்கு முத்­தம் கொடுப்­பது­போல் ஒலித்­தி­ருக்­க­வேண்­டும். 'அவள் வீட்­டில் இல்லை. எப்போ வரு­வாங்­கன்னு சொல்­ல­மு­டி­யாது' என்று கூசா­மல் பொய் சொன்­னார்.

மக­னி­டம் பேசு­கி­றார் என்ற அனு­மா­னத்­தில், அவ­ருக்கு ஒத்­தா­சை­யாக உள்ளே வந்த மனை­வியை கைய­மர்த்தி, "அந்­தக் 'கால்' வந்­து­டட்­டும்...'' என்­றார். அவளை, தோளை அழுத்தி உட்­கார வைத்­தார். பிறகு இன்­னொரு டெலி­போன் சத்­தம். ஓடிப்­போய் பற்­றப் போனார். உடனே அந்­தம்மா, "டெலி­வி­ஷன்ல வாற­டெ­லி­போன்" என்று சொல்லி, அந்த தொட­ரின் பெய­ரை­யும் சொன்­னாள். வேறொரு சம­ய­மாக இருந்­தால், அந்­தம்­மா­வின் பேசிய வாய் வாய­டைத்­துப் போகும்­படி ஏசி­யி­ருப்­பார். ஆனால் இப்­போதோ, இவர், ஓடிப்­போய் அந்­தத் தொலைக்­காட்­சிப் பெட்­டி­யில் ஒரு குமி­ழைத் திருகி, அதன் வாயைத்­தான் அவ­ரால் அடைக்­க­மு­டிந்­தது.

அழ­கே­ச­னும், மங்­கை­யர்க்­க­ர­சி­யும் அந்த டெலி­போ­னையே அதி­சயித்­துப் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தார்­கள். ஆயிற்று... ஒரு மணி நேரம் உற்­றுப் பார்த்­தா­யிற்று. வழக்­க­மாக பேசு­கி­ற­வர்­கள் கூட, பேச­வில்லை. இரு­வ­ரும் ஒரு­வர் முகத்தை ஒரு­வர் பார்த்­துக் கொண்­டார்­கள்.

அந்­தம்மா, மடி­யில் வலது கையை ஊன்றி, உள்­ளங்­கை­யில் முகம் போட்டு, அச்­சில் பொருத்­தப்­பட்ட பூமி உருண்டை பொம்மை போல் முகத்தை வைத்­துக் கொண்­டாள். அவர், "என்ன மங்கை இப்­படி...?" என்று இழுத்து இழுத்­துப் பேசி­னார். இந்த மாதிரி மனை­வி­யி­டம் அந்­தக் காலத்­தில்கூட, இப்­படி அவர் குழைந்­த­தில்லை. உடனே அந்­தம்மா, சுரைக்­காய் கூடாய் கருங்­கிப்­போன உடம்பை நிமிர்த்­தி­ய­ப­டியே, ஒரு யோசனை சொல்ல முற்­பட்­ட­போது, அழ­கே­சன் பொத்­தாம் பொது­வாய்ப் பேசி­னார்.

"ஆயி­ரம் இருந்­தா­லும், கவர்­மென்ட் வேலை... கவர்­மென்ட் வேலை­தான் மங்கை. இத­னால்­தான் கழு­தையை மேய்ச்­சா­லும், சர்க்­கார் கழு­தையா மேய்க்­க­ணு­முன்னு சொல்­லு­வாங்க. பத­வி­யிலி ருந்து ஓய்வு பெற்­ற­தும், பத்து லட்­சம் ரூபாய் வரைக்­கும் சொளை­யாய் கிடைத்­தி­ருக்­கும். மாசா மாசம் பென்­ஷ­னும் வந்­தி­ருக்­கும். ஆறா­யி­ரம் ரூபாய்ல ஒரு ஹெல்த்­கார்டு வாங்­கிட்­டால், அர­சாங்க ஆஸ்­பத்­தி­ரி­யி­லேயே இல­வச சிகிச்சை. மகன், மகள் பக்­கத்­தில் இல்­லாத நாம், சாகும்போதுகூட, அனா­தை­யாச் சாகாம, டாக்­ட­ருங்க... நர்­சுங்க மத்­தி­யில் சாக­லாம். கடை­சி­யில் புத்­தி­யைக் கடன் கொடுத்­துட்­டேன்."

மங்­கை­யர்க்­க­ர­சிக்கு, அவர், தன்­னைக்­ கு­றி­வைப்­பது புரிந்துவிட்­டது. முன்­பெல்­லாம் 'தாம் தூம்' என்று குதித்­தி­ருப்­பார். இப்­போது அவர் நாக்குகூட கழல மறுப்­பதை அறி­வாள். அதே­ச­ம­யம், தன்­னை­யும் அவள் நொந்துகொண்­டாள்.

கண­வ­ருக்கு அடங்­கிப் போக­வேண்­டிய காலத்­தில், இவ­ரும் ஒரு அர­சாங்க வேலை­யில்தான் இருந்­தார். மகளும் மக­னும் கல்­லூ­ரிப் படிப்­புக்கு, திர­ளப்­போன சம­யம். இவ­ருக்கு மாதம் இரண்­டா­யி­ரம் ரூபாய் பிடிப்­புப் போக வரும். இந்­தச் சம­யத்­தில், அலு­வ­ல­கத்­தில் இவ­ரோடு தொடர்­பு­கொள்ள வேண்­டிய அவ­சி­யத்­தில் இருந்த அரசு வாடிக்­கைக் கம்­பெனி ஒன்று, இவ­ரது நேர்­மை­யை­யும் திற­மை­யை­யும் கண்டு, பத்­தா­யி­ரம் ரூபாய் சம்­ப­ளத்­தில் ஒரு நல்ல வேலையை கொடுக்க முன்­வந்­தது.

சம்­ப­ளம் ஐந்து மடங்கு பெரு­கப் போவ­தால் ஏற்­பட்ட சப­லம், அவரை, இந்­தம்­மா­வி­டம் ஆலோ­சனை கேட்க வைத்­தது. இவ­ளும், பையனை பொறி­யி­யல் கல்­லூ­ரி­யில் சேர்க்க வேண்­டி­ய­தை­யும், மகளை படிப்­பின் மூலமோ அல்­லது படித்த ஒரு மாப்­பிள்ளை மூலமோ நல்­ல­படி­யாய் கரை­யேற்ற வேண்­டிய அவ­சி­யத்­தை­யும் கணக்­கில் எடுத்து, அவரை கம்­பெனி வேலை­யி­லேயே சேரும்­படி செய்­து­விட்­டாள்.

கை நிறை­யச் சம்­ப­ள­மும், பிள்­ளை­க­ளின் தேவை­களை நிறை­வேற்­று­கிற வச­தி­யும் குடும்­பத்­திற்கு வந்­த­தில் அவ­ருக்­கும் ஆரம்­பத்­தில் மகிழ்ச்­சி­தான். ஆனா­லும், அந்­தக் கம்­பெனி எல்லா அலு­வ­லரை­யும் போல் இவ­ரை­யும், எந்­தச் சம­யத்­தி­லும் கழுத்­தைப் பிடித்­துத் தள்­ள­லாம் என்­கிற நிலைமை. கம்­பெனி அவ­ருக்கு வேலை போட்­டுக் கொடுத்­தது கூட, அந்த அர­சாங்க அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து, அவரை நீக்­கு­வ­தற்கு செய்­யப்­பட்ட தந்­தி­ர­மா­க­வும் தோன்­றி­யது. குறிப்­பிட்­ட­படி சம்­பள உயர்­வும் கொடுக்­க­வில்லை.

இந்த வஞ்­சக வலை­யி­லி­ருந்து மீள முடி­யா­மல், அழ­கே­சன், சிலந்தி கவ்­விய பூச்­சி­யாய் துடித்­தார். எப்­ப­டியோ ஒரு­வ­ழி­யாய் கம்­பெனி பொறுப்­பி­லி­ருந்து ஓய்வுபெற்ற பிறகு­தான் மிச்­ச­மாக ஒரு பைசா­கூட தேற­வில்லை என்­பது அவ­ருக்­குப் புரிந்­தது. வாயை வயிற்­றைக் கட்டி சொந்­த­மாக கட்­டிய வீட்டு வாட­கையை வைத்து, வயிற்­றுப் பிழைப்பை ஓட்டிவிட­லாம் என்­றா­லும், நல்­லது கெட்­ட­துக்கு அமெ­ரிக்க மகன் கையை எதிர்­பார்க்க வேண்­டிய கட்­டா­யம்.

இந்­தக் கட்­டா­யத்­தின் நிர்ப்­பந்­தத்­தால், துக்­கத்தை உரு­வ­கப்­ப­டுத்­து­வ­து­போல் தோன்­றிய அந்­தக் கறுப்பு டெலி­போனை அழ­கே­சன் பரி­தா­ப­மா­க­வும், மங்­கை­யர்க்­க­ரசி கோபங் கோப­மா­க­வும் பார்த்­தார்­கள். 'கோளாறு டெலிபோனில் தான் இருக்­கும்; மக­னி­டம் இருக்­காது' என்­பது அவள் கட்சி. மக­னி­டம் மட்­டுமே கோளாறு என்­பது அழ­கே­சன் கட்சி இப்­ப­டி­யாக இரண்டு மணி நேரம் கட்சி பிரிந்து ஒன்­றாக இருந்­த­வர்­க­ளுக்கு ஒன்று புரிந்­து­விட்­டது. அன்று இந்­தி­யச் சனி. அவ­னுக்கோ, அமெ­ரிக்க ஞாயிற்­றுக்­கி­ழமை. இவர்­க­ளுக்­குப் பகல். அவ­னுக்கு இரவு. பேசு­வ­தாக இருந்­தால், இந்­நே­ரம் பேசி­யி­ருக்­க­வேண்­டும். இப்­போது மனை­வி­யோடு தூங்­கிக் கொண்­டி­ருப்­பான். ஆனா­லும் அவ­னி­டம் பேசி­யாக வேண்­டுமே...

மங்­கை­யர்க்­க­ரசி, கண­வர் மறுத்து­வி­டக்­கூ­டாதே என்ற பயத்­தோடு ஒரு யோசனை சொன்­னாள்.

"நாமே போன்ல பேசி­டு­வோமே...?"

"எப்­ப­டிம்மா முடி­யும்? நம்­மக்­கிட்ட எஸ்.டி.டி. கூட கிடை­யாதே."

"உங்­க­ளுக்கு ஞாப­கம் இருக்­குதா? ஜோசி­யம் குறித்­துக்­கொடுத்த கல்­யா­ணத் தேதியை அவன்­கிட்ட சொல்­ற­துக்­காக, அடுத்த தெரு­வுல ஐ.எஸ்.டி. வைத்­தி­ருக்­கிற சின்­னத்­தம்­பி­கிட்ட பேசி, அவன் தன்­னோட டெலி­போன் மூலம் கனெக்‌ஷன் வாங்கி உங்­க­ளுக்­குக் கொடுத்­தானே...''

அழ­கே­சன் மனை­விக்­குப் பதில் ஏதும் சொல்­லா­மல், சின்­னத்­தம்­பிக்கு டெலி­போனை சுழற்­றி­னார். பல சுற்­று­க­ளுக்­குப் பிறகு, இறு­திச் சுற்­றாக சின்­னத்­தம்­பி­யின் குரல் கேட்­டது. இவ­ரின் கோரிக்­கைக்கு, அவன் உடன்­பட்­டான். உடனே அழ­கே­ச­னும், மக­னி­டம் எப்­ப­டிப் பேசு­வது என்று மன­தில் ஒத்­திகை நடத்­தி­னார். அந்­தக்­கா­லத்­தில், பிள்­ளை­க­ளை­யும் மனை­வி­யை­யும் திட்­டும்­போது, இப்­படி ஒத்­திகை பார்க்­கா­த­வர்­தான். இப்­போதோ எம­னுக்கு அட­மா­னம் வைக்­கப்­பட்­ட­வர்­போல் தவித்­தார். பிள்­ளை­க­ளுக்­கும் அவர்­க­ளைப் பெற்­ற­வ­ளுக்­கும் பிச்சை கொடுப்­ப­து­போல் எக்­கா­ள­மாய் பணம் கொடுத்­த­வர், இப்­போது தொழி­லுக்­குப் பழக்­கப்­ப­டாத பிச்­சைக்­கா­ரன் போல் கூசி­னார்.

இதற்­குள், சின்­னத்­தம்­பி­யின் டெலி­போன் குரல் கண்­டங்­க­ளைக் கடந்து, அமெ­ரிக்­கா­வில் கிடக்­கும் இளங்­கோ­வின் குரலை இழுத்­துப் பிடித்து, இந்த வீட்டு டெலி­போ­னுக்­குள் ரச­மாற்­றம் செய்­தது. ஆனா­லும், ஒலித்­து­விட்டு மீண்­டும் ஊமை­யா­னது. அது, மீண்­டும் ஒலிக்­கும் என்­பதை அனு­ப­வத்­தால் தெரிந்து வைத்­தி­ருந்த மங்­கை­யர்­க­ரசி, கண­வ­ருக்கு ஒரு வேண்­டு­கோள் விடுத்­தாள்.

"அவ­னோட ஒய்­பு­தான் மொதல்ல எடுப்­பாள். அவள் கிட்ட நான் பேசத் தய­ராய் இல்ல. போன தடவை, அவள் பேசின டோனே சரி­யில்ல. அமெ­ரிக்கா போனா­லும், மரு­ம­கள் என்­கி­ற­வள்­க­ளோட புத்தி மாறாது போலி­ருக்கு. அப்­படி என்ன பெரு­சாய் கேட்­டேன்? அமெ­ரிக்­கா­வுல லட்­சம் லட்­ச­மாய் சம்­பா­திக்­கிற என் பைய­னுக்கு, கல்­யா­ணச் செல­வை­யா­வது ஏத்­துக்­கங்­கன்னு சொன்­னேன். அப்­ப­டி­யும் அவ­ளோட அப்பா, அந்த செல­வை­யும் நம்ம தலை­யில் கட்­டிட்­ட­தால் அவரை லேசாய் சத்­தம் போட்­டேன். அதை மன­சில கரு­விக்­கிட்டு, ஒங்க மரு­ம­கள், என்­கிட்ட பேசுற டோனே திமி­ராய் இருக்­குது."

"அதுக்கு நான் என்­னம்மா செய்ய முடி­யும்? நானே நொந்து போயி­ருக்­கேன்."

"அதுக்கு ஒரு வழி இருக்கு டெலி­போன்ல அவள்­தான் முதலில் வரு­வாள். அவள் கிட்ட பேசிட்டு, நம்ம பையன் லைன்ல வரும்­போது, எங்­கிட்ட கொடுங்க. நீங்­களும் அவன்­கிட்ட ஏதா­வது பேசுங்க. அவன் குர­லைக் கேட்­ட­தும், 'இந்தா ஒன் அம்­மான்னு, ஒங்­க­ளுக்­கும் அவ­னுக்­கும் சம்­பந்­தம் இல்­லா­தது மாதிரி வழக்­கமா, டெலி­போனை எங்­கிட்ட கொடுப்­பீங்­களே... அப்­படி கொடுக்­கா­மல், அவன்­கிட்ட ரெண்டு வார்த்தை நல்­ல­ப­டி­யாய் பேசுங்க."

அழ­கே­சன், சுருண்டு போனார். மனை­வியை மலங்க மலங்­கப் பார்த்­தார். மாண­வி­யாய் நடந்­தது கொண்­ட­வள், ஆசி­ரி­யை­யாய் நடந்துகொள்­வ­தில் லேசான வருத்­தம். ஆனா­லும், அவள் சொல்­வது நியா­யம் என்ற யதார்த்­தம். மீண்­டும் டெலி­போன் குர­லிட்­டது. அவர், டெலி­போனை தயங்­கித் தயங்கி எடுத்­தார். அது காதில் உர­சி­ய­போது, அவ­ரது மகனே ஹலோ என்­றான். அசல் அமெ­ரிக்­கன் கூட அப்­படி உச்­ச­ரித்­தி­ருக்­க­மாட்­டான். உடனே இவர், "நான் தாண்டா அப்பா பேசு­றேன்" என்­றார். அதே­வே­கத்­தில் அவ­னும் கேட்­டான்.

"சொல்­லுங்­கப்பா"

'எப்­படி இருக்­கீங்­கப்பா' என்று எல்லா பிள்­ளை­க­ளை­யும் போல கேட்­கா­மல், அவன் அப்­படி 'பிசி­னஸ் லைக்­காய் கேட்­ட­தில், அழ­கே­ச­னுக்கு சொற்­தடை ஏற்­பட்­டது. வாலில்­லாத ஒரு பூச்சி, தொண்­டைக்­குள் போவது போல­வும், தலை­யில்லா ஒரு புழு வாய்க்­குள் நெளி­வது போல­வும் தோன்­றி­யது. ஒரு அந்­நி­ய­னி­டம் பேசு­வ­து­போல் 'சொல்­லுங்­கப்பா' என்று சொல்­கி­ற­வ­னி­டம், சொல்­லும்­ப­டி­யாய் என்ன பேச­மு­டி­யும்? ஆனா­லும், அவர் சொல்லி வைத்­தார். முன்­பின் பழக்­க­மில்­லா­த­வர்­கள், அறி­மு­கம் செய்­யப்­படும் போது, பொதுப்­ப­டை­யாக பேசுவோமே - சீதோஷ்ண நிலை, பந்த், ஊழல், கிரிக்­கெட் என்று - அப்­ப­டிப்­பட்ட குர­லில் பேசு­வ­தற்­காக பேசு­வ­து­போல் பேசி­னார். அது, ஒரு பிச்­சைக்­கா­ரன் பிச்சை கேட்­ப­தற்கு முன்பு, குடுகுடுப்பை ஆட்­டு­வானே, அப்­ப­டித்­தான் அவ­ருக்கு உறைத்­தது.

"வேலை­யெல்­லாம் எப்­ப­டிடா இருக்­குது?"

அமெ­ரிக்க மகன் பதி­ல­ளிக்க முயற்­சித்­த­போது, அவனை இரு­மல், மொழி மறித்­த­து­போல் தோன்­றி­யது. அந்த ஒரு கணத்­தில் அழ­கே­ச­னின் மனம், வாய்க்­காலை உடைத்த நீர்­போல, பயிர்­க­ளுக்­குப் பாயா­மல், காய்ந்து போன நிலத்­தின் இடுக்­கு­களில் தாவு­வ­து­போல் தோன்­றி­யது.

அப்­போது, கணிப்­பொறி பட்­டப் படிப்­பில், தனித்­து­வ­மாய் மதிப்­பெண்­கள் வாங்­கிக் கொண்­டி­ருந்த அந்­தக் காலத்து இந்­தி­ய­னான இளங்­கோவை, ஒரு தனி­யார் கம்­பெனி, கேம்­பஸ் இன்­டர்­வியூ நடத்தி, எடுத்த எடுப்­பி­லேயே பதி­னைந்­தா­யி­ரம் சம்­ப­ளம் வழங்க முன்­வந்­தது. நாட்­டில் ஐந்­தாண்­டுத் திட்­டம் மெள்­ள­மாக போனா­லும், அதே காலக்­கட்­டத்­தில் இவன் சம்­ப­ளத்­திட்­டம், நாற்­ப­தா­யி­ரத்தை தொடும் என்­றும் தெரி­வித்­தி­ருந்­தது.

அழ­கே­சன், அந்த நல்ல செய்தி வந்த, அந்த ஒரு நாளில் கடு­க­டுப்­பாக இல்லை. யாரை­யும் எடுத்­தெறிந்து பேச­வில்லை. பிள்­ளையை பெற்­ற­வன் போல் பார்த்­தார். ஆரம்­பத்­தில் வாம­ன­மாய்க் குழைந்து, இப்­போது விக­வ­ரூ­பம் எடுத்­தி­ருக்­கும் தனது கம்­பெ­னியை இனி­மேல் எதிர்த்­துப் பேச­லாம் என்ற நம்­பிக்கை. சொந்­த­மாக ஒரு வீடு கட்டி, ஓய்­விற்­குப் பிற­கும் ஒரு வீட்­டுக்­கார பாஸோ அல்­லது மேடமோ இல்­லா­மல் நிம்­ம­தி­யா­கக் காலத்­தைக் கழிக்­க­லாம் என்ற மனக்­க­ணக்கு. கூடவே, பிளஸ் டூ முடித்த மகளை, இவனை மாதிரி ஒரு­க­ணிப்­பொறி என்­ஜி­னீ­ய­ரின் தோளில் ஏற்றி, மகளை ஆனந்­தப் பர­வ­ச­மாய் பார்க்­க­லாம் என்ற இன்­னொரு மனக்­க­ணக்கு. ஆனால் இளங்கோ, அத்­தனை கணக்­கு­க­ளை­யும் பொய்­மைப்­ப­டுத்த முயற்­சித்­தான். ஜி.ஆர்.ஏ. பரிட்சை எழுதி அமெ­ரிக்­கா­வில் மேற்கொண்டு படிக்க தகுதி பெற்­று­விட்­டா­னாம். மூன்று அமெ­ரிக்­கப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இருந்து அவ­னுக்கு அழைப்பு வந்­தி­ருக்­கிறதாம். ஆனா­லும் உத­விப் பணம் கிடைக்­குமா என்­பதை உட­ன­டி­யாய் சொல்ல முடி­யா­தாம். இவனே, பணத்­தோடு போக­வேண்­டு­மாம். கூட்­டிக்­க­ழித்­துப் பார்த்­தால், ஆறு­லட்­சம் ரூபாய் தேவைப்­ப­டு­மாம்.

அழ­கே­சன், அவ­னி­டம் நயந்து பேசி­னார். உள்­நாட்டு வேலையே உசத்தி என்­றார். இதையே, மனை­வி­யை­யும் பேசும்­படி கூறி­னார். மங்­கை­யர்க்­க­ர­சி­யும் பேசி­னாள் - மக­னுக்கு ஆத­ர­வாய். வங்­கிக் கடன் வாங்­க­லாமே' என்று வக்­கா­லத்து வாங்­கி­னாள்.

அழ­கே­சன், மனை­வியை மட்­டு­மல்ல, மக­னை­யும் நோக்கி கை ஓங்­கி­னார். கன­வு­கள் பொய்த்த நன­வுத் தளத்­தில் அவர், ருத்­ர­தாண்­ட­வ­மாய் குதித்­தார். வங்­கிக்­க­டன் வாங்­கப்­போ­வ­தில்லை என்று தனது சாவின் மீது சத்­தி­யம் செய்­தார். ஆனா­லும் பயல், கடப்­பா­ரை­யாய் கிடந்­தானே தவிர அசை­ய­வில்லை.

ஒரு மாதத்­தில், அவர் கண் முன்­னா­லேயே பணக்­கார நண்­பர்­கள் மூல­மும், அம்­மா­வின் மௌனச் சம்­ம­தத்­தின் அடிப்­ப­டை­யி­லும், அமெ­ரிக்கா போய்­விட்­டான். எம்.எஸ். படிப்­பை­யும் முடித்­து­விட்டு, இப்­போது ஆறா­யி­ரம் டாலர் மாதா மாதம் வாங்­கு­கி­றான்.

அழ­கே­சன், அவன் அமெ­ரிக்­கப் படிப்­பிற்கு ஒரு துரும்­பைக்கூட எடுத்­துப் போடா­மல் இருந்­தோமே என்று இப்­போது ஒரு துரும்­பாய் சிறு­மைப்­பட்­டார். அவ­னது அமெ­ரிக்க வழி­யில், சாலை மறி­யல் செய்து, தாதா­வாய் நடந்­து­கொண்ட தந்­தைக்கு, மக­னின் வேலை­யைப் பற்­றிக் கேட்க என்ன யோக்­கி­யதை இருக்­கிறது, என்­றும் தனக்­குள்­ளேயே கேட்­டுக்கொண்­டார். இந்­தச் சம­யத்­தில் அழ­கே­ச­னின் கால­மான தந்தை, இவ­ரின் கண்­களில் வந்து விர­லாட்­டு­வ­து­போல் தோன்­றி­யது. கழ­லப்­போன நாக்கை பிடித்­தி­ழுப்­ப­து­போல் ஒரு வலி. பெற்ற தந்­தையை சரி­யாக கவ­னிக்க முடி­யாத, தான், மக­னி­டம் எதிர்­பார்ப்­பது என்ன நியா­யம் என்று மன­துக்­குள்­ளேயே ஒரு கேள்வி.

அந்­தக் கேள்வி விடை­யில்­லா­மலே முற்றுப் பெறும்­படி, அமெ­ரிக்க மகன் ஏதோ பதி­ல­ளிக்­கி­றான். இவ­ருக்கு, அவன் சொற்­கள் கேட்­கி­றதே தவிர, அவற்­றின் பொருள் புலப்­ப­ட­வில்லை. சர்வ வல்­ல­மை­யுள்ள மேல­தி­கா­ரி­யி­டம் பேசும்­போது, எப்­ப­டிக் கூனிக் குறுகி நிற்­பாரோ, அப்­படி நின்­றார். அப்­போது வேர்த்­தது போலவே, இப்­போ­தும் வேர்த்­தது. இது புரி­யா­மல் அமெ­ரிக்க மகன், அப்­பு­றம்பா...' என்­றான். அழ­கே­ச­னுக்கு ஒரு சந்­தே­கம். அப்­பு­றம் அப்பா என்­கிற வார்த்­தை­களை ஒட்ட வைத்­துப் பேசு­கி­றானா அல்­லது வேலைக்­கா­ர­னி­டம் பேசு­வ­து­போல் பேசு­கி­றானா என்­கிற சந்­தே­கம். ஆனா­லும் தான் பேசு­வது தனக்கே புரி­யா­மல் பதி­ல­ளித்­தார்.

"அப்­பு­றம் எப்­ப­டிடா பொழுது போகுது?"

அந்­தக் கேள்­வியை வர­வேற்­ப­து­போல், அவன் உற்­சா­க­மாக, நயா­கரா நீர்­வீழ்ச்சி, ஜிம், பனிச்­ச­றுக்கு, தமிழ்ச்­சங்­கம் போன்ற வார்த்­தை­களைக் கொட்­டிக்கொண்டே இருந்­தான். அழ­கே­ச­னுக்கு மேலும் ஒரு சந்­தே­கம். ஒங்­க­ளால் கொடுக்க முடி­யா­ததை நான் அனு­ப­விக்­கி­றேன் என்று குத்­திக் காட்­டு­கி­றானோ..?

அதற்­குள், அந்த அமெ­ரிக்க மக­னுக்கு இன்­னொரு தொடர் இரு­மல்.

தந்­தை­கா­ர­ருக்கு, இன்­னொரு நினைவு பூதா­க­ர­மாய், அவர் அகத்­தை­யும் புறத்­தை­யும் ஆக்­கி­ர­மித்­தது.

இளங்கோ ஒன்­ப­தோ­ பத்தோ படித்த காலம் பள்­ளிக்­கூ­டத்­தின் சார்­பில் சுற்­றுலா போக­வேண்­டு­மாம். அவ­னது கல்வி நிலை­யம் 'கொழுத்த பள்­ளிக்­கூ­டம் என்­ப­தால், அவர்­கள் கேட்ட தொகை­யி­லும் கொழுப்­பே­றி­யி­ருந்­தது. அப்­போ­து­தான் அழ­கே­சன், ஜி.பி.எப்., தீபா­வளி அட்­வான்ஸ், ஸ்கூட்­டர் அட்­வான்ஸ், பொங்­கல் அட்­வான்ஸ் என்று அத்­தனை அட்­வான்­சு­க­ளுக்­கும், அசல் சம்­ப­ளத்­தில் பாதியை பறி­கொ­டுத்த நேரம். அந்த இய­லா­மை­யில் வீட்­டுக்கு வந்­த­வர், அங்கே இருந்த இளைத்­த­வர்­க­ளி­டம் கோப­மாக எகி­றி­னார். அந்­தச் சம­யம் பார்த்து, மக­னின் சுற்­றுலாத் தேவையை, இதே இந்த மங்­கை­யர்க்­க­ரசி உணர்த்­தி­ய­போது, இவர், தகப்­பன் கோவ­ணத்­தில் இருக்­கி­றா­னாம், மகன் இழுத்து மூடப்பா என்­றா­னாம்' என்று ஒரு கிரா­மப் பழ­மொ­ழியை இளக்­கா­ர­மாக சொன்­னார். உடனே இந்த இளங்கோ, அப்­போது அப்­பா­வி­டம் இருந்து பணம் வாங்­கிக் கொடுப்­ப­தாக வாக்­க­ளித்த அம்­மாவை முது­கைப் பிடித்து தள்­ளி­னான். வலிக்­காத தள்­ளல். இந்­தம்மா கூட சிரித்­தாள்.

என்­றா­லும் இந்த அழ­கே­சனோ, பையன் மேல் பாய்ந்­தார். அம்­மாவை தள்­ளு­வியா... தள்­ளு­வியா...' என்று அவனை புரட்டி எடுத்­தார். தடுக்க வந்த மனை­வியை கீழே தள்­ளிப்­போட்­டார். மீண்­டும் மகனை அடித்­தார். அவர் அடித்த தோரணை, அம்­மாவை அப்­படி தள்­ளி­ய­தற்­காக இல்லை என்­பது போல­வும், அவன் சுற்­று­லா­விற்கு போகக்­கூ­டாது என்­பது போல­வும் தோன்­றி­யது. அது­வரை, அவர் வீட்­டுக்­குள் வரும்­போதும் போகும் போதும், அவர் இடுப்­பைக் கட்­டிக்­கொண்டு 'அப்பா அப்பா' என்று கொஞ்­சு­கி­ற­வன் தான். அன்று முதல் ஒதுங்­கிக் கொண்­டான். அவர் சாலை­யில் வரும்­போது, எதிர்ப் பக்­க­மாக நடப்­பான். வீட்­டுக்­குள் இருக்­கும்போது, ஓர் அறைக்­குள் முடங்­கிக் கொள்­வான். அவ­ருக்­கும் அலு­வ­லக நெருக்­க­டி­களில், இது ஒரு பெரிய காரி­ய­மா­கத் தெரி­ய­வில்லை.

இந்­தப் பகையை மறந்து, அவன் பழை­ய­படி மக­னா­கப் போன­வேளை. வீட்­டுக்கு முன் உள்ள மைதா­னத்­தில், பொழுதுபோக்­காக கிரிக்­கெட் விளை­யா­டிக்கொண்­டி­ருந்­தான்.

அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து திரும்பி வந்த அழ­கே­சன், அவ­னி­டம் 'எலக்ட்­ரி­சிடி பில் கட்­டிட்­டியா? என்று நேரி­டை­யா­கக் கேட்­டார். காலை­யில் அவன் அப்­ப­டிக் கட்­ட­வேண்­டும் என்று மனை­வி­யி­டம் பணம் கொடுத்­து­விட்­டுப் போன­வர். தந்­தை­யோடு, நான்­காண்டுகளாக பேச மறுத்து, அதே­ச­ம­யம் மன­துக்­குள் மரு­விக்கொண்­டி­ருந்த இளங்கோ பை­யன், தந்­தை­யி­டம் பேச சந்­தர்ப்­பம் கிடைத்த மகிழ்ச்­சி­யில் - ஒரு வேளை, அவரே முத­லில் பேசி­விட்ட வெற்­றிப் பெரு­மி­தத்­தில், அம்மா பணம் தரல. அத­னால்... என்­கிற நான்கு வார்த்­தை­களை தந்­தை­யி­டம் பேசு­வ­தாக தனக்­குள் பேசிக்­கொண்டு பின்­னர், கட்­டல' என்று ஒற்­றைச்சொல்லை உதிர்த்­தான். அழ­கே­சன், அது இல்­லாத ஈச­னா­னார். மகன் மேல் பாய்ந்து, அவ­னைக் கீழே தள்­ளி­னார். அவன் சட்­டைக் கால­ரைப் பிடித்து தூக்கி நிறுத்தி, குஸ்­திப் பயில்­வான்­கள் துணி­யி­டப்­பட்ட மணற்­பொம்­மை­களை குத்­து­வார்­களே, அப்­ப­டிக்­குத்­தி­னார். அவன் கிரிக்­கெட் ஸ்டெம்ப் மீது விழுந்­தான். அந்­தக் குச்­சி­கள் போலவே கிடந்­தான். மங்­கை­யர்க்­க­ரசி ஓடி வந்­தாள். கண­வன், பகி­ரங்­க­மா­கத் தன்­னை­யும் ஏச­லாம் என்­பது தெரிந்­தும், அவரை ஆங்­கா­ர­மா­கப் பார்த்­தாள். இது ஒரு தகப்­பன் செய்­கிற காரி­யமா?' என்­றும் கண்­களில் புன­லும், வாயில் அன­லும் கனக்­கக் கேட்­டாள்.

பழைய நினை­வு­களில் மூழ்கி, முத்­தில்­லாத சொத்­தைச் சிப்­பி­களை எடுத்­துக்கொண்­டி­ருந்த அழ­கே­சனை, மகன் எதிர்­மு­னை­யில் உசுப்­பி­னான். 'எதா­வது விசே­ஷம் உண்­டாப்பா....?

அழ­கே­சன், குழந்­தை­யாய் குழைந்­தார். என்ன விசே­ஷம்... மக­னின் தயவு இல்­லை­யென்­றால், இழ­வு­வி­சேஷந்­தான். எப்­ப­டியோ கேட்­கப்­போ­னார். அந்­தச் சம­யம் பார்த்து, ஏற்­பது இகழ்ச்சி என்று, வள்­ளல்­க­ளி­டம் எல்­லா­வற்­றை­யும் ஏற்­றுக்­கொண்ட ஒள­வை­யின் பள்­ளிக்­கூட வாச­கம் இப்­போது மரண வாச­க­மாக ஒலித்­தது. ஆபத்­துக்கு பாவ­மில்­லை­யென்று, பாவப்­பட்ட மனி­த­ராய் சொல்ல வேண்­டி­யதை சொல்­லப் போனார். அதற்­குள், தோழ­னோ­டா­யி­னும் ஏழமை பேசேல்' என்று அதே ஒளவை அவ­ரது வாயைப் பொத்­து­கி­றாள். ஆனா­லும், அவர் பேசு­கி­றார். எனக்கு' என்­கிற வார்த்தை உனக்கு என்று துவங்­கு­கிறது. பைபாஸ் சர்­ஜரி' என்­கிற வார்த்தை சர்­ஜ­ரி­பை­பாஸ் ஆகிறது. ஆப­ரே­ஷன் என்­கிற வார்த்தை 'ஆப்' ஆகிறது.

அவ­ரது தடு­மாற்­றத்தை கண்ட மங்­கை­யர்க்­க­ரசி, அவ­ரது நடுங்­கும் கையில், நடுக்­க­மெ­டுத்த டெலி­போனை லாக­வ­மாய் பற்­றி­னாள். கட்­டி­லில் உட்­கார்ந்­த­ப­டியே மக­னி­டம், உரி­மைக்­கு­ரல் கொடுத்­தாள்.

"ஏண்டா ... என் சுகம் கிடக்­கட்­டும். நீ ஏண்டா இரு­முற? டாக்­டர்­கிட்ட போக வேண்­டி­ய­து­தானே. இங்க மாதிரி முடி­யாதா? முன்­கூட்­டியே சொல்­லிட்­டு­தான் போக­ணுமா. என்ன அமெ­ரிக்­காவோ... சரி கசாயம் வச்­சா­வது குடிக்­கிறது...? இது­கூட ஒன் பொண்­டாட்­டிக்கு வச்­சுக் கொடுக்க தெரி­யா­விட்டா என்­னடா அர்த்­தம்..."

மகன்­கா­ரன், மீண்­டும் இரு­மி­ய­போது, தாயக்­காரி, கண­வனை பார்த்து 'பாவம் பிள்­ளைக்கு உடம்­புக்கு சரி­யில்­ல­யாம்' என்று சொல்லி­விட்டு, மீண்­டும் மக­னி­டம் உரை­யா­டி­னாள்.

ஏண்டா... அப்­பா­கிட்ட, 'சுகமா இருக்­கீங்­க­ளான்னு கேட்­டியா? அவர் சுக­மாய் இல்­லா­த­து­னா­ல­தான் இப்­ப­டிப் பேசு­றேன். அவ­ருக்கு இரு­த­யத்­துல கோளாறு. பைபாஸ் சர்­ஜரி செய்­ய­ணும்.

இரண்டு லட்ச ரூபாய் தேவை­யாம். என்­னடா இது... எவ்­வ­ளவு டாலர் அனுப்­ப­ணு­முன்னு கேட்­கிற...? நீ படிச்­ச­வன்­தானா? நீயே டாலரால் கணக்­குப் போட்­டுக்கோ. ஆமாம், உடனே அனுப்பு. உன் பெண்­டாட்­டிய நான் விசா­ரிச்­ச­தாச் சொல்லு என்­னடா... அப்பா உடல்­நி­லை­யைப் பற்றி விவ­ர­மாச் சொல்­ல­ணுமா?"

கட்­டி­லில் உட்­கார்ந்­தி­ருந்த மங்­கை­யர்க்­க­ரசி. தலையை நிமிர்த்தி நிமிர்த்தி, பின்­னர் கம்­பீ­ர­மாய் எழுந்து மக­னி­டம் விலா­வா­ரி­யாய் விளக்­கிக் கொண்­டி­ருக்­கி­றாள். அவ­ளது ஒவ்­வோர் அங்­குல நிமிர்­வும், அழ­கே­ச­னின் மேனியை ஒவ்­வொரு அடி­யாய் தாழ்த்­திக் கொண்­டி­ருக்­கிறது.