1
வேகமாய் சென்றுகொண்டிருந்த வண்டியின் வால் போல மஞ்சள் விளக்கொளியில் நீண்டு பின்நழுவிக் கொண்டிருந்தது சாலை. இந்நேரம் மெய் லி, இவன் சாலை முனையிலிருந்து முளைத்து விடுவான் என்ற நம்பிக்கையில் சன்னலோரம் நின்று பார்த்துக் கொண்டிருப்பாள். பிள்ளைகள் தூங்கியிருப்பார்கள், சிறியவள் மட்டும் பாலுக்காகச் சிணுங்கிக் கொண்டிருக்கக்கூடும். இவனது காலடிச் சத்தம் கேட்டதும் தன் கைகளைப் பறவையின் இறகுகளைப் போல படபடவென அசைத்து, வாயெல்லாம் சிரிப்பொழுகத் தாவி வரும் அவர்கள் வீட்டின் செல்லக் கடைக்குட்டி அவள். பின்னால் கட்டப்பட்டிருந்த கைகளின் விரல்களைச் சுருக்கி விரித்தான் ஆ செங். அவனுக்கு மெய் மெய்யை இழுத்தணைத்து முத்தமிட வேண்டும் போல இருந்தது. பொதுவாக அவன் தன் அன்பைக் கட்டியணைத்தோ முத்தமிட்டோ வெளிப்படுத்துபவனில்லை. அவன் மிகவும் சாதாரணமானவன், தனது தந்தையைப் போல. பள்ளிப்படிப்பை முடித்த கையோடு வேலைக்குச் சென்றவன், மாத சம்பளத்தைத் தாயிடம் கொடுத்துவிட்டுத் தன் செலவுக்கு அவர் தருவதை வாங்கிக் கொள்பவன். அவனுக்குத் தேவையான உடைகளை அவரே துணியெடுத்து தைத்துக் கொடுத்து விடுவார். உதட்டுக்கு மேல் மச்சம் கொண்ட மெய் லியைக் கூட அவர் தான் தேர்ந்தெடுத்திருந்தார்.
வண்டி முடிவற்ற சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. அதிக வாகனங்கள் எதிர்படாத சாலை. நகரத்தின் எல்லா இடங்களிலும் கடந்த சில வாரங்களாக மக்களின் நடமாட்டம் குறைந்திருந்தது.
குண்டுகள் விழத் தொடங்கிய நாள் முதல் அவசிய வேலைகளைச் சீக்கிரம் முடித்துக் கொண்டு அந்தி சாயும் நேரம் வீட்டுக்குள் முடங்கிக்கொள்ளவே எல்லோரும் விரும்பினார்கள். நான்கு சுவர்களுக்குள் மறைந்துகொண்டால் தங்களை விழுங்கக் காத்திருந்த எதிலிருந்தும் தப்பிவிடலாம் என்று அவர்கள் நம்பினார்கள்.
நேர்மையாய் இருந்தால் எதற்கும் பயம் கொள்ளத் தேவையில்லை என்று ஆ செங் நம்பியதைப் போன்ற ஆதார நம்பிக்கை.
அந்த ஆதார நம்பிக்கையில் தான் அவன் தானாகச் சோதனைச் சாவடிக்கு செல்ல முற்பட்டதும் கூட.
***
அன்று காலை கிளம்பி வீட்டின் வாயிலுக்கு வந்த ஆ செங்கின் கண்களில் ஐந்தடி தூணில் ஒட்டியிருந்த அந்தப் புதிய சுவரொட்டி பட்டது. அதன் உள்ளடக்கம் அவனைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை. அவன் கம்யூனிஸ்ட் கொள்கைகளில் ஆர்வம் கொண்டவனில்லை, ஜப்பானியர்களுக்கு எதிராக எந்தக் கலகத்திலும் ஈடுபட்டவனில்லை. நான்கைந்து முறை தன்னார்வலர்களுக்கு நன்கொடை கொடுத்திருக்கிறான் என்பதே அதுவரையிலான அவனது அதிகபட்ச ஜப்பானிய எதிர்ப்புச் செயலாக இருந்தது.
வெட்டியெறியப்பட்ட நாணற்புதர்களைப்போல ஆற்றோரம் குவியலாய் ஒதுங்கியிருந்த, மனித அடையாளங்கள் தொலைத்த சீன உடல்கள், தலை வெட்டப்பட்ட உடலுக்கு அருகில் அழுது கொண்டிருந்த சிறுவன்- தன்னார்வலர்கள் வைத்திருந்த இந்தப் புகைப்படங்களைப் பார்த்த போது உண்டான திகைப்பின் எதிர்வினையாகத்தான் அதுவும் தொடங்கியது.
அதிலிருந்த சிறுவனுக்கு இவனது மூத்த மகனின் வயதுதான் இருக்கும். சட்டென அந்தப் படத்தில் வெட்டுப்பட்டுத் தலையின்றிக் கிடப்பவனாகத் தன்னை உணர்ந்தான். அவ்வுணர்வு தந்த நடுக்கத்தில் பையிலிருந்த ஐந்தரை வெள்ளிகளை அவர்கள் வைத்திருந்த உண்டியலில் எடுத்துப் போட்டான். இன்னும் சிலமுறை கூட இப்படிக் கொடுத்திருக்கிறான்.
ஆ செங் நன்யாங்கிற்கு கப்பலேறி வந்து இங்கேயே நிரந்தரமாய் தங்கிவிட்டிருந்த குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவன். இப்போது இவனது நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இருப்பது சிங்கப்பூரிலும் மலாயாவிலும் தான். அதோடு இவன் பணிபுரிந்தது ஒரு ஜப்பானிய நிறுவனத்தில். ஊரிலிருந்தவர்கள் ஜப்பானியர்களை எதிர்த்து அவர்களின் கடைகளை உடைத்து, அவர்களின் பொருட்களையெல்லாம் நடுத்தெருவில் இழுத்துப் போட்டு எரித்த போது இவன் அமைதியாக வேலைக்குச் சென்று வந்தான். சீனாவில் ஜப்பானியர்களின் செய்கைகள் நியாயமற்றவை என்றே தான் அவனும் நினைத்தான், ஆனால் அந்தச் சிந்தனையைத் தன் முதலாளியுடன் அவன் தொடர்புப்படுத்தவில்லை. அவரென்ன சீனாவில் இருப்பவர்களிடம் சண்டையா போட்டார், மாதம் தவறாமல் ஊதியத்தைத் தருகிறார். அவர் மீது வெறுப்பைக் காட்ட அவனுக்கு எந்த முகாந்திரமும் இருக்கவில்லை. கியாட் கோபத்தில் பலமுறை இவனைத் துரோகி என்று அழைத்திருக்கிறான். ஆ செங் பிரச்சனைகளிலிருந்து ஒதுங்கி இருக்கவே நினைத்தான்.
மாலையில் அபாங் கடையில் அரிசி வாங்கிக் கொண்டிருந்த போது நகர் முழுவதும் புதிதாய் முளைத்திருந்த சுவரொட்டிகளைப் பற்றிய பேச்சு வந்தது.
"குண்டுவெடிப்பால் இடிந்த கட்டிடங்கள், குழிந்த சாலைகள் இவற்றைச் சரி செய்யும் வேலையாம், வெளிநாட்டுக்குப் போகச் சம்மதித்தால் ஐம்பது வெள்ளி தருகிறார்களாம்".
சீனர்களை மட்டும் அழைத்திருந்ததில் அபாங்கிற்குக் கொஞ்சம் வருத்தமே,
"ஒருவேளை அடுத்துப் பிற இனத்தவர்களை அழைப்பார்களோ என்னவோ!"
ஐம்பது வெள்ளி என்பது பெரிய விஷயம் தான், ஆனால் குடும்பத்தை விட்டு விட்டுப் போக வேண்டுமே என்று நினைத்தான் ஆ செங். தீப்பெட்டி வாங்க வந்த அப்துல்லா, தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளன் குடும்பத்தோடு செல்ல பாய் படுக்கைகளுடன் தயாராகிக் கொண்டிருப்பதாகச் சொன்னது ஆ செங்கைக் குழப்பியது. அவன் வாசித்த வரையில் ஆண்களை மட்டுமே அழைத்திருந்தார்கள். மெய் லியை உடன் அழைத்துச் செல்வதா வேண்டாமா என்று யோசித்தபடி பழுப்புப் பையில் அடைத்துக்கொடுத்த அரிசியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான்.
2
தன் மகன் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறான் என்று ஜிங் வெய்க்குக் கோபமாக வந்தது.
'அப்படியே அப்பாவைக் கொண்டிருக்கிறான், கேட்கும்போதே தெரியவில்லையா நல்ல எண்ணத்துடன் அழைக்கவில்லையென்று.'
'வேலை தருகிறார்களாம்! இவனுக்குத் தான் நல்ல சம்பளம் வருகிறதே, பிறகென்ன!'
'சீனாவில் நடப்பதெல்லாம் இவனுக்குத் தெரியுமே, வாங் லாவ் ஷூவின் மருமகளுடைய பெற்றோருக்கு என்ன நடந்ததென்று அவள் முன்பே அவனிடம் சொல்லியிருக்கிறாள்தானே!'
'நாடெங்கும் இதே பேச்சாயிருக்கிறதே அவனுக்குத் தெரியாதா என்ன!'
'ஜோகூரிலிருக்கும் குவாங் ஷூ ஷூ வீட்டுக்குப் போய்விடு என்று சொன்னால், அது அவ்வளவு சுலபமில்லை, அனுமதி பெற வேண்டும் என்கிறான். வேலையை விட்டு விட்டுப் போக முடியாது என்கிறான்'
'உடன் மெய் லியையும் பிள்ளைகளையும் வேறு அழைத்துச் செல்ல வேண்டுமாம். எல்லோரையும் வரச் சொல்லியிருக்கிறார்களாம், நேர்மையாம் உண்மையாம்!'
'உண்மையாக இருந்து தான் இவனது அப்பா எதைக் கண்டார். என்னைத் தனியாக விட்டு விட்டுச் சீக்கிரம் இறந்து போனது தான் மிச்சம்'
அவர் இருந்து ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இந்தப் பையன் அதை மீறியிருக்க மாட்டான் என்று அவருக்கு ஆதங்கமாக இருந்தது.
அன்று இரவு மெய் லி கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும் அவர் சாப்பிடப் போகவில்லை. இறுதியில், தான் மட்டும் தனியாகப் போய் வருவதாகவும் தனது முதலாளியிடம் சிபாரிசுக் கடிதம் ஒன்றை வாங்கி உடன் எடுத்துச் செல்வதாகவும் ஆ செங் சொன்ன பின்னர்தான் கொஞ்சம் சமாதானப்பட்டார். அப்படியும் அவரின் முகம் கூம்பித் தான் இருந்தது.
*
அன்று விடியற்காலையிலேயே எழுந்து பொதுச் சமையலறையில் கணவனுக்காக நிலக்கடலைக் கஞ்சி செய்யத் துவங்கியிருந்தாள் மெய் லி. ஆ செங் சீக்கிரமே கிளம்பப் போவதாக முன்தின இரவில் சொல்லியிருந்தான். அவனுடைய நிறுவனத்தைச் சேர்ந்த கப்பல் அன்று நள்ளிரவில் வந்து சேர்ந்திருக்கும். கூலியாட்கள் சரக்குகளை இறக்கத் தொடங்கியிருப்பார்கள். அவன் இன்றைக்குள் அவற்றைச் சரிபார்த்து கணக்கை எழுதியே ஆக வேண்டும். இல்லையென்றால் கடைகளுக்குப் பிரித்தனுப்பும் வேலை தாமதப்படும். தனியாகச் செல்வதால், யாரையாவது பிடித்து ஜப்பானியர்களுடனான வேலையைச் சீக்கிரம் முடித்துக் கொண்டு மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு வேலைக்குப் போவதாக அவன் சொல்லியிருந்தான்.
அவளுக்குத் துக்கமாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்னால் தெருவில் தண்ணீர் பிடிக்கும்போது சீனாவில் ஜப்பானியர்கள் பெண்களின் மார்புகளை அறுத்து வீசுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அதை நினைத்தால் இப்போதும் கூட அவளின் உடல் சிலிர்த்தது. அப்படிச் செய்ய என்ன ஒரு கொடூரமான மனநிலை வேண்டும்! கடந்த சில நாட்களாகத் தெருமுனை கடைக்குக் கூட மாமியார் அவளை அனுப்புவதில்லை. வேண்டும் பொருட்களை ஆ செங் பணியிலிருந்து திரும்பும் போது வாங்கி வந்துவிடுகிறான். அவசரமென்றால் மாமியார் சென்று வருகிறாள். பிள்ளைகளையும் வீட்டிற்குள்ளாகவே வைத்திருக்கிறார்கள். ஆ செங் இன்று கிளம்புவதில் அவளுக்கும் சுத்தமாக விருப்பமில்லை. அதை அவள் சொன்ன போது 'நான் பார்த்துக் கொள்கிறேன் மெய் லி' என்று அடக்கிவிட்டான். அம்மா சொல்லியே கேட்கவில்லை, தன்னுடையதை எப்படிக் கேட்பான்! பெருமூச்சு ஒன்றை விட்டபடி கஞ்சியைத் தூக்குச் சட்டியில் அடைத்தாள். முன்தினம் வாங்கியிருந்த ரொட்டியைப் பழுப்புக் காகிதப்பைக்குள் வைத்தாள்.
குடிநீரைப் போகுமிடத்தில் இருக்கும் தெருக்குழாயில் பார்த்துக் கொள்வதாகச் சொன்னபடி, மெய் லி கொடுத்த பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான் ஆ செங். தெரு இன்னமும் முழுதாய் விழித்திருக்கவில்லை. சைக்கிளில் கடந்து சென்ற ஓரிருவர் தவிர வேறு யாரையும் வெளியில் காணவில்லை. எதிர்சாரியின் சன்னலில் அமர்ந்திருந்த காகம் ஒன்று சீரான இடைவெளியில் விடாமல் கரைந்து கொண்டிருந்தது. இடதுபக்கம் திரும்பி நடப்பதற்கு முன்பாக முதலாளியின் கடிதம் சட்டைப் பையில் இருக்கிறதா என்று தடவிப் பார்த்துக் கொண்டான். பின்னர் அம்மாவைப் பார்த்து தலையை அசைந்துவிட்டு வேகமாய் நடக்கத் தொடங்கினான்.
மெல்ல மெல்லச் சிறிதாகி, கோட்டுருவமாய் தூரச் சென்று கொண்டிருந்த மகனைப் பார்த்த ஜிங் வெய்க்கு வருத்தமாய் இருந்தது. உதடுகள் கோண முட்டிக் கொண்டு வந்த அழுகையைச் சிரமப்பட்டு அடக்கி, 'என் மகனைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்' என தெய்வத்தை வேண்டிக்கொண்டார்.
3
வழக்கமாக அச்சாலையைப் பயன்படுத்தும் மிதிவண்டிகளும், ரிக்க்ஷாக்களும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டிருந்தன. அவை தவறியும் உட்சென்றுவிட முடியாதபடிக்கு சாலையின் தொடக்கத்திலேயே மணல் மூட்டைகளைக்கொண்டு தடுத்திருந்தார்கள். அம்மூட்டைகளுக்கு அடுத்து முட்கம்பிகள் முடுக்கப்பட்டிருந்த இடைஉயரக் கட்டைத் தடுப்பு போடப்பட்டிருந்தது. நடுவில் ஓராள் மட்டுமே செல்லக் கூடிய அளவிற்கான வழி. அவ்வழியின் ஒரு பக்கம் வெள்ளைப் பின்னணியில் பெரிய சிவப்பு வட்டம் கொண்ட ஜப்பானியக் கொடி நடப்பட்டிருந்தது. துணியிலிருந்து அவசரமாய் கிழித்து உருவாக்கப்பட்ட கொடியாய் இருக்க வேண்டும். அதன் ஓரங்களில் நூல்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதற்கு அருகில் காக்கி உடுப்பணிந்த காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களின் தொப்பியின் கீழ்ப்பகுதி பின்கழுத்து வரை நீண்டிருந்தது. கொடியைச் சரியாக வணங்காதவர்களைத் துப்பாக்கியின் பின்முனையால் முதுகில் ஓங்கித் தட்டி, நன்கு குனிந்து வணங்கும்படி சொல்லிக்கொண்டிருந்தார்கள். இன்னும் சில காவலர்கள் மணல் மூட்டைகளின் மீது நின்றவாறு உட்செல்பவர்களைக் கூர்மையாகக் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்களின் சட்டைக் காலரின் இரண்டு முனைகளிலும் சிறு சிவப்பு செவ்வகங்கள் தைக்கப்பட்டிருந்தன. அவர்களின் கைகளில் மூங்கில் கழிகள் இருந்தன.
தடுப்புக்கு முன்னால் சிறு வரிசை ஒன்று உருவாகியிருந்தது. 'நான் உங்களுக்கு எதிராகச் செயல்படுபவன் அல்ல, என்னைப் பற்றி நீங்கள் ஐயம் கொள்ளத் தேவையில்லை,' என்ற உடல் மொழியை வரவழைத்துக் கொண்டு அவ்வரிசையை நோக்கிச் சென்றான் ஆ செங்.
அவன் முறை வந்தபோது, ஜப்பானியர்களின் வழக்கங்களை முன்பே அறிந்திருப்பவன் என்பதை வெளிப்படுத்தும் வகையில், இடுப்பு வரை நன்றாக வளைந்து குனிந்து ஜப்பானியக் கொடியை வணங்கினான். நிமிர்ந்து புன்னகையுடன் காவலனைப் பார்த்து "அரிகாத்தோ" என்றான்.
"ஹாயக்கு இத்தே"
அந்தக் காவலனின் முரட்டுக் குரல் அவனது நன்றியைப் புறக்கணித்து மூர்க்கமாய் உள்ளே தள்ளியது. மூளைக்குள் சிறுதளர்வு உண்டாக, தன்னைத் தீர்க்கமாய் நோக்கியபடியிருந்த மற்ற காவலர்களின் பார்வையைத் தவிர்த்து தலை குனிந்தபடி வேகமாய் நகர்ந்தான் ஆ செங்.
இரண்டாம் தள வீட்டு ஜன்னல்களில் ஜப்பானியக் கொடிகள் புதிதாய் முளைத்திருந்தன. இன்னும் முழுதாய் விடிந்திராத அந்தக் காலையிலேயே தெரு முழுக்க மனிதர்கள். இரண்டாக வளைந்து நீண்ட வரிசையில் நின்றிருந்த, தெருவில் செய்தித்தாள்களை விரித்தும் குத்துக்காலிட்டும் அமர்ந்திருந்த, இரண்டு பக்க ஐந்தடியிலும் பாய்களையும், பண்டங்களையும் பாத்திரங்களையும், தூக்கத்திலிருந்த பிள்ளைகளையும் வைத்து இடம் பிடித்து உட்கார்ந்திருந்த மனிதர்கள். வீட்டிலிருந்து எடுத்து வந்த காலையுணவைச் சாப்பிட்டவாறு, அங்கும் இங்கும் நடந்தபடி இருந்த மனிதர்கள். அவர்களிலிருந்து புறப்பட்ட சொல் புலப்படாத கசங்கிய பேச்சுக் குரல் அத்தெருவை நிரப்பியிருந்தது.
மதியத்திற்குள் முடித்துவிட்டுக் கிளம்பமுடியுமா என்ற கவலையுடன் வரிசையின் இறுதியில் இணைந்து கொண்டான் ஆ செங். தனக்கு முன்னாலிருப்பவர்களைக் குத்து மதிப்பாய் எண்ணிப் பார்க்க, சீக்கிரம் தொடங்கி சட்சட்டென முடித்தார்களென்றால் இரண்டு மணி வாக்கிலாவது வேலைக்குச் சென்றுவிடலாம் என்று தோன்றியது. அப்படியொன்றும் சீக்கிரம் முடிந்துவிடாது என்று சொன்ன ஆடவன் வரிசையில் இவனுக்கு முன்னால், என்றோ வெளிவந்த ஸ்ட்ரெய்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஒற்றைத்தாளை இரண்டாய் மடித்து அதன் மீது குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தான். ஒரு வாரத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வரும்படி அவனிடம் சொல்லியிருந்தார்களாம். அவனது குடும்பம் ஐந்தடியில் அமர்ந்திருக்கிறதாம். இவன் அவர்களுக்காக வரிசையில் இடம் பிடித்து அமர்ந்திருக்கிறான். நிற்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பம் என்றால் இரண்டு நாட்கள் கூட ஆகும். ஆ செங்கிற்கு மலைப்பாக இருந்தது. வேலை கொடுக்கவென்றால் எதற்குக் குடும்பம்! "நற்குடிமகன் சான்றிதழ் வழங்கப் போகி றார்கள்" என்றான் முன்னால் இருந்தவன்.
ஜப்பானியர்களிடம் மொழிபெயர்ப்பாளனாக வேலை செய்யும் அவனின் மைத்துனன் சொல்லியிருக்கிறான். 'ஒருவேளை அப்படி இருக்குமோ! குடும்பத்தை அழைத்து வந்திருந்தால் ஒரே முறையாக வேலையை முடித்துச் சென்றிருக்கலாம். இன்னொரு முறை அவர்களை அழைத்து வந்து இத்தனைக் கூட்டத்தில் நின்று வாங்க முடியுமா! எத்தனை நாட்கள் விடுப்பெடுப்பது, என்று ஆ செங்கிற்குக் கவலையாக இருந்தது. வெளியே செல்பவர்கள் யாரிடமாவது சொல்லியனுப்பலாமா என்று யோசித்து வாயிலைப் பார்த்தான். உள்ளே வருகிறார்களே தவிர யாரும் வெளியே போகக் காணோம்.
இவனுக்குப் பின்னால் வந்து நின்ற லியாங் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தான். முதிராச் சிறுவனின் பாவனைகளைக் கொண்டிருந்த அவன் மிகவும் பயந்து போயிருந்தான். சீனாவைச் சேர்ந்தவனாம். ஊருக்குள் போர் நுழையப் போகிறது என்று உறுதியான நாட்களில் நன்யாங்கிற்குப் பயணித்த அவனுடைய ஊர்க்காரருடன், ஒரே பிள்ளை எங்காவது பிழைத்துக் கொள்ளட்டும் என்று அவனைக் கப்பலேற்றி விட்டிருக்கிறார்கள்.
இங்கு அவனுக்கு வாரக்கூலி வேலை. இவன் இங்கு வந்த பின்னர் ஹங் சௌவில் ஜப்பானிய இராணுவம் வீசிய குண்டில் இவர்களின் வீடு தகர்ந்து போய்விட்டதாம். யுத்தத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவைப் பற்றி தகவலே இல்லை. அம்மா உறவினர்கள் வீட்டில் இருக்கிறாள். கடந்த சில மாதங்களாக அவளையும் தொடர்புகொள்ள முடியவில்லையாம். சொல்லும் போது அழுதுவிட்டான். இங்கும் அவனுக்கு வேலை போய்விட்டிருந்தது. ஜப்பானியர்கள் சிங்கப்பூரை நெருங்கிவிட்டார்கள் என்று உறுதியாய் தெரிந்ததும், இவனது முதலாளி எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு குடும்பத்துடன் கிளம்பி ஈப்போவிற்குப் போய்விட்டிருக்கிறான். அவனுக்கு கம்யூனிஸ்ட்டுகளுடன் தொடர்பிருந்ததாம். அவனிடம் வேலை செய்ததற்காகத் தன்னையும் பிடித்துக் கொள்வார்களோ என்று அஞ்சினான் லியாங்.
"நீ வேலை செய்த இடத்தைப் பற்றி எதுவும் பேசாதே! சீனா அளவிற்கு இங்கு அவ்வளவு மோசமாக இருக்காது"
"சீனாவுக்கும் ஜப்பானியர்களுக்கும் இருப்பது வேறு விதமான பிரச்சினை. இங்கு அவர்களின் முக்கிய எதிரிகள் ஆங்கிலேயர்கள்தான். அதிகபட்சம் சீனாவை நேரடியாக ஆதரித்தவர்களைப் பிடித்துக் கொள்வார்கள். நாம் பயப்படத் தேவையில்லை"
"ஆமாம், என் மச்சினன் கூட சொன்னான், இங்கிருந்து வெள்ளையர்களை வெளியேற்றுவதற்குத்தான் இவர்கள் வந்திருக்கிறார்கள்" என்று ஆ செங் சொன்னதை ஆமோதித்தான் அவனுக்கு முன்னால் நின்றிருந்தவன்.
"நான் ஜப்பானிய நிறுவனத்தில் தான் பணிபுரிகிறேன், அப்படி ஏதாவது என்றால் உனக்கு நான் உத்தரவாதம் தருகிறேன், கவலைப்படாதே!" என்றான் ஆ செங்.
லியாங் தன் தாயைப் பற்றி சொன்ன திலிருந்து ஆ செங்கிற்குத் தன் அம்மா வின் நினைவு வந்திருந்தது. நேற்று முன்தினம் அவரிடம் லேசாக எரிச்சல்பட்டுக் குரல் உயர்த்தியதை இப்போது நினைக்கையில் குற்றவுணர்வு எழுந்தது. அவருக்கு உண்டான அனுபவத்தின் அடிப்படையில் பேசியதை இன்னும் கொஞ்சம் மென்மையாகக் கையாண்டிருக்கலாம் என்று நினைத்தான்.
4
வெயில் உச்சியேறத் தொடங்கியிருந்தது. இன்று நிச்சயம் வேலைக்குப் போக முடியாது என்பதை ஆ செங் உணர்ந்தான்.
இங்கு முக்கிய பொறுப்பிலிருக்கும் எவரையும் சந்தித்துத் தன் வேலையைச் சீக்கிரம் முடித்து அனுப்பும்படி கேட்டுவிட முடியாத அளவிற்குச் சூழல் இறுக்கமாக இருந்தது. அவனின் முதலாளியைப்போல, மேலாளர்களைப்போல, இங்கிருந்த ஜப்பானியர்கள் எளிதில் அணுகக்கூடியவர்களாய் அவனுக்குத் தோன்றவில்லை. ஊர் இருக்கும் நிலையில் தனது முன்னறிவிப்பில்லா விடுப்பை முதலாளி புரிந்துகொள்வார் என்று எண்ணினான்.
நேரம் செல்ல செல்ல வியர்வை பிசுபிசுப்பு கூடிக் கொண்டே போனது. அணிந்திருந்த சட்டை கசகசப்பை அதிகப்படுத்தியது. உடலை நனைத்தால் பரவாயில்லை என்று தோன்றியது. லியாங்கிடம் தனது இடத்தைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி, பையை வைத்துவிட்டு தெருக்குழாயின் பக்கம் நகர்ந்தான்.
குழாயைச் சுற்றிச் சிறுகூட்டம் கூடியிருந்தது. பாத்திரங்களில் நீரைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் நகரும்வரைக் காத்திருந்து கையைக் குவித்துப் பிடித்து தண்ணீரைக் குடித்தான். கொஞ்சம் நீரைப் பிடித்து தலையிலும் கழுத்திலும் ஊற்றிக் கொண்டான். ஜப்பானியர்களின் பார்வையில் படாத பக்கமாய் நின்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகைத்தான்.
அது முடியும்வரை, காவலர்களிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய் மெய்லியை அழைத்து வந்துவிடலாமா என்று யோசனை அவனுக்குள் ஓடியபடி இருந்தது. இறுதியில் எஞ்சிய சிறுதணற்துண்டை செருப்புக்குக் கீழே போட்டு நசுக்கிவிட்டு நுழைவாயில் பக்கமாக நகர்ந்தான். அவ்வப்போது வந்த ஆட்களை உள்ளனுப்பிக்கொண்டிருந்த காவலர்களில் ஒருவன், வாயிலை நெருங்கிய ஆ செங்கை நோக்கி துப்பாக்கியை அசைத்து முறைக்க, ஆ செங் தன் பையை வைத்திருந்த இடத்திற்கே மீண்டும் வந்து நின்றுகொண்டான்.
வெயில் தோலை சுள்ளென உறுத்தத் துவங்கிய போது வரிசை இன்னொரு வளைவு வளைந்து உள்நுழைபவர்களுக்கு எதிர்த்திசையில் சென்றுகொண்டிருந்தது.
தூரத்தில் கியாட்டும் ஹுவாங்கும் நின்றிருப்பதைக் கவனித்த ஆ செங், தன் இடத்திலிருந்தபடியே அவர்களை நோக்கிக் கைகளை ஆட்டினான். கியாட்டின் முகம் இறுகியிருந்தது. சாதாரணமாகவென்றால் அங்கு சென்று அவர்களுடன் சற்று நேரம் உரையாடிவிட்டு வந்திருப்பான். இப்போதிருந்த சூழலில் கியாட்டின் வார்த்தைகளைக் கேட்கும் நிலையில் அவன் இல்லை. அதோடு அவனுக்குத் தன் இடத்தை விட்டு நகர யோசனையாக இருந்தது. அவ்வப்போது கூட்டத்தினூடாக வந்து சென்ற ஜப்பானியக் காவலர்களுக்கு, தங்களைச் சரியாகக் குனிந்து வணங்காதது, தாங்கள் செல்லும் வழியின் குறுக்காக நிற்பது, சத்தமாகப் பேசுவது போன்ற அற்பக் காரணங்கள் எதிரிலிருந்தவர்களைத் தாக்கப் போதுமானதாய் இருந்தன. அதிலும் மூக்கிற்குக் கீழ் அப்போது தான் வளரத் தொடங்கிய மென்மையான மீசையைக் கொண்டிருந்த அந்தக் காவலன், மிஞ்சிப் போனால் இருபது வயது இருக்கும், தனித்துத் தெரிந்தவர்களையெல்லாம் நுனிபிளந்த மூங்கில் கழியொன்றால் ஓங்கியடித்துக் கொண்டிருந்தான். பின், தன் கைவேலையை ரசிப்பவன் போல நின்று, அடிபட்ட இடத்தை அழுத்திப் பிடித்துச் சுருண்டு ஒதுங்குபவர்களைப் பார்த்துவிட்டு நகர்பவனாய் இருந்தான். நேரம் மெல்லமாய் சென்றுகொண்டிருந்தது.
- தொடர்ச்சி அடுத்த வாரம்

