ஆர்க்கிட் மலர்

ஆர்க்கிட் மலர்

11 mins read

சிறுகதை

ஷோபா குமரேசன்

உறக்­கம் என்­னி­டத்­தில் இருந்து விலகி சமூக இடை­வெளி விட்டு நின்­றது. ஏதோ என்­னு­டைய செங்­காங் வட்­டா­ரத்­தில் நான் மட்­டுமே தனி­மை­யில் தவித்­துக்கொண்­டி­ருப்­ப­தைப் போல ஓர் உணர்வு. எங்­கும் ஒரே அமைதி.

கடந்த ஆறு மாதத்­திற்கு முன்பு வரை, கொரோ­னா­விற்கு முன் உல­கம் சாதா­ர­ண­மாக இயங்­கிக் கொண்­டி­ருந்­த­தைப் போல் என்­னு­டைய வாழ்க்­கை­யும் சுமுக­மா­கவே சென்று கொண்­டி­ருந்­தது. ஆனால் அண்மை கால­மாக ஏகப்­பட்ட பிரச்­சி­னை­கள், சங்­க­டங்­கள் என உரு­வாகி காட்டு மரங்­களில் தானா­கவே பட­ரும் களைக்­கொ­டி­க­ளைப் போல என்­னைச் சுற்­றிப் படர்ந்து பாடாய்ப்­ப­டுத்த செய்­வ­த­றி­யாது குழம்­பித் தவித்­தேன்.

வெகு நேர­மாக மெத்­தை­யில் மல்­லாக்­கக் கிடந்து சுத்­துற காத்­தா­டியை வெறித்­துப் பார்த்­துக் கொண்­டி­ருந்­த­தில் தலை­வலி வந்தது­தான் மிச்­சம்.

மெல்ல எழுந்த நான், மகள் கம­லி­யின் அறைக்­க­த­வைத் திறந்­தேன்.

பாவம் குழந்தை! நன்­றாக அயர்ந்து தூங்­கிக்கொண்­டி­ருந்­தாள். அந்த மாத்­தி­ரை­யைப் போட்­டாலே இப்­ப­டித்­தான், குறைந்­தது ஆறு மணி நேரம் அவ­ளி­டம் எந்த அசை­வும் இருக்­காது. செல்­லமே! என் வாழ்க்­கையை வசந்­த­மாக்க வந்­த­வளே! உனக்கு என்­ன­தாம்மா பிரச்­சினை? என எண்­ணித் தவித்த என் மனம் விடை­யைக் கண்­டு­பிடிக்க முயன்று தோற்­றுப் போனது.

'எல்­லாம் என்­னால வந்­த­து­தான். நான் அன்று மல­ரி­டம் அப்­படிப் பேசி­யி­ருக்­கவே கூடாது. பெற்­றோர் செய்த பாவம் பிள்­ளை­கள் தலை­யில விடி­யும்னு சொல்­லு­வாங்­களே? அதான் கம­லிக்கு இப்­படி ஆச்சோ?' யோசித்த எனக்கு விழி­யோ­ரம் கண்­ணீர் எட்­டிப் பார்த்­தது.

மாநி­றத்­தை­விட சற்று தூக்­க­லான நிறம், முட்டை வடிவ முகத்­தில் அழ­கான பழுப்பு நிற விழி­கள், நடு­வ­கிடு எடுத்­துப் போட்ட குதி­ரை­வால் பின்­னல், வீட்டை எந்­நே­ர­மும் கல­க­லப்­பான பட்­டி­மன்ற அரங்­கைப் போல வைத்­துக் கொள்­ப­வள். இது­தான் என் கமலி.

அந்­தப் பிஞ்சு மன­திற்­குள் நிறைய இனி­மை­யான பக்­கங்­கள். கற்­ப­னைக் கதை­கள் அவ­ளு­டைய நாவில் சர­ள­மா­கத் தாண்­ட­வ­மா­டும்.

பெண் குழந்­தை­கள் அப்­பா­விற்கு இன்­னொரு தாய்­தான் போலும். அவ­ளு­டைய கதை­க­ளைக் கேட்டு நான் கண்­ண­யர்ந்த நாட்­களும் உண்டு.

தாயி­டம் தப்பி வந்த கல்­லும் மண்­ணும்­கூட, மக­ளின் கைப்­பட்­டால் காந்­தச் சிலை­யா­கும்! என்ன ஆழ­மான வரி­கள். ஆம், நானும் என் மக­ளுக்­காக என்­னால் விடவே முடி­யாது என்று நினைத்த சில பழக்­க­வ­ழக்­கங்­க­ளைக்­கூட அறவே துறந்­தேன்.

தூக்­கம் முற்­றி­லு­மாக தொலைந்­துப் போய் வீட்­டுக் கூடத்­தில் வந்­த­மர்ந்­தேன்.

எதிரே இருந்த சுவ­ரில் மாட்­டப்­பட்­டி­ருந்த புகைப்­ப­டத்­தில் என்­ன­வள் சிரித்­துக் கொண்­டி­ருந்­தாள்.

அவளை ஏக்­கத்­து­டன் உற்று நோக்­கிய நான், 'என்­னோட வாழ்ந்­தது போதும்னு நீ போயிட்ட, என் நிலை­மை­யைப் பாத்­தியா?' என புலம்­பி­ய­வாறே பெரு­மூச்சு விட்­டேன்.

மணி நள்­ளி­ர­வைக் கடந்து கடி­கார முட்­கள் முன்னே செல்ல, என் நினை­வு­கள் பின்­னோக்­கிப் பய­ணப்­பட்­டன. அப்­போது கமலி தொடக்­க­நிலை ஆறில் அடி­யெ­டுத்து வைத்த நேரம். ஒரு நாள் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்த எனக்கு பள்­ளி­யி­லி­ருந்து அழைப்பு வந்­தது.

"கமலி, வர வர படிப்­புல கவ­னம் செலுத்­து­ற­தில்ல. அத­னால பள்­ளி­யில இருக்­கிற ஆலோ­ச­கர்ட்ட அனுப்­பி­னோம். ஆனால் அங்­கே­யும் பேசா­மல் அமை­தி­யாவே இருக்­கான்னு சொல்­றாங்க. வீட்ல நீங்க பேசிப் பாருங்­க­ளேன்," என்­றார் ஆசி­ரி­யர். அதைக் கேட்டு திடுக்­கிட்ட நான் அண்மை நாட்­க­ளாக வீட்­டில் நடந்த சில நிகழ்­வு­க­ளை­யும் அசை­போட்­டுப் பார்த்­தேன்.

எப்­போ­தும் எனக்­காக காத்­தி­ருந்து பேசி சிரித்­த­படி சாப்­பி­டும் அவ­ளின் நட­வ­டிக்கை காணா­மல் போயி­ருந்­தது.

படிப்பு சுமை­யாக இருக்­கும் என நானும் அதை பெரி­து­ப­டுத்­தா­மல் விட்­ட­தன் விளைவை எண்ணி வருந்­தி­ய­தோடு, இன்று அவ­ளி­டம் பேசியே ஆக­வேண்­டும் என முடி­வெ­டுத்­தேன்.

அன்று இரவே கம­லி­யி­டம்,

"என்­னம்மா, உடம்­புக்கு ஏதா­வது பண்­ணுதா? சோர்­வாவே இருக்­கியே, படிப்­பெல்­லாம் புரி­யு­தாம்மா?" என்­றேன்.

"புரியுதுப்பா" என்று என் கடைசி கேள்­விக்கு மட்­டும் ஒற்றை வார்த்­தை­யில் அவள் பதி­ல­ளித்­தாள்.

என் கம­லியா இது? ஒண்ணு கேட்­டாலே ஒரு மணி நேரம் பேசு­வாளே! ஏதோ எனக்கு தவ­றாய்ப் பட, நிலை­மை­யின் தீவி­ரம் எனக்­குப் புரிந்­தது.

'ஒரு வேளை என்­னி­டம் சொல்ல முடி­யாத பிரச்­சி­னை­யாக இருக்­குமோ?' என சந்­தே­கித்­த­வ­னாய் அடுத்த நாள் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­றேன். அங்கே அவ­ளைப் பரி­சோ­தித்த மருத்­து­வர், "பூப்­பெய்­தும் பரு­வத்­தில் நிறைய பெண் பிள்­ளை­கள் சந்­திக்­கும் ஹார்­மோன் பிரச்­சி­னை­தான். ஒரு மாதத்­திற்கு மாத்­திரை தர்­றேன். நல்லா தூக்­கம் வரும். அதன் பிற­கும் எந்த மாற்­ற­மும் இல்­லேன்னா மன­நல மருத்­து­வ­ம­னைக்கு இந்த பரிந்­துரைக் கடி­தத்­தோடு ஆலோ­ச­னைக்கு அழைச்­சிட்­டுப் போயி­டுங்க," என்­ற­படி கடி­தத்தை நீட்­டி­னார்.

அப்­போது வெளி­யில் கடை­சிப் பேருந்து சென்ற சத்­தம் என் நினை­வைக் கலைத்­தது. சாள­ரத்­தின் வழியே எட்­டிப்­பார்த்த எனக்கு சிங்­கப்­பூரே கறுப்­புக் குடைக்­குள் மூழ்­கி­யது போல தோன்­றி­யது.

சுமார் முப்­பது வயது மதிக்­கத்­தக்க ஒரு மாது மட்­டும் அந்த பேருந்­தி­லி­ருந்து இறங்கி வீட்டை நோக்கி ஓட்­ட­மும் நடை­யு­மாக விரை­வது புலப்­பட்­டது.

மல­ருக்­கும் இப்போ இதோ இந்த மாது வய­தி­ருக்­கும். அவ­ளைப் பார்த்து எப்­ப­டி­யும் நான்கு வரு­டங்­கள் இருக்­குமா? இப்போ எங்க இருக்­கான்னே தெரி­ய­லையே... அவ வேலை செஞ்ச கடை­யில எத்­தனை தடவை தேடி அலைஞ்­சாச்சு..

கடை­சியா அவ பேசி­னப்ப அந்த குரல்ல இருந்த பதற்­றம் இன்­னும் என் செவி­யில ஒலிச்­சிக்­கிட்­டுத்­தான் இருக்கு.

திறன்­பேசி எண்ணை மாற்­றி­ய­தோடு, வேலை­யை­யும் விட்­டுட்­டாளே... அவ கண­வர் இறந்த செய்தி கூட அவ­ளோட கடை­யில வேலை பாத்­த­வங்க சொல்­லித்­தான் தெரிய வந்­துச்சு... அந்த நாள்­ல­தான் அவ என்­னைக் கடை­சியா அழைச்­சது...

ஒரு வேளை, அந்த துக்­கச் செய்­தியை சொல்­லத்­தான் என்னை அழைச்­சி­ருப்­பாளோ? அன்­னக்கி அலு­வ­ல­கக் கூட்­டத்­தில பெரிய பிரச்­சினை.

மேல­தி­காரி என்னை உண்டு இல்­லைன்னு புரட்­டிப் போட்டு கேள்வி கேட்­டுட்டு இருந்­தாரு...அந்த நேரம்னு பாத்தா அவ அழைப்பு வர­ணும்? அதான் அப்­படி பேசிட்­டேன்... யோசித்­துப் பார்த்த எனக்கு துக்­கம் தொண்­டையை அடைத்­தது.

அப்­போது கம­லி­யின் அறை­யில் இரு­மல் சத்­தம் கேட்டு விரைந்­தேன். நல்­ல­வேளை தூக்­கத்­தில்­தான் இருந்­தாள்.

அவ­ளு­டைய சுருண்ட கேசத்தை வரு­டி­ய­வாறு அரு­கி­லேயே அமர்ந்­தேன்.

மருத்­து­வர் சொன்ன மாதிரி ஒரு மாதம் முடி­யப் போகி­றதே! ஆனால் இவ­ளி­டம் எந்த முன்­னேற்­ற­மும் இல்லை.

வாரத்­துல இரண்டு நாள் பள்­ளிக்­குப் போறா. மீதி நாள் தலை­வலின்னு படுத்­து­டுறா.

போதாக்­கு­றைக்கு சரியா சாப்­பி­டு­ற­தில்­லைன்னு பணிப்­பெண்­ணி­ட­மி­ருந்து புகார் வேறு.

இப்­போல்­லாம் அலு­வ­ல­கத்­துல என்­னால நிம்­ம­தியா வேலை­கூட செய்ய முடி­யலை என உள்­ளுக்­குள் வெம்பிப் புழுங்­கி­னேன்.

சிந்­தித்த நான் இனி­யும் தாம­திக்­கா­மல் மன­நல மருத்­து­வ­ரி­டம் ஆலோ­சனை பெறு­வ­து­தான் இதற்­குச் சரி­யான தீர்வு என முடி­வெ­டுத்­தேன்.

மன­நல மருத்­து­வ­ம­னைக்கு கம­லி­யோடு சென்ற எனக்கு, அந்­தச் சூழலே மிக­வும் வித்­தி­யா­ச­மா­கப் பட்­ட­தோடு உள்­ளத்­தைக் கசக்­கிப் பிழிந்­தது.

அங்கே அவ்­வப்­போது சில பிள்­ளை­கள் வரு­வ­தும் போவ­து­மாக இருந்­தார்­கள். சீட்­டுக்­கட்டை குலுக்கி ஒவ்­வொன்­றாக எறி­வது போல, எனக்­குள் இருந்து அடுக்­க­டுக்­காக கேள்­வி­கள் பறந்­தன.

இத்­தனை பிள்­ளை­கள் ஆலோ­ச­னைக்­காக வரு­கி­றார்­களா? அப்­படி இந்த வய­தில் என்­ன­தான் பிரச்­சினை?

ஓடி­யாடி விளை­யாட வேண்­டிய பரு­வ­மல்­லவா? அப்­போது ஒரு தாதி வந்து என்னை வெளி­யி­லேயே காத்­தி­ருக்­கச் சொல்­லி­விட்டு முத­லில் கம­லியை மட்­டும் உள்ளே அழைத்­துச் சென்­றார்.

அறைக்கு வெளி­யில் இருந்த இருக்­கை­யில் அமர்ந்து சற்றே என்னை அமை­திப்­ப­டுத்­திக் கொண்­டேன்.

எதிர்த்திசை­யில் சற்­றுத் தள்ளி சீரான வரி­சை­யில் ஆர்க்­கிட் மலர் தொட்­டி­கள் வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அதைப் பார்த்­த­தும், மலர் விமா­னப் பய­ணத்­தில் பேசிய நினை­வு­கள் என்­னுள் மலர ஆரம்­பித்­தன.

நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்பு அலு­வ­ல­கத் திட்­டப்­ப­ணிக்­காக இந்­தியா சென்று விட்டு சிங்­கப்­பூ­ருக்கு திரும்­பிக்கொண்­டி­ருந்­தேன்.

நாம் ஒவ்­வொ­ரு­வ­ருமே பய­ணத்­தின்­போது வெவ்­வேறு குணா­தி­ச­யங்­க­ளைக் கொண்ட மனி­தர்­களைக் கடந்து வந்­தி­ருப்­போம். அன்று நான் பய­ணம் செய்த விமா­னத்­தில் என் இருக்­கைக்கு அரு­கில் சுமார் இரு­பத்தி நான்கு வயது மதிக்­கத்­தக்க ஓர் இளம்­பெண், கையில் ஒரு சிறிய மஞ்­சள் நிறப் பையை இறுக்­கப் பிடித்­த­படி அமர்ந்­தி­ருந்­தாள். அவள் காது­களில் அடைக்­கப்­பட்ட பஞ்­சும், விமா­னம் புறப்­ப­டும்­போது இருக்­கைப் பட்­டை­யைப் போட தடு­மா­றிய வித­மும் அது அவ­ளின் முதல் விமா­னப் பய­ண­மாக இருக்­க­லாம் என என்னை எண்ண வைத்­தது.

நான் அச­தி­யில் என்­னு­டைய இருக்­கை­யைப் பின்­னால் நகர்த்தி உடலை சற்று தளர்த்­திக்­கொண்டு அமர்ந்­தேன்.

சிறிது நேரத்­தில் விமா­னப் பணிப்­பெண் பானங்­க­ளைக் கொண்டு வர எனக்கு இருந்த உடல் அச­தி­யில், "ஒயின் ப்ளீஸ்" என்­றேன். அப்­போ­து­தான் அவளைப் பற்­றிய நினைவு வர, அவள் ஏதும் சங்­க­டப்­ப­டு­வாளோ என ஐயம் தோன்­றி­யது. தயங்­கி­யப்­ப­டியே அவ­ளி­டம், "உங்­க­ளுக்கு ஏதும் ஆட்­சே­பனை இல்­லேன்னா, நான் ஒயின் எடுத்­துக்­க­லாமா?" என்று கேட்க, அவளோ "உங்­கள் விருப்­பம்" என்­றாள். அவள் அவ்­வாறு கூறி­னா­லும் ஏனோ ஒயினை அன்று தவிர்க்க முடிவு செய்­தேன்.

அதன் பிறகு அந்­தப் பெண்­ணுக்கு என் மீது சற்று நம்­பிக்கை வந்­த­து­போல் தோன்ற, அதற்கு அடை­யா­ள­மாக ஒரு புன்­சி­ரிப்பை உதிர்த்­தாள். நான் அவ­ளி­டம்,

"சிங்­கப்­பூர்ல எங்க, உற­வி­னர் வீட்­டுக்கா?" என்­றேன்.

"இனி­மேல்­தான் அறி­மு­க­மாகி உற­வி­னர் ஆக­ணும்," என்றாள்.

என்ன குழப்­ப­மான பதில் இது? யோசித்த என் முக ரேகை­களை படித்­த­வ­ளாய், "கல்­யா­ணத்­துக்­குப் போறேன்," என்­றாள். இப்­படி முன்­னா­டியே தெளிவா சொல்­லி­யி­ருக்­க­லாம் என நினைத்­த­வாறே, "வேறு யாரும் கூட வர­லையா?" என்­றேன்

"கல்­யா­ணப்­பொண்ணு நானி­ருந்தா பத்­தாதா?" என்று அவள் கூற, ஏதோ விமா­னமே ஆட்­டம் கண்டு கீழே இறங்­கு­வ­தைப் போல் அதிர்ந்­தேன்.

"என்ன சொல்­றீங்க, உங்­க­ளுக்­குக் கல்­யா­ணமா?" என நம்­பா­மல் கேட்ட என்­னி­டம் அவள் கையில் வைத்­தி­ருந்த அந்த மஞ்­சள் நிறப் பையி­லி­ருந்து ஊரில் செய்­யப்­பட்ட தாலி, திரு­மண அழைப்­பி­தழ் மற்­றும் சில சடங்கு சம்­பி­ர­தா­யப் பொருள்­களை எடுத்­துக் காட்­டி­னாள். அவள் திரு­மண அழைப்­பிதழை என்­னி­டம் நீட்ட, அவ­ளின் பெயர் மலர் என புரிந்துகொண்­டேன்.

"ஏன் இப்­படி தனியா?" என நான் அதற்கு மேல் வார்த்தை வரா­மல் இழுக்க, அவ­ளி­டம் சற்று நேர அமைதி. 'தேவை­யில்­லாம அதி­கமா உரிமை எடுத்து கேட்­டுட்­டேனோ? முன்­பின் அறி­மு­க­மில்­லாத என்­னி­டம் இதெல்­லாம் பகிர அவ­சி­ய­மில்லை என பேசாம இருக்­காளோ?' எனக்­குள் கேள்வி பிறந்து குற்ற உணர்வு குறு­கு­றுத்­தது.

சற்று நேரத்­தில் விமா­னம் சீரான வேகத்­து­டன் மேலே பறக்க, உள்ளே விளக்கு அணைக்­கப்­பட்டு விமா­ன­மும் அவ­ளைப் போலவே மௌன­மா­கி­யது.

பய­ணி­களில் சிலர் தூங்க ஆயத்­த­மா­னார்­கள். அப்­போது மலர் என்ன நினைத்­தாளோ தெரி­ய­வில்லை, திடீ­ரென்று என்­னி­டம், "நீங்க சிங்­கப்­பூர்­வா­சியா?" என்று கேட்க, நானும் அதை ஆமோ­தித்து தலை­ய­சைக்க அவள் இப்­போது அதிக நம்­பிக்­கை­யு­டன் பேசத் துவங்­கி­னாள்.

"நான் தஞ்­சா­வூர் பக்­கம். எனக்கு பெத்­த­வங்க கிடை­யாது. சித்தி வீட்ல தங்கி கிடைச்ச சின்­னச் சின்ன வேலையை செஞ்­சிக்­கிட்டு தட்­டுத்­த­டு­மாறி பனி­ரெண்­டா­வது வரை­யி­லும் படிச்சு, பள்­ளி­யில இரண்­டா­வதா வந்­தேன்," என்று சொல்­லி­விட்டு என்னை நிமிர்ந்து பார்த்­த­வ­ளின் கண்­களில் ஒரு­வி­தப் பெரு­மி­தம். அவ­ளுக்கு படிப்­பின் மேல் அலா­தி­யான விருப்­பம் என்­பது எனக்கு தெளி­வா­கப் புரித்­தது. அவளே தொடர்ந்­தாள்.

"வீட்­டுச் சூழ்­நிலை அதுக்­கப்­பு­றம் படிக்க முடி­யலை. இப்­ப­தான் யாரோ சொல்லி சிங்­கப்­பூர்ல மாப்­பிள்ளை இருக்க செய்­தியை சித்தி தெரிஞ்­சிக்­கிட்டு என்­னைப் பேசி முடிச்சு ஏத்­தி­விட்­டாங்க," என்று பெரு­மூச்­சு­டன் நிறுத்­தி­னாள்.

"நல்­ல­து­தானே மலர், சீக்­கி­ரமே சிங்­கப்­பூர் மரு­ம­க­ளா­கப் போறேன்னு சொல்­லுங்க. கட்­டிக்­கப் போற­வரு என்ன பண்­றார்?" என நான் விசா­ரித்­த­தும் அவ­ளு­டைய அந்த முகம் வெளி­றிப்போன­து­டன் கண்­கள் கலங்­கின.

"மன­நிலை சரி­யில்­லா­த­வ­ருக்கு வாழ்க்­கைத் துணை­யா­கப் போறேன்," என்­றாள் சன்­ன­மான உடைந்த குர­லில்.

அதிர்ச்­சி­யின் விளிம்­பிற்கே சென்ற எனக்கு, அப்­போ­து­தான் அவ­ளின் இக்­கட்­டான நிலை­மை புரிந்­தது. ஏதோ அதி­ச­யத்­தைப் பார்த்­தது போல் எனக்­குள் ஒரு பிரம்­மிப்பு!

எந்­தப் பெண்­ணும் எடுக்­கத் தயங்­கும் முடிவை சர்­வ­சா­தா­ர­ண­மாக எடுத்துவிட்­டாளே! நான் அதிர்ச்­சி­யில் பேச்­சி­ழக்க அவ­ளே தொடர்ந்­தாள்.

"போற இடம் சிங்­கப்­பூ­ராச்சே, எப்­ப­டி­யும் பிழைச்­சிக்­க­லாம்னு ஒரு நம்­பிக்­கை­யில நானும் கிளம்­பிட்­டேன். அவ­ரை­யும் சரி பண்ண முயற்­சிக்­க­ணும். ஏதா­வது உதவி தேவைப்­பட்­டால் உங்­களை அழைக்­க­லாமா?" எனக் கேட்­டாள்.

"நிச்­ச­யமா மலர். முதல்ல என் எண்ணை குறிச்­சிக்­கங்க," என்றேன்.

அவ­ளி­டம் அப்­போது திறன்­பேசி இல்­லா­த­தால் ஒரு துண்­டுக் காகி­தத்­தில் என் எண்ணை எழு­திக்­கொண்டு அவளே என்னை தொடர்­பு­கொள்­வ­தாய் கூறி­னாள்.

அந்­தத் காகி­தத்­தின் பின்­பு­றம் அவள் போக வேண்­டிய சிங்­கப்­பூர் வீட்­டின் முக­வ­ரி­யும் இருந்­தது.

விமா­னம் தரை­யி­றங்க, நாங்­கள் வெளி­யேறி பயண மூட்­டை­களை எடுக்க விரைந்­தோம்.

விமான நிலை­யத்­தின் உள்ளே வழி­யெங்­கும் வியப்­போடு பார்த்­துக் கொண்டே வந்­த­வ­ளின் விழி­கள் ஓரி­டத்­தில் நிலை­குத்தி நிற்க, அந்­தத் திசை­யில் திரும்­பி­னேன்.

"இது­தான் சிங்­கை­யின் தேசிய மலர், ஆர்க்­கிட்" என்று ஒரு மல­ரைப் பற்றி இன்­னொரு மல­ரி­டமே கூறி­னேன். கேட்ட அவள், "பார்க்­கவே ரொம்ப அழகா இருக்கே!" என பூரித்­தாள்.

பேசி­ய­வாறே வெளியே வந்து வாடகை உந்து வண்­டி­யில் முத­லில் அவளை ஏற்றி விட்டு பிறகு நான் வீடு திரும்­பி­னேன்.

நாட்­கள் நகர்ந்­தன. பிறந்த குழந்­தை­யை­விட்டு நகர முடி­யாத தாயைப் போல என்­னால் என் திறன்­பே­சியை விட்டு அக­லவே முடி­ய­வில்லை. உள்­ளுக்­குள் ஒரே தவிப்பு.

இந்­நே­ரம் மல­ருக்கு கல்­யா­ணம் ஆயி­ருக்­குமே! ஏன் என்னை இத்­தனை நாட்­க­ளாக அழைக்­கவே இல்லை?

வேறு யாரே­னும் உதவி செய்­தி­ருப்­பாங்­களோ?

எந்த புது எண்­ணி­லி­ருந்து அழைப்பு வந்­தா­லும் பாய்ந்­து­சென்று எடுத்து ஏமாந்­த­து­தான் மிச்­சம்.

என் தவிப்­புக்கு மருந்­தாக கிட்­டத்­தட்ட மூன்று மாதம் கழித்து அவ­ளி­ட­மி­ருந்து அழைப்பு வந்­தது.

யாரோ கண­வர் வழி தூரத்து உற­வி­னர் அவளை ஒரு கடை­யில் காசா­ளர் வேலைக்கு சேர்த்­து­விட்­ட­தா­கக் கூறி­னாள். அவ­ளது குர­லைக் கேட்­ட­தும் எனக்­குள் நிம்­மதி பர­வி­யது. காத்­தி­ருக்க பொறு­மை­யின்றி, அன்று மாலையே அவ­ளைப் பார்க்க சென்ற நான்,

"எப்­படி இருக்­கீங்க மலர்?" என்­றேன்.

"இருக்­கேன், கல்­யா­ணம் மட்­டும் ஆயி­டுச்சி". கழுத்­தில் தொங்­கிய தாலிக்­க­யிறு புதுப் பொலி­வு­டன் இருந்­தா­லும் அவள் மெலிந்த உட­லு­டன் இன்­னும் பழைய மல­ரா­கவே இருந்­தாள்.

"வேலை பர­வா­யில்­லையா மலர்?"

"ஏதோ போகுது. அவ­ருக்கு மருத்­து­வச் செலவு வேற அதி­கமா ஆகுது. ஏதா­வது படிச்­சிட்டு வேற வேலைக்கு மாறினா நல்­லது. கொஞ்­சம் உதவி பண்­றீங்­களா?" என்­ற­வ­ளி­டம், "சரி மலர். இங்க படிக்க நிறைய வாய்ப்­பு­கள் இருக்கு, நான் எல்­லாத்­தை­யும் விசா­ரிச்­சிட்டு அதற்­கான ஏற்­பாட்­டோடு ஒரு வாரத்­துல உங்­களை திரும்­ப­வும் வந்து பாக்­கு­றேன்," என்­ற­படி விடைபெற்­றேன். ஆனால் அடுத்த நாளே அலு­வ­ல­கக் கூட்­டத்­தில் பிரச்­சி­னை­யின்­போது அழைப்பு வர, "நான்­தான் விசா­ரிக்­கி­றேன்னு சொன்­னனே, அதுக்­குள்ள அவ­ச­ரப்­பட்டா எப்­படி மலர்?" என்­ற­படி அவள் பதி­லைக்­கூட கேட்­கா­மல் அழைப்­பைத் துண்­டித்­தேன். அதற்­குப் பிற­கு­தான் தெரிந்­தது நான் செய்­தது எவ்­வ­ளவு பெரிய தவறு என்று, அன்­று­தான் அவ­ளு­டைய கண­வர் இறந்­தி­ருக்­கி­றார்.

அப்­போது ஒரு தாதி வந்து அழைக்க, சுய நினைவு அடைந்த நான் மருத்­து­வர் என்ன சொல்­லப் போகி­றாரோ என்ற பரி­த­விப்­பு­டன் கால்­கள் நடுங்க உள்ளே நுழைந்­தேன்.

கமலி அங்­குள்ள நாற்­கா­லி­யில் தலை­யைக் கவிழ்ந்­த­படி அமர்ந்­தி­ருக்க, குளிர்­சா­தன வசதி கொண்ட அறை­யி­லும்­கூட எனக்கு மெல்­லி­ழைத் தாள் தேவைப்­பட்­டது.

மருத்­து­வர் என்­னி­டம், "கம­லி­யி­டம் பேசி­னோம். அவ­ளுக்கு அப்பா மட்­டும்­தான்னு சொன்னா. அவ பரு­வ­ம­டை­யும் நிலை­யில இருக்­கால்ல.. சில பெண்­க­ளுக்கு இப்­ப­டித்­தான் கார­ண­மில்­லா­மல் மன­நிலை மாற்­றம், மன அழுத்­தம் உண்­டா­கும். ஆலோ­சனை கொஞ்­சம் கொடுத்தா எல்­லாம் தெளி­வா­யி­டுவா. அதுக்­காக கம­லிக்கு நல்ல அனு­ப­வ­முள்ள ஊழி­யரை நிய­மிச்­சி­ருக்­கேன்," என்­றார்.

அப்­போது கதவு திறக்­கப்­படும் ஓசை கேட்க, "வாங்க மலர்," என்­றார் மருத்­து­வர்.