நோன்பிரு

நோன்பிரு

1 mins read

பொய், புறம் தள்ளி

மெய்யொன்றே பேச

வாய்ப்புலம் காக்க

நோன்பிரு

ஊடும் மணம் துறந்து

உள்மணம் நுகர

நுகர்ப்புலம் காக்க

நோன்பிரு

ஒளிகளைத் தாண்டி

இருளிலும் பார்க்கும்

விழிப்புலம் காக்க

நோன்பிரு

வெளியொலி தாண்டி

உள்ளொலி கேட்க

செவிப்புலம் காக்க

நோன்பிரு

அணுத்துகள் கடந்து

நுண்துகள் உணரும்

கட்புலம் காக்க

நோன்பிரு

ஐம்பொறிகள்தான்

ஊம்புலன்க ளென்று

அறிவால் தெளிய

நோன்பிரு

தனித்து

விழித்து

பசித்துக்கிடந்து

படைத்தவன் உனக்குள்

படர்ந்தது புரிய

நோன்பிரு

உணவுகள் இன்றி

உழலும் பலரின்

உணர்வுகள் புரிய

நோன்பிரு

ஈயாத செல்வம்

இழிவாகும்

உறவுகள் பகைக்கின்

அழிவாகும்

ஈகையின் மடியில்

நோன்பிரு

இறைநேசர் அண்ணல்

இறைத்தூதரென

இறைத்துவம் பெற்றது

ரமலானில்

ஆதிஅந்தமற்றவன்

அருள்மறை தந்ததும்

ரமலானில்

அந்த ரமலானைப் போற்றி

நோன்பிரு

மண்ணுக்கும்

விண்ணுக்குமாய்

விழுதாக நோன்பு

பற்றி ஏறு

பல்லுயிர் ஓம்பு

இறைக்கரம் இனி

உன் இருகரமே

- அமீதாம்மாள்