ஆட்டுக்கார கிழவி

ஆட்டுக்கார கிழவி

11 mins read

சிறுகதை

கி. சுப்பிரமணியம்

கருத்த மேனி­யில், சாதா­ரண நூல் சேலை கட்டி, ரவிக்கை எது­வும் போடாத கிழக் கோலம்! பஞ்­ச­டைந்த தலை­ம­யிர். அதி­கம் கோதாத அந்த தலைக்­குள்­தான் எப்­பேர்ப்­பட்ட அனு­ப­வம், அறிவு, ஆற்­றல்! ஆடு­கள் மேய்த்துத் திரிந்தபோதும், மக்­க­ளுக்கு வைத்­தி­யம் பார்க்­கும் திறனை எங்கு கற்­றதோ இக்­கி­ழவி என்­பதே அந்த வட்­டா­ரத்­தில், பல­ருக்­கும் ஏற்­பட்ட ஆச்­ச­ரி­யம். அது ஒருபுறம் இருக்க, இப்­படி ஆடு­கள் மேய்க்­கும் சூழல் அக்­கா­லத்­தில், சிங்­கப்­பூ­ரில் இருந்­ததை இன்­றைய தலை­முறை கற்­பனை செய்துகூட பார்க்க முடி­யாது! ஆயி­னும் ஒரு அறு­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் இந்தச் சூழல் இருக்­கத்­தான் செய்­தது!

சிறிய இரப்­பர் தோட்ட மேடு. அங்கு சில தகரக் கூரை­களைக் கொண்ட வீடு­கள். பல இனத்­திற்­கி­டை­யி­லும் ஒற்­று­மை­யாக வாழும் சில தமிழ்க் குடும்­பங்­கள். அங்கேதான் இந்த கிழ­வி­யும் வாழ்ந்து வந்­தது. அதன் பூர்­வீ­கம் சரி­யாகத் தெரி­ய­வில்லை.

கொஞ்­சம் ஆடு­கள் வைத்து மேய்த்து வந்­த­தால் இக்­கி­ழ­வியை ஆட்­டுக்­காரக் கிழவி என்றே எல்­லோ­ரும் அழைக்க ஆரம்­பித்­த­னர். அதுவே அதன் பெய­ராக நிலைத்துப் போயிற்று.

யாருக்­கா­வது உடம்­பில் சுளுக்கு ஏற்­பட்­டாலோ, பிர­சவ வேதனை ஏற்­பட்­டாலோ, இந்தக் கிழ­வியை அழைத்தே மருத்­து­வம் பார்த்­தார்­கள்.

மகப்­பேற்­றின்போது அதி­க­மாக வலி தெரி­யா­த­படி இருக்க, சில மாதங்­க­ளுக்கு முன்­பா­கவே இந்த கிழ­வியைக் கூப்­பிட்டு, வாரம் ஒரு­முறை உரு­வி­விட அழைப்­பார்­கள். இந்தக் கிழ­வி­யும் வந்து மிக­வும் பக்­கு­வ­மாக கரு­வுற்ற பெண்­ணின் வயிற்றை மெல்ல நீவி விடு­வாள்.

அவ­ளின் திற­மை­யான விரல்­கள், பிறக்­கப்­போ­கும் மகவை பக்கு­வ­மான கோணத்­தில் கொண்டு­வந்து விடு­வ­தால், மகப்­பேறு வலியே தெரி­ய­வில்லை என்று ஆச்­ச­ரி­ய­மாய் தாய்­மார்­கள் பேசிக்­கொள்­வார்­கள்!

இத்­த­னைக்­கும் வாரா வாரம் வரும் கிழ­விக்கு கையில் ஒரு ஐந்து வெள்­ளி­ நோட்டையும் ஒரு சிறிய மான் சாப் சம்சு (சாரா­யம்) பாட்­டில் ஒன்­றை­யும் தந்­து­வி­டு­வார்­கள். மகப்­பேறு நல்­ல­வி­த­மாக ஆன­வு­டன், மேலும் கொஞ்­சம் பணம், நூல் புடவை, பழங்­கள் போன்­ற­வற்றை தாம்­பா­ளத்­தில் வைத்து கொடுப்­பார்­கள். அதோடு சிறிய சாராய பாட்­டில் ஒன்றைச் சேர்த்து கொடுத்­தால், பொக்­கை­வா­யில் நீண்ட புன்­னகை தவ­ழும்!

அந்த கிழ­வி­யின் குடும்­பம் மற்­றும் சுற்­றம் பற்றி அதி­க­மாக யாரும் பேசு­வ­தில்லை!

பொது­வாக கரு­வுற்ற பெண்­கள் மத்­தி­யில் ஆட்­டுக்­காரக் கிழ­விக்கு நல்ல கிராக்கி.

சற்று தொலை­வில் வாழ்ந்த, கொஞ்­சம் வச­தி­யுள்ள ஒரு தம்­ப­தி­ய­ருக்கு பல ஆண்டுகளாக குழந்தைப் பாக்­கி­யம் இல்லை.

கிழவி வந்து வயிற்றை உரு­வி­விட்­டால் சரி­யா­கி­வி­டும் என்று ஒருத்தி சொன்­ன­தால், அவளை அழைத்து வந்­தார்­கள்.

மூன்று வாரம் அந்த பெண்­ணின் வயிற்றுப் பகு­தியை நீவி­விட்டு சென்­றது கிழவி. நாலா­வது வாரம், நீவிக்­கொண்­டி­ருந்த கிழவி ஏதோ முணு­மு­ணுத்­தது.

'என்ன. ஏதோ முணு­மு­ணுக்­கி­றாயே' என்று படுத்­த­வாறே கேட்­டாள் அந்த பெண்­மணி.

'சொல்­லு­றேன்னு, கோபமோ வருத்­தமோ படா­தம்மா. உன் வயித்த மூனு வாரமா உரு­வ­ரத வச்சி சொல்­லு­றேன். உனக்கு மகப்­பேறு ஆவு­ரத்­துக்கு கொஞ்­சம் நாள் ஆகும். ஒரு ஐந்து வரு­ச­மா­வது ஆகும் போல தோனுது.

"உரு­வ­ரத வச்சு சொல்­லு­றேன். நீ பணம் கொடுக்­கி­ற­துக்­காக ஏதோ உரு­விட்டு போக எனக்கு மனசு இல்ல," என்று பக்­கு­வ­மாகச் சொல்லி முடித்­த­து­தான் தாம­தம், வந்­ததே அந்த வச­தி­யான அம்­மா­ளுக்குக் கோபம்.

'நீ யாரு இப்­ப­டி­யெல்­லாம் சொல்ல. நீ என்ன டாக்­டரா? நீ ஒரு குடி­காரக் கிழவி. எனக்குக் குழந்தை பிறக்க ஐந்து வரு­ஷம் ஆகும்னு சொல்ல...' என்று கோப­மாக திட்ட ஆரம்­பித்­த­வு­டன், பொறு­மை­யு­டன் சொல்­லிக்­கொண்­டி­ருந்த கிழ­விக்­கும் சாமி ஆட்­டம் வந்­து­விட்­டது!

கிழவி, அவளை தன் அக­ரா­தி­யில் இருந்த கெட்ட வார்த்­தை­கள் எல்­லா­வற்­றை­யும் சேர்த்து பதி­லுக்கு திட்டித் தீர்த்­தாள்!

'ஏன்டி உன் நில­மைய எடுத்து பக்­கு­வமா நான் சொன்னா, என்­னையா குடி­கா­ரினு திட்­டுரே?'

மேலும் கொஞ்­சம் திட்­டி­விட்டு, அன்­றைக்குப் பெற வேண்­டிய பணத்­தை­யும் வாங்­கா­மல் சென்று விட்­டாள் அந்த ஆட்­டுக்­காரக் கிழவி. அந்த பெண், தன் கண­வ­னி­டம் இதைச் சொல்லி அழுது தீர்த்­த­பின் சில நாட்­கள் கழித்து, மிக பிர­ப­ல­மான மேற்­கத்­திய மகப்­பேறு ஸ்பெ­ஷ­லிஸ்ட்டை அணுகி, பல மருத்­துவ சோத­னைக்­குப்­பின் கிழவி சொன்­ன­தையே டாக்­டர் சொன்­னது வேறு கதை!

ஐந்து வெள்­ளிக்­கும் சின்ன சாராய பாட்­டி­லுக்­கும் கிழவி சொன்ன சோதனை முடிவை நம்­பாது, முன்­னூறு வெள்­ளிக்கு அதே பதிலை விலை கொடுத்து வாங்­கி­னர் தம்­ப­தி­யர்!

*

ஆட்­டுக்­காரக் கிழவி வசிக்­கும் இடத்­தி­லி­ருந்து, இரண்டு கல் தொலை­வில், இந்த கிழ­விக்குப் பழக்­கப்­பட்ட மாரி­யம்­மா­ளும் தன் குடும்­பத்­து­டன் கம்­பத்­தில் வசித்­து­வந்­தாள். அன்று நல்ல மழை பெய்து கொஞ்­சம் ஓய்ந்­தது. பள்­ளி­யி­ல் இருந்து, அவ­ளின் பத்து வயது மகன் வீடு­தி­ரும்­பிக் கொண்­டி­ருந்­தான்.

மழை­யால் பாதை எல்­லாம் சேறாக இருந்­தது. ஒரு சிறிய வாய்க்­காலைத் தாண்ட போடப்­பட்ட குறு­க­லான மரப்­பா­லத்தைக் கடக்­கும் போது, திடீ­ரென கால் வழுக்கி வாய்க்­கா­லில் தொப்­பென விழுந்­து­விட்­டான்!

மகன் விழுந்­ததைக் கண்ட மாரி­யம்­மாள், அல­றி­ய­டித்­துக்­கொண்டே ஓடி­வந்து, சில­ரின் உத­வி­யு­டன் மகனை மேலே கொண்­டு­வந்­தாள்.

'அய்யோ கை வலிக்­குது அம்மா' என்று முனக ஆரம்­பித்­தான் பையன்.

'பொறுத்­துக்­கப்பா கொஞ்­சம். வீட்­டுக்கு வந்­த­வு­டன் வலிக்கு மருந்து போட்­டுக்­க­லாம். நீ மெதுவா எழுந்து நட' என்று பரி­வு­டன் மகனை அணைத்­த­படி நடந்­தாள் மாரி­யம்­மாள். அதற்­குள் சின்ன பெண்­கள் கூட்­டம் கூடி­விட்­டது.

'சதை பிரண்டு இருக்­கும் போல தெரி­யுது' என்­றாள் ஒரு நடுத்­தர வயது பெண்.

'ஆமாம் நல்லா உருவி விட்டா சரி­யா­கி­டும்' என்­றாள் இன்­னொ­ருத்தி!

'நீ எதற்­கும் பக்­கத்­துல இருக்­கிற ஐம்­பது காசு ஆஸ்­பத்­தி­ரிக்கு கொண்டு போரது நல்­லது மாரி­யம்மா!' என்­றாள், கொஞ்­சம் படித்­த­வ­ளான இன்­னொ­ருத்தி!

(அப்­பொ­ழுது இல­வச மருத்­து­வ­மாக இருந்து, பின்பு ஐம்­பது காசு கட்­ட­ணம் கட்­டும் ஒன்­றாக மாற்­றப்­பட்ட ஒரு சிறிய அரசு மருந்­த­கம் சற்று தொலை­வில் இருந்­தது.)

குழப்­பத்­து­டன் மகனைப் பிடித்­துக்­கொண்டே நடந்­தாள் மாரி­யம்­மாள்.

'அந்த ஆஸ்­பத்­தி­ரிக்கு போனா நாலு மணி நேரம் காத்து கிடக்­க­ணும். நான் சொல்­றத கேளு. நீ எதற்­கும் ஆட்­டுக்­காரக் கிழ­விய கூப்­பிட்டு வைத்­தி­யம் பாரு. அது உரு­வி­விட்டா சரி­யா­கி­வி­டும். அதுக்குத் தெரி­யாத வைத்­தி­யமா?' என்­றாள் முத­லில் ஆலோ­சனை சொன்­ன­வள்!

மாரி­யம்­மா­ளுக்­கும் அது­தான் சரி­யெனத் தோன்­றி­யது. மாரி­யம்­மா­ளுக்­கும் கொஞ்­சம் வைத்­தி­யம் தெரிந்­த­போ­தி­லும், ஆட்­டுக்­காரக் கிழவி அள­விற்கு இல்லை. அத­னால்­தான், அந்தக் கிழ­வி­யி­டம் காட்­ட­லாம் என்று தோன்­றி­யது அவ­ளுக்கு.

மகனை எப்­ப­டியோ வீட்­டிற்கு அழைத்­து­வந்து, முழங்­கை­ய­ருகே ஏற்­பட்­டுள்ள சிறு வீக்­கத்தை வெந்­நீ­ரால் ஒத்­த­டம் கொடுத்து பார்த்­தாள். மகன் வலி­யால் இன்­னும் முன­கிக்­கொண்டே இருந்­தான்.

ஆட்­டுக்­காரக் கிழ­விக்கு சொல்ல ஆள் அனுப்­பி­விட்டு, மக­னுக்கு கொஞ்­சம் உணவு தயா­ரிக்க ஆரம்­பித்­தாள் மாரி­யம்­மாள்.

மாலை, ஒரு ஏழு மணி­ய­ள­வில் கிழவி, மாரி­யம்­மாள் வீட்­டிற்கு வந்து சேர்ந்­தாள்.

'வாங்­கம்மா' என கிழ­வியை வர­வேற்­றாள் மாரி­யம்­மாள்.

'கொஞ்­சம் காப்பி குடிக்­கி­றீங்­களா'? என வந்த கிழ­வியை உப­ச­ரித்­தாள்.

'அது கெடக்­கட்­டும், உன் மக­னுக்கு என்ன ஆச்சு' என வந்த காரி­யத்­தில் நாட்­டம் காட்­டி­னாள் கிழவி. நடந்­ததை விவர­மாக சொல்லி முடித்­தாள் மாரி­யம்­மாள். அவள் மகனை அரு­கில் அழைத்து, காயம்பட்ட அவன் கையை கிழ­வியிடம் காட்­டி­னாள்.

'சதை கொஞ்­சம் புரண்­ட­மா­திரி தெரி­யுது, நீங்க உருவி விட்டா நல்­லா­யி­டும்னு நினைக்­கி­றேன்' என்று இழுத்­தாள் மாரி­யம்­மாள்.

கிழவி அவனை அரு­கில் வரச்­சொல்லி, அவ­னு­டைய வீக்­கம் கண்ட கையை உன்­னிப்­பாக கண்­களை சுருக்கிப் பார்த்­தாள். பின்பு கொஞ்­சம் தொட்டு பார்த்­த­வு­ட­னேயே அவன் வலி­யால் மீண்­டும் முனக ஆரம்­பித்­தான்.

கிழவி அவனை கொஞ்­சம் சாந்­தப்­ப­டுத்தி, அவன் கையை சற்று உயர்த்தி தன் காதை அவ­னு­டைய வீக்­கப் பகு­தி­யில் லேசாக பதித்து, மெல்ல அவன் கையை கொஞ்­சம் அசைவுகொடுக்க, பையன் விர்ர்...என கத்த ஆரம்­பித்­து­விட்­டான்!

அவ்­வ­ள­வு­தான்!

அவன் கையை மெல்ல இறக்கி­விட்டு, மாரி­யம்­மாளை முறைத்துப் பார்த்­தாள் கிழவி!

'நீ என்ன நெனச்­சி­கிட்டு இருக்கே'?

'எலும்பு முறிஞ்சு இருக்கு. அங்க உரு­வி­விட சொல்­லு­ரியே. நான் தான் கைய ஒடச்­சேனு போலீசு என்ன புடி­ச்சிட்டு போற­துக்கா'? என்று மாரி­யம்­மாளை திட்ட ஆரம்­பித்­தது கிழவி!

மாரி­யம்­மாள் அதிர்ந்து போனாள்!

'நீ மரி­யா­தையா பெரிய ஆஸ்­பத்­தி­ரிக்கு உன் மவன அழைச்­சிட்­டு­போய் கட்­டுப்­போடு' என்று மாரி­யம்­மாளை பார்த்துச் சொல்­லி­விட்டு கிழவி தெருவை நோக்கி நடக்க ஆரம்­பித்­தாள்.

கிழவி சொன்­னால் உண்­மை­யாகத்தான் இருக்­கும் என இப்­பொழுது நம்­பி­னாள் மாரி­யம்­மாள்.

மக­னின் வீக்­கம் கண்ட கைப்பகு­தியை காதில் பதி­ய­வைத்து, கொஞ்­சம் அசைத்தே, எலும்பு முறிவு என்று கிழவி சொன்­னாளே! சரி ஆஸ்­பத்­தி­ரிக்கு போக­வேண்­டி­ய­து­தான் என்று தனக்­குத்­தானே சொல்­லிக்­கொண்­டாள்.

பெரிய ஆஸ்­பத்­திரி என்று அழைக்­கப்­பட்ட ஜென­ரல் ஆஸ்­பத்­தி­ரிக்கு மறு­நாள் காலை, மகனை அழைத்­துக்­கொண்டு பஸ் பிடித்து விரைந்­தாள் மாரி­யம்­மாள்.

அங்கு சென்று டாக்­டரை கண்­ட­வு­டன், அவ­ரும் எக்ஸ்ரே எடுத்து பார்த்­து­விட்டு, இது தலை­ம­யிர் அளவு, இரண்டு அங்­கு­லம் எலும்­பில் வெடிப்பு ஏற்­பட்­டுள்­ளது எனக்­கூறி மாவுக்­கட்டு போட்டு, கையைத் தாங்­கு­வ­தற்கு, துணி­யால் தொட்­டில் ஒன்­றும் செய்து பைய­னின் கழுத்­தில் மாட்டி விட்­டார்!

மக­னு­டன் வீடு­நோக்கி சென்­று­கொண்­டி­ருந்த மாரி­யம்­மாள், ஆட்­டுக்­காரக் கிழ­வியைப் பற்றி சிந்­தித்­துக்­கொண்டே சென்­றாள்.

டாக்­டர் எக்ஸ்ரே கருவி மூலம் எலும்­பில் ஏற்­பட்ட முறிவை கண்டு­பி­டித்­தார், சரி! ஆனால் காது­வைத்து கேட்டே இதை சர்­வ­சா­த­ர­ணமாகச் சொல்­லி­ட்­டதே கிழவி, என்ற ஆச்­ச­ரி­யத்­து­டன் வீடு சென்று சேர்ந்­தாள்.

மறு­நாள் ஆட்­டுக்­காரக் கிழ­வியை சந்­தித்து, பெரிய ஆஸ்­பத்­தி­ரிக்கு சென்று மக­னின் கைக்கு கட்­டு­போட்ட விவரத்தை சொல்லி, ஐந்து வெள்ளி பணத்தை கிழ­வி­யி­டம் நீட்­டி­னாள் மாரி­யம்­மாள்.

'எனக்கு எதுக்குப் பணம் தர?' என்­றாள் கிழவி

'நேத்து மகன வந்து பார்த்தீங்க இல்­லையா. அப்ப பணம் கொடுக்­கி­ற­துக்கு முன்­னால நீங்க கிளம்­பிட்­டீங்க' என்று விளக்­கம் தந்­தாள் மாரி­யம்­மாள்.

நான் ஒரு வைத்­தி­ய­மும் செய்­யல. எலும்பு முறிவு தெரிஞ்சி உன்­கிட்ட சொன்­னே அவ்­வ­ள­வு­தான். அத­னால பணம் வேண்­டாம் என்று மறுத்­து­விட்­டாள் கிழவி!

அது அவள் சுபா­வம்!

செய்­யாத வைத்­தி­யத்­திற்கு பணம் வாங்க மாட்­டாள். தான் செய்த வைத்­தி­யத்­தால் இன்­னார் பயன் பெற்­றார் என்­றும் ஒரு வார்த்தை அவள் யாரி­ட­மும் சொன்ன­தில்லை. மேலும் தன்னைவிட ஏழ்­மை­யில் இருந்த எத்­த­னையோ குடும்­பத்­திற்குப் பணம் வாங்­கா­மலே வைத்­தி­யம் செய்­தி­ருக்­கி­றாள்!

*

குழந்­தை­க­ளுக்கு வைத்­தி­யம் பார்ப்­ப­தி­லும் திற­மை­யா­ன­வள்.

ஒரு­முறை, அதே வட்­டா­ரத்­தில் வாழ்ந்த இளந்­தம்­ப­தி­க­ளுக்கு பிறந்த நான்கு மாத குழந்­தைக்கு என்ன ஆயிற்றோ தெரி­ய­வில்லை.

உறக்க அழு­து­கொண்டே இருந்­ததை அவ்­வ­ழியே நடந்து சென்ற கிழ­வி­யின் காதில் விழ, கொஞ்­ச­நே­ரம் அங்­கேயே நின்று உன்­னிப்­பாக அந்த அழு­கை­யின் தன்­மையை கேட்­டுக்­கொண்­டி­ருந்­தாள்.

குழந்­தை­யின் விடா அழு­கைக்கு இடையே பெற்­றோரின் பேச்­சுக் குர­லும் கேட்­கிறது.

வீட்­டில் இருந்த பெரி­ய­வர்­களும் குழந்­தைக்கு, விஷப்­பூச்சி ஏதே­னும் கடித்­தி­ருக்­குமோ என்ற சந்­தே­கம் ஒரு­பு­றம்.

ஆளுக்கு ஆள் தூக்­கி­வைத்து சமா­தா­னப்­ப­டுத்­தி­யும், குழந்தை அழு­கு­ரல் கூடி, கதற ஆரம்­பித்­ததே தவிர குறை­ய­வில்லை!

அந்த குழந்­தை­யின் பெற்­றோர் மருத்­து­வ­ம­னைக்குச் செல்ல தயா­ரா­கிக்­கொண்­டி­ருக்­கை­யில், கிழவி அவர்­கள் வீட்­டின் கத­வோ­ரம் வந்து நின்­றது.

கிழ­வியைக் கண்ட குழந்­தை­யின் தாய், கிழ­வியைப் பார்த்து என்ன வேண்­டும் என்று பதற்றத்­து­டன் கேட்­டாள்.

இந்த படித்த இளந்­தம்­ப­தி­ய­ருக்­கும் இந்த கிழ­வியை பற்றி கொஞ்­சம் தெரி­யும். ஆயி­னும் அவ­ளி­டம் வைத்­தி­யம் செய்துகொண்­ட­தில்லை. அதில் அவர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யும் இல்லை.

'குழந்தை ரொம்ப நேரமா அழு­கி­றதே' என்று கிழவி அக்­க­ரை­யு­டன் கேட்­டாள்.

"ஆமாம். ஏன்னு தெரி­ய­வில்லை. அதான் ஆஸ்­பத்­தி­ரிக்கு கிளம்புறோம்," என்று குழந்­தை­யின் தாய் பதில் சொல்ல, அவள் கண­வன் மருத்­து­வ­ம­னைக்குச் செல்ல அவ­ச­ரம் காட்­டி­னான்.

கிழவி கொஞ்ச நேரம் அமை­தி­யு­டன் இருந்­து­விட்டு, 'குழந்­தைக்கு, கழுத்­தில் உரம் விழுந்­தி­ருப்­ப­து­போல் தெரி­கிறது அம்மா' என்­றாள்

"உரம்னா?" என்று ஆச்­ச­ரி­ய­மாக கேட்­டாள் குழந்­தை­யின் தாய்.

"சில சம­யம் குழந்­தைய சரி­யாக தூக்­கா­த­தால் கழுத்­தில் சுளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கும், அதைத்­தான் உரம்னு சொன்­னேன்," என்று விளக்­கி­னாள் கிழவி.

"கொஞ்ச நேரம் குழந்­தைய என்­கிட்ட கொடுத்தா உரம் விழுந்­ததை சரி­யாக்­கி­டு­வேன்," என்று கேட்­டுக்­கொண்­டாள் கிழவி.

அந்தப் பெண்­ணின் கண­வ­னுக்கு இந்த உரம் விழுந்த விளக்­கம் ஏற்­பு­டை­ய­தாக இல்லை.

இந்த கிழவி உரத்தை எடுக்­கி­றேன் என்று சொல்லி குழந்­தைக்கு ஆபத்து ஏற்­ப­டுத்­தி­னால் என்ன செய்­வது. வேண்­டாம் என்று மனை­விக்கு ஆங்­கி­லத்­தில் சொல்லி தடுத்­தான்.

ஆங்­கி­லம் புரி­யா­விட்­டா­லும் அவ­னின் மன­நிலை கிழ­விக்கு புரிந்­தது.

"சரி குழந்­தைய என்­கிட்ட கொடுக்க வேண்­டாம். ஒன்னு செய்­யுங்க, வீட்­டில் வேட்டி இருந்தா கொண்­டு­வாங்க. பயப்­ப­டாதீங்க," என்­றாள்.

குழந்­தை­யின் பாட்­டி­யும் அங்­கி­ருந்­த­தால், அவர்­களும் கொஞ்­சம் கேட்­டுக்­கொள்ள, குழந்­தை­யின் தந்தை, நம்­பிக்கை இல்­லாது உள்ளே சென்று ஒரு வேட்­டியை எடுத்து வந்­தான்.

வேட்­டியை தரை­யில் விரித்து குழந்­தையை நடு­வில் படுக்­க­வைக்கச் சொன்­னாள் கிழவி. அதன்படியே குழந்­தை­யின் தாய் படுக்க வைத்­தாள்.

குழந்தை இன்­னும் உரக்க கத்தி அழு­து­கொண்டே­தான் இருந்­தது. முக­மெல்­லாம் சிவந்துபோய் வலி­யால் துவண்டு கிடந்­தது.

கிழவி குழந்­தை­யின் தந்­தையை பார்த்து, வேட்­டி­யின் இரு முனை­களை­யும் இரு கைக­ளால் பிடித்து காட்டி, அது­போல் அங்­கும் அவரை வேட்­டியை பிடித்து கொஞ்­சம் உய­ர­மாக தூக்கச் சொன்­னாள். குழந்­தை­யின் தந்­தை­யும் கொஞ்­சம் பயந்த வண்­ணம் சற்று உயர்த்தித் தூக்­கி­னான்.

"நீ எதை­யும் செய்­யாம சும்மா பிடிச்­சிக்­கிட்டு இருந்தா போது­மப்பா," என்று சொல்ல, இப்­போது தொட்­டில்­போல் வேட்டி ஆனது.

தான் பிடித்­தி­ருந்த இரு­மு­னை­களால் மெல்ல வேட்­டியை ஒரு­வ­கை­யாக அசைக்க செய்­தாள் கிழவி. குழந்தை இப்­பொ­ழுது வேட்­டிக்­குள் உருள ஆரம்­பித்­தது, இது போல் இப்­ப­டி­யும் அப்­ப­டி­யும் உருண்ட குழந்­தை­யின் அழு­கு­ரல் கொஞ்­சம் கொஞ்­ச­மாக தாழ்ந்­தது.

மெல்ல வேட்­டியை பழை­ய­நிலைக்கு தரை­யில் வைத்து, தாயைக்­கொண்டு, குழந்­தையைத் தூக்கச் சொன்­னாள் கிழவி.

அழு­கையை நிறுத்­திய குழந்தை, கொஞ்­ச­நே­ரம் சிணுங்­கிக்­கொண்­டி­ருந்து, பின்பு சோர்ந்து தாயின் தோளில் தூங்க ஆரம்­பித்­தது!

தம்­ப­தி­யர் ஆச்­ச­ரி­யப்­பட்­ட­னர்!

"குழந்­தை­யின் கழுத்­தில் உரம் விழுந்­த­தால் வலி­யால், அழு­துக்கிட்டிருந்திருக்கு. இப்ப கவலைப்பட ஒன்­னும் இல்லை. குழந்­தைய தூக்­கும்போது கவ­னமா தூக்­குங்க," என்று அறி­வுரை சொல்­லி­விட்டு கிளம்பத் தயா­ராக இருந்­தது கிழவி.

கண்­க­லங்கி நின்ற குழந்தை­யின் பெற்­றோர், கிழ­வி­யின் கைகளைப் பிடித்து, உணர்ச்­சி­பூர்­வ­மாக நன்றி சொல்லி, கிழ­வி­யின் கையில் இரு­பது வெள்­ளியை கொடுக்க, கிழவி பலமுறை மறுத்­தது. பின்பு பத்து வெள்­ளியை மட்­டும் எடுத்­துக்­கொண்டு, மெல்ல நடந்துசென்­றது.

எப்­ப­டியோ காலம் உருண்­டோ­டி­யது. அவ்­வப்­போது, கிழ­வி­யின் சேவைக்­காக சிலர் கூப்­பிட்டு கொண்டு தான் இருந்­தார்­கள்.

வழி­வ­ழி­யாக தான் கற்ற இந்த சின்ன வைத்­திய முறை­கள் இந்த கிழ­வி­யின் தலை­மு­றை­யோடு மெல்ல மறையத் தொடங்­கி­யது.

மெல்ல மெல்ல கம்­பத்து வீடு­கள் மறைந்து அடுக்­கு­மாடி வீடு­கள் தோன்ற ஆரம்­பித்­தன.

சில வாடகை வீடு­க­ளா­க­வும், மேலும் சில விற்­ப­னைக்­கும் விடப்­பட்­டன.

கம்­பத்து வீடு­களில், இயற்­கை­யு­டன் ஒட்டி வாழ்ந்­த­வர்­கள், அதை விட்டு விலகி, இந்த அடுக்­கு­மா­டி­யின் சிறிய கூண்­டில் அடை­படும் புதிய வாழ்க்கை முறைக்கு மாறிக்கொண்டனர். பல வகை­யில் சுத்­த­மான சுற்­ற­மும், வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­போ­தும் பழைய கம்பத்து வாழ்க்கை வாழும் ஏக்கம் பலருக்கு ஏற்பட்டது.

இந்த மாற்­றத்­திற்கு ஆளான வர்களில் ஆட்­டுக்­காரக் கிழ­வி­யின் குடும்­ப­மும் ஒன்று.

ஆடு­களை விற்று­விட்டு, தன் உற­வு­க­ளு­டன் அடுக்­கு­மாடி பகு­திக்கு போய்­விட்­ட­தாக சிலர் பேசிக்­கொண்­டர்­கள்.

சில ஆண்டுகள் உருண்­டோ­டின.

அந்த வட்­டா­ரத்து மக்­களும் காலத்­திற்கு ஏற்ப மேற்­கத்­திய வைத்­திய முறை­யில் தங்­களை மாற்­றிக்­கொண்­ட­னர்.

ஆட்­டுக்­காரக் கிழ­வியைப் பற்­றிய பேச்­சும் சிந்­த­னை­யும் மெல்ல மறைய தொடங்­கி­யது.

சில பழைய தலை­முறை சார்ந்­த­வர்­கள் மட்­டும் அவ்­வப்­போது கிழ­வி­யின் திறனைப் பற்றி நினைவு கூர்வார்­கள்.

'என்ன எழ­வுடா இது. கழுத்து வலிக்கு, ஆஸ்­பத்­தி­ரிக்குப் போனா, ஏதோ டிராக்‌ஷன் என்று சொல்லி, உட்­கா­ர­வைத்து, கழுத்த சுத்தி, பெல்ட்டு ஒன்றை மாட்டி, மிஷி­னால மேல இழுக்­கி­றான், ஏதோ தூக்குப் போடற மாதிரி! இத பத்து நிமி­ஷம் செஞ்­சிட்டு, இரு­பது வெள்ளி வாங்­கிட்­டான். இன்­னும் இது மாதிரி நாலு தடவ வர­ணுமாம்!' என்­றார் அலுத்­துக்­கொண்டே ஒரு முதியவர்.

இப்ப மட்­டும் ஆட்­டுக்­காரக் கிழவி இருந்தா உன் கழுத்து வலிய நல்லா இரண்டு மொற உருவி­விட்­டுச்­சின்னா, வலி பறந்து போயி­ருக்­கும். என்ன செய்ய, அந்த கிழவி எங்க போச்­சின்னு தான் தெரி­யல," என்­றார் இன்­னொரு பெரி­ய­வர்.

இதை கேட்­டுக்­கொண்­டி­ருந்த இன்­னொ­ரு­வர் 'அட, உங்­க­ளுக்கு விஷ­யம் தெரி­யாதா, ஊருக்­கெல்­லாம் வைத்­தி­யம் பார்த்த ஆட்­டுக்­காரக் கிழவி, ஏதோ நோய் வந்து போன மாசம் இறந்து போச்­சு­தாம் பா!'

அந்த இடம் கிழ­வர்­க­ளின் பெரு­மூச்­சோடு ஆட்­டுக்­காரக் கிழ­வி­யின் நினை­வும் காற்­றில் கலந்து அமை­தி­யா­னது.