தேங்காய்த் துண்டுகள்

டாக்டர் மு. வரதராசன்

"மாலை நேரத்­தில் குடித்­து­விட்­டுச் சாலை ஓரத்­தில் விழுந்து கிடப்­ப­வர்­க­ளைப் பார்த்­தி­ருக்­கி­றோம். ஆனால், இது என்ன கொடுமை! பகல் ஒரு மணிக்கு நல்ல வெயி­லில் தார் வெந்து உரு­கும் வெப்­பத்­தில் இந்­தச் சாலை ஓரத்­தில் இப்­படி ஒரு­வன் விழுந்து கிடக்­கி­றானே" என்று எண்­ணிக்கொண்டே அந்த மாரி­யம்­மன் கோயிலை அணுகி நடந்து போய்க்கொண்­டி­ருந்­தேன்.

வெளி­யூர்­களில் கள் சாரா­யக் கடை­களை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடி­கா­ரர் சிலர் அடிக்­கடி சென்­னைக்­குப் புறப்­பட்டு வந்து, ஏதோ வேலை இருப்­பது போல் நக­ரத்­தைச் சுற்­றித் திரிந்து, ஆசை தீரக் குடித்து மயங்­கி­யி­ருந்து, பிறகு ஊருக்­குத் திரும்­பு­வது எனக்கு நன்­றா­கத் தெரி­யும். எங்­கள் ஊரில் இருந்தே பலர் அப்­ப­டிப் புறப்­பட்டு வந்து சென்­னை­யில் குடித்­து­விட்­டுப் போவது தெரி­யும். ஒரு­முறை வீட்­டுக்கு வந்து என்­னைப் பார்த்­து­விட்டு, நக­ரத்­தில் பல வேலை இருப்­ப­தா­கச் சொல்­லி­விட்­டுப் போய்­வி­டு­வார்­கள். உண­வுக்கு ஒரு வேளை­யா­வது வரு­மாறு அழைத்­தா­லும் வரு­வ­தில்லை. அவர்­க­ளுக்கு விருப்­ப­மான விருந்து கள்­ளுக் கடை­க­ளி­லும் சாரா­யக் கடை­க­ளி­லும் கிடைக்­கும்­போது, வெந்த அரி­சிச்­சோற்­றைத் தேடியா வந்து காத்­தி­ருப்­பார்­கள்? நாட்­டுப்புறத்­தில் மூலை­மு­டுக்­கு­களில் காய்ச்­சும் திருட்­டுச் சாரா­யம் போதாது என்று இந்­தக் கடைச் சரக்கை நாடி வரு­கி­ற­வர்­கள், அதை­யும் விட்டு நல்ல அரி­சிச் சோற்­றை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் இந்­தப் பங்­கீட்டு அரி­சிச் சோற்றை... ஈரத்­தோடு நெடு­நாள் இருந்து கெட்டு அழு­கிப் பல நிறம் பெற்று விளங்­கும் அரி­சி­யால் சமைத்த சோற்­றையா நாடி வரு­வார்­கள் என்று நானும் வற்­பு­றுத்­தா­மல் விட்­டு­வி­டு­வேன். ஆனால் மின்­சா­ர­வண்டி வரும் வேளை­யில் தண்­ட­வா­ளப் பாலத்­தின்­மேல் நடந்து வண்­டி­யில் அகப்­பட்­டுக்கொண்டு மடிந்த இரண்டு பிணங்­களை ஒரு நாள் காண நேர்ந்­தது. அவர்­க­ளுக்கு முன்னே நடந்­து­வந்த சிலர் அவர்­க­ளைக் குடி­கா­ரர் என்று அறிந்து அங்கே நடந்து போக வேண்டா என்று சொல்­லித் தடுத்­தும் கேட்­க­வில்­லை­யாம். அந்­தக் குடி­வெ­றி­யில் தள்­ளாடி நடந்து மின்­சார வண்­டிக்­குப் பலி­யா­னார்­களே என்று அன்று என் நெஞ்­சம் மிக வருந்­தி­ய­போது, போக்கு வரவு மிகுந்த சென்­னை­யில்­தான் கள் சாரா­யக் கடை­களை முத­லில் மூட வேண்­டும் என்று உணர்ந்­தேன்.

இந்த மாரி­யம்­மன் கோயி­ல­ருகே சாலை ஓரத்­தில் பகல் ஒரு மணி வெயி­லில் படுத்­துச் சுருண்­டி­ருந்த உடம்­பைக் கண்டபோதும் இந்த எண்­ணமே உண்­டா­னது. நடுப்­ப­க­லிலே இப்­ப­டிக் குடிக்­கி­ற­வன் பொழுது போனால் எவ்­வ­ளவு குடிப்­பான் என்று சிறிது வெறுப்­போடு எண்­ணிக்­கொண்டே நடந்­தேன். அவ­னைப் பார்த்­துக்கொண்டே இளை­ஞர் இரு­வர் நின்று கொண்­டி­ருந்­தார்­கள். என்ன நிலைமை என்று தான் பார்க்­க­லாமே என்று நானும் அவர்­கள் இருந்த பக்­க­மாக நடந்து சென்­றேன்.

"குடி­கா­ரனா?" என்று அவர்­களைப் பார்த்­துக் கேட்­டேன்.

"இல்­லைங்க" என்­றார் ஒரு­வர்.

"வேறு என்ன? காக்கை வலிப்பா?" என்­றேன்.

"அது­வும் இல்­லைங்க. காக்கை வலிப்­பாக இருந்­தால் இப்­படி மூச்­சுப் பேச்சு இல்­லா­மல் சும்மா விழுந்து கிடப்­பானா?" என்­றார் மற்­றொ­ரு­வர்.

அவ­னுக்கு வயது இரு­பது இருக்­க­லாம். நல்ல கட்­டான உடல் இருந்­தது. ஆனால் அழுக்­கே­றிய ஆடை­யும் வாடிய முக­மும் கண்­ட­போது, வேறு நோயாக இருக்க முடி­யுமா என்று எண்­ணிப் பார்த்­தேன். தீய வழி­யில் நடந்து பெற்ற விப­சார நோயாக (மேகம் முத­லிய நோயாக) இருந்து உயி­ருக்கே உலை வைக்­கும் அள­வுக்கு முற்­றி­யி­ருக்­க­லாம் என்­றும், இந்­தக் காலத்து இளை­ஞர்­கள் மிக­வும் கெட்­டுப் போன­வர்­கள் என்­றும் எண்­ணி­னேன். "சரி, கர்ம வினை, நாம் என்ன செய்ய முடி­யும்?" என்று ஒரு­வகை வெறுப்­போடு நடக்­கத் தொடங்­கி­னேன்.

அதற்­குள் யாரோ தண்­ணீர் கொண்டு வந்து முகத்­தில் தெளிக்­கவே, அவன் "வேலா, வேலா" என்று ஆழ்ந்த குர­லில் இரண்டு முறை சொன்­னான். இதைக் கேட்­ட­தும் காலெ­டுத்­துச் சில அடி தொலைவு நடந்து சென்ற நான் அந்த இடத்­தி­லேயே நின்­றேன். அப்­போது அந்த இடத்­தில் என்­னைப் போல் வழிப்­போக்­கர் ஒரு­வர் எட்­டிப்­பார்த்து, "இது என்ன அய்யா! பாசாங்கு, வெறும் பாசாங்கு; வாய் திறந்து வேலா வேலா என்று கட­வுள் பெய­ரைச் சொல்­கி­றானே! நான் இந்த மாதி­ரிப் பாசாங்­குப் பிச்­சைக்­கா­ரர் எவ்­வ­ளவோ பேரைப் பார்த்­தி­ருக்­கி­றேன். நேற்­றுக் குழந்தை பெற்­று­விட்டு, இன்­றைக்­குப் பத்­து­மா­தக் கர்ப்­ப­வதி போல் பாசாங்கு செய்து பிச்சை கேட்­ப­தைப் பார்த்­த­தில்­லையா?" என்­றார். உடனே அங்­கி­ருந்த மற்­றொ­ரு­வர், "இது­தான் அய்யா பட்­ட­ணம்! போகி­ற­வர்­கள் சும்மா போகக்கூடாதா? எட்­டிப் பார்த்­த­வு­டன் பாசாங்கு தெரிந்­து­விடுமா? அவ­ர­வர்­கள் வயிற்­றுக்கு இல்­லா­மல் பட்­டி­னி­யால் செத்­தால் தெரி­யும்," என்­றார்.

'பட்­டினி' என்ற சொல்­லைக் கேட்­ட­வு­டன் எனக்கு இரக்­கம் தோன்­றி­யது. ஏதா­வது வாங்­கித் தரச் சொல்­ல­லாம் என்று சட்­டைப் பையில் கை இட்­டுக் காசு எடுத்­தேன். அதற்­குள் ஒரு­வர் - கல்­லூரி மாண­வன் என்று அப்­பால் தெரிந்துகொண்­டேன் - ஒரு கையில் காப்­பி­யும் மற்­றொரு கையில் இரண்டு வாழைப்­ப­ழ­மும் கொண்டு வரு­வ­தைக் கண்­டேன். என்ன நடக்­கிறது, பொறுத்­துத்­தான் பார்ப்­போம் என்று திரும்பி வந்து எட்­டிப் பார்த்­தேன். அதற்­குள் அவ­னைச் சுற்­றிப் பத்­துப் பேருக்கு மேல் நின்று கொண்­டி­ருந்­தார்­கள்.

காப்பி குடிக்­கச் சொல்­வ­தற்கு அவனை அசைத்­துப் பார்த்­தார்­கள்; கூப்­பிட்­டுப் பார்த்­தார்­கள். ஒவ்­வொரு வேளை­யில் மெல்­லிய குர­லில் ஏதோ ஒலி வந்­தது. ஆனால் கண் திறக்­க­வில்லை. தண்­ணீ­ரும் கையு­மாக நின்ற ஓர் ஆள் மறு­ப­டி­யும் அவன் முகத்­தில் தண்­ணீ­ரைத் தெளித்து வாயைத் திறந்து கொஞ்­சம் தண்­ணீர் உள்ளே விட்­டார். மெல்­லக் கண் திறந்து பார்க்­கும் காட்­சி­யைக் கண்டோம். உடனே ஒரு மாண­வர் எழுப்பி உட்­கார வைத்­தார். இன்­னொ­ரு­வர் கையில் இருந்த காப்­பியை நீட்­டி­னார். அந்­தக் காப்­பி­யைக் கண்­ட­தும், மயக்­கத்­தில் இருந்த அவ­னு­டைய கைகள் ஒரே ஆவ­லாக அந்­தக் காப்­பிக் குவ­ளையை இழுத்து வாயில் வைத்­துக்கொண்­டன. "சூடு, சூடு, பார்த்து, பார்த்து" என்று எதி­ரில் இருந்­த­வர் சொல்­வ­தற்­குள் காப்பி முழு­வ­தும் எப்­ப­டியோ வாயி­னுள் சென்­று­விட்­டது. அப்­போது அவ­னு­டைய கண்­களில் புலப்­பட்ட ஆவ­லை­யும் வேட்­கை­யை­யும் நான் எப்­போ­துமே கண்­ட­தில்லை. அந்­தக் கண்­கள் காப்­பி­யை­யும் குவ­ளை­யை­யும் சேர்த்து வாய்க்­கும் கொடுக்­கா­மல், தாங்­களே விழுங்­கி­வி­டு­வன போல் அந்­தப் பார்வை இருந்­தது. உடனே அவ­னு­டைய முகத்­தில் தோன்­றிய மாறு­தல்­தான் வியக்­கத் தகுந்­த­தாக இருந்­தது. இது­வ­ரை­யில் அந்த முகத்­தில் வாட்­டம் இருந்­தா­லும் துன்­பம் இல்லை; களைப்பு இருந்­தா­லும், பசிக்­கொ­டுமை இல்லை. இப்­போதோ பல்லை இளித்­துக் கொண்டு, தலை­யைத் தொங்க விட்­டுக்கொண்டு, சாய்ந்து சாய்ந்து ஏதோ சொன்­னான், யார் காதி­லும் அந்­தச் சொற்­கள் கேட்­க­வில்லை. தரை­யில் சாய்ந்­து­விட விரும்­பி­னான். வேண்டா என்று தடுத்து ஒரு­வர் மாரி­யம்­மன் கோவில் சுவர் பக்­க­மாக நக­ரச் சொல்லி அந்­தச் சுவ­ரில் சாயச் செய்­தார். அதற்­குள் இன்­னொ­ரு­வர் மற்­றொரு குவ­ளைக் காப்­பி­யும் ரொட்­டித் துண்­டும் வாங்கி வந்து நீட்­டி­னார். அவ­னு­டைய பசிக் கொடு­மை­யால் உடனே அவை­களும் மறைந்­தன. வாழைப்­ப­ழங்­களும் உடனே மறைந்­தன. 'அப்­பாடா' என்று அயர்ந்து சாய்ந்து, சுற்­றிப் பார்த்து, மருண்டு கண்­ணீர் விட்­டான். எல்­லோ­ருக்­கும் இரக்­கம் மிகுந்து விட்­டது.

"எந்த ஊர் அப்பா?" என்­றார் ஒரு­வர்.

"மதுரை" என்­றான் சிறிது தெளி­வான குர­லில்.

"எங்கே வந்­தாய்?"

"பிழைக்­கத்­தான் அய்யா! என் கதி...!"

"போகட்­டும்; என்ன உடம்­புக்கு?"

"ஐந்து நாளாச்சு அய்யா" என்று சொல்லி வயிற்றை அடித்­துக் கொண்டு கண்­ணீர் கலங்­கி­னான்.

உடனே கூட்­டம் மெல்ல மெல்­லக் கலை­யத் தொடங்­கி­யது. நான்கு பேர் நின்­றார்­கள்.

"எழுந்து நடக்க முடி­யுமா?" என்று கேட்­டேன்.

"இன்­னும் கொஞ்ச நேரம் பொறுங்­கள், சாமி" என்று கெஞ்­சும் குர­லில் சொல்லி முகத்து வியர்­வை­யைத் துடைத்து, கால்­களை நீட்­டிக் கொண்­டும் மடக்­கிக் கொண்­டும் இருந்­தான்.

பிறகு அங்­கி­ருந்த சில­ரும் மெல்ல நகர்ந்­தார்­கள். காப்பி கொடுத்த மாண­வர் மட்­டும் அங்கே நின்று கொண்­டி­ருந்­தார். பக்­கத்­தில் இருந்த கல்­லூரி மணி அடித்­தது. அந்த மணி ஒலி­யைக் கேட்­ட­தும், அவ­ரும் திரும்­பித் திரும்­பிப் பார்த்­தார். இறு­தி­யில் அவ­ரும் புறப்­பட்­டுப் போகவே, நான் மட்­டும் அங்கே நின்­றேன். அந்த இளை­ஞ­னு­டைய உண்­மை­யான நிலை­யைக் கேட்­டுத் தெரிந்துகொள்ள வேண்­டும் என்று ஏதோ ஒரு­வகை வேட்கை என் மன­தி­லி­ருந்து தூண்­டி­யது. அத­னால்­தான் நான் புறப்­பட முடி­யா­மல் அங்கே நின்­று­விட்­டேன்.

"எழ முடி­யுமா?" என்று மறு­ப­டி­யும் அவ­னைக் கேட்­டேன்.

"உடம்பு அச­தி­யாக இருக்­கிறது, சாமி" என்­றான்.

"வீடு வரைக்­கும் வந்­தால் வயி­றா­ரச் சாப்­பிட்டு வர­லாம்," என்று அழைத்­தேன்.

"வீடு எங்கே? சொல்­லுங்­கள். கொஞ்­சம் களைப்­புத் தீர்ந்­த­தும் நானே வரு­வேன்," என்­றான்.

"இவ்­வ­ளவு களைப்பு ஏற்­பட்ட பிறகு நீ ஏன் இந்த வழி­யில் நடந்து வரவேண்­டும்? அது­வும் நடுப்­ப­கல் வெயி­லில் இப்­ப­டித் தார்ச் சாலை­யில் நடந்து வர­லாமா?" என்­றேன்.

"இன்­னும் கொஞ்­சம் தூரம் தானே? இந்த மாரி­யம்­மன் கோவி­லுக்கு எப்­ப­டி­யா­வது போய்ச் சேர்ந்து­வி­ட­வேண்­டும் என்று தள்­ளா­டிக் கொண்டே வந்­தே­னுங்க!" என்று சொல்­லி­விட்டு அமைதி ஆனான். பிறகு கண்­ணீர் கலங்­கித் தன் அழுக்கு ஆடை­க­ளால் கண்­க­ளைத் துடைத்­துக் கொண்­டான். ஏதோ உண்­மைக் கார­ணம் இருக்க வேண்­டும் என்று நானும் பொறுத்­தி­ருந்­தேன்.

ஒரு பெரு­மூச்சு விட்டு, "நான் பிழைக்க மாட்­டே­னுங்க" என்று அழு­தான். என்­னால் ஆன வரை­யில் தேறு­தல் கூறி­னேன். "சொந்த ஊரில் சாகா­மல் இப்­ப­டிப் பட்­ட­ணத்­தில் சாக வேண்­டுமா?" என்று விம்மி விம்­மிச் சொன்­னான். "அத­னால் தான் இந்­தக் கோயி­லுக்கு வந்து உயிரை விட­லாம் என்று வந்­தேன்" என்று கலங்­கிச் சொன்­னான்.

"நீ தான் திக்­கற்­ற­வன் ஆச்சே. உனக்கு எங்கே இறந்­தால் என்ன? இந்­தக் கோயில் மேல் பக்தி என்ன?" என்று மெல்­லக் கேட்­டேன்.

"பக்தி இல்லை சாமி. என்­னோடு வந்­த­வன் - எங்­கள் ஊரான் - இங்கே அடிக்­கடி வந்து தேங்­காய் பழம் வைத்­துப் பூசை செய்து விட்­டுப் போவது வழக்­கம். அவன் வரு­வான், சாகும்­போது அவ­னா­வது பக்­கத்­தில் இருந்து பார்த்­துக்கொள்­வான் என்று தான் இங்கு வந்­தேன்" என்­றான்.

இதைக் கேட்­ட­தும், இன்­னும் பெரிய கதை­கள் இருக்­கும் என்று நம்­பிப் பேச்சை நிறுத்தி, எழுந்து வீட்­டுக்கு வரு­மாறு சொன்­னேன். மெல்ல எழுந்­தான். கால்­கள் பின்­னிக் கொள்­ளும் நிலை­யில் தளர்ந்து அடி எடுத்து வைத்து நடந்து வந்­தான். வழி­யில் உள்ள ஒரு பாலத்­தின் சுவ­ரின் மேலும், ஒரு வீட்­டுத் திண்­ணை­யின் மேலும் இரு முறை உட்­கார்ந்து மூச்­சு­விட்டு எப்­ப­டியோ வீடு வந்து சேர்ந்­தான். சாப்­பிட்டு முடி­யும் வரை­யில் ஒன்­றும் கேட்­ப­தில்லை என்று இருந்­தேன். உண்ட பிறகு அவன் முகத்­தில் களைப்­பும் தெளி­வும் கலந்து விளங்­கின. திண்­ணை­யின் கீழே மெல்­லச் சாய்ந்­தான். "சாமி! உங்­க­ளுக்கு எவ்­வ­ளவோ புண்­ணி­யம்! கொஞ்­ச­நே­ரம் இங்கே படுத்­தி­ருந்­து­விட்­டுப் போய்விடு­வேன்" என்­றான். இது­தான் வாய்ப்பு என்று நானும் என் ஐயம் தீரக் கேட்­கத் தொடங்­கி­னேன்.

"உங்­கள் ஊரான் கோவி­லுக்கு வரு­வ­தா­கச் சொன்­னாயே. அவ­னுக்கு என்ன வேலை? அவன் நாள்தோறும் கோயி­லுக்கு வரு­கி­றானா?" என்று பல கேள்­வி­கள் கேட்­டேன்.

"அவன் எப்­ப­டி­யா­வது இரவு படுப்­ப­தற்கு முன் ஒவ்­வொரு நாளும் இந்­தக் கோயி­லுக்கு வரா­மல் போவ­தில்லை. ஒரு­வேளை தவ­றி­விட்­டா­லும், அவன் இருக்­கும் இடத்­திற்­குப் பக்­கத்­தில் உள்ள எந்­தக் கோயி­லுக்­கா­வது போய்க் கும்­பிட்­டு­விட்­டுப் படுத்­துக்கொள்­வான். அப்­போ­தும் இந்த கோயில் மேல் தான் நினைவு இருக்­கும்" என்று கேட்­ட­தற்­கெல்­லாம் விடை கூறி­னான்.

இவ்­வ­ள­வெல்­லாம் சொல்­லி­யும் அவ­னு­டைய தொழி­லை­யும் பெய­ரை­யும் சொல்­லா­மல் மறைத்து வந்­தான். அத­னால் அவற்­றைத் தெரிந்து கொள்ள வேண்­டும் என்ற ஆவ­லும் எனக்கு மிகு­தி­யா­யிற்று. வற்­பு­றுத்­திக் கேட்­ட­தன் பிறகு, தன்­னைப் போலவே கூலி வேலை செய்து பிழைப்­ப­வன் என்­றும், ஆனால் தன்­னைப் போல் காசு கிடைக்­கா­மல் கூலி வேலை கிடைக்­கா­மல் உணவு கிடைக்­கா­மல் திண்­டா­டு­வதே இல்லை என்­றும், அவன் பெயர் வேலன் என்­றும் தெரி­வித்­தான். பெயர் வேலன் என்று அறிந்­த­தும், மயங்கி விழுந்து கிடந்த போது "வேலா வேலா" என்று அவன் வாய் பிதற்­றி­யது நினை­விற்கு வந்­தது. அவ­னு­டைய நண்­ப­னி­டத்­தில் எவ்­வ­ளவு நம்­பிக்கை வைத்­தி­ருந்­தால், உணர்­வி­ழந்த காலத்­தி­லும் அவன் பெய­ரைச் சொல்லி குமுற முடி­யும் என்­றும், அப்­ப­டிப்­பட்ட உண்மை நண்­பன் நாள் தவ­றா­மல் பூசை செய்­யும் நல்ல நிலை­மை­யில் இருக்­கும்­போது இவன் மட்­டும் ஏன் வாட வேண்­டும் என்­றும் நான் வியந்து அமை­தி­யா­னேன். அதற்­குள் அந்த இளை­ஞனை உறக்­கம் ஆட்­கொள்ள வந்­ததை உணர்ந்­தேன். சிறிது நேரத்­தில் குறட்டை விட்டு உறங்­கும் நிலைமை அடைந்­தான்.

நான் எழுந்­து­போய் என் கட­மை­களை முடித்­துக் கொண்டு திரும்பி வந்து அந்­தத் திண்­ணை­மேல் சமக்­கா­ளம் விரித்­துப் படுத்­துக்­கொண்டு, அவ­னைப் பற்­றி­யும் அந்த வேல­னைப் பற்­றி­யும் வேலன் தொழில் எது­வாக இருக்­கும் என்­ப­தைப் பற்­றி­யும் எவ்­வ­ளவோ எண்­ணிப் பார்த்­தேன். உண்மை அறிய முடி­யா­மல் மயங்­கிக் கொண்­டி­ருந்­தேன். எப்­ப­டி­யா­வது கேட்­டுத் தெரிந்துகொள்ள வேண்­டும் என்று துணிந்­தேன். சிறிது நேரம் கழிந்­தது.

திடீ­ரென்று அவன் எழுந்து உட்­கார்ந்து, "நீங்­கள் இல்­லா­விட்­டால், நான் இன்­றைக்­குச் செத்தே போயி­ருப்­பேன். என்­னோடு வந்­த­வன் முனி­சாமி என்று ஒரு­வன் அப்­ப­டித்­தான் பட்­ட­ணத்து மண்­ணுக்குப் பலி­யா­னான்" என்று பக்­கத்­தில் இருந்த ஒரு கல்­லையே உற்­றுப் பார்த்­துக் கொண்­டி­ருந்­தான். எழுந்த ஐயங்­கள் தீர்­வ­தற்கு முன்னே இன்­னொரு முனி­சாமி கதை­யும் புகுந்து விட்­டதே என்று நினைத்து "வேல­னுக்­குப் பண­மும் சாப்­பா­டும் கிடைத்­த­போது இந்த முனி­சாமி மட்­டும் ஏன் பட்­டி­னி­யால் சாக வேண்­டும்?" என்று கேட்­டேன்.

"வேலன் தைரி­யம் எங்­க­ளுக்கு வராது. வேலன் பள்­ளிக்கூடத்­தி­லும் சில மாதம் படித்­தி­ருக்­கி­றான். நான் படிக்­கவே இல்லை. முனி­சாமி மூன்­றா­வது படித்து நின்று விட்­டான். தவிர, வேலன் செய்­வ­தெல்­லாம் முனி­சா­மிக்­குப் பிடிப்­ப­தில்லை. அது நல்­லது அல்ல. பாவம் என்று முனி­சாமி அடிக்­கடி சொல்­லு­வான். அத­னால் வேல­னுக்­குக் கோபம். அவன் முனி­சா­மிக்கு உதவி செய்­வதே இல்லை. எனக்­குக் கொடுக்­கும் பணத்­தில் கொஞ்­சம் எடுத்து வேல­னுக்­குத் தெரி­யா­மல் முனி­சா­மிக்­குக் கொடுப்­பேன். அவன் அதை­யும் வாங்க மாட்­டான். வேலன் கொடுத்த காசு பாவக் காசு, அது எனக்கு வேண்டா, அதை­விட உயிரை விட­லாம் என்று பிடி­வா­த­மாய் வாங்க மறுத்து விடு­வான். அத­னால் பல நாள் பட்­டி­னி­யி­ருக்க வேண்டி ஏற்­பட்­டது. ஒரு நாள் ரயில் வரும்­போது தலை கொடுத்து விட்­டான். அது­வும் எனக்­குத் தெரி­யாது. வேலன் தான் அந்த பிணத்­தைப் பார்த்­த­தாக இரண்டு நாள் கழித்­துச் சொன்­னான். எனக்­கா­வது அம்­மா­வும் இல்லை, அப்­பா­வும் இல்லை. நான் செத்­தால் அழு­வா­ரும் இல்லை. அந்த முனி­சா­மிக்கு அம்மா இல்லா விட்­டா­லும், அப்பா இருக்­கி­றார். அவர் ஏழை. இருந்­தா­லும் கேள்­விப்­பட்­டால் என்ன பாடு­ப­டு­வாரோ" என்று சொல்­லிப் பொலபொல என்று கண்­ணீர் விட்­டான்.

இது­தான் நல்ல சம­யம் என்று, நான் தேறு­தல் சொல்­வது போல், "நீ அவ­ச­ரப்­பட்டு பைத்­தி­யக்­கா­ர­னைப் போல் உயி­ரைப் போக்­கிக் கொள்­ளாதே. என்­னால் ஆன உதவி செய்­வேன். கடும்­ப­சி­யாக இருக்­கும்­போ­தெல்­லாம் இங்கே வந்து போ" என்று சொன்­னேன். வேலன் தொழில் என்ன என்று உண்­மையை மறைக்­கா­மல் சொல்­லும்­படி பல­முறை கேட்­டேன். யாரி­ட­மும் வெளிப்­ப­டுத்­த­மாட்­டேன் என்­றும், தீமை ஒன்­றும் நேரா­மல் பார்த்­துக் கொள்­வேன் என்­றும் உறுதி கூறிய பிறகே அதைப்­பற்றி வாய் திறந்­தான். அப்­போ­தும், நீண்ட முக­வு­ரைக்­குப் பிறகே சொல்­லத் தொடங்­கி­னான்.

"நீங்­கள் யாருக்­கும் சொல்­லக் கூடாது, சாமி. சொன்­னால் என் உயி­ருக்­கும் முடி­வு­தான். முனி­சாமி எங்­கா­வது போலிசா­ரி­டம் தன்­னைப் பற்­றிச் சொல்­லி­வி­டு­வானோ என்று அவன் பல நாள் பயப்­பட்­டான். அத­னால் முனு­சாமி மேல் சந்­தே­க­மும் கொண்­டான். ஆனால் முனி­சாமி மிக நல்­ல­வன். பகை­யா­ளிக்­கும் தீங்கு செய்­ய­மாட்­டான். வேல­னும் நல்­ல­வன் தான். வேறு வழி­யில்லை என்று தான் இந்­தத் தொழில் செய்­கி­றான். எனக்கு அதை நினைத்­தா­லும் பய­மாக இருக்­கிறது. ஒரு­நாள் ஒரு விலை­யு­யர்ந்த பேனா­வைக் கொடுத்து வைத்­தி­ருக்­கச் சொன்­னான். அன்­றெல்­லாம் நான் வெளியே திரி­யா­மல் ஒரு மூலை­யில் முடங்­கி­யி­ருந்­தேன். போலிசா­ரைக் கண்­டா­லும் நடுக்­க­மாக இருந்­தது. வேலன் தைரி­யம் வராது. யாருக்­கும் சொல்­லா­தீர்­கள், சாமி" என்று சொல்லி முடித்­துக் கெஞ்­சு­வ­து­போல் என் முகத்­தைப் பார்த்­தான். மறு­ப­டி­யும் உறுதி கொடுத்­தேன். இங்­கும் அங்­கும் திரும்­பிப் பார்த்­த­ப­டியே பேசி­னான்.

"அவன் பட்­ட­ணத்­துக்கு வந்த நாலாம் நாளே ஒரு கூட்­டத்­தில் சேர்ந்து­விட்­டான். அந்­தக் கூட்­டத்­தில் ஐந்­தாறு போக்­கி­ரி­கள் இருக்­கி­றார்­கள். அவர்­கள் எந்த நேர­மும் சைனா­ப­சா­ரி­லி­ருந்து மூர்­மார்க்­கெட் வரை­யி­லும் எங்­கா­வது நின்று கொண்­டும் திரிந்து கொண்­டும் இருப்­பார்­கள். சில வேளை­களில் பஸ் நிற்­கும் இடங்­களில் நிற்­பார்­கள். ஆள்கள் கூட்­ட­மா­கச் சேரும் இடங்­க­ளிலே அவர்­கள் நடு­வில் திரிந்து கொண்­டி­ருப்­பார்­கள். வேலன் அவர்­க­ளோடு சேர்ந்து விட்­டான். எனக்கோ முனி­சா­மிக்கோ அது பிடிக்­க­வில்லை. ஆனால், நாங்­கள் கூலி­யும் கிடைக்­கா­மல் பட்­டினி இருந்த போதெல்­லாம் எங்­க­ளுக்­குக் காப்பி பழம் எல்­லாம் வாங்­கிக் கொடுத்­துக் காப்­பாற்­றி­ன­வன் அவன் தான். ஒரு நாள் வேல­னி­டத்­தில் பத்து ரூபாய் நோட்டு ஐந்து பார்த்­தோம். யாரோ சட்­டைப் பையில் பணப்பை (மணி­பர்ஸ்) வைத்­துக் கொண்டு போன­தா­க­வும், அதை அந்த ஐந்­தாறு பேரில் ஒரு­வன் கத்­த­ரித்து இன்­னொ­ரு­வன் கையில் கொடுத்­த­தா­க­வும், அது அப்­ப­டியே கை மாறி மாடர்ன் கபே­யி­லி­ருந்து சென்ட்­ரல் ஸ்டே­ஷன் வரை­யில் வந்­த­தா­க­வும், அது வேலன் கைக்கு வந்­த­போது, அதி­லி­ருந்து ஐந்து நோட்டு எடுத்து வைத்­துக் கொண்­ட­தா­க­வும் சொன்­னான். இதைக் கேட்­ட­தும் முனி­சாமி எங்­கள் மேல் கோபத்­தோடு புறப்­பட்­டான். வேலன் ஓடிப்­போய் அவ­னு­டைய இரண்டு கைக­ளை­யும் பிடித்­துக் கொண்டு, போலிசா­ரி­டம் சொல்­லா­தி­ருக்­கு­மாறு கெஞ்­சி­னான். இனி­மேல் அந்­தத் தொழில் செய்­வ­தில்லை என்று வாக்­கு­றுதி கொடுக்­கும்­படி முனி­சாமி கேட்­டான். வேலன் வாக்­கு­று­தி­யும் கொடுத்­தான். ஆனால் சொன்­ன­படி நிற்­க­வில்லை. ஒரு­நாள் முன்­னைப்­போல் ஒரு­வர் பணப்பை போய்­விட்­ட­தா­க­வும் இரு­நூறு ரூபாய் இருந்­த­தா­க­வும் அழுதுகொண்டே சைனா­ப­சா­ரில் சொன்­னார். அதைக் கேட்­ட­போது முனி­சாமி என்­னைத் தனியே அழைத்­துக்கொண்டு போய், "வேலன் இப்­ப­டிப் பலரை அழ வைத்­துப் பாவம் தேடிக் கொள்­கி­றானே" என்­றான். வேலனை நான் தனியே ஒரு­நாள் உருக்­கத்­தோடு கேட்­டேன். தான் ஒன்­றும் செய்­வ­தில்லை. என்­றும் மற்­ற­வர்­க­ளுக்­குத் துணை­யாக இருந்து திரு­டிய பொருள் கைமா­றும்­படி செய்­வ­தா­க­வும் சொல்­லிச் சத்­தி­யம் செய்­தான். முனி­சாமி இறந்த பிறகு நான் வேலனை ஒன்­றுமே கேட்­ப­தில்லை. எப்­ப­டி­யா­வது போகட்­டும் என்று விட்­டு­விட்­டேன். ஆனால் நான் பட்­டினி இருந்­த­தைப் பற்­றி­யும் வருத்­தப்­ப­ட­வில்லை. ஐந்து நாளாக அவ­னைப் பார்க்­க­வில்லை. இந்­தக் கோயி­லுக்­கும் அவன் ஐந்து நாளாக வர­வில்லை. வந்­தி­ருந்­தால் எனக்­குத் தெரி­யும் கிழக்கு இற­வா­ணத்து மூலை­யில் கல்­சந்­தில் தேங்­காய் கொஞ்­ச­மா­வது வைக்­கா­மல் போக மாட்­டான். ஐந்து நாளாக அங்கே தேங்­காய் இல்லை. சைனா­ப­சா­ரி­லும், மூர்­மார்க்­கெட்­டி­லும் தேடி­னேன். எங்­கும் கிடைக்­க­வில்லை. என்­னா­லும் நடக்க முடி­யா­த­போ­து­தான் இந்­தக் கோயி­லில் இருந்து உயிரை விட வந்­தேன். இர­வில் நேரம் கழித்து வந்­தால் பார்க்க முடி­யும் என்று வந்­தேன். கையில் காசு அகப்­ப­டாத கார­ணத்­தால் தேங்­காய் வாங்க முடி­யா­மல் போனதோ, அல்­லது கூட்­டா­ளி­கள் துரத்தி விட்­டார்­களோ, அல்­லது போலிசார் பிடித்­துச் சிறை­யில் வைத்து விட்­டார்­களோ, என்ன ஆனானோ, ஒன்­றும் தெரி­ய­வில்லை. என் மனத்­தில் ஒரே கவ­லை­யாக இருக்­கிறது. தூங்­கிக்கொண்டே இருந்­தேன். அதை நினைத்­துத்­தான் திடுக்­கிட்டு எழுந்­தேன்" என்­றான்.

"என்­றைக்­கும் ஆபத்து பிக்­பாக்­கெட்" என்று சொல்லி முடிப்­ப­தற்­குள், அவன் எழுந்து என் இரண்டு கால்­க­ளை­யும் பிடித்­துக் கொண்டு, "சாமி, சொல்­லி­வி­டா­தீர்­கள்" என்று கண்­ணீர் விட்­டுக் கெஞ்­சி­னான்.

மறு­ப­டி­யும் அவ­னுக்கு நம்­பிக்கை ஊட்­டு­வ­தற்­குள் போதும் போதும் என்று ஆகி­விட்­டது.

கொஞ்ச நேரம் எதையோ உற்­றுப் பார்த்­துக் கொண்­டி­ருந்­தான். பிறகு, அவனே என்­னைப் பார்த்து, "ஒரு­முறை போலி­சா­ரி­டம் என்­னைக் கொண்­டு­போய்ச் சேர்த்து, இரண்டு நாள் சிறை­யில் இருக்­கும்­ப­டி­யா­க­வும், மூன்­றாம் நாள் வெளியே அழைத்து வந்து விடு­வ­தா­க­வும் உறு­தி­யா­கச் சொன்­னான். ஒரு குற்­ற­மும் செய்­யாத நான், அவ­னுக்­கா­கச் சிறை­யில் அடைப்­பட்டு இருந்­தேன். ஆனால், சொன்ன சொல் தவ­றா­மல் அவன் மூன்­றாம் நாள் வந்து என்னை அழைத்­துக்கொண்டு போனான். போலிசார் யாரும் அவ­னுக்­குப் பகை­யாளி அல்ல. நாள்­தோ­றும் நிறை­யப் பணம் வைத்­தி­ருக்­கி­ற­ப­டி­யால், அவ­னி­டம் எல்­லா­ரும் அன்­பா­கப் பழ­கு­கி­றார்­கள். ஆனால், முனி­சா­மி­யும் நானும் சைனா­ப­சா­ரில் நடப்­ப­தற்­குக் கூட பயந்­தோம். அப்­படி இருந்­தும் எங்­களை எல்­லா­ரும் மிரட்­டி­னார்­கள். வேலன் உங்­க­ளைப் போல் வெள்ளை வெளேல் என்று மடிப்பு வேட்­டி­யும், மடிப்­புச் சொக்­கா­யும் சில­வே­ளை­களில் கோட்­டும் போட்­டுக் கொண்டு திரி­வான். சில நாட்­களில் கடை­களில் வாட­கைக்கு டவு­சர் வாங்கி நல்ல செருப்­பும் போட்­டுக்­கொண்டு திரி­வான். இவ்­வ­ளவு தைரி­யம் இருந்­தும், ஐந்து நாளாக வர­வில்­லையே, கண்­ணில் பட­வில்­லையே என்­பதை நினைக்­கும்போது வயிறு பகீர் என்­கிறது. எங்­கா­வது ஆசு­பத்­தி­ரி­யில் இருக்­கி­றானோ, அல்­லது சிறை­யில் இருக்­கி­றானோ, தெரி­ய­வில்லை. நான் நோயா­ளி­யாக இருந்­தா­லும் அவன் பார்த்­துக் கொள்­வான்; சிறை­யில் இருந்­தா­லும் அவன் வந்து விடு­தலை செய்­து­கொண்டு போவான். அவ­னி­டம் பணம் இருக்­கிறது. ஆனால் நான் அவனை எங்கே தேடு­வது? என்ன உதவி செய்­வது? எப்­படி விடு­தலை செய்­வது? என்­னி­டம் பணம் ஏது?" என்று சொல்லி ஒரே கலக்­க­மா­கப் பைத்­தி­யம் பிடித்­த­வன் போல் பழைய கல்­லையே உற்­றுப் பார்த்­துப் பெரு­மூச்சு விட்­டான்.

அதற்­குள் ஒரு­வர் என்­னைத் தேடிக் கொண்டு வீட்டை நோக்கி வந்து உள்ளே நுழைந்து, "நல்ல காலம்; வெளியே போய்­விட்­டீர்­களோ என்று நம்­பிக்கை இல்­லா­மல் வந்­தேன்" என்று சொல்­லிக்கொண்டே அணு­கி­னார். அவரை உள்ளே அழைத்­துச் சென்று பேசிக்கொண்­டி­ருந்­தேன். பேச்சு முடிந்­த­தும் வெளியே வந்து பார்த்­த­போது அந்த இளை­ஞன் அங்கே இல்லை. எவ்­வ­ளவு உறுதி கூறி­யும் என்­மேல் அவ­னுக்கு நம்­பிக்கை இல்லை என்று உணர்ந்­தேன். "போன­தும் நன்­மையே, நமக்கு ஏன் இந்­தத் தொல்லை?" என்று நானும் அமைதி அடைந்­தேன்.

இது நடந்து இரண்டு வாரம் கழிந்து ஒரு நாள் மாலை­யில் நல்ல நில­வொ­ளி­யில் வீட்டை நோக்கி வந்து கொண்­டி­ருந்­தேன். பழைய அந்த மாரி­யம்­மன் கோயி­லைக் கண்ட கண், என் பழைய நினை­வைத் தூண்­டி­யது. அங்கே ஓர் இளை­ஞன் விழுந்து வணங்­கிக் கொண்­டி­ருந்­தான்.

எதிரே ஒரு சீப்பு வாழைப்­ப­ழ­மும் பெரிய தேங்­காய் ஒன்­றும் இருந்­தன. தேங்­காயை உடைத்­துக் கற்­பூ­ரம் ஏற்­றி­னான்.

கைக­ளைக் குவித்­த­ப­டியே நெடு­நே­ரம் நின்று ஏதோ பாடிக் கொண்­டி­ருந்­தான். எனக்கு அந்த வேலன் நினைவு வந்­தது. இருக்­காது, இவர் யாரோ உண்­மை­யான அன்­பர் என்று நடக்க எண்­ணி­னேன். எதற்­கும் பார்த்­து­விட்­டுப் போக­லாம் என்று இளைப்­பாற வந்­த­வன் போல் நடித்­துக் கோயிலை அடுத்த திண்­ணை­யின் மேல் உட்­கார்ந்து பார்த்­துக் கொண்­டி­ருந்­தேன்.

அந்த வாழைப் பழச் சீப்பை எடுத்­துத் தெரு­வில் போய்க் கொண்­டி­ருந்த சில பிள்­ளை­களை அழைத்து ஆளுக்கு ஒன்­றா­கக் கொடுத்­தான். ஒரு மூடி தேங்­கா­யைத் தோண்டி ஆளுக்கு கொஞ்­சம் கொடுத்­தான். சிறு­வர்­கள் போய்­விட்ட பிறகு மற்ற மூடியை எடுத்­துக்­கொண்டு கிழக்கு இற­வா­ணத்து மூலைக்கு வந்­தான். அந்­தக் கல்­சந்­தில் கைவைத்து எதையோ எடுத்து எடுத்து மெல்ல வீசி எறிந்­தான்.

ஒவ்­வொரு முறை­யும் ஒரு பெரு­மூச்சு விட்­டது எனக்­குக் கேட்­டது. கடை­சி­யில் மெல்ல நகர்ந்­தான். சிறிது தொலைவு நடந்­த­தும், கைக்­குட்­டையை எடுத்து கண்­க­ளைத் துடைத்­துக் கொண்டே செல்­வ­தைக் கண்­டேன்.

என் நெஞ்­சத்­தில் ஏதோ துய­ரம் குடி கொண்­டது. சிறிது நேரம் கழித்து எழுந்து, அந்­தக் கல்­சந்தை அணு­கிக் கை விட்­டுப் பார்த்­தேன். அந்­தத் தேங்­காய் மூடியை அப்­ப­டியே வைத்­தி­ருந்­த­தைக் கண்­டேன்.

என்னை அறி­யா­மல் என் வாய், 'அய்யோ' என்று ஒலித்­தது. அப்­பால் வந்­தேன். அவன் எதையோ எடுத்து வீசி எறிந்­தானே, அது என்ன பார்க்­க­லாம் என்று அந்த இடத்­திற்­குப் போய்ப் பார்த்­தேன்.

மேகங்­கள் வில­கிச் செல்ல, முன்­னி­லும் நன்­றாய் நிலா ஒளி பரப்­பி­யது. அந்த இடத்­தில் தேங்­காய்த் துண்­டு­கள் விழுந்து கிடந்­தன; வாடிக்­கி­டந்­தன; எறும்பு மொய்த்­துக் கிடந்­தன. எடுப்­பா­ரின்­றிக் கிடந்­தன; கண்­ணீ­ரால் நனைந்து கிடந்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!