சிறுகதை
தி.ஜானகிராமன்
"சரிதான் போய்யா என்னமோ அந்தப் பொண்ணு கொஞ்சம் சேப்பாயிருக்கு. நீ அதைப் பார்த்து மயங்கறே. உன் மவனுக்குத் தகுந்த பொண்ணா அது சேப்பா இருந்தா ஆயிடிச்சா?"
"ஏண்ணே, சேப்பு ஒரு அழகு சூடு ஒரு ருசீன்னு சும்மாவா சொல்றாங்க?"
"சொல்லட்டுமே, சேப்புத்தான் அழகுன்னு சொல்லலியே, சேப்பாயிருந்தா போதுமா? முகத்துல களை குறி ஒண்ணும் வாண்டாமா? நம்ம வகையராவிலே டில்லி மட்டம் மாதிரி பொண்ணுங்கள்ளாம் இருக்கே. அதெல்லாம் விட்டுட்டு, இதைப் போய் எடுக்கிறியே பூன்னு ஊதினா ஒடிஞ்சு விழுந்திடும். குச்சி உடம்பு, கூனல், குச்சிக்காலு, உள்ளங்காலு சப்பை, தண்ணியை மிதிச்சிட்டு அந்தப் பெண் நடந்து வரபோது காலடியைப் பார்த்திருக்கியா? உள்ளங்காலு முழுக்க அப்படியே சொத்துனு தரையிலே பதிஞ்சிருக்கும். என்னமோ செல்லூர்ச் சொர்ணாம்பா கெட்டுப் போயிட்டாப்பலே பேசுறியே!"
அடுத்த மேஜையில உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த கோவிந்த வன்னிக்குத் தூக்கிவாரிப்போட்டது. திரும்பிப் பார்த்தான். அந்தப் பெயரைச் சொன்ன மகாராஜன் யாரென்று ஒரு க்ஷணம் பிரமை தட்டினாற்போல உட்கார்ந்திருந்தான்.
பத்து வருஷம் ஆகிவிட்டன இந்தப் பெயரைக் கேட்டு. அவள் நெஞ்சை ஆட்கொண்டு அவனை ஊக்கிக்கொண்டிருந்த அந்தப் பெயரை இந்தப் பத்து வருஷ காலத்தில் இரண்டாவது மனிதன் ஒருவன் சொல்லி அவன் கேட்கவில்லை. இடைவிடாமல் அவனுடைய அந்தரங்கத்தை நிறைத்து நின்ற அந்த வனப்பு வடிவம் எதிரே நிற்பதுபோல் இருந்தது.
வெண்தாழை முகம், பாதம், கை, முதுகில் தளர்ந்து புரளும் சிற்றலையோடும் கூந்தல், அரக்கு வர்ணப் புடவை வலது கையில் பூஜைத்தட்டு. இடது கையில் முன்றானை வாளிப்பும் வர்ணமும் ஒன்றி வடிந்த அழகு பளீர் என்று தடுத்து நிறுத்தும் தோற்றம். கோயில் திண்ணையில் இருந்த பெரிய பிள்ளையாருக்கு முன்வந்து நின்று மோதிரக் கற்களின் ஒளி சிதற நெற்றியில் குட்டிக்கொள்கிறாள். குருக்கள் விபூதியைக் கொடுத்ததும் வாங்கி நெற்றியில் குங்குமத்தின்கீழ் வைத்துக்கொள்ளுகிறாள்.
கோவிந்த வன்னி ஒரு கணம் இந்த லயிப்பில் ஒன்றி விருந்தான். பிறகு உலுக்கிக்கொண்டு நெஞ்சத்தில் மழை பொழிந்த அந்தப் புண்ணியாத்மாவைப் பார்த்தான். இன்னும் ஏதாவது சொல்லப்போகிறாரா என்று. ஆனால் அந்தப் பேச்சு ஏதோ கல்யாணப் பேச்சாக வளரும்போல் இருந்ததே ஒழிய, மீண்டும் சொர்ணாம்பாளின் பெயரே அதில் வரவில்லை.
"அண்ணே, இப்ப ஏதோ பேர் சொன்னிங்களே, ரொம்ப அழகின்னு. அது என்ன?"
"அதுவா? சொர்ணாம்பா, ெசல்லூர் சொர்னாம்பா"
"ஆண்டாள் கோயில் காமாட்சி தான் ரொம்ப அழகுன்னு சொல்லுவாங்க. தமிழ்ச் சீமையிலேயே அவ காலிலே கட்டி அடிக்கறதுக்குக்கூட பொம்பளை கிடையாதுன்னு பேரு."
"அதெல்லாம் ஐதர் காலத்துக் கதை. இந்தச் சிங்கப்பூர்லே எத்தினி நாளா இருக்கீங்க?"
"கிட்டத்தட்ட பத்து வருஷமாச்சு"
'அதுக்கு முன்னாலே?"
"திருச்சிராப்பள்ளியிலே இருந்தேன்."
"திருச்சிராப்பள்ளியிலேயிருந்திட்டா சொர்ணாம்பாளைப் பத்திப் புதிசாச் சேதி கேக்கிறீங்க? ஜில்லா தாண்டி ஜில்லா அவ பேர் போயிருக்கே! நீங்க சொல்ற காமாச்சி இருபது வருசத்துக்கு முன்னாலே, சமீபத்திலே எப்பவாவது ஊருக்குப் போகப் போறீங்களா?'
"போகப் போறேன். ஒரு வாரத்துலே."
"போனா, தஞ்சாவூருக்கு ஒரு டிக்கட் எடுத்துக்கிட்டு அவளைப் போய்ப் பாத்திட்டு வாங்க. ரெயிலை விட்டு இறங்கினதும் ஒரு ஒத்தைமாட்டு வண்டி பிடிச்சு செல்லூர்ச் சொர்ணாம்பா வீடுன்னா கொண்டு விட்டுவிடுவான். ஆனால் போறபோது வெறுங்கையோட போங்க. இல்லாட்டி இந்தச் சீமையிலே சம்பாரிச்ச தெல்லாம் நீங்களா அவ காலிலே கொட்டிப்புடுவீங்க. ஆனா வெறுங்கையோட போனாத்தான் என்ன? திரும்பி வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போய் அவகிட்டக் கொடுக்கத்தானே போறீங்க! அதனாலே நீங்க தஞ்சாவூருக்கும் போக வாணாம், அவளைப் பார்க்கவும் வாணாம்."
"என்ன ஐயா அவ்வளவு அதிசயமான ரதி?"
"ஐயா, ஏன் இந்த வீண் பேச்சு? நான் சொன்னா நம்பமாட்டீங்க. போய்ப் பாத்திட்டே வந்திடுங்க. எத்தனையோ உலகப் பிரபுவெல்லாம் துணியை உதறிக்கொட்டிப்பிட்டான். வடக்கேயிருந்து ஒரு ஜமீன்தார் வந்து ஒரு வருஷம் அவளைச் சுத்திப்பிட்டுப் போதும் போதும்னு ஒடிப்போனான். நீங்களும் போங்க."
"நம்ம வன்னியரு அதுக்கெல்லாம் மசியறவரு இல்லே. செலவழிக்க நல்ல ஆளைப் பாத்தீங்களே. எனக்குத் தெரிஞ்ச நாளா இந்த ஹோட்டல்லே ஒரு டீ, ஒரு சைவச் சோறு, அதுக்குமேலே சாப்பிட்டதில்லையே இவரு," என்று ஹோட்டல் முதலாளி நையாண்டி செய்தார்.
"நானா செலவழிக்கிறதில்லே ஏய், கொண்டா சொல்றேன், மூணு பிரியாணி!" உடனே அந்தச் சீனாக்காரப் பையன் உள்ளே ஓடினான்.
"என்னாத்துக்குங்க ராத்திரி பத்து மணிக்கு மேலே?"
"பரவாயில்லிங்க. சும்மா சாப்பிடுங்க."
"இல்லிங்க."
"நீங்க சும்மாயிருங்க."
பிரியாணி வந்துவிட்டது. அவர்கள் சாப்பிட்டார்கள். வன்னியும் பத்து வருஷத்துக்குப் பிறகு புலவை ருசித்தான்.
"இன்னிக்கு என்ன வன்னியருக்கு ஒரே குஷி கிளம்பிடிச்சி' என்றார் முதலாளி.
"இந்த மாதிரி பேசற ஆளைப் பார்த்தா ஏனையா செலவு செய்யக்கூடாது பெரிய ஆளு இவரு. அந்தப் பொம்பளே அழகா இருக்கோ என்னவோ, இவரு பேசறத்திலேயே அவளை ரதியா அடிச்சிடுவாரு போல் இருக்கு."
"அப்படினா, நான் என்னமோ ஒன்னுமில்லாததைப் பெரிசு பண்ணி அளக்கிறேன்னு சொல்லுறீங்க. நீங்கதான் போய்ப் பார்க்கப் போங்களே. நான் சும்மா சொல்லிக்கிட்டுக் கிடப்பானேன்."
"சரி, பாத்திடறேன்."
'நீங்க சொன்ன காமாட்சி, ஆடினா, பாடினா, நாடகமாடினா. ஆனா சொர்ணாம்பா சும்மா எதிர்க்க நின்னாப்போதும். பதினாலு லோகமும் அவ காலிலே உழுந்திடும். அவ ஒத்தரையும் ஒண்ணும் கேக்கறதில்லே. தானே கொண்டு கொட்டிப்பிட்டுத் தலையிலே துணியைப் போட்டுக்கிட்டு ஓடற கதிக்கு வராங்க. இத்தனைக்கும் அவளுக்கு ஆடவும் தெரியாது, பாடவும் தெரியாது. சும்மா ஆள்தான். அதுதான் இப்படிப் பம்பரமா ஆட்டி வைக்குது. நல்லவேளையா இத்தோட விட்டான். ஆண்டவன் ஆட்டம் பாட்டமுன்னு ஏதாவது கொடுத்திருந்தான், இந்த உலகம் தப்பறதா?"
"அண்ணே. என்ன பேசிக்கிட்டே இருந்தா எப்பப் போறது?" என்று அவனுடைய நண்பன் குறுக்கிட்டான்.
"மணி என்ன பத்தரை ஆயிடுச்சா. அப்ப நான் போய் வரேங்க."
"எந்த ஊர் உங்களுக்கு?"
"எனக்குச் சிதம்பரம்ங்க. கோலாலம்பூர்லே இருக்கேன்."
"வந்தா ஊர்ப் பக்கம் வாங்க கொடவாசல்தான். கோவிந்த வன்னின்னா சொல்லுவாங்க"
"சரிங்க, நான் வரட்டுமா?"
அவர்கள் போய்விட்டார்கள்.
ஹோட்டலில் வேறு ஒருவரும் இல்லை. வன்னி, முதலாளி, சீனாக்காரப் பையன் மூவருமே இருந்தார்கள். கடை கட்டுகிற சமயம் பட்சண அலமாரியைப் பூட்டிவிட்டு வீட்டுக்குப் போகுமாறு பையனிடம் சொல்லிவிட்டு, டிராயரைத் திறந்து சில்லறையை எண்ணத் தொடங்கினார் முதலாளி.
"அண்ணே, இந்த ஆளு எப்படி பேசறாரு, பாத்தியா?" என்றான் வன்னி.
"அந்தப் பொம்பளை பெரிய ஆளாகத்தான் இருக்கணும், பேரைச் சொன்னதுமே அவங்களுக்கும் ரெண்டு பிரியாணி கிடைச்சுது எனக்கும் ரெண்டு பிளேட் வியாபாரமாச்சு."
"அட போங்கண்ணே. அந்தப் பொம்பளெக்காகவா இது, அந்த ஆளு பேச்சுக்காகல்ல?"
"அதிருக்கட்டும். நாலு வருசமா என்னோட பழகிட்டு வரீங்களே, அப்படி இருக்கிறவரு எனக்கு ஒண்ணும் கொடுக்காம யாரோ முகந்தெரியாத ஆளுக்கு விருந்து பண்ணினிங்களே!"
"அண்ணே, நீங்கதான் விருந்தா பண்ணி எல்லா வயத்தையும் நிரப்புறீங்க. நான் என்னத்தைச் செய்ய உங்களுக்கு?"
"உம், சரி."
"அலுத்துக்காதீங்க. இப்பவே ஒரு பெரிய விருந்தா செய்யப்போறேன் உங்களுக்கு."
"என்னாய்யா அது?"
சீனப்பையன் விடைபெற்றுக்கொண்டு போனான்.
"ஒரு உண்மையான சிநேகிதனுக்கு என்னங்க விருந்து செய்யலாம்? இன்னும் நாலு நாளிலே ஊருக்குக் கிளம்பிடப் போறேன். பாஸ்போர்ட்டும் வந்திரிச்சு, உங்களுக்குத் தெரியும் என் ஞாபகம் உங்களுக்கு மறக்காம இருக்கும்படியா ஒன்னு கொடுக்கப்போறேன். சாமான், விருந்து இதெல்லாம் அழிஞ்சு போயிரும். அழியாத சாமானா கொடுக்கப்போறேன். இதுவரையில் ஒருத்தருக்குமே சொல்லாத, கடவுளுக்கும் எனக்கும் மாத்திரம் தெரிஞ்ச ஒரு ரகசியத்தை உங்ககிட்டே சொல்லப்போறேன். பெட்டியிலே போட்டுப் பூட்டறதுபோல, ஒரு அருமையான சிநேகிதனுக்குத்தான் ஒரு ரகசியத்தைச் சொல்லணும். அதைவிட உசந்த பொருள் கொடுக்க முடியாது."
"வன்னியரே, என்னமோபோல இருக்கீங்க நீங்க இன்னிக்கி. நிதம் பாக்கற வன்னியரா இல்லே."
"அந்த ஆள் பேசின பேச்சு அத்தனையும், ஒவ்வொரு எழுத்தும் உண்மை. அந்தச் சொர்ணத்துக்கு ஈடா நிக்க ஒரு பொம்பளை இந்த உலகத்திலே இருக்க முடியாது. நானும் இந்தச் சிங்கப்பூர்லே எவ்வளவோ தேசத்துப் பொம்பளைங்களைப் பாத்திட்டேன்; இன்னும் பாக்கறேன், ஜப்பான்காரி, சைனாக்காரி, வெள்ளைக்காரி, பர்மாக்காரி, பஞ்சாப்காரி எவ்வளவோ பாக்கறேன்! ஆனால் அந்தச் சொர்ணாம்பா வீட்டுவாசப்படியிலே கூட இவங்களையெல்லாம் நிக்க வைக்க முடியாது."
"அப்பன்னா நீங்க பாத்திருக்கீங்களா அவளை"
"பார்த்தும் இருக்கேன். கிட்டக்க நின்னு பேசியும் இருக்கேன்."
"என்னமோ ஒண்ணுமே தெரியாததுபோல விசாரிச்சீங்களே?"
"அவளைப் பத்திப் பேசிப் பேசிக் கேக்கணும்னு நெனச்சேன்; பாசாங்கு பண்ணினேன். நீங்க கடையைக் கட்டிக்கிட்டு வாங்களேன். இங்கே ரொம்பப் புழுக்கமா இருக்கு, பார்க்கிலே போய்க் கொஞ்சநேரம் உக்காந்துக்கலாமே."
ஹோட்டல் முதலாளி சில்லறைகளை எண்ணிக்கொண்டிருந்தார்.
கோவிந்த வன்னி எழுந்து வெளியில் போய்க் காற்றாட நின்றான். சிங்கப்பூர் இவ்வளவு அழகாக ஒருநாளும் தோன்றியதில்லை அவனுக்கு. பார்க்கில் இருளில் ஓங்கி நின்ற மரங்கள், நீல விளக்குகள் ஒவ்வொன்றும் தனக்கு இன்பம் அளிப்பதற்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதுபோல் தோன்றிற்று. சொல்லுக்கு எட்டாத நாளாக யாரிடமும் சொல்லாமல் அவன் இருதயத்தை அழுத்திச் சுமந்துபோன அந்த ரகசியம், இப்போது வெடித்து வெளிப்படத் துடித்தது.
முதலாளி ஹோட்டலைப் பூட்டிக்கொண்டு வந்தார். கொஞ்சதூரம் போனதும் வன்னி சொன்னான்.
"நான் இந்தச் சிங்கப்பூருக்கு வந்ததே அந்தச் சொர்ணாம்பாளுக்காகத்தான்."
"என்னது!"
"ஆமாம். பொண்டாட்டி புள்ளைக்குச் சேர்த்து வைக்கணும்னு வல்லை. அந்தச் சொர்ணாம்பாதான் என் மனசிலே கோயில் கொண்டிருக்கா. அவளுக்காகத்தான் இந்தக் கண் காணாத சீமையிலே வந்து ஒண்டியா நாளை ஒட்டிக்கிட்டு இருக்கிறேன்.
"குண்டு, பீரங்கி, குத்து, வெட்டு இதுக்கெல்லாம் நடுவிலே ஊருக்கு ஓடாமே, உசிரைக் கையிலே புடிச்சுக்கிட்டு உட்கார்ந்து இருந்தேன். நல்லவேளையா என் ஆசையும் நெறவேறிடிச்சு.
"அந்த மனுசன் பேசிக்கிட்டிருந்தாரே, அவரு என் மனசை அறிஞ்சுதான் பேசிக்கிட்டு இருந்தாரோ, என்னவோ! போனவுடனே ஒரு டிக்கட்டு எடுத்துக்கிட்டு தஞ்சாவூருக்குப் போன்னாரே! என்னமாத்தான் சொன்னாரோ, நான் இந்த ஊரிலே பத்து வருஷம் முன்னாடி காலடி எடுத்து வக்கிறபோதே அப்படிப்போற எண்ணத்தோடதான் வச்சேன். வெறுங்கையா போன்னாரே, அப்படிப் போகல்லே. சம்பாதிச்சதெல்லாம் அங்கேதான் கொண்டுபோகப் போறேன்."
"அப்ப ஒரு முதலாளிகிட்ட வேலை செஞ்சிக்கிட்டிருந்தேன்; சுப்பையா உடையாருன்னு பேரு. பெரிய மிராசுதாரு நூத்தைம்பது வேலி நிலம், காவேரிப் பாசனம் மோட்டார் வெச்சுக்கிட்டிருந்தாரு. தஞ்சாவூருக்குப் போறபோதெல்லாம் இந்தச் சொர்ணாம்பா வீட்டிலேதான் தங்குவாரு.
"முதல் தடவை என்னை அழச்சிக்கிட்டுப் போனாரு. காரை வாசல்லே நிறுத்திட்டு உள்ளே நுழைஞ்சாரு. பின்னாலே பெட்டியைத் தூக்கிட்டுப் போனேன் நான். 'வாங்கன்னு' குரல் கேட்டது. நிமிந்து பார்த்தேன். இப்ப நினைக்கறப்பவே உடம்பெல்லாம் புல்லரிக்குது. பளீர்ன்னு மின்னல் அடிச்சாப்பலே இருந்தது. அந்த மாதிரி நிறமே நான் பார்த்ததில்லே. கொன்னைப்பூ பூத்து ரெண்டு நாள் ஆனப்புறம் அந்த மஞ்சள் வெள்ளையாப் போயிடுமே. அதுவும் காலை வெயில்லே அதைப் பாத்தா எப்படி இருக்கும்? அந்த நிறம். தலைமயிர் கருகருன்னு மின்ன, சுருட்டை சுருட்டையா தொடை மட்டும் தொங்கிக்கிட்டு இருந்தது. நடந்து வராப்பலே இல்லே, மிதந்து வரமாதிரி இருந்தது.
"கண்ணு, மூக்கு, கைவிரல், கால்விரல்... மனுஷப் பிறவி இவ்வளவு அழகா இருக்கமுடியுமா? எனக்கு ஒரு சந்தேகம் நிழலாடிச்சு. ஏதோ மோகினியா இருக்குமோன்னுகூட அச்சமாயிருந்திச்சு. பூ அழகாயிருந்தா அது சகஜம். பழம் அழகாயிருந்தா அதுவும் நடப்புத்தான்... ஆனா மனுசப் பிறவி இப்படி இருந்தா? நம்பவே முடியலே. கொஞ்சநாழி எனக்கு ஒண்னும் புரியலே. மண்டையிலே அறஞ்சாப்பலதான் இருந்தது.
"அதே கண்ணோட முதலாளியையும் பார்த்தேன். போய்ச் சோபாவிலே உட்கார்ந்திருந்தாரு. இந்த மாதிரிக் கறுப்பை இனிமே பார்க்கவும் முடியாது. பண்ணவும் முடியாது. பளபளன்னு. எண்ணெய் வழியற கறுப்பு. வழுக்கைத்தலை, வாய் நிறைய வெத்திலைக் காவி. புஷு புஷுன்னிட்டு பள்ளமும் மேடுமா சேனைக்கிழங்கைப்போட்டு மூட்டை கட்டினாப்பலே உடம்பு. அவ வீட்டுப் பங்கா இழக்கக்கூடலாயக்கு இல்லாத லச்சணம். காதிலே வைரக் கடுக்கனும் கை நிறைய வைர மோதிரமும் இல்லாட்டி ஏதோ மூட்டை தூக்கின்னுதான் நெனைக்கனும். அதுவும் மகாராஜன் குடிச்சிப்பிட்டாரோ, அந்த அழகைக் கண்ணைப் பிடுங்கி வச்சிட்டுத்தான் பார்க்கணும்."
"அதே கண்ணோட என்னையும் பார்த்துக்கிட்டேன், நிலைக் கண்ணாடியிலே. மூட்டை தூக்க அவரைப் போட்டு, அந்த சோபாவிலே என்னைத் தள்றதுக்குப் பதிலா, கடவுள் ஏதோ அவசர அடியிலே கைப்பிசகா மாத்திப்பிட்டாரோன்னு தோணிச்சு.
"சொர்ணாம்பா கீழே விரிப்பிலே உக்காந்துக்கிட்டா. நீ வாசல்லே போன்னாரு முதலாளி. சிவனேன்னு வாசலுக்குப் போனேன். ஒரு மணி நேரம் கழிச்சுச் சமையற்காரி சாப்பிடக் கூப்பிட்டா. அவதான் சோறும் போட்டா. கீழே வேற ஒருத்தரும் இல்லே.
"மறுநாளும் அங்கேதான் இருந்தோம். அன்னிக்கி வெள்ளிக்கிழமை. காமாட்சி அம்மன் கோயிலுக்குப் போனோம். நடந்துதான். முதலாளியும் அம்மா கூடவே வந்தாரு. என்னமோ கட்டின புருசன் மாதிரி. கோயில்லே நல்ல கூட்டம், நாங்க நுழஞ்ச உடனேயே கலகலப்பு, சத்தம் எல்லாம் ஒஞ்சு போச்சு.
"நானும் பார்த்தேன். ஒரு ஆளாவது அந்த அம்மனைப் பாக்கணுமே. பொம்பளைங்களெல்லாம் நேரா அந்த மோகினியைப் பார்த்தாங்க. ஆம்பிள்ளைங்க பயப்பட்டுக்கிட்டே பாத்தாங்க. திருட்டுத்தனமாப் பாத்தாங்க வேறே எதையோ பாக்கறமாதிரி... கடசியிலே சரிதான் போன்னு துணிச்சலாக் கண்ணெடுக்காமலும் பாத்தாங்க. அந்த சொர்ணாம்பாளைத் தவிர வேறு ஒரு கண்ணாவது அம்பாளைப் பாக்கலே. அவதான் ஒரேயடியா அம்பாளைப் பாத்துக்கிட்டிருந்தா. அந்த அம்மன் லேசாகச் சிரிக்கிறாப்பலே பட்டுது. இத்தனை பேர் தவிக்கிறப்போ, ஒண்ணுக்கும் அசையாம, கண் எடுக்காம, ஒண்னுமே தெரியாததுபோல நம்மைப் பார்த்துக்கிட்டிருக்காளே.. என்ன நெஞ்சுரப்பு... என்ன துணிச்சல்ன்னு அந்த அழகைப் படைச்ச லோக மாதா சிரிக்கிறாப்பலே இருந்தது.
"அர்ச்சனைத் தட்டுகளை குருக்கள்மார் வாங்கிட்டுப் போனாங்க. ஆனா எல்லாரும் என்ன கொடுக்கிறோம், என்ன வாங்குகிறோம், என்ன செய்கிறோம் என்கிற ஞாபகமில்லாமலே செஞ்சிகிட்டிருந்தாங்க. நானும் சொர்ணத்தைப் பாக்கறபோது என் நெஞ்சு குறுகுறுன்னுது. அந்த அம்மாவோ அம்மனை விட்டுக் கண்ணெடுக்கலே மனுசர்களை மதிக்கிறதாகவே படலெ.
"ராத்திரி திண்ணையிலே படுத்துக்கிட்டிருந்தேன். ஒரே நெனப்புனாலேயோ என்னமோ ஒரு கனாக் கண்டேன். அந்தச் சொர்ணம் ரோஜாப்பூ மாலையா மாறிட்டாப்லேயும், முதலாளி பன்னிக்குட்டி ரூபமா மாறி ஊர்ச் சகதியிலே எல்லாம் புரண்டுட்டு, அந்த மாலையைக் கழுத்திலே சுத்திக்கிட்டு விளையாடறாப் போலெயும் இருந்திச்சு.
"மறுநாள் காலமே நானும் சமையற்காரியும் கறிகாய் வாங்கறதுக்காக மார்க்கெட்டுக்குப் போனோம். ஒருத்தருக்கொருத்தர் ஊரு, பேரு, குலம், கோத்ரம் எல்லாம் விசாரிச்சுக்கிட்டே.
"அவளுக்கு மாசம் ஆறு ரூபா சம்பளமாம். சாப்பாடு போட்டு. இதுக்கு முப்பது நாளும் தூங்கற வரையில் ஓய்வு ஒழிச்சல் கிடையாது. இதே கணக்கிலே சம்பாதிச்சுக்கிட்டுப் போனா, அம்மா ஒரு நாளைக்குச் சம்பாதிக்கிற பணத்தை, ஏழெட்டு வருசத்திலே சம்பாதிக்க முடியும்னு ஒரு கணக்குச் சொன்னா அவ. எனக்கும் முதலாளி சாப்பாடு போட்டு ஏழு ரூபா கொடுத்து வந்தாரு.
"நானும் கணக்குப் போட்டேன். எம்பொஞ்சாதியும் ரெண்டு குழந்தைகளும் சாப்பிடாமலே பட்டினி கிடக்கிறதா இருந்தா, நானும் ஆறேழு வருஷத்திலே அத்தனை பணம் சம்பாதிக்க முடியும். ஒருதரம் நெனச்சுப் பார்த்தேன். எனக்கும் ஒன்னும் புரியலே. ஒரு நாளைக்கா இவ்வளவு சம்பாதிக்கறா அம்மான்னு மறுபடியும் கேட்டேன் அவளை.
"ஆமாமையா, ஆமாம், ஒரு நாளைக்குத்தான் இவ்வளவு. இல்லாட்டி உங்க முதலாளிக்கு இங்கே என்ன வேலை. அதுவும் உங்க முதலாளி ராஜ வடிவு பாரு.. அவருக்கு ரெட்டைப் பங்கு வரி இருக்கும்னு சொன்னா அவ.
"பொண்டாட்டி பிள்ளைகளைக் காப்பாத்தியாகணும். அப்படீன்னாப் பத்துப் பிறவி எடுத்தாலும் நாம் காலணா மிச்சம் பிடிக்கப் போறதில்லே. பாத்தேன். ஒரு மாசமா என் மனசு ஒரு நிலையா இல்லே. தூக்கம் பிடிக்கல்லே.
"முதலாளிகிட்டேயிருந்து கழட்டிக்கிட்டு ஊருக்குப் போனேன். ஊட்டுப் பொம்பளையைச் சமாதானப்படுத்தி நல்ல வார்த்தை சொல்லி, நாலு பவுன்லே அட்டிகை, ஒரு மோதிரம் எல்லாத்தையும் வித்தேன். இங்கே வந்து சேந்துட்டேன்.
"அக்கரைச் சீமைக்கு வந்தா என்ன, சாக்குச்சாக்காவா பணம் கட்ட முடியும்? மூட்டை தூக்க எவ்வளவு தெம்பு வேணுமோ அவ்வளவுதான் சாப்பிட்டேன். பெண்டாட்டி பிள்ளைக்கும் துரோகம் பண்ணல்லே. மாசம் பத்து ருவா மேனிக்கு அனுப்பிச்சுக்கிட்டு வந்தேன்.
"சண்டை வந்தது. ரொம்பப் பேர் பயந்துக்கிட்டு ஓடினாங்க. பீரங்கி, குண்டு, குத்து, வெட்டு ஒண்ணும் பெரிசாப் படலே எனக்கு. உசிரைக் கையிலே புடிச்சுக்கிட்டு இங்கியே ஒட்டிக்கிட்டேன். ஜப்பான்காரன் ராஜ்யத்தையும் பாத்தாச்சு. மறுபடியும் நெஞ்சிலே சம்மட்டி அடிக்கிறாப்போல வெடியும் குண்டும் வெடிச்சுது. ஆனா என் உசிரு நின்னுது. குருவி சேக்கறாப்பலே சேத்த பணமும் நின்னுது. ஏ அப்பா பத்து வருசம்! நான் இங்கே வந்து பத்து வருசம் ஆயிடிச்சு.
"எத்தனை ஆபத்து, நடுவிலே எத்தனை அதிரல்! ஆனா இந்த உசிருக் கவலை; பூதம் காக்கிற மாதிரி பணம் காக்கிற கவலை; இத்தனைக்கும் நடுவிலே நான் சேந்தாப்போல் அஞ்சு நிமிஷம் சொர்ணாம்பாளை நெனைக்காம இருந்ததில்லே. எனக்கே ஆச்சரியமா இருக்கு... உசிருக்கு ஆபத்து வரப்போ பொண்டாட்டி, பிள்ளை ஞாபகம் உங்களுக்கு வராதா? எனக்கு வல்லை அண்ணே. நான் அவளைத்தான் பளிச்சுப் பளிச்சினு நெனச்சுக்கிட்டிருந்தேன்.
"ஒரு பிராணிகிட்ட இதை நான் சொல்லலே. இன்னிக்கு அந்த ஆளு வந்தப்புறம் எனக்குப் பொங்கிப் பொங்கி வந்திச்சு. என் நெஞ்சு வெடிச்சுப் போகும்போல ஆயிடிச்சு. இப்ப கவணையைத் திறந்து விட்டிட்டேன். அப்பாடா!"
வன்னி பெருமூச்சுவிட்டான். பத்து வருஷச் செய்தி வெளியே பாய்ந்து ஓடியதும் சலசலப்பு ஒய்ந்து அவன் நெஞ்சு அமைதியாக நின்றது. பார்க் விளக்குகள் மெளனமாக எரிந்து கொண்டிருந்தன. இலைகள் ஒய்ந்து உறங்கின.
'ம்!' என்று உடல் விரிய ஒரு பெருமூச்சுவிட்டார் ஹோட்டல்காரர்.
"அம்மாடா!" என்று சோர்வைக் கழித்தான் வன்னி. ஏழெட்டு மைல் நடந்துவிட்டாற்போல் அவனுக்கு உடல் களைத்துவிட்டது.
"வன்னியரே, இது ரொம்ப வேடிக்கையான செய்தி. ஒருநாள் செலவழிக்கிற பணத்துக்காக, பத்து வருஷம் ராப்பகலா உழைச்சு வயத்தை ஒடுக்கி ஓடாப் போறத்துக்கு என்ன முடை? நீங்க மனுஷப் பொறவி இல்லையா? வித்தியாசமா நெனச்சுக்காதீங்க. எனக்கு ஒண்னும் புரியல்லே. நானும் யோசிச்சு யோசிச்சுப் பாக்கறேன்," என்றார் ஹோட்டல்காரர்.
வன்னி பேசவில்லை.
"அந்த ஒரு நாளிலே எல்லாத்தையும் தீத்துப்பிட்டு, மறுபடியும் உடம்பை வேலைக்குப் பூட்டித்தானே ஆகணும். பிழைக்கணுமே, உசிர் வாழணுமே!"
ஹோட்டல்காரர் சரியாகத் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்று சந்தேகப்பட்டுக்கொண்டே மேலும் அழுத்திச் சொன்னான் வன்னி, "அப்புறம் உசிர் வாழனும்னுதான் என்ன முடை? உசிரே இல்லாம இருந்திட்டா?"
தொடர்ச்சி அடுத்த வாரம்

