ஸ்டெல்லா

சிறுகதை

சிவகுமார் கே பி

“அப்பா...’’

காவ்­யா­வின் குர­லில் ஒரு ஏக்­கம்.

“சொல்­லுடா கண்ணா’’.

வேலை செய்­து­கொண்டே ஏனோ­தானோ என்று பதி­ல­ளித்­தான் அருண்.

“எனக்கு ஒரு நாய்க்­குட்டி வேணும்’’.

காவ்யா சொன்­னதை கேட்­ட­தும், தான் வேலை செய்­து­கொண்­டி­ருந்த கணி­னி­யின் பார்­வை­யி­லி­ருந்து கொஞ்­சம் தலையை நிமிர்த்­தி­னான் அருண்.

அவ­ன­ருகே வந்து நின்ற அவ­னின் எட்டு வயது மகள் காவ்யா கையில் ஒரு வரை­ப­டம் இருந்­தது. அந்தப் படத்­தில் காவ்யா தான் ஒரு நாய்க்­குட்­டி­யோடு சேர்ந்து இருப்­பது போல் வரைந்­தி­ருந்­தாள்.

அந்த நாய்க்­குட்­டிக்கு, ‘ஸ்டெல்லா’ என்று பெய­ரும் வைத்து, அதற்கு தான் போட்­டுக்­கொள்­வது போல் ஒரு பள்­ளிக்­கூட பையை­யும் அதன் கழுத்­தில் மாட்டி வரைந்­தி­ருந்­ததை பார்த்­த­தும், அரு­ணுக்கு சிரிப்புதான் வந்­தது.

“என்­னது நாய்க்­குட்­டியா? அது எதுக்­குடா கண்ணா? நீயே ஒரு நாய்க்­குட்டி மாதிரிதான் இருக்க,’’ என்று சொல்­லி­விட்டு காவ்­யாவை அணைத்து முத்­த­மிட்­டான்.

அவன் அணைப்­புக்குப் பிடிகொடுக்­கா­மல், மீண்­டும் அவனை ஏக்­கத்­தோடு பார்த்­தாள் காவ்யா.

“அப்பா...”

“எனக்கு நாய்க்­குட்டி வேணும்’’ இப்­போது அவள் குர­லில் ஒரு பிடி­வா­தம் தெரிந்­தது.

“காவ்யா!! சொன்னா கேளு. இந்த நாய்க்­குட்டி, பூனைக்­குட்டி வாங்­க­ற­தெல்­லாம் நம்ம வீட்­டில நடக்­காது. யாரு அதை பார்த்­துக்குவாங்க?’’ என்று கொஞ்­சம் எதார்த்தைப் பற்றி பேச முனைந்­தான் அருண்.

“நான் பார்த்­துக்குவேன் பா. நான் அது­கூட தினம் விளை­யா­டு­வேன். அதுக்கு நம்ம வீட்­டில எந்த போரும் அடிக்­காம பார்த்­துக்­கு­வேன். நான் ஒரு யோசனை சொல்­லட்­டுமா? பேசாம நான் ஸ்கூல் போகும்­போது, அதை­யும் கூட்­டிட்டு போறேன். என் கிளாஸ் நண்­பர்­க­ளுக்கு கூட நாய்­குட்­டினா ரொம்பப் பிடிக்­கும்.’’

“ஹா ஹா.. ஸ்கூ­லுக்­கெல்­லாம் அதை கூட்­டிட்டுப் போக முடி­யாது செல்­லம்’’ என்று சொல்­லி­விட்டு அவ­ளின் அப்பாவித்­தனத்தை ரசிக்க, அவ­ளுக்கு மீண்­டும் ஒரு செல்ல முத்­தம் கொடுத்­தான் அருண்.

“அப்போ நான் ஸ்கூல் போகிற சம­யம், அதுக்கு என்­னோட விளை­யாட்டுச் சாமான் கொடுத்­திட்டுப் போவேன். நான் திருப்பி வர வரைக்­கும் நாய்க்­குட்டி அத்­தோட விளை­யா­டிட்­டி­ருக்­கும். சரியா? வாங்­க­லாம் பா. ப்ளீஸ்’’.

தன் வேலைக்கு நடுவே அரு­ணுக்கு அவ­ளோடு வாதாடிக் கொண்­டி­ருக்க நேர­மில்லை.

“சரி சரி. வாங்­க­லாம்,’’ என்று அவளை திசைத்­தி­ருப்ப சொல்­லி­விட்டு மீண்­டும் தன் கணி­னிக்­குள் மூழ்­கி­னான்.

‘சரி வாங்­க­லாம்’ என்று அப்பா சொன்­னதைக் கேட்­ட­தும், மகிழ்ச்சியில் அவ­ன­ருகே உட்­கார்ந்த காவ்யா, மீண்­டும் ஏதோ ஒரு புது வரைப்­ப­டம் வரைய தொடங்­கி­னாள். இம்­முறை அவள், அந்த நாய்க்­குட்டி, மற்­றும் தன் அப்பா அம்­மா­வோடு சேர்ந்து இருப்­ப­து­போல் ஒரு குடும்­பப்­ப­டம் வரைந்­தாள். அந்தப் படத்­திற்கு வண்­ணம் பூசி, ‘ஹாப்பி ஃபேமிலி’ என்று அதற்கு மேல் எழு­தி­விட்டு, அரு­ணின் வேலைக்கு நடுவே அவ­னி­டம் அந்தப் படத்தை நீட்­டி­னாள்.

வேலை­யின் மும்­மு­ரத்­தில் இருந்த அருண், ‘வெரி குட்’ என்று அந்த வரை­ப­டத்­திற்கு மேல் அவ­சர அவ­ச­ர­மாக எழுதி­விட்டு, மீண்­டும் தன் வேலைக்­குள் மூழ்­கி­னான்.

சற்று நேரம் கழிந்து, “என்ன அருண்? நீயுமா?” என்று ப்ரீத்­தி­யின் குரல் அவனை அழைத்­தது.

“என்ன ஆச்சு?’’ என்று அவன் திரும்­பி­ய­போது ப்ரீத்தி கையில் காவ்­யா­வின் ‘ஹாப்பி பேமிலி’ வரைப­டம் இருந்­தது.

“நல்­லாத்­தான் வரைஞ்­சி­ருக்கா. அத­னால ‘வெரி குட்’ போட்­டேன்.’’

“நான் அவ வரைஞ்ச படத்தை ஒண்­ணும் சொல்­லலை. காவ்யா சொல்றா, நீயும் நாய்க்­குட்டி வாங்­க­லாம்னு சொல்லி ஒத்­துக்­கிட்­டி­யாம். அப்­ப­டியா?” என்று ப்ரீத்தி கேட்­ட­போது, அருண் காவ்­யாவை தேடி­னான்.

அவள் மெல்ல ப்ரீத்தி பின்­னி­ருந்து, அவன் முன்னே வந்­தாள்.

“காவ்யா கண்ணா. நான் தான் ஏற்­க­னவே சொன்­னேன்ல. நாய்க்­குட்டி பூனை­குட்­டி­யெல்­லாம் நாம வாங்­க­மு­டி­யா­துன்னு சொல்லி,’’ என்று சமா­ளித்­தான்.

“அப்பா... அப்பா... ஆனா நீங்க தானே, கடை­சி­யில ‘சரி, சரி வாங்­க­லாம்னு’ சொன்­னீங்க?’’ என்று எதிர்­பார்ப்­போடு அவள் கேட்டபோது, கொஞ்­சம் நிதா­னத்­தோடு அவளை தன் பக்­கம் இழுத்­தான் அருண்.

“காவ்யா... சொன்னா புரிஞ்­சுக்க... நீ எங்­க­ளோட ஒரே பொண்ணு... செல்ல பொண்ணு. நமக்கு எதுக்கு நாய்க்­குட்டி?’’ என்று மெது­வாய் அவ­ளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தான் அருண்.

“காவ்யா!!! பிடி­வா­தம் பிடிக்­காதே!’’ என்று குறுக்­கிட்ட ப்ரீத்தி, மேலும் தொடர்ந்­தாள்.

“நாய்க்­குட்டி வாங்­கினா, அதை தினம் வெளிய கூட்­டிட்டுப் போக­ணும். அப்­பு­றம் அதுக்கு டாய்­லெட் வரும். அதெல்­லாம் கிளீன் பண்­ண­னும். என்­னால அதெல்­லாம் பண்ண முடி­யாது.’’

“நான் பண்­ண­றேன் மா. அப்­பா­வும் எனக்கு ஹெல்ப் பண்­ணு­வார்,” என்று அருணை பார்த்­தாள் காவ்யா.

காவ்யா அதை சொன்­ன­தும், ப்ரீத்தி அருண் பக்­கம் திரும்­பி­னாள்.

“அய்­யயோ. நான் அதெல்­லாம் பண்ண மாட்­டேன்,’’ என்று உட­ன­டி­யாக மறுத்­தான் அருண்.

பின் காவ்­யா­வின் எதிர்­பார்ப்பை திசைத்­தி­ருப்ப, “நான் ஒரு யோசனை சொல்­லட்­டுமா காவ்யா?’’ என்று தொடர்ந்­தான்.

“முதல்ல உனக்கு நாய்க்­குட்டி எதுக்கு வேணும்னு சொல்லு?’’

“எனக்கு வீட்­டில தனியா விளை­யாட போர் அடிக்­குது, நீங்­களும் எப்ப பார்த்­தா­லும் வேலை வேலைன்னு சொல்லி இருக்­கீங்க. அம்­மா­வும் வேலைக்கு போறாங்க. என்­னோட விளை­யாட யார் இருக்கா?’’ என்று அப்­பா­வித்­த­னத்­தோடு கேட்­டாள் காவ்யா.

“நீ பக்­கத்­துல உன்­னோட ப்ரண்ட்ஸ் கூட விளை­யாடு. அவங்க வீட்­டுக்குப் போ,’’ என்­றான் அருண்

“அவங்க வீட்­டில அவங்க தம்பி, இல்­லாட்டி அக்கா கூட விளை­யா­ட­றாங்க.’’

“ சரி. அப்போ நம்ம வீட்­டி­லை­யும் ஒரு தம்பி பாப்பா இல்­லாட்டி தங்­கச்சி பாப்பா வந்தா உனக்கு நாய்க்­குட்டி வேண்­டாம்ல?’’ என்­றான்.

கிணறு வெட்ட, பூதம் கிளம்­பிய கதை போல் இருந்த அரு­ணின் பதில் கேட்டு, “அருண், நீ இந்த பிரச்­சனைக்கு முடி­வு­கட்­டு­வேன்னு பார்த்தா, புதுசா ஏதோ கிளப்பி விடற. சும்மா ஏதா­வது சொல்லி புது பிரச்­சனையை கிளப்­பி­வி­டாதே,’’ என்று சீறி­னாள் ப்ரீத்தி.

“அப்பா அப்பா... எனக்கு ஒரு சந்தேகம்? தம்பி பாப்பா வந்­திச்­சுன்னா அதுக்கு டாய்­லெட் யாரு கிளீன் பண்­ணு­வாங்க?” கேட்­டாள் காவ்யா.

“அப்­படி தம்பி பாப்பா வந்­திச்­சுன்னா, நான், அம்மா எல்­லா­ரும் சேர்ந்து கிளீன் பண்­ணு­வோம்.’’

“அப்போ நாய்க்­குட்­டிக்­கும் அதே மாதிரி பண்­ண­லாமே.’’

“கண்ணா, நாய்­க்குட்­டி­யும் தம்பி பாப்­பா­வும் ஒண்ணு இல்லை...’’ என்று சமா­ளிக்க முயன்­றான் அருண்.

அப்­பா­வுக்­கும் மக­ளுக்­கும் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தை முடி­வுக்கு வரு­வ­தாய் தெரி­ய­வில்லை என்று உணர்ந்­தாள் ப்ரீத்தி.

“காவ்யா! இந்த வாரக்­க­டை­சி­யில, நான் உனக்கு ஒரு நல்ல நாய்க்­குட்டி பொம்மை வாங்­கிக்­கொ­டுக்­க­றேன். அந்த நாய்க்­குட்டி பொம்மை கூட நீ தினம் படுத்­துக்­க­லாம். அதோட விளை­யா­ட­லாம். அப்­பு­றம், நாம டிரைவ் போகும்போது, நீ அதை கூட்­டிட்டு வர­லாம்,’’ என்று சொல்­லி­விட்டு அவளை சமா­தா­னப்­ப­டுத்­தி­னாள்.

“அருண். நீ சும்­மா­வாச்­சும் அவ மன­சுல நாய்க்­குட்டி, அது­இ­துனு ஆசைய கிளப்பி விடாதே. இதெல்­லாம் காலப்­போக்­குல மாறி போயி­டும்,’’ என்று அந்த பேச்­சுக்கு ஒரு முற்­று­புள்ளி வைத்­தாள் ப்ரீத்தி.

அந்த வாரக்­க­டை­சி­யில், ஒரு ஆள் உயர அள­வுள்ள நாய்க்­குட்டி, அவர்­கள் வீட்­டின் புதிய ஆளாக குடி பெயர்ந்­தது.

முத­லில் காவ்யா அதற்கு ‘ஸ்டெல்லா’ என்று பெயர் வைத்­தாள். பின் அதன் கழுத்­தில் ‘காவ்­யா­வின் ஸ்டெல்லா’ என்று எழுதி, அதில் அரு­ணின் கைத்தொலைபேசி எண்ணை குறித்து வைத்­தாள். அந்த நாய்க்­குட்­டிக்கு அவர்­கள் வீட்­டின் சோபா மற்­றும் சாப்­பாடு டேபி­ளில் ஒரு இடம் கொடுத்­தாள். நாய்க்­குட்­டிக்கு உணவு கொடுக்க ஒரு தட்­டும் தனி­யாக வைத்­தாள். உறங்­கும் போது குளி­ரா­மல் இருக்க, அதற்கு ஒரு போர்­வை­யும் தனியே எடுத்து வைத்­தாள்.

ஆக­மொத்­தம், ஸ்டெல்­லா­விற்கு பாஸ்­போர்ட் மட்­டும்தான் இல்லை. மற்ற எல்லா அடை­யா­ளங்­களும் சலு­கை­களும் அந்த வீட்­டில் இருந்­தன.

காவ்­யா­வும் ஸ்டெல்­லா­வும் ஒரு­வ­ரோடு ஒருவர் கொஞ்சிப் பேசி விளை­யாட துவங்­கி­யது அரு­ணிற்­கும் நிம்­ம­தியா இருந்­தது. ஆனால் அது நிலைத்து நிற்­க­வில்லை.

சில வாரங்­கள் கழித்து, காவ்யா மீண்­டும் அரு­ணி­டம் வந்­தாள்.

“அப்பா, ஸ்டெல்லா மற்ற நாய்க்­குட்டி மாதிரி நடக்க மாட்­டேங்­கிறா, குறைக்க மாட்­டேங்­கறா. அவளை, டாக்­டர் கிட்ட கூட்­டிட்டுப் போலாமா?’’

“டாக்­டர் கிட்ட கூட்­டிட்டு போக வேண்­டி­யது ஸ்டெல்­லாவை இல்லை, உன்னை....’’ தன் வேலைக்கு நடுவே தொந்­த­ரவு செய்த காவ்யா மீது எரிஞ்சு விழுந்­தான் அருண்.

காவ்யா அதற்­கு­மேல் அரு­ணி­டம் எது­வும் பேச­வில்லை.

அப்­பா­வுக்­கும் மக­ளுக்­கும் இடையே நடந்த உரையாடலுக்கு சாட்­சி­யாக, அந்த அறை­யின் ஓரத்­தில் ஸ்டெல்லா அமை­தி­யாக அமர்ந்­தி­ருந்­தது.

ஒரு நாள் காலை, காவ்யா முகத்­தில் உற்­சா­கம் ஓங்கி இருந்­தது.

“என்ன காவ்யா, இன்­னிக்கி மகிழ்ச்சியா இருக்க? என்ன ஆச்சு? ஸ்டெல்லா குறைக்­க­றாளா?’’ என்று சிரித்­துக்­கொண்டே கேட்­டான் அருண்.

“அருண், இன்­னிக்கி அவ­ளோட ப்ரெண்ட் பர்த்டே. சாயந்­தி­ரம் அவங்க வீட்­டுக்கு அவளை பார்ட்­டிக்கு கூப்­பிட்­டி­ருக்­காங்க. அதான், மகிழ்ச்சியா இருக்கா.’’ என்று சொல்­லி­விட்டு, ப்ரீத்தி மேலும் தொடர்ந்­தாள்.

“காவ்யா, அவங்க வீட்­டில ஜாக்­கிர­தையா இருக்­க­ணும். பார்த்து சாப்­பி­ட­ணும். ரொம்ப ஜூஸ் குடிக்­காதே. அப்­பு­றம், அப்­பா­வும் அம்­மா­வும் வேலை முடிச்­சிட்டு உன்னை அவங்க வீட்­டி­லி­ருந்து திரும்பி கூட்­டிட்டு போவோம். சரியா?’’

சரி, என்று தலையை ஆட்­டி­விட்டு, ஏதோ மும்­மு­ர­மாக ஒரு நாய்க்­குட்­டி­யின் படத்தை வரைந்து கொண்­டி­ருந்­தாள் காவ்யா.

அன்று மாலை ஆபீஸ் வேலை­யில் மும்­மு­ர­மாக இருந்த அரு­ணின் கைத்தொலைபேசி அழைத்­தது.

“அருண்...அருண் ....’’ என்று மறு­முனை­யில் பேசிய ப்ரீத்­தி­யின் குர­லில் பீதியை உணர்ந்­தான் அருண்.

“என்­னாச்சு ப்ரீத்தி?’’

“நீ உடனே ஆஃபீசி­லேர்ந்து கிளம்பு. காவ்­யாவ நாய் கடிச்­சி­டுச்­சாம். நம்ம வீட்­டுக்கு பக்­கத்­துல இருக்­கற கிளி­னிக் கூட்­டிட்டு போயி­ருக்­காங்க,’’ என்­றாள் கவ­லை­யோடு.

“என்­னது நாய் கடிச்­சு­டுச்சா? அவ ஸ்டெல்லாகூடதானே விளை­யா­டுவா? அது எப்­படி கடிக்­கும்?’’ என்று கேட்­டான் அருண்.

“ஐயோ அருண். டோன்ட் பி சில்லி. அவ ஃப்ரெண்ட் பர்த்டே பார்ட்­டிக்கு போன இடத்­துல அவங்க வீட்டு நாய்க்­குட்டி அவளை கடிச்­சி­டுச்­சாம். ஸ்டெல்லா கூட விளை­யா­டற மாதிரி, இவ அந்த நிஜ நாய்க்­குட்டிகிட்ட போய் விளை­யா­டி­யி­ருக்கா. அது கடிச்­சி­டுச்சு. அந்த பர்த்டே பெண்­ணோட அம்மாதான் அவளை கிளி­னிக் கூட்­டிட்டு போயி­ருக்­காங்க. அங்­கி­ருந்து எனக்கு போன் பண்ணி தக­வல் சொன்­னாங்க. நீ உடனே கிளம்பு. நான் உன் ஆபீஸ் பக்­கத்­துலதான் இருக்­கேன். நானே உன்னை பிக்­கப் பண்­ணிக்­கி­றேன். நீ சீக்­கி­ரம் உங்க ஆபீஸ் வாச­லுக்கு வா’’

“சரி சரி. உடனே வரேன்,’’ என்று போட்­டது போட்­ட­படி கிளம்­பி­னான் அருண்.

தன் ஆபீஸ் வாச­ல­ருகே வந்த ப்ரீத்­தி­யின் காரில், அவ­ச­ர­ அ­வ­ச­ர­மாக ஏறி­னான்.

“இதுக்குதான் இந்த நாய்க்­குட்டி பூனை­குட்­டி­யெல்­லாம் வேண்­டாம்னு சொன்­னேன். நீதான் அவ­ளுக்கு ஸ்டெல்லா வாங்­கிக்­கொ­டுத்த...’’ என்று ப்ரீ­தி­யி­டம் தன் கோபத்தை காரில் ஏறி­ய­தும் வெளிப்­படுத்­தி­னான்.

“அருண், என்ன நடந்­திச்­சுன்னு தெரி­யுமா? அவ ஸ்டெல்லாகூட விளை­யா­டற மாதிரி, அந்த நிஜ நாய்க்­குட்டிகிட்ட போய் விளை­யா­டி­யி­ருக்கா. அது கடிச்­சி­டுச்சு.’’

“அப்போ. நீ எதுக்கு அவ­ளுக்கு ஸ்டெல்லா வாங்­கிக்­கொ­டுத்தே?’’ என்­றான் அருண்

“ஹலோ... என் மேல பழியை போடாதே..நீதான் அவ மன­சுல நாய்க்­குட்டி படத்­துக்கு ‘வெரி குட்’, ‘ஹாப்பி பேமிலி’, அப்­படி இப்­ப­டினு ஆசையை வளர்த்­து­விட்ட. அதுக்குதான், நான் ஸ்டெல்லா வாங்கி கொடுத்­தேன். இப்போ பிரச்னை ஸ்டெல்லா இல்­லியே...’’ என்று கடுப்­போடு பதி­ல­ளித்­தாள் ப்ரீத்தி.

“பிரச்னை ஸ்டெல்லாதான்’’ என்­றான் அருண்.

“என்ன அருண் பேசற...? ஸ்டெல்­லாவா அவளைக் கடிச்­சிச்சு? ஒரு நிஜ நாய்க்­குட்டி தானே அவளை கடிச்­சிச்சு’’

அவர்களின் வாக்குவாதம் முடிவதற்குள் கிளினிக் வந்தடைந்தனர்.

“காவ்யா.. ஒரு எட்டு வயசு பொண்ணு… ஏதோ நாய்­க­டிச்­சி­டுச்­சுனு சொல்லி அட்­மிட் பண்­ணி­யி­ருக்­காங்க,’’ என்று மூச்­சி­ரைக்க அந்த வர­வேற்­ப­றை­யி­லி­ருந்த பெண்­ம­ணி­யி­டம் விசா­ரித்­தாள் ப்ரீத்தி.

“நேரா போங்க. கடைசி ரூம்,’’ என்று அவள் கைகாட்­டிய திசை­யில் இரு­வ­ரும் ஓடி­னர்.

கண்­களில் நீர் பெரு­கி­யது.

“காவ்யா காவ்யா...’’

“அம்மா...’’

காவ்யா அருகே இருந்த நர்ஸ் கோபப்­பட்­டாள்.

“அமைதி.. அமைதி... ரொம்ப சத்­தமா பேசா­தீங்க.. ஊசி போட்­டி­ருக்­கோம். நாளைக்கு வீட்­டுக்குக் கூட்­டிட்டு போக­லாம். பயப்­பட வேண்­டாம். கொஞ்ச நேரத்­துல டாக்­டர் வரு­வார். அவர்கிட்ட பேசிக்­குங்க,” என்று சொல்­லி­விட்டு அங்­கி­ருந்து நகர்ந்­தாள்.

“என் செல்­லம்... ஏன்டா அவங்க வீட்­டில நாய்க்­குட்டி இருக்­குனு எங்­கிட்ட சொல்­லலை...’’

“சொன்னா நீங்க பர்த்டே பார்ட்­டிக்கு அனுப்­ப­மா­டீங்­கனு....’’ என்று அப்­பா­வித்­தனத்­தோடு பதி­ல­ளித்­தாள் காவ்யா.

“ரொம்ப வலிக்­குதா கண்ணா? எங்க கடிச்­சி­டுச்சு? பெரிய நாயா? சின்ன நாயா?’’ என்று பல கேள்­வி­கள் ப்ரீத்தி கேட்க, அவளை குறுக்­கிட்­டான் அருண்.

“காவ்யா.. இதுக்குதான் நான் நாய்க்­குட்டி, பூனைக் குட்­டி­யெல்­லாம் வேண்­டாம்னு சொன்­னேன். கேட்­டியா??? இப்போ பார், என்ன நடந்­திச்­சுன்னு...’’ என்­றான்.

காவ்யா அமை­தி­யாக இருந்­தாள். பின் மெல்ல, “அப்பா... சாரி…..எனக்கு ஸ்டெல்லா வேண்­டாம்,’’ என்­றாள்.

“வெரி குட். இப்பதான் நீ என் செல்லப்பொண்ணு,’’ என்று காவ்­யாவை கொஞ்­சி­னான் அருண்.

சற்று நேரத்­தில் அங்கு வந்த டாக்­ட­ரி­டம், ப்ரீத்­தி­யும் அரு­ணும் பேசி­னார்­கள். அவ­ரோடு பேசிய பிறகு கொஞ்­சம் நிம்­ம­தி­ய­டைந்­தான் அருண்.

“காவ்யா கண்ணா. டாக்­டர் பயப்­பட ஒண்­ணும் இல்­லைனு சொல்­லிட்­டார். நீ ரெஸ்ட் எடுத்­துக்க. அப்­பா­வும் அம்­மா­வும் இங்க பக்­கத்­துல கடை வரைக்­கும் போய்ட்டு மருந்து வாங்­கிட்டு வர்றோம். உனக்கு என்ன வேணும்னு சொல்லு? அப்பா வாங்­கிட்­டு­வ­ரேன்,’’ என்­றான் அருண்.

“அப்பா...’’ காவ்­யா­வின் குர­லில் ஒரு ஏக்­கம்.

“சொல்­லுடா கண்ணா!’’ என்று கிளம்­பும் அவ­ச­ரத்­தில் கேட்­டான் அருண்.

“எனக்கு ஒரு தம்பி பாப்பா வேணும்’’.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!