படுக்கை தட்டவில்லை
பாத்திரம் கழுவவில்லை
கூடம் பெருக்கவில்லை
குப்பை அகற்றவில்லை
துணிஈரம் உலர்த்தவில்லை
உண்ட ரொட்டி மூடவில்லை
அம்மையாருக்கு அவசர வேலை
தூய்மைநாள் விழாவுக்கு
அம்மையார் தலைமையாம்
மகளிர் மன்றத்துக்கும்
அவரே தலைவியாம்
அன்று
ஊடகங்கள் சூழ
இதோ!
ஊர்த்தெரு கூட்டுகிறார்
கூட்டிமுடித்து
கூட்டத்தில் பேசினார்
'வீடு தூய்மையானால்
வீதி தூய்மையாகும்
வீதிகள் தூய்மையானால்
ஊர்கள் தூய்மையாகும்
ஊர்கள் தூய்மையானால்
உலகமே தூய்மையாகும்
வீட்டுத்தூய்மையே
தாய்மை உண்மை
பேச்சின் இடையே
அம்மையாருக்கு
ஆறு வயது மகளின்
தொலைபேசி அழைப்பு
'அம்மா
ரொட்டில கரப்பான்'
- அமீதாம்மாள்

