இயல்பின்றித் தவிக்கும் வீடு

இயல்பின்றித் தவிக்கும் வீடு

1 mins read

பிள்ளைகளின் பிஞ்சு

விரல்களுக்கிடையேயின்றி

வரவேற்பறையில்

அனாதையாய்க் கிடந்தது

டீவி ரிமோட்.

அடுப்படித் தருண

சத்தமில்லாத்

திருட்டு முத்தங்கள்

இதழின் நுனியிலும்

உள்ளறையிலெழும்

சொற்போராட்டம்

நாக்கின் நுனியிலும்

ஒட்டிக் கிடந்தன.

கொள்ளைக்கார பல்லிகள்

குப்பையை அண்டாமல்

தலைமறைவாயின.

வழக்கத்திற்கு மாறான

நாற்காலி இழுப்பில்

தரைக்கே தலை வலிக்கிறதாம்.

புத்தம்புது குரல்களின் ராகத்திற்கு

ஏற்ற இசைப்பாட்டு பாடுகின்றன

வீட்டின் பழைய குரல்கள்.

காலையில் இட்லியுண்ட விருந்தினர்

இப்போதுதான் மாலை நேரத்துத்

தேநீர் அருந்துகின்றனர்.

குழந்தைகளுக்கான தாலாட்டில்

ஆழ்ந்துறங்க

விழித்துக் கொண்டிருக்கிறது

இயல்பைத் துறந்த வீடு!

- தேன்மொழி அசோக்