செரிமானம் ஆகாது உழல்கிறது
நம் மெளனம் தின்ற இரவு
புளித்த ஏப்பத்துடன்
புலர்கிறது காலை
மெல்ல இருண்ட வானத்தின்
சன்னத் தூறலோடு
இணைந்து இளகத் தொடங்கியது
கனத்த கணம்
நீ தயாரித்த
காலைத் தேநீரிலும்
என் மதிய தயாரிப்பின்
குழம்புக் கரைசலிலும்
விழுந்திருக்கக் கூடும்
இளகலின் நழுவலாய்
சில துளி காதல்
மாலையில்
உனக்கு சற்றும் பிடிக்காத
டுரியான்களோடு நீயும்,
எனக்கு பிடித்தமற்ற
பண்டான் கேக்கோடு நானும்...
நேற்றை மறந்து
வெண் பட்டு உடுத்தி
விருந்துக்குக் காத்திருக்கிறது
இரவு...
காலை பொழிந்த மழையின்
வாசனையை
அறையெங்கும் பதுக்கியபடி!
- ப்ரியா கணேசன்

