சிறுகதை
மலையரசி சீனிவாசன்
"அம்மா! அந்தப் பூனைகளைப் பார்க்க முடியுமா?" அன்னையின் தோள்மீது கையைப்போட்டு நிற்பவரின் முகத்தைப் பார்க்க முடியாமல் தடுமாறினார் இஸ்மாயில்.
நாற்பத்து ஐந்தாண்டு தொழில் அனுபவத்தில் அப்படியொரு சூழ்நிலையை அவர் சந்தித்ததில்லை.
சிராங்கூன் வட்டாரத்தில் படங்களுக்குச் சட்டம் போடும் கடையை வைத்திருக்கிறார் இஸ்மாயில். "நீங்க படங்களுக்குப் போடும் 'பிரேம்'(சட்டம்) ரொம்ப பிரமாதம் அண்ணே!" என்று பாராட்டப்படுபவர்.
திருமணம், பிறந்தநாள், பட்டமளிப்பு விழா, இயற்கையின் ரம்மியான அழகியல் காட்சிகள், உலகத் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் உருவ வழிபாட்டுப் படங்கள் என்று எந்தப் படமாக இருந்தாலும் அவற்றுக்குப் பொருத்தமாக அவர் தேர்ந்தெடுத்துப் போடும் சட்டங்கள் வாடிக்கையாளர்களின் மனதை மகிழச் செய்யும்.
கடையைத் தாண்டி செல்பவர்களின் பார்வையில் படங்களுக்குப் போட்டிருக்கும் சட்டங்களால் அவை மேலும் உயிர் ஓவியமாக மெருகுடன் காட்சியளிக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் படங்களுக்குச் சட்டம் போடும் பழக்கம் குறைந்திருந்தாலும் அவரைத் தேடி வரும் பழைய வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதைப்போலவே சில புகைப்படக்காரர்களும் "அண்ணே நீங்க சட்டம் போட்டாத்தான் சரியா இருக்கும்," என்று இஸ்மாயிலிடம் படங்களைக் கொடுத்துவிடுவார்கள்.
வழக்கம்போல் சில படங்களை விற்பனைக்கு எடுத்து வெளியில் வைத்திருந்தார். அவையெல்லாம் வாடிக்கையாளர்கள் வாங்கும்போது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி சட்டங்களைத் தேர்வு செய்து போட்டுக்கொடுப்பதற்காக. அதில் செவ்வக வடிவத்தில் இருக்கும் ஒரு படத்தில் பச்சை, சிவப்பு, நீல நிறங்களில் இருக்கும் கோப்பைகள் ஒவ்வொன்றிலும் இரண்டு இரண்டு பூனைகள் இரண்டு காதுகளையும் தூக்கி கண்களை இமைக்காமல் கோப்பைகளைப் பிடித்துக்கொண்டு நின்றன.
வெள்ளை, கறுப்பு, ஆரஞ்சு நிறங்களின் கலவையில், அவர் கடையைச் சுற்றி வரும் பூனைகளின் சாயலில் இருந்தன.
சிறுபிள்ளைகளை ஒரே இடத்தில் நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுக்கவே சிரமப்படும்போது எப்படி அந்தப் பூனைகளை ஒரே மாதிரி கேமராவைப் பார்க்கவைத்து படம் எடுக்க முடிந்தது என்று வியந்து ரசித்தார்.
அதிலிருந்த அடர்த்தியான பழுப்பு நிற பூனை ஒன்று அவரின் மனதை முழுமையாக ஈர்த்திருந்தது. அதையே மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தார். அதன் கண்களில் தெரிவது இனம் புரியாத சோகமா அல்லது ஏக்கமா? பார்க்கப் பார்க்க அவரை என்னமோ செய்வதைப்போல இருந்தது. பேரன் ஆர்டர் கொடுத்து விற்பனைக்காக வரவழைத்த படம் அது.
"பொருத்தமா ஒரு சட்டத்தைப்போட்டு வீட்டில் வைத்துக்கொண்டால் என்ன?" என்று யோசித்த அடுத்த கணமே "எனக்கு அது வேணும்!" ஒரு சிறுமி கையை நீட்டிக்கொண்டிருந்தாள்.
"சத்தம் போடாதே..... நல்லாயிருக்கீங்களா?" கடைக்கு அடிக்கடி வரும் குமரன்தான் நின்றுகொண்டிருந்தான்.
"ஓ... அதான் குழந்தையைப் பார்த்த மாதிரியே இருந்தது!" சிறுமியின் கன்னத்தை லேசாகத் தட்டிக்கொடுத்து "கொஞ்ச நேரம் இருங்க, இதற்கு ஒரு அழகான சட்டம் போட்டுத் தருகிறேன்!" என்றார் உவகையுடன். "ஒண்ணும் அவரசமில்லை. நீங்க போட்டு வைங்க பக்கத்துலப் போயிட்டு வந்து விடுகிறோம்!" என்று சிறுமியுடன் வெளியேறினான்.
இளம் பச்சை நிறத்தில் படம் இருந்ததால் அதற்கு ஏற்ற ஓரிரு வெற்று சட்டங்களைப் பொருத்திப் பார்த்தவருக்குத் திருப்தியாக இல்லை.
சிறுமியிடம் கொடுப்பதால் மிகச் சிறிய பூக்கள் இருப்பதைப்போன்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். சட்டம் போட்ட படத்திலிருக்கும் அடர்த்தியான பழுப்பு நிற பூனை மட்டும் எதையோ அவரிடம் கூறுவதைப்போல இருந்தது.
கனத்த மனத்துடன் இருந்தவர் ஏதோ ஞாபகத்தில் மீண்டும் அந்தப் பூனைப் படத்தை விற்பனைக்காக வைத்திருந்த மற்ற படங்களுடன் வைத்துவிட்டார்.
எனக்கு அது வேணுமென்று ஒரு வெளிநாட்டு மூதாட்டி கையை நீட்டியதும் அதிர்ச்சியுற்றார்.
அப்பொழுதுதான் அவர் தான் செய்திருக்கும் மிகப்பெரிய தவற்றை உணர்ந்தார்.
மூதாட்டியின் மகனிடம் நடந்தவற்றைக் கூறி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
சுற்றுப்பயணியானவர் தன் தாயார் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் படத்தை மறந்துவிடுவார் என்றவர் சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு கிளம்பி விடுவதாகத் தன்மையுடன் கூறினார். அது மேலும் இஸ்மாயிலின் குற்றவுணர்வைத் தூண்டியதால் தலைகுனிந்தார்.
எழுபது வயதிற்கு மேல் இருக்கும் அந்த மூதாட்டி மகனின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வாயைப் பிளந்தபடி கடையில் இருப்பவற்றை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர்களின் மொழியில் மகன் ஏதோ கூறுவதற்கு முடியாது என்ற பாவனையில் தலையாட்டுவது பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.
சற்று குரலை உயர்த்தியதும் தேம்பும் அன்னையிடம் எதையோ கூறியதும் உடனே சிரித்துக்கொண்டு சரியென்று தலையாட்டினார்.
ஐஸ் கிரீம் சாப்பிட அழைத்துச் செல்வதாகக் கூறிச் சென்றவர் சில நொடிகளில் மீண்டும் திரும்பி வந்து கடைசியாக ஒருமுறை அந்தப் பூனைகளின் படத்தைத் தன் அன்னையிடம் காண்பிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அந்த மூதாட்டியின் நிலையை நினைத்ததும் இஸ்மாயிலின் கண்கள் ஈரமானது.
"அழாதே மை சன்!" என்று கண்ணீரைத் துடைத்ததும் உள்ளம் நெகிழ்ந்தவர் படத்தை மூதாட்டியிடமே கொடுத்தார். அதைச் சற்றும் எதிர்பார்க்காதவர் மகிழ்ச்சியுடன் படத்தை முத்தமிட்டார்.
"ஓ...என்ன ஓர் அழகு!!" என அடர்த்தியான பழுப்பு நிற பூனையை வெளிர் நிற விரல்களால் வருடினார் மூதாட்டி.
"பூனை... என் பூனை!!" என்று தன்னை நோக்கித் துள்ளி வரும் சிறுமியைக்கண்டு திகைத்து நின்றார் இஸ்மாயில்.

