சிறுகதை
காசாங்காடு வீ.காசிநாதன்
விஸ்வலிங்கம் தம்பதியினரின் இரண்டு மகன்களுக்கும் தனது சொந்த ஊரில் இருக்கும் குலதெய்வம் முனீஸ்வரருக்கு முடி இறக்கி சாமி கும்பிட வேண்டுதல்.
குடும்ப வழக்கப்படி குழந்தைகளுக்கு மூன்று வயதிற்குள் நேர்த்திக்கடன் செலுத்திவிடுவார்கள்.
பெரியவன் சுகுமாறன் பிறந்த இரண்டாவது ஆண்டு முடிவில் விசுவின் மனைவி மீண்டும் தாய்மையடைய நேர்த்திக்கடன் தடைபட்டது.
இளையவன் முகிலன் பிறந்துவிட்டான்.
அதன் பிறகு நேர்த்திக்கடன் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற முடியவில்லை.
சிங்கப்பூரில் வசித்துவரும் விஸ்வலிங்கம், நேர்த்திக்கடனை முடிக்க விடுப்பு எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தமிழ் நாட்டில் உள்ள சொந்த ஊருக்கு வந்துசேர்ந்தார்.
ஏதாவது ஒரு தடங்கல். தொலைக்காட்சியில் வரும் 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' டைப்பில் வந்துவிடும்.
மூத்தவனுக்கு ஏழு வயதும் இளயவனுக்கு நான்கு வயதும் இருக்கும்போது ஒரு நல்ல நாளில் நேர்த்திக்கடன் செய்ய முடிவு செய்தனர்.
கொரோனா வந்து நெருக்கடி கொடுத்தது.
என்ன ஏதும் சாமிக் குத்தமா?
நம்ம நேர்த்திக்கடனை ஐயா ஏற்றுக்கொள்ள தடைபடுகிறதே? என விஸ்வலிங்கத்தின் தாயார் தொலைபேசியில் தொடர்புகொள்ளும்போதெல்லாம் புலம்பிக் கொண்டிருப்பார்.
உலகமே தடுமாறுது... ஐயாவிற்கு ஒன்றும் கோபமில்லை. கொரோனா முடிந்ததும் எல்லாம் சரியாகி ஏற்றுக்கொள்வார் என்று அம்மாவுக்கு ஆறுதல் கூறி மகன் முத்தாய்ப்பு வைப்பார்.
*
ஒருவழியாக இந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் நேர்த்திக்கடனை நிறைவேற்றி விடலாம் என்று பேசி, வரும் ஞாயிற்றுக்கிழமை என முடிவானது.
விஸ்வலிங்கமும் அவரது நண்பரும் அருகில் இருக்கும் சந்தைக்குச் சனிக்கிழமை சென்று 2 ஆட்டுக்கிடாய்கள் வாங்கி வந்தனர்,
கிடாய்களை மோட்டார் சைக்கிளிலேயே சமார்த்தியமாக ஆளுக்கொன்றாக வைத்துக்கொண்டு சர்க்கஸ்காரர்களைப் போல் வீட்டிற்குக் கொண்டு வந்தனர்.
கீழே இறக்கிவிட்ட கிடாய்கள் ஏதோ விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் மாணவர்களைப் போல் முரண்டு பிடித்தன.
விஸ்வலிங்கத்தின் மனைவி துர்கா வீட்டில் ஆடுகள் இருந்தன. இளம் வயதில் ஆடுகளோடு பழகியவர். அவற்றின் குணங்களை அறிவார்.
பின்புறம் சென்று மாமரத்தின் கிளைகளை ஒடித்து வந்து கிடாய்களிடம் காண்பிக்க "காதலி பின்னாடி திரியும் காதலன் போல" பொடி நடையாய் அவை நடக்க ஆரம்பித்தன.
ஆரம்பத்தில் பிகு பண்ணிய கிடாய்கள் தற்போது தீனி கிடைத்ததும் மகிழ்ச்சியாயின.
"ம்மே ..ம்மே".. என்ற சத்தம்
சிறிது நேரத்திற்குப்பின் துர்கா பக்கத்து வீட்டிலிருந்து கிடாய்களுக்கு புல் வாங்கி வந்து போட்டார்.
பிறகு புண்ணாக்கு, தழைகள் என ஒவ்வொன்றாக புதுமாப்பிள்ளையைக் கவனிப்பது போல் கவனித்துக்கொண்டனர்.
சுகுமாறனும் முகிலனும் ஆட்டுக்கிடாய்களுடனே பொழுதைக் கழித்தனர்.
கிடாய்களும் ஏதோ ரொம்ப நாள் பழகியதைப்போல் ஒட்டிக்கொண்டன.
நாம் சிங்கப்பூர் செல்லும்போது இந்த கிடாய்களை கூட அழைத்துச் செல்லலாமா? நம்ம பால்கனியில் வைத்து வளர்க்கலாம் என முகிலன் கேட்க..
டேய் சிங்கப்பூரில் இதெல்லாம் வீட்டில் வளர்க்க முடியாது.
ஃபிளைட்டில் எப்படி கொண்டு போவது?
கிடாய்கூட வெளையாட விரும்பினால் நீ இங்கேயே இரு.. என்றான் சுகுமாறன்.
அப்போ, அப்பாகிட்ட சொல்லு நான் இங்கேயே இருக்கிறேன்.
நல்லா வெளையாடலாம்.. மரத்திலே ஏறலாம்.. ஏரியில் குளிக்கலாம்..
ஜாலிதான் என்றான் முகிலன்..
டேய் எனக்கே ஆசையைத் தூண்டி விடாதே..
சிங்கப்பூர் போனா வீட்டிலே அடைஞ்சு கிடக்கணும் ..
இல்லன்னா ஸ்கூல்.. டியூஷன்..
கைத்தொலைபேசி ஒன்றுதான்.. அதையும் அம்மா அடிக்கடி பிடுங்கி விடுவார்.
ஊர் ஜாலிதான்..
என்ன.. சுற்றுப்புறம்தான் சுத்தமா இல்ல...
மற்றபடி இங்கு விளையாட வசதிகள் அதிகமே..
இதைக்கேட்ட துர்கா என்ன.. ஊரையும் சிங்கப்பூரையும் அலசுறீங்க.. இன்னும் ஒரு வாரம்தான் இங்கே..
அப்புறம் ஸ்கூல்..
அம்மா ஆரம்பிச்சிட்டாங்கடா..
ஸ்கூல்.. டியூஷன்,, படி.. படி .. இதே பாட்டுதான்...
நம்ம தாத்தா அம்மாவை ரொம்ப படுத்திட்டாங்க போல..
அதான் நமக்கு இப்படித் தண்டனை..
படிக்கச் சொல்றதுகூட ஓகே..
மொபைல் போனை புடுங்குவாக பாரு அப்பதான் கோபம் கோபமா வரும்..
சரி ஒரு வாரம் நல்லா விளையாடுவோம் என்றான் சுகுமாறன்.
*
அன்று இரவு கிடாய்களை முன்பகுதி சிமென்ட் வரண்டாவில் கொண்டுவந்து கட்டினர்.
முன்பகுதி விளக்கு இரவு முழுதும் எரிந்து கொண்டிருந்தது. ஆட்டுக்குட்டிகளை கயிற்றில் நன்றாகக் கட்டி இருக்கிறார்களா? என துர்கா உறுதி செய்துகொண்டார்.
சுகுமாறனும் முகிலனும் ஆட்டுக்குட்டிகளுக்கு மாங்கொத்தைக் கொடுத்து அவை சாப்பிடுவதைப் பார்த்துப் பூரித்தனர்.
அவர்கள் முகம் மகிழ்ச்சியில் பளிச்சிட்டது.
அவ்வப்போது மகிழ்ச்சியில் கிடாய்கள், ம்மே.. ம்மே என்று சிணுங்கின.
அதன்பிறகு சிறுவர் இருவரும் வீட்டின் முன்பகுதியில் தூங்கி விட்டனர்.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை.
சாமி கும்பிட கோயிலுக்குச் செல்ல எல்லாம் தயாரானாங்க.
பங்காளி, நண்பர்கள் உறவினர்கள் என எல்லாரையும் அப்பா கூப்பிட்டு வந்தார்.
கிடாய்களைப் பிடித்துச் செல்ல ஒருவர் வந்தார். வரும்போதே கைகளில் இலைகளை வைத்திருந்தார்.
ஆட்டுக் கிடாய்களை அவிழ்த்துக்கொண்டு இலைகளைக் காண்பித்து அவற்றை ஓட்டிச் சென்றார்.
ஆட்டுக்குட்டிகளோ தங்களுக்கு வரவிருக்கும் ஆபத்தை அறியாது, இலைகளைச் சுவைத்தபடி பொடி நடையாய் சென்றன.
*
இந்த முனீஸ்வரர் அமைந்துள்ள இடம் தமிழ்நாட்டின் பட்டுக்கோட்டை அருகில் உள்ள காசாங்காடு கிராமத்தில் உள்ளது.
முப்பது அடி உயரமுள்ள இந்த சிலை கோவிலிலேயே களிமண்ணில் வடிவமைக்கப்பட்டு பிறகு வெப்பப்படுத்தி அதன்பிறகு வண்ணம் தீட்டப்பட்டது.
மாலை அணிவிக்க சிலையின் பின்புறம் இரும்பினால் ஆன படிக்கட்டும் உண்டு.
மஞ்சுகுப்பன் என்ற பெரிய ஏரியின் கரையில் கோயில் அமைந்துள்ளது.
இயற்கையான வனப்பரப்பில் நவீன வசதிகளும் மின் விளக்குகளும் கொண்ட சமையல் கூடத்தையும் உள்ளடக்கியது.
மரங்களும் செடிகளும் நிரம்ப உள்ள வெட்டவெளிப் பகுதியில் பெரிய சாமியின் சிலை அருகில் ஆலங்கன்று முளைத்து அதன் கிளைகள் அங்குள்ள சாமிகளை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்கிறது. சில மாதங்களுக்கு ஒருமுறை கிளைகளை வெட்டி விடுகின்றனர்.
இயற்கையாக அமைந்துள்ள இந்த ஆலமரமும், இதுபோன்ற நிகழ்வுகளும் இறை நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன.
முனீஸ்வரர்களில் பலவகை உண்டு...
ஜடா முனி, நாதமுனி, வேதமுனி, பூதமுனி, சக்திமுனி, மாயமுனி, மந்திரமுனி, பால்முனி, கருமுனி, சுடலைமுனி என்று பல்வேறு வகையாக முனீஸ்வரன் அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலில் இருப்பது பால்முனீஸ்வரர்.
பால் முனீஸ்வரரை வழிபட்டால் குடும்பத்தில் செல்வம் பொங்கும், எல்லா காரியத்திலும் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.
கோயிலுக்கு படையல் பொங்கல் மற்றும் பழங்களைக் கொண்டு நைவேத்தியம் செய்யப்படும்.
கிடாய் கோழி இறைபலி உண்டு.
ஆனால் அசைவப் படையல் இல்லை.
*
கிடாய்களைப் பிடித்துக் கொண்டு வந்தவர், அவற்றை கோவிலுக்கு அருகே உள்ள ஒரு மரத்தில் கட்டிவைத்தார்.
அருகில் அருகம்புல் நன்கு வளர்ந்து கிடந்தது. மேலும் அருகில் இருந்த மரக்கிளைகளின் இலைகளையும் அவர் ஒடித்துப்போட்டார்.
கிடாய்கள் எதைச் சாப்பிடுவதென்றே தெரியாமல் அருகம் புல்லையும் மரத்தின் கிளைகளையும் மாறி மாறிச் சுவைத்தன.
உறவினர்கள், நண்பர்கள் என கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
காலையில் சற்று நேரம் கழித்து கண்விழித்த சுகுமாறனுக்கும் முகிலனுக்கும் கிடாய்கள் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது.
அம்மாவிடம் சென்று விசாரிக்க, அவர் கிடாய்களை கோவிலுக்குக் கொண்டு சென்று விட்டார்கள் என்றும் கார் வந்ததும் நாமும் கோவிலுக்குப் போகலாம். கிடாய்களை அங்கே பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறிவிட்டார்.
குளித்துவிட்டுக் காலை உணவு முடித்ததும் கார் வந்து வாசலில் நின்றது.
கோவிலுக்குச் சென்றதும் விஸ்வலிங்கம், சுகுமாறனும் முகிலனும் முடி காணிக்கை செலுத்தினர்.
பிறகு ஏரியில் சென்று குளித்து விட்டு மாமா வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த புதிய ஆடைகளை அணிந்துகொண்டனர்.
மொட்டைத் தலைகளில் சந்தனம் பூசினார்கள்.
மூவரையும் கைத்தொலைபேசியில் செல்ஃபி எடுத்து நண்பர்கள் உறவினருக்கு அனுப்பினார் விஸ்வலிங்கம்.
அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகள் என கோவில் நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்கள் விரைந்து பறந்தன.
வாழ்த்துகளும் பாராட்டுகளும் தொலைபேசியில் டொய்ங்.. டொய்ங்.. சத்தங்களுடன் வந்து குவிந்தன.
சாமிகள் உள்ள பகுதியில் பெரிய சாமி அருகில் படையலுக்கு ஏழு முழு வாழை இலைகள் போடப்பட்டன.
இலையில் வெண்பொங்கல் பரப்பப்பட்டது.
பொங்கல் இலைகளின் எல்லாப் பகுதியிலும் வைத்து ஓரத்தில் மேடாகவும் நடுவில் சிறிது பள்ளமாகவும் அமைத்தார் பூசை செய்பவர்.
அவர் மூன்று நாள்கள் விரதம் இருந்து இன்று காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை.
பூசை எல்லாம் முடிந்தபிறகே சாப்பிட வேண்டும். இது கண்டிப்பான நடைமுறை. இதில் தவறு நடந்தால் நிகழ்ச்சி எதிபாராதவிதமாக ஏதோ தடைபடக்கூடும்.
பொங்கல் மீது தயிர் மற்றும் பால் ஊற்றினர்.
வாழைப்பழம், பலாப்பழம் மற்றும் மாம்பழத்துண்டுகள் அனைத்தையும் அதன் மீது பரப்பினர்.
கிடாய் காணிக்கை சடங்குகள் முடிந்தபின் தீப ஆராதனை நடைபெறும்.
பூசை முடிந்தபின் இவை அனைத்தும் ஒன்றாகக் கலந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அத்துடன் நிகழ்ச்சி முடிவுறும்.
*
கிடாய்கள் கொண்டு வரப்பட்டன.
துர்கா சுகுமாறனையும் முகிலனையும் சாமிக்குப் படையல் இடும் இடத்தின் அருகே இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.
கிடாய்களுக்குப் பூச்சரத்தை மாலைபோல் கழுத்தில் சுற்றி மஞ்சள் தண்ணீர் தெளித்தனர். அப்போதும் அவை ம்மே.. ம்மே,, என்றே சிரித்தன.
*
ஐயா நேர்த்திக்கடனை மனம் உவந்து ஏற்றுக்கொண்டுள்ளார் என சாமியைப் பார்த்து வணங்கி பின் தரையில் நெடுஞ்சாணாக விழுந்து கும்பிட்டார் விஸ்வலிங்கத்தின் தாயார்.
வீட்டிற்கு வரும் வழியில் முகிலன், கிடாய்களை நாம கோயிலில் எங்கேயும் பார்க்கவில்லையே? எனக் கேட்க...
துர்கா, "அதெல்லாம் சாமிக்கிட்டே போயிருச்சுப்பா. இனி நம்மகூட வராது," என்றார்.
*

