சிறுகதை
உமா சங்கர் நாராயணன்
"ஏங்க என்னையும் விமான நிலையத்துக்குக் கூட்டிட்டுப் போங்களேன்?" சிணுங்கலாகக் கேட்டாள் ரஞ்சனி.
"போடி, எங்கப்பாவும் அம்மாவும் முதன்முறையா வராங்க. அவங்க விமான நிலையத்துல இருந்து வெளியே வரும்போது பிரமிப்பா சிங்கப்பூரை பார்ப்பதை படம் பிடிக்கணும். வீட்டுக்கு வரும்போதே அவங்களுக்கு ஒவ்ேவார் இடத்தைப் பற்றியும் கதை சொல்லணும். நீ வந்தா கிண்டலாய் சிரிப்பாய்," என்று சொல்லிவிட்டு குழந்தையாய் கிளம்பிச்சென்றான் ராகவன்.
இந்தியாவில் கிராமத்தில் இவனது பெற்றோர், வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடெல்லாம் விட்டுவிட்டு வரமுடியாதென இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூட சிங்கப்பூருக்கு வந்ததில்லை.
இவனது அம்மா அடிக்கடி விளையாட்டாய் "ராகவன் குழந்தையாய் இருக்கும்போது பாலு ஒழுங்காவே குடிக்கமாட்டான். பால் கட்டிய மார்பு வலியோடு இவனுக்கு பிஸ்கட்டு மசிச்சி ஊட்டுவேன். ஆனா, இவன் சிங்கப்பூரில் இருக்கானே தவிர ஒருமுறைகூட என்னை கூப்பிடலை," என்று அடிக்கடி குறைபட்டுக்கொள்வாள்.
இதோ இந்த கொரோனா காலத்தில் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொள்ள முடியாமல் தவித்துவிட்டனர்.
வாய்ப்புக் கிடைத்தவுடன் சிங்கப்பூருக்கு இரண்டு வாரங்களாவது வருவதாக வாக்கு கொடுத்திருந்தனர். அதன்படி இதோ இன்று வருகிறார்கள்.
விமானம் தரை இறங்கிவிட்ட தகவலையும், எந்த நடைமேடையில் பயணப் பைகள் வருமெனும் விவரத்தையும் பார்த்தவுடன் ராகவன் வேகமாக அதன் எதிரில் கண்ணாடி தடுப்பிற்குப் பக்கமாய் நின்றுகொண்டான்.
கூட்டம் கூட்டமாய் பயணிகள் வந்தனர். இவனது கண்கள் ஆசை ஆசையாய் பெற்றோரை தேடியது. அதோ மெதுவாக தள்ளாடி நடந்தபடி அம்மா வருவதைப் பார்த்தான். அவளுக்குப் பின்னே அதைவிட மெதுவாக அப்பா வந்தார். இவனை பார்த்ததும் அம்மா கண்களில் தாரை தாரையாய் கண்ணீர்விட்டபடி கட்டிப்பிடித்து அழுதாள்.
"ஏண்டி? அதான் ரெண்டு வருஷத்துக்கப்புறம் பார்த்துட்டல. இப்ப எதுக்கு அழுதுட்டு? டேய் போட்டோலாம் எடுக்காதே அவ அழுது அசிங்கமா இருக்கா. வீட்டுக்கு போலாமா?" அப்பா அவசரப்படுத்தினார்.
டாக்சியில் வீட்டுக்கு வரும்போது வழியெங்கும் சிங்கப்பூர் புராணம் பாடினான் ராகவன். அம்மா வாயைப் பிளந்தவாறே கேட்டுக்கொண்டே வந்தாள். அப்பா குறட்டை விட்டுத் தூங்கிவிட்டார்.
அவர்கள் இங்கு இருக்கப்போவதே சில நாள்கள்தான் என்பதால் ராகவன், ஒவ்வொரு நாளைக்கும் எங்கெங்கு செல்ல வேண்டும் என அட்டவணையே போட்டிருந்தான்.
செந்தோசா, மெரினா பே, விலங்கியல் பூங்கா, பொட்டானிக்கல் கார்டன் என்று அனைத்து இடங்களுக்கும் பெற்றோரை கூட்டிச் சென்று அங்கு அவர்கள் மகிழும் தருணங்களை புகைப்படம் எடுத்து வீட்டில் ப்ரேம் போட்டு மாட்டுவது அவனது திட்டம்.
"ஏண்டி. அவனே ரெண்டு வருஷமா உன் சமையல் சாப்பிடாம இருக்கான். உனக்கு ஊரைச் சுற்றிப் பார்க்கணுமா? ஒரு 3 நாளு அவனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடு," அப்பா அதட்டலாய் அம்மாவிடம் சொன்னவுடன் அம்மா மருமகளோடு சமையலில் இறங்கினாள்.
மூன்று நாள் கழித்து "என்னங்க இன்னிக்கு சிங்கத்து வாயிலிருந்து தண்ணி வரும்ல. அந்த இடத்துக்கு நம்மை கூட்டிட்டு போறானாம். சீக்கிரம் கிளம்புங்க," என்று அம்மா தன்னை அலங்கரித்தவாறே கிளம்பினாள்.
"டேய் இதுதான் சிங்கமா? ஏண்டி அதான் பார்த்துட்டல. வா வீட்டுக்குப் போலாம்." அப்பா மற்றவரை எதிர்பார்க்காமல் தள்ளாடி நடந்தபடி சொன்னார்.
மறுநாள் காலையே ராகவன் "அப்பா இன்னிக்கு கார்டன்ஸ் பைதிபே போறோம். உங்களுக்கு சக்கர நாற்காலி அங்கு எடுத்து கஷ்டமில்லாம என் அன்பை காமிக்குறேன்" என்று கூட்டிச்சென்றான்
"டேய் அன்பை நாலு சுவருக்குள்ள காட்டலாம். காசோட அருமை புரியாம கரியாக்கிட்டிருக்காதே," என்று அவர் சொன்னது அவனுக்கு வலித்தது.
வண்ண வண்ணப் பூக்களை நுழைவாயிலில் பார்த்தவுடன் அம்மா "அப்பாவோட சக்கர நாற்காலியை வேகமா தள்ளுடா. பாக்குறதுக்கு நிறைய இருக்கும்போல," பட்டாம்பூச்சியாய் பறந்தாள்.
"டேய். எல்லோருடைய பையையும் எங்கிட்ட கொடுங்க. சக்கர நாற்காலியை அங்கே நிழலில் ஓரமாய் நிறுத்து. நான் பத்திரமாய் பார்த்துக்குறேன். நீ உங்கம்மாவை கூட்டிப்போய் காமி. நான் பாக்காத பூவா இங்க இருக்கப்போகுது" என்று வெறுமையாக சொன்னார் அப்பா.
அப்படியே அவரை விட்டுவிட்டு அரக்கப்பரக்க பூக்களையும் செடிகளையும் பார்த்துவிட்டு திரும்பும்போது அப்பா சுகமாய் சக்கர நாற்காலியில் தூங்கிக்கொண்டிருந்தார்.
கடைசியாக அவர்கள் ஊருக்குச் செல்லும் நாள் வந்தது. தனது அனைத்துக் கனவுகளும் நிறைவேறாத விரக்தியில் அவர்களை விமான நிலையத்தில் வழியனுப்பச் சென்றான் ராகவன்.
அம்மா ஆசை அடங்காதவளாக அங்கிருந்த சிங்கப்பூர் வரைபடங்களை எடுக்கச்சென்றாள். அப்போது அவன் கையை மெதுவாகப் பிடித்து இழுத்தார் அப்பா.
"டேய் ராகவா. அப்பாவிற்கு உடம்பு முன்ன போல இல்லை. அதிகமா மூச்சு வாங்குது. நடந்தா நெஞ்சு வலிக்குது. அவ ஆசைப்பட்டாளேனு வந்தேன். உனக்கு கஷ்டம் கொடுத்திருந்தா மன்னிச்சுக்க," கண்களில் கண்ணீரை அடக்கியவாறு மெதுவாக சொன்னார்.
சில நிமிடங்கள் கழித்து கண்ணாடித் தடுப்பை தாண்டி மெதுவாக அசைந்து சென்ற பெற்றோருக்கு வேகமாய் கையசைத்து டாட்டா சொன்னான் ராகவன்.
திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே அப்பா இவனைத் தேடியபோதுதான் ராகவன் உணர்ந்தான் பால் கட்டிய அம்மாவின் மார்பு வலியைப் போலவே கண்ணீரையும் அன்பையும் வெளியே காட்டாமல் வாழும் அப்பாவின் வலியும் என்பதை.

