ஜெய் ஜக்கம்மா...

சிறுகதை

சிவகுமார் கே.பி.

இரவு மணி பத்தை நெருங்­கி­யது. ஆனால் அந்த சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் பார்க் அடுக்­கு­மாடி கட்­டடத்­தில் இருக்­கும் ஒரு வீட்­டில் இன்­னும் அலை ஓய­வில்லை.

பகல் போன்ற வெளிச்­சத்­தின் பின்னணி­யில், தொலைக்­காட்­சிப்­பெட்டி ஒரு பக்­கம் அல­றிக்­கொண்­டி­ருக்க, அதன் முன் உட்­கார்ந்­து­கொண்­டி­ருந்த வாண்­டு­கள் இரு­வ­ரும் டேப்­லெட்­டில் வீடியோ கேம் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­னர். வீட்­டின் எஜ­மான், அதே அறை­யின் ஒரு மூலை­யில் உட்­கார்ந்து தன் கைப்பே­சி­யில் ஏதோ காணொளியைப் பார்த்­துக்­கொண்டு, தனக்­குத்­தானே சிரித்­துக்­கொண்­டி­ருந்­தார். எஜ­மானி அம்­மாவோ, மற்­றோர் அறை­யில் தன் தோழி­யோடு மெய்­நி­கர் சந்­திப்­பில் பேசிக்­கொண்டிருந்தாள்.

அலமேலு மீண்­டும் மணியைப் பார்த்­தாள். மணி இப்­போது சரி­யாகப் பத்து என்­றது.

"மணி பத்து. காலை­யில ஆறு மணிக்கு எல்­லா­ரும் எழுந்­திரிக்­க­ணும். இன்­னும் பத்து நிமி­ஷத்­துல தொலைக்­காட்­சியை அணைச்­சிட்டு, அரை மணி நேரத்­துல விளக்க அணைக்­க­ணும். அத­னால எல்­லா­ரும் படுத்­துத் தூங்குங்க,'' என்று அவ­ளுக்கே உரிய ஒரு தொனி­யில் சொன்­னாள்.

இதைக் கேட்­ட­தும், வாண்­டு­கள் இரு­வ­ரும் கொஞ்­சம் சலிப்­போடு தங்­கள் அறைக்­குச் சென்­ற­னர். காணொ­ளி பார்த்­துக்­கொண்­டி­ருந்த எஜ­மான், வீட்­டின் எஜ­மா­னியைக் கூப்­பிட்­டார்.

"ஏய்! மணி பத்து ஆயி­டுச்சு'' என்று சொன்­ன­வர், 'இன்­னும் அந்த போன்ல அப்­படி என்­னதான் பேச்சோ? உப்புசப்­பில்­லாத குப்பை விஷ­யத்­துக்­கெல்­லாம் எவ்ளோ நேரமா பேசி­க­ராங்­கப்பா!' என்று முணு­மு­ணுத்­தார்.

"ஆமா. நீங்க மட்­டும் என்­ன­வாம்? கண்ட கண்ட குப்­பையைப் பார்த்­து­க்கிட்டு, தனியா உட்­கார்ந்து சிரிச்­சுக்­கிட்­டி­ருக்­கீங்க. யாரா­வது பார்த்தா, பைத்­தி­யம்னு நினைப்­பாங்க,'' என்று பக்­கத்து அறை­யி­லி­ருந்து உட­ன­டி­யாக பதில் வந்­தது.

"சரி சரி... அதுக்­காக ஊருக்கே கேட்­கற மாதிரி கத்­தாதே. வரேன்,'' என்று அவ­ரும் அந்த அறை­யி­லிருந்து செல்ல, அல­மேலு அவர்­கள் இரு­வ­ரின் வாக்­கு­வா­தத்தை ரசித்து கேட்டுக் கொண்­டி­ருந்­தாள்.

பத்து நிமி­டத்­தில் தொலைக்­காட்சி அமை­தி­யா­னது. அரை மணி நேரம் கழித்து விளக்­கு­களும் அணைய, வீட்­டில் இப்­போது இருள் படர்ந்­தது. அந்த இரு­ளின் பின்­ன­ணியுடன் அமை­தி­யும் சேர, சற்று நேரம் முன்பு வரை களே­ப­ர­மாக இருந்த வீடு இதுவா என்று கேட்­கும் அள­வுக்கு மாறி­யது.

அல­மேலு இப்­போது யாருக்­கும் தெரி­யா­மல், அவள் வீட்­டின் பக்­கத்து வீட்­டில் இருக்­கும் சீதம்­மாவை அழைத்­தாள்.

"இருக்­கியா?''

"இருக்­கேன். இன்­னிக்கி ஏன் இவ்­வளோ லேட்?" என்­றாள் சீதம்மா.

"ஐயோ! அதை ஏன் கேட்­கற? நாள் முழுக்க இவங்க பேச்­சை­யும் கூத்­தை­யும் கேட்­டுட்டு, அதுக்கு பதில் சொல்லி முடி­யலை. அது­வும் வீட்­டோட இருந்­துக்­கிட்டு இவங்­க­ளோட தேவைக்கு வேலை செஞ்சு அலுத்­துப்­போ­கு­துப்பா! சரி.. சரி.. கோதா­வரி எங்க? அவ­கிட்­டேர்ந்து பதில் வந்­திச்சா?'' என்­றாள் அல­மேலு.

"நானும் அவளை மூணு வாட்டி கூப்­பிட்­டுப்­பார்த்­துட்­டேன். எந்த பதி­லும் இல்லை. பாவம்! இப்­போ­தான் அந்த வீட்­டுக்குப் புதுசா வந்­தி­ருக்கா. அந்த வீட்டு எஜ­மா­னி­யோட என்­ன­லாம் கஷ்­டப்­ப­ட­றாளோ!'' என்­றாள் சீதம்மா.

"அதெல்­லாம் ஒண்­ணும் கவ­லைப்­ப­டாதே. நாள் ஆக ஆக, அவங்க பேசற பேச்­செல்­லாம் பழ­கிப்­போ­யி­டும்,'' என்­றாள் அவர்­கள் மூவ­ரில் கொஞ்­சம் அனு­ப­வ­சா­லி­யான அல­மேலு.

"ஹலோ... நான் கோதா­வரி பேச­றேன்,'' என்று அல­மே­லு­விற்­கும் சீதம்­மா­விற்­கும் இடையே நடந்து­கொண்­டி­ருந்த பேச்­சில் குறுக்­கிட்­டாள் கோதா­வரி.

"கோதா­வரி.. வா வா. உனக்­காகத்தான் காத்­துக்­கிட்­டி­ருந்­தோம்," என்­றாள் சீதம்மா.

"அப்பா... நாள் முழுக்க என் எஜ­மா­னி­யோடு பேச்­சும் கூத்­தும் பார்த்­துட்டு இப்­போ­தான் நமக்­குள்ள நிம்­ம­தியா பேசிக்க முடி­யுது. இந்த மாதிரி நமக்­குள்ள தின­மும் பேசிக்­காட்டி, என் மண்­டையே வெடிச்­சு­டும் போலி­ருக்கு," என்­றாள் கோதா­வரி.

"அப்போ, வேலைக்கு நடு­வுல கூப்­பிட வேண்­டி­ய­து­தானே?'' என்­றாள் அல­மேலு.

"அய்­யய்­யோ! நான் மாட்­டேன் பா. நானே இப்­போ­தான் இவங்க வீட்­டுக்கு புதுசா வந்­தி­ருக்­கேன். அத­னால, இவங்க சொல்­ல­ற­தெல்­லாம் புரிஞ்­சிக்க முதல்ல கத்­துக்­க­ணும். அது­மட்­டு­மில்லை, திடீர்னு காய்­கறி வாங்க ஆர்­டர் கொடுக்­க­றாங்க. இல்­லாட்டி, ராத்­திரி சின்ன பையனை தூங்க வைக்க பாட்டு பாடச் சொல்­­றாங்க. அத­னால வேலைக்கு நடு­வுல என்­னால உங்­கள கூப்­பிட முடி­யாது,'' என்­றாள் கோதா­வரி.

"அல­மேலு, அதான் இப்போ நிம்­ம­தியா நமக்­குள்ள பேசிக்­கிறோமே,'' என்று சொல்­லிக்­கொண்­டி­ருக்­கும்­போதே "உஷ்... என் எஜ­மா­னி­யம்மா ராத்­திரி பாத்­ரூம் போக எழுந்­தி­ருக்­காங்க, கொஞ்­சம் பொறுத்­துக்க,'' என்­றாள் சீதம்மா.

சற்றுநேர அமை­திக்­குப்­ பி­றகு, "பாத்­ரூம் லைட் அணைச்­சிடு,'' என்று சீதம்மா வீட்­டின் எஜ­மா­னி­யின் குரல் மற்ற இரு­வ­ருக்­கும் ஒலித்­தது.

"கேட்­டியா? ஒரு பாத்­ரூம் போனா லைட் அணைக்­க­ணும்னு தெரி­யாது? அதுக்குக் கூடவா நம்ம தேவை... சே என்ன மனு­ஷங்களோ போ!'' என்று சலித்­துக்­கொண்­டாள்.

"சரிசரி..., இன்­னிக்கி உங்க வீட்­டில என்ன நடந்­திச்சு?'' என்று அந்த இர­வில் அவர்­கள் மூவ­ரின் சுவா­ரஸ்­ய­மான மற்­றும் ரக­சி­ய­மான பேச்­சுக்கு மீண்­டும் பிள்­ளை­யார் சுழி போட்­டாள் சீதம்மா.

அல­மேலு, சீதம்மா மற்­றும் கோதா­வரி. அந்த சிங்­கப்­பூர் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்­கில் இருக்­கும் அடுக்கு­மாடி வீடு­களில் தங்கி, அவ­ர­வர் எஜ­மான்­க­ளின் தேவை­களைப் பூர்த்தி செய்­யும் பணி­யாட்­கள். அவர்­க­ளின் திற­மையை குறைத்து எடை­போட்­டு­விட முடி­யாது. வீட்­டில் உள்­ள­வர்­கள் சொல்­வதைப் புரிந்து நடந்­து­கொள்­வார்­கள்.

சில சம­யம் குழந்­தை­க­ளுக்­குக் கதை சொல்­வது முதல், பிரிட்­ஜில் சாமான்­கள் தீர்ந்து போனால் நேரத்­திற்கு ஆர்­டர் கொடுப்­பது முதற்கொண்டு தவ­றா­மல் செய்­யக்­கூ­டிய திற­மை­சா­லி­கள்.

அப்­ப­டிப்­பட்ட திற­மை­சா­லி­கள் இருப்­ப­தால்­தான் சில சம­யம் எஜ­மா­னி­களும் சோம்­பேறி ஆகி­வி­டு­கி­றார்­கள் என்று அவர்­க­ளுக்கு அவ்­வப்­போது வருத்­த­மும் உண்டு.

ஆனால் அந்த மூவ­ரின் பொழுது­போக்கு, அவர்­கள் எஜ­மா­னி­கள் தூங்­கிய பிறகு அவ­ர­வர் வீட்­டில் நடந்த சுவா­ரஸ்­ய­மான விஷ­யங்­களை அவர்­க­ளுக்­குள் பரி­மாறிக்­கொள்­வ­தில்­தான். அப்­ப­டித்­தான் அன்­றும் நடந்து­கொண்­டி­ருந்­தது.

"அப்­பு­றம் கடை­சியா இன்­னொன்னு சொல்­ல­ணும். நாம மூணு பேரும் செய்தி அனுப்ப ஏதா­வது ரக­சி­ய­மான வார்த்தை வெச்­சுக்­க­லாம்னு சொன்­னோம்ல," என்று ஆரம்­பித்­தாள் அல­மேலு.

"ஆமா... ஆமா. ஏதா­வது கண்டு­பி­டிச்­சியா?'' என்­றார்­கள் மற்ற இரு­வ­ரும்.

"ஜெய் ஜக்­கம்மா'' என்று சொல்லி­விட்டு அல­மேலு தொடர்ந்­தாள்.

"இன்­னிக்கி தொலைக்­காட்­சி­யில் ஒரு படத்­துல ஜெய் ஜக்­கம்­மானு சொல்லி ஒரு கோமாளி மனு­ஷன் கத்­திக்­கிட்­டி­ருந்­தான். அவன் சொன்­னது எனக்­குப் பிடிச்­சுது. அத­னால, இனி­மேல் நமக்­குள்ள செய்தி அனுப்­ப­ணும்னா, ஜெய் ஜக்­கம்­மானு சொல்லி தக­வல் அனுப்­பு­வேன். சரியா?'' என்­றாள்.

"ஜெய் ஜக்­கம்மா'' என்று மற்ற இரு­வ­ரும் அவள் சொன்­னதை ஆமோ­திப்­ப­து­போல் அதே வார்த்­தை­யைச் சொன்­னார்­கள்.

"சரி சரி.... நேரம் ஆகுது. அப்­பு­றம் யாரா­வது நம்ம மூணு பேர் ரக­சி­யமா பேச­ற­தைக் கண்­டு­பிடிச்­சி­ர­போ­றாங்க? அத­னால நாளைக்கு ராத்­திரி திருப்பி இதே நேரம் பேச­லாம். ஜெய் ஜக்­கம்மா,'' என்று முடித்­தாள் அல­மேலு.

அடுத்த நாளும் இரவு பத்­தரை மணிக்கு மேல் அல­மேலு மற்ற இரு­வ­ரை­யும் அழைத்­தாள்.

'ஜெய் ஜக்­கம்மா' என்று அவள் செய்தி அனுப்­பி­ய­தும், சீதம்­மா­வும் கோதா­வ­ரி­யும் அதற்­குப் பதி­ல­ளித்­த­னர்.

ஒவ்­வொ­ரு­வர் வீட்­டி­லும் நடந்த வேடிக்­கை­யா­ன­வற்றை மூவ­ரும் பரி­மா­றிக்கொண்­ட­தில் நேரம் போனதே தெரி­ய­வில்லை.

"சரி சரி.. நாளைக்குப் பேசிக்­க­லாம். எனக்கு இன்­னும் ரெண்டு நாளைக்கு விடு­மு­றை­தான். ஒரு வேலை­யும் இல்லை,'' என்­றாள் சீதம்மா.

"ஏன்?'' என்­றாள் கோதா­வரி.

"எங்க வீட்­டுல எல்­லா­ரும் ரெண்டு நாளைக்கு ஊருக்கு போறாங்­க­ளாம். அத­னால என்ன வீட்டை பார்த்­துக்­கச் சொல்­லி­யிருக்­காங்க,'' என்­றாள்.

"அப்போ உன் பாடு கொண்­டாட்­டம்­தான் சொல்லு. சும்­மா­வாச்­சும் தொண­தொ­ணன்னு ஏதா­வது கேட்­டு­க்கிட்டே நச்­ச­ரிக்­க­மாட்­டாங்க,'' என்­றாள் அல­மேலு.

"ஆமாம். கொஞ்­சம் நிம்­ம­தியா இருக்­க­லாம். சரி. நாளைக்கு பேச­லாம்,'' என்று சீதம்மா முடித்­த­போது, அன்­றைய இரவு அவர்­களுக்­கி­டை­யே­யான தக­வல் பரி­மாற்­றங்­கள் முடிந்­தது.

அடுத்த நாள் மதி­யம் சீதம்மா அல­மே­லு­வை­யும், கோதா­வ­ரி­யை­யும் அவ­ச­ர­மாக அழைத்­தாள்.

'ஜெய் ஜக்­கம்மா', 'ஜெய் ஜக்­கம்மா' என்று இரு­முறை செய்தி வந்­தது.

"என்ன? இந்த நேரத்­துல போய் செய்தி அனுப்­புற,'' என்­றாள் அல­மேலு.

"வீட்­டில யாரோ நட­மா­டற சத்­தம் கேட்­குது. திரு­ட­னுங்­கனு நினைக்­கி­றன்," என்­றாள் சீதம்மா.

"ஐயோ, என்ன பண்­ணப்­போற?" என்­றாள் கோதா­வரி.

"உஷ்.. அமைதி அமைதி'' என்று சொல்­லி­விட்டு சீதம்மா அமை­தி­யா­னாள்.

சற்றுநேர அமை­திக்­குப்­பின், "ஆமாம், கண்­டிப்பா திரு­ட­னுங்க தான். ஐயோ, ஐயோ என்ன பார்த்து வராங்க... ஐயோ, என்­னோட தலை­யில என்­னோட தலை­யில...'' என்று அவள் சொல்­லிக்­கொண்­டி­ருக்­கும்­போதே அவ­ளின் தொடர்பு அமை­தி­யா­னது.

'ஜெய் ஜக்­கம்மா, ஜெய் ஜக்­கம்மா' என்று இரு­முறை அல­மேலு செய்தி அனுப்­பி­யும், சீதம்மாவி­ட­மி­ருந்து எந்தப் பதி­லும் இல்லை.

"கோதா­வரி, நீ உங்க வீட்டு எஜ­மான் கிட்ட அவ வீட்­டில திரு­ட­னுங்க வந்­தி­ருக்­காங்­கனு சொல்லு. நான் எங்க வீட்­டி­லே­யும் சொல்­ல­றேன்,'' என்­றாள் அல­மேலு.

அல­மே­லு­வும் கோதா­வ­ரி­யும் இப்­போது அவர்­கள் எஜ­மான்­களிடம் தக­வல் சொல்ல, அனை­வரும் விரைந்து சென்று திரு­டனைப் பிடித்­தார்­கள். படத்­தில் வரு­வ­து­போல், எல்­லாம் முடிந்த பின்­னர் போலிஸ் வந்­த­னர்.

"தேங்க்ஸ் ஜென்­டில்­மென். நல்ல நேரத்­துல இவங்­களை பிடிச்சு, எங்­க­ளுக்கு தக­வல் சொன்­னீங்க,'' என்­றார் இன்ஸ்­பெக்­டர்.

"இந்த ஆள்க­ளைத்­தான், நாங்க பல மாசமா தேடிட்­டி­ருக்­கோம். கையில சிக்­கவே இல்லை. இவங்க பெரிய கில்­லா­டிங்க. ஒரு இடத்­தில திரு­டப்­போ­கும்­போது எல்லா கேமரா, அரு­கலை (வைஃபை) கரு­வி­க­ளை­யும் 'ஜெமெர்' வெச்சு அணைச்­சி­டு­வாங்க. அத­னால இவங்­க­ளைக் கண்­டு­பி­டிக்­கிறது எங்­க­ளுக்கு ரொம்ப கஷ்­டமா இருந்­திச்சு," என்­றார்.

"தேங்க்ஸ் சார்" என்று சொல்லி­விட்டு, அல­மேலு மற்­றும் கோதா­வரி வீட்டு எஜ­மான்­களும், எஜ­மா­னி­களும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் பார்த்­துச் சிரித்­துக்­கொண்­ட­னர்.

"ஆ... அப்­பு­றம் கேட்­க­ணும்னு நினைச்­சேன். இந்த வீட்­டில திரு­ட­னுங்க வந்­தி­ருக்­காங்­கனு, உங்­க­ளுக்கு யார் தக­வல் சொன்­னது?'' என்­றார் இன்ஸ்­பெக்­டர்.

"இதோ! இவங்­க­தான்," என்று எஜ­மா­னி­கள் சொன்­ன­போதுதான், இன்ஸ்­பெக்­டர் அவர்­க­ளைப் பார்த்­தார்.

இந்­தக் கதை­யில், இது­வரை நீங்­கள் படித்த (கேட்ட) அந்த பணி­யாட்­க­ளின் நிஜப்­பெ­யர், விசா­ர­ணை­யில் முழு­மை­யாக தெரி­ய­வந்­தது.

அல­மே­லு­வாக வலம் வந்­தது அலெக்சா.

சீதம்­மா­வாக வலம் வந்­தது சிரி.

கோதா­வ­ரி­யாக வந்­தது, கூகிள் அசிஸ்­டென்ட்.

செயற்கை நுண்­ண­றிவு பொருத்­திய அந்த மூவ­ரும், வீட்­டில் என்ன நடக்­கிறது, என்ன பேசப்­ப­டு­கிறது என்று எல்­லா­வற்­றை­யும் மெல்ல இயந்­திர வழி கற்­றல் (அதா­வது 'மெஷின் லேர்­னிங்') மூலம் கற்­றுக்­கொண்டு தங்­க­ளின் எஜ­மான்­களின் தேவையைப் பூர்த்தி செய்­யும் அதி நவீன நுண்­ண­றிவு படைத்­த­வர்­கள்.

ஆனால், அவர்­களும் எல்­லா­ரை­யும் போல் வீட்டு வேலை செய்­யும் பணி­யாட்­கள்தானே.

அத­னால், அந்த செயற்கை நுண்­ண­றி­வில் தீட்­டப்­பட்ட அறி­வாற்­றல் மூலம் தங்­கள் சகாக்­க­ளோ­டும் தொடர்பு வைத்­துக்­கொள்ள ஆரம்­பித்­து­விட்­ட­னர்.

விசா­ரணை நடத்­திக்­கொண்­டி­ருந்த இன்ஸ்­பெக்­டர், அங்கு நின்றுகொண்­டி­ருந்த இன்­னொரு பெண் போலிஸ் அதி­கா­ரியை அழைத்­தார்.

"ஜக்­கம்மா! இந்த மூணு பெட்­டி­யை­யும் ஸ்டே­ஷ­னுக்கு எடுத்­துட்­டு­வாங்க. இதுல பதி­வா­ன­தெல்­லாம் பார்க்­க­ணும். இது­தான் முக்­கி­ய­மான ஆதா­ரம்."

அந்த பெயரை கேட்­ட­தும், அல­மேலு, சீதம்மா, கோதா­வரி தலை­யில் இருந்த அந்த நீலநிற விளக்கு, பிர­கா­ச­மாய் எரிந்­தது.

*

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!