எதையோ பேசினார்

எதையோ பேசினார்

7 mins read

- மு.வரதராசனார்

வேதாந்த நெறிக்­கும் மற்­றச் சமய நெறி­க­ளுக்­கும் உள்ள வேறு­பாட்டை ஆராய்ந்து குறிப்­பெழு­திக்­கொண்டு வீட்டை விட்­டுக் கிளம்­பி­னேன்.

'இன்று சமய உல­கி­லேயே ஒரு தெளிவை ஏற்­ப­டுத்­தி­விட முடி­யும்' என்ற நம்­பிக்­கை­யோடு தெரு­வில் நடந்­தேன். என் பேச்­சைக் கேட்க நல்ல கூட்­டம் வந்­தி­ருக்­கும் என்­றும் தற்­பெ­ரு­மை­யாக எண்­ணிக்கொண்டே பஸ் நிலை­யத்தை அடைந்­தேன்.

"உனக்கு வாழ்க்­கைப்­பட்டு" என்று தொடங்கி விம்­மிய குர­லைக் கேட்­டுத் திரும்­பி­னேன்.

குழிந்த கன்­னங்­க­ளை­யும் அழுக்­கே­றிய ஆடை­யை­யும் கண்­டேன். பள­பள என்று மின்­னும் கற்­களோ உலோ­கமோ காதி­லும் இல்லை; கழுத்­தி­லும் இல்லை, கையி­லும் இல்லை.

அந்­தப் பெண்­ணு­ரு­வைப் பார்த்­த­தும் பார்க்­கா­த­து­மாய் நின்­றி­ருந்த ஒரு­வர் காக்கி உடை உடுத்­தி­ருந்­தார். அவ­ரு­டைய கண்­க­ளி­லும் வறுமை இருந்­தது; பேச்­சி­லும் அந்த வறுமை இருந்­தது.

பேச்­சில் வறுமை என்­றால் குறைந்த அள­வான பேச்சு என்று எண்ண வேண்டா. வறு­மை­யால் தாழ்­வுற்­றுப் பிற­ரை­யும் தாழ்­வு­றச் செய்­யும் போக்கு அந்­தப் பேச்­சில் இருந்­தது; அநா­க­ரி­கம் அந்­தப் பேச்­சில் இருந்­தது; ஒரு­வ­கைப் போக்­கி­ரித்­தன்மை அந்­தப் பேச்­சில் இருந்­தது; இவை எல்­லாம் வறு­மை­யின் விளை­வு­கள் அல்­லவா?

இப்­ப­டிப்­பட்ட வறுமை அவ­ரு­டைய பேச்­சில் இருந்­தது. ஐந்து வய­துள்ள பையன் அந்­தத் தாயின் முந்­தா­னை­யைப் பற்­றிக் கொண்டே நின்­றான்; அவ­னு­டைய பார்வை தாயின் முகத்­துக்­கும் தந்­தை­யின் முகத்­துக்­கும் தாவிப் பறந்து கொண்­டி­ருந்­தது. தாய்க்­கும் தந்­தைக்­கும் இடையே மூன்று வயது உள்ள பெண் குழந்தை இங்­கும் அங்­கும் திரும்­பிக் கொண்­டி­ருந்­தது.

"இங்கே யார் உன்னை வரச் சொன்­னது?"

"எனக்கு வரு­வ­தற்கு வழி தெரி­யும்."

"உன் துன்­பம் உனக்கு. என் தொல்லை எனக்கு. நான் நூறு நூறா­கச் சம்­பா­திக்­கி­றேனா? நானே வேலைக்­குக் காப்பி இல்­லா­மல், காப்­பிக்­குக் காசு இல்­லா­மல் அலை­கி­றேன்."

"என்னை என்ன செய்­யச் சொல்­கி­றாய்?"

"இங்­கெல்­லாம் வரக் கூடாது வாய்­தி­றக்­க­வும் கூடாது."

இந்த வாக்­கி­யங்­களே நான் அவ­ரு­டைய பேச்­சி­லி­ருந்து நாக­ரி­க­மா­கப் பொறுக்கி எடுக்­கக் கூடிய வாக்­கி­யங்­கள். இவற்­றைத் தொலை­வி­லி­ருந்து கேட்டபோதே என் மனம் இள­கி­விட்­டது.

கசிந்து உரு­கத் தொடங்­கி­விட்­டது. இவர்­க­ளின் பேச்­சைக் கேட்டு நின்­றால், மானம் என்ற ஒன்று இவர்­க­ளின் நெஞ்­சைப் பிளக்­குமே என்று அஞ்சி அப்­பால் நகர்ந்­தேன். பஸ்ஸில் ஏறி உட்­கார்ந்­தேன். அவர்­கள் இருந்த இடத்தை எட்­டிப் பார்த்­தேன். இரு­வ­ரும் பேசி­யது கேட்­க­வில்லை.

கை நீட்டி நீட்டி அசைத்த அசை­வி­லி­ருந்து பேச்­சில் வேகம் மிகுந்து­விட்­டதோ என்று எண்­ணி­னேன். பஸ் புறப்­ப­டு­வ­தற்­கான வீளை ஊதப்­பட்­டது. அதைக் கேட்­ட­தும், அந்த ஆள் அங்­கி­ருந்து மட­மட என்று நடந்து வரத் தொடங்­கி­னார். தலை மட்­டும் குனிந்­த­ப­டியே நடந்து வந்­தார்.

"அப்பா அப்பா" என்ற குரல் என் காது­வரை எட்­டி­யது. பையனோ பெண்ணோ என்று உற்­றுக் கேட்­டேன். பையன் சிறிது தூரம் பின் தொடர்ந்து வந்து திரும்பி­விட்­டான்.

தாயை நெருங்கி முந்தா­னை­யைப் பிடிக்க முயன்­றான்; ஆனால் என்ன கார­ணத்­தாலோ அந்­தத் தாய் அவ­னு­டைய கன்­னத்­தில் இடித்­தாள்; தலை­யைத் தட்­டி­னாள்.

பையன் அழுது கொண்டே நின்­றான். அந்த ஆளோ பஸ்ஸை நெருங்கி வந்­து­விட்­டார். அந்­தச் சிறு பெண் குறு­குறு என்று தொடர்ந்து ஓடி வந்து கொண்டே இருந்­தாள்.

"போ, வராதே. அம்மா கிட்டே போ, அடிப்­பேன். போ" என்­றார் அவர். அந்த இளம் பெண்ணோ, "அப்பா காலணா அப்பா, காலணா" என்று விடா­மல் கேட்­டுக் கெஞ்­சி­னாள். அவர் தயங்­கா­மல் பஸ்­ஸின் முன்­பு­றக் கத­வைத் திறந்­த­போ­து­தான், நான் ஏறிய வண்­டி­யின் டிரை­வரே அவர் என்­பதை அறிந்­தேன்.

சிறுமி மூன்று வய­துள்ள குழந்தை இளங் கைகளை நீட்­டிக் கேட்­டுக்கொண்டே நின்­றாள்.

பஸ் புறப்­ப­டு­வ­தற்கு முன்னே அவ­ளு­டைய கையில் ஒரு காலணா விழுந்­தது. அதைப் பெற்­றுக் கொண்­ட­தும் அவள் துள்­ளித் துள்ளி அசைந்து ஓடு­வ­தைக் கண்­டேன். பஸ் புறப்­பட்­டது.

இந்த இளங் குழந்­தை­யை­யும் அந்­தத் தாயின் கை தாக்­குமோ என்று அஞ்­சி­னேன்.

டிரை­வ­ராக முன்னே இருந்த ஆளை­யும் பார்த்­தேன். ஆனால் என் மனம் மட்­டும் கந்­தல் பாவாடை­யோடு ஓடிய அந்­தப் பெண்­ணை­யும் மறக்­க­வில்லை; தாயின் கையி­னால் தட்­டும் இடிப்­பும் பெற்­றும் அவ­ளு­டைய முகத்­தையே பார்த்து அழுத அந்­தப் பைய­னை­யும் மறக்­க­வில்லை.

என் பின்­பு­றத்­தில் உட்­கார்ந்­தி­ருந்த ஒரு­வர், "மூன்று நான்கு வய­துள்ள குழந்­தை­கள் பஸ் நிலை­யத்­துக்கு வந்து காலணா கேட்­டுப் பிச்சை எடுக்­க­லாமா? மற்ற நாட்­டில் இப்­படி நடக்­குமா?" என்று பக்­கத்­தில் உள்­ள­வ­ரி­டம் சொன்­னார்.

இதைக் கேட்­ட­வர், "ரயி­லி­லும் இதே தொந்­த­ரவு ஐந்­தாறு வய­துப் பையன்­கள் எல்­லாம் பாட்­டுப் பாடிக் காசு கேட்­கி­றார்­கள்," என்­றார்.

"சின்ன வய­சி­லேயே பீடி பிடிக்­கக் கற்­றுக் கொண்­டார்­கள்; அதற்­குக் காசு வேண்­டாவா?" என்­றார் மற்­றொ­ரு­வர்.

"பீடிக்கு காசு வேண்­டு­மா­னால் மூட்டை தூக்­கிக் கூலி வாங்­கு­வது­தானே? அதற்­குப் பதில் பிச்சை எடுக்­க­லாமா?" என்­றார் பரு­ம­னாக இருந்த இன்­னொ­ரு­வர்.

"சின்ன பையன்­களை மூட்டை தூக்கவிட­லாமா? அதைக் கண்­ணால் பார்க்­க­லாமா? அப்­படி ரஷ்­யா­வில் விடு­வார்­களா?" என்­றார் கல்­லூரி மாண­வர் ஒரு­வர்.

இந்­தச் சொற்­கள் டிரை­வர் காதில் விழுந்­தி­ருந்­தால் நன்­றாக இருந்­தி­ருக்­கும். ஆனால் பஸ் ஒலி அதற்கு இடம் தருமா? அந்­தப் பெண் குழந்தை பிச்சை எடுப்­ப­தாக எண்­ணி­விட்­டார்­களே என்று வருந்தி­னேன்.

யாரை நோவது? வீட்­டில் கண்டு­கொஞ்சி மகி­ழா­மல், வழி­யில் கண்டு கெஞ்சி அழ­வைத்த தந்­தையை நோவதா?

மானத்­தோடு வீட்­டில் அடங்கி மடி­யா­மல் கண­வ­னைத் தேடி வெளியே வந்து போரா­டிய தாயை நோவதா? மனம் வர­வில்லை.

அந்­தப் பைய­னை­யும் நினைந்­தேன். ரயி­லில் பாடு­வது பீடி பிடித்­துத் திரி­வது, மூட்டை தூக்­கு­வது என்­றெல்­லாம் உடன் இருந்­த­வர்­கள் சொன்­ன­போது, அந்­தப் பைய­னு­டைய எதிர்­கா­லத்­தைச் சோதிட முறை­யா­கக் கூறு­வது போல் தோன்­றி­யது.

அந்­தத் தாய் டிரை­வ­ரு­டைய மனை­வி­தானா, மனை­வி­யா­னால் அவ­ரைத் தேடி வர­வேண்­டிய கார­ணம் இல்­லையே.

ஒரு­வேளை வைப்­பாட்­டியோ, வைப்­பாட்­டி­யா­னால் முத­லில் இருந்த அன்பு பிறகு குறைந்த கார­ணம் என்­னவோ என்று பல­வாறு எண்­ண­லா­னேன்.

அவர் வேறு இடத்­தில் புது வைப்­புத் தேடி அன்பு மாறி விட்­டாரோ, அல்­லது அவ­ளது ஒழுக்­கத்­தில் ஏதே­னும் குறை இருக்­குமோ, திரு­ம­ணம் செய்த தொடக்­கத்­தி­லேயே அன்பு இருந்­தி­ருக்­காதோ என்­றும் பல­வாறு எண்­ணிக் கலங்­கி­னேன்.

தொடக்­கத்­தில் அன்பு இல்­லா­மல் திரு­ம­ணம் செய்­தும் படிப்­ப­டி­யாக அன்பு வள­ர­வில்­லையா?

தொடக்­கத்­தில் அன்பு நிறைந்­தி­ருந்­தும் பிறகு வாழ்க்கை கெட­வில்­லையா?

செல்­வர்­க­ளின் வீட்­டில் அன்பு வளர்­வ­தற்­குப் பட்­டும் பொன்­னும் கார­ண­மாக இருப்­ப­து­போல், ஏழை­க­ளின் வீட்­டில் அன்பு வளர்­வ­தற்­குக் கார­ணம் ஒன்­றும் இல்­லையா?

கந்­தல் உடுத்தி அழுக்­குப் படிந்­தி­ருந்­தா­லும் அழ­கும் கவர்ச்­சி­யும் குன்­றாத அந்த இரண்டு குழந்­தை­க­ளால் அன்பு வளர முடி­யாதா?

இந்­தக் கேள்­வி­களும் என் உள்­ளத்­தில் எழுந்­தெ­ழுந்து கலக்­கின. இந்­தக் கலக்­கத்­திற்கு இடையே பஸ்ஸை விட்டு இறங்கி அந்­தச் சங்­கத்­திற்­குச் சென்று சேர்ந்­தேன். கலக்­கத்­திற்கு இடை­யில்தான் மேடை ஏறிப் பேசி­னேன்.

நினைத்து வந்­ததுபோல் அவ்­வ­ளவு தெளி­வா­கப் பேச­மு­டி­ய­வில்லை. ஆனால் பேச்­சின் முடி­வில் தெளி­வும் இருந்­தது; துணி­வும் இருந்­தது. "உல­கத்­தில் உள்­ளவை எல்­லாம் என் பரி­ணா­மம் என்று உணர்­ப­வனே ஞானி. உல­கத்­தில் உள்ள குறை­களை அவ­ர­வர்­க­ளின் தலை­மேல் சுமத்­தி­விட்­டுத்­தான் தூய­வ­னாக எண்­ணு­கி­ற­வன் நாத்­தி­கன்.

மற்­ற­வர்­க­ளின் குறை­களை எல்­லாம் தன் மேல் சுமத்தி எண்ணி, அவற்­றைத் திருத்­தும் பொறுப்­பும் தானே மேற்­கொள்­கின்­ற­வன் ஆத்­தி­கன்.

அன்­பற்ற கண­வன், அன்­பற்ற மனைவி, அறி­வற்ற தந்தை, அறி­வற்ற தாய், திக்­கற்ற பையன், திக்­கற்ற பெண், பொறுப்­பற்ற குடும்­பம், சமு­தா­யம் என்­னும் இந்­தக் கொடு­மை­கள் இல்­லாத நல்ல நாளை எதிர்­பார்த்­துத் தொண்டு செய்­கி­ற­வனே வீரன்.

அதற்கு ஏற்­ற­படி எண்­ணக் கற்­றுக் கொள்­கி­ற­வனே அறி­ஞன். அந்த நாள் வர நெடுங்­கா­லம் செல்­ல­லாம். ஆனால் எண்­ணு­வ­தற்கு நெடுங்­கா­லம் வேண்­டி­ய­தில்லை. இன்றே எண்ண முடி­யும் அல்­லவா? இப்­போதே எண்­ண­வேண்­டும் அல்­லவா?

எண்­ணு­வ­தற்கு ஒரு துணிவு வீரம் வேண்­டும். அந்­தத் துணிவு உடைய வீரன் தான் ஞானி. அவன் என்ன எண்ண வேண்­டும்?

அன்­பற்ற, அறி­வற்ற, திக்­கற்ற, பொறுப்­பற்ற நிலை­க­ளுக்­கெல்­லாம் கார­ணம் சமு­தா­யத்­தில் உள்ள பொருள்­வேட்­டை­தான் என்று எண்ண­வேண்­டும்.

அங்­கங்கே காண்­கின்ற குறை­க­ளுக்­கெல்­லாம் அவ­ர­வர்­க­ளின் மேல் குறை இல்லை என்று எண்ண­வேண்­டும். குறை­யு­டைய சமூக அர­சி­யல் அமைப்பே கார­ணம் என்று எண்­ண­வேண்­டும்.

பொருள் வேட்­டை­யற்ற சமு­தா­யத்தை அமைப்­பதே கடமை என்று எண்­ண­வேண்­டும்.

முர­டர்­க­ளைக் கண்­டா­லும், ஒழுக்­கம் கெட்­ட­வர்­க­ளைக் கண்­டா­லும் அன்­பற்­ற­வர்­க­ளைக் கண்­டா­லும் அறி­வற்­ற­வர்­க­ளைக் கண்­டா­லும் திக்­கற்­ற­வர்­க­ளைக் கண்­டா­லும் எவன் இப்­படி எண்­ணு­கி­றானோ, அவன் தான் மெய்­யு­ணர்வு பெற்­ற­வன். அவன் தான் உண்மை உணர்ந்த ஞானி. மற்­ற­வர்­கள் எல்­லோ­ரும் திண்ணை வேதாந்­தம் பேசு­கி­ற­வர்­களே," என்று பேசி முடித்­தேன்.

தலை­வர் மோதி­ரத்­தை­யும் சரிகை மேலா­டை­யை­யும் மெல்ல ஒழுங்­குப்­ப­டுத்­திக் கொண்­டார். ஒரு கனைப்­புக் கனைத்­தார். முடி­வுரை சொல்­லத் தொடங்­கி­னார்.

அப்­போது அவ­ரு­டைய உற­வி­னர் ஒரு­வர் அவ­ச­ர­மாக அவ­ரைத் தேடிக் கொண்டு வந்­தார்.

தலை­வ­ரு­டைய தமக்கை மகள் திடீ­ரென்று ஆபத்­தான நிலை அடைந்து மருத்­துவ நிலை­யத்­துக்கு அழைத்­து­வ­ரப்­பட்­ட­தா­கச் செய்தி வந்­தது.

தலை­வர் விரைந்து கூட்­டத்தை முடித்­தார். கவ­லை­யோடு சுருக்­க­மாக, "சொற்­பொ­ழி­வா­ளர் எடுத்த பொருளை விட்டு விட்டு எதை எதையோ பேசி­னார்," என்று ஒரு வாக்­கி­யம் குத்­த­லா­கச் சொல்லி முடித்­தார்.

கூட்­டம் முடிந்து நான் வீட்­டிற்­குத் திரும்பி வந்­த­போது, வழி­யில் ஒரு தெரு­வின் மூலை­யில் சிறு கூட்­டம் இருந்­தது. நின்­றேன்.

கார­ணம் தெரிந்துகொள்ள விரும்­பி­னேன். யாரோ ஒருத்தி நஞ்சு குடித்­துக் குற்­று­யி­ராய் மருத்­துவ நிலை­யத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­ட­தா­கச் சொன்­னார்­கள்.

அங்­கி­ருந்து நடக்­கத் தொடங்­கி­ய­போது கூட்­டத்­தில் இருந்த ஒரு­வர், "ஆமாம், அந்த டிரை­வர்க்கு இன்­னும் யாரும் தெரி­விக்­க­வில்­லையா?" என்று கேட்­டார்.

"அவ­னை போலி­சார் விசா­ர­ணைக்கு அழைத்­துக் கொண்டு போயி­ருக்­கி­றார்­க­ளாம்," என்­றார் மற்­றொ­ரு­வர்.

"அவன் பாவி. அந்­தப் பெண் மேல் குற்­றம் சொன்­னால் கண் அவிந்து போகும். கண­வ­னு­டைய கொடுமை பொறுக்க முடி­யா­மல் இப்­ப­டிச் செய்து கொண்­டி­ருப்­பாள்.

அவ­ளு­டைய தாய்­மா­மன் ஒரு­வர் இருக்­கி­றார், நல்ல பணக்­கா­ரர், படித்­த­வர், வேதாந்தி," என ஒரு­வர் சொல்­லிக்கொண்டே நடந்­தார்.