நானாகிய நான்...

நானாகிய நான்...

1 mins read

- இரவி கோகுலநாதன்

அம்மை என்றும் அப்பன் என்றும்

ஒட்டிவந்த உடம்பதனில் நானில்லை

நித்தம் நித்தம் உண்டு உறங்கி

ஊனாகிய உணவுதனில் நானில்லை

சித்தமறிய கற்ற கல்வி கொண்டு

குவித்த பொருளதனில் நானில்லை

பள்ளிப் பருவம் அள்ளித் தந்த

புத்தியென்னும் மதிப்பெண்தனில் நானில்லை

கற்ற வித்தை வையம் எங்கும்

கொண்டு சென்றதனில் நானில்லை

கெட்டி மேளம் சத்தம் கேட்க

மங்கள வாழ்த்தொலிதனில் நானில்லை

எனக்குள் இங்கும் உனக்குள் அங்கும்

காதலாகிய சுவாசந்தனில் நானில்லை

சித்தம் மொத்தம் நித்தம் நித்தம்

இல்லறமாகிய நல்லறந்தனில் நானில்லை

மகன் என்றும் மகள் என்றும்

வந்துசேர்ந்த பந்தபாசந்தனில் நானில்லை

வஞ்சம் கொஞ்சம் மிஞ்சும் வண்ணம்

வாழ்ந்த வாழ்வுதனில் நானில்லை

எனக்கு மட்டும் எனக்கு மட்டும்

சேர்த்த செல்வந்தனில் நானில்லை

இருக்கும் போதும் இறக்கும் போதும்

அண்டமென்ற பிண்டந்தனில் நானில்லை

எனக்குள்ளே எனக்குள்ளே தேடிப் பார்த்தேன்

நானாகிய மாயைதனில் நானில்லை

நானில்லை நானில்லை என்ற போது

நானாகி நின்றதென்ன மாயமோ...