இரண்டு குழந்தைகள்

- ஜெய­காந்­தன்

இரண்டு அடுக்கு, மூன்று அடுக்கு மாடி­கள் உடைய கட்­ட­டங்­கள் நிறைந்த அந்­தத் தெரு­வில் பெரிய உத்­தி­யோ­கஸ்­தர்­கள், டாக்­டர்­கள், வக்­கீல்­கள் முத­லி­யோர் வாழ்ந்­த­னர். அது மட்­டு­மல்­லா­மல், அநே­க­மாக ஒவ்­வொரு வீட்­டிற்­கும் பக்­கத்­தில் சற்­றுத்­தள்­ளியோ நெருங்­கியோ அமைந்­துள்ள கொட்­ட­கை­களில் மாடு­கள், பசுக்­கள் வசித்­தன. சில கொட்­ட­கை­களில் கார்­கள் இருந்­தன.

சேதன அசே­த­னப் பொருட்­கள் யாவற்­றுக்­கும் இடம் கொடுத்த அந்­தத் தெரு, சிவப்­பிக்­கும் அவள் மகன் சோணை­யா­வுக்­கும் இடம் தந்­த­தில் ஆச்­ச­ரி­யம் ஒன்­று­மில்லை என்று சொல்­லி­விட முடி­யுமா?

முத­லில் ஒவ்­வொரு வீட்­டுத் திண்­ணை­யி­லி­ருந்­தும் அவ­ளை­யும் அவள் குழந்­தை­யை­யும் விரட்­டி­னார்­கள். பிறகு அந்த ரிட்­டை­யர்ட் சப்­ரி­ஜிஸ்­தி­ரார் சுப்­பு­ஐ­ய­ரின் மனை­யாள் தய­வின் பேரில், அவர்­கள் வீட்­டுக்­குப் பக்­கத்­தி­லி­ருந்த மாட்­டுக் கொட்­ட­கை­யில் இடம் பிடித்­தாள் சிவப்பி.

மழை­யென்­றும் குளி­ரென்­றும் இயற்கை தொடுக்­கும் தாக்­கு­தல்­களுக்கு அர­ணாய் அமைந்­தது அந்­தக் கொட்­டகை. தின­சரி அந்த மாட்­டுக்­கொட்­ட­கையை அவள் சுத்­தம்­ செய்­வாள். அவள் படுத்­துக்­கொள்­ளும் இடத்தை அவள் சுத்­தம் செய்து கொள்­ளு­கி­றாள். அதற்­குக் காசு கொடுப்­பார்­களா, என்ன?

பகல் பொழு­தெல்­லாம் இடுப்­பில் பிள்­ளைச் சுமை­யு­டன், அந்­தத் தெரு­வின் கோடி­யில் உள்ள விற­குக் கடை­யில் அவ­ளைப் பார்க்­க­லாம்.

விற­குச் சுமை கிடைத்­து­விட்­டால், பிள்­ளைச்­சுமை இறங்­கி­வி­டும். அவன் கையில் கால­ணா­வுக்கு முறுக்கை வாங்­கிக் கொடுத்து அங்­கேயே மரத்­த­டி­யில் குந்தி இருக்­கச் சொல்­லி­விட்டு ஓடு­வாள்.

பிள்­ளையை விட்­டு­விட்­டுப் போகும் துடிப்­பில், சுமை­யு­டன் ஓட்ட­மாய் ஓடி ஒரு நொடி­யில் திருப்­பு­வாள். சோணை­யா­வும் புத்­தி­சா­லித்­த­ன­மாய், அம்மா வரும் வழி­யைப் பார்த்­த­வாறே உட்­கார்ந்­தி­ருப்­பான்.

அது­வரை முறுக்­கைக் கடிக்­கவே­மாட்­டான். தாயைக்­கண்­ட­தும் ஒரு சிரிப்பு மல­ரும். அவ­ளும் ஓடி வந்து பிள்­ளை­யைத் தூக்கி முத்­த­மி­டு­வாள். தாயுள்­ளம் அந்­தப் பிரி­வைக்கூடத் தாங்க முடி­யா­தது என்­பது அவள் தவிப்­பில் தெரி­யும். கையி­லுள்ள முறுக்­கைத் தாயின் வாயில் வைப்­பான் சிறு­வன். அவள் கொஞ்­சம் கடித்து, அதை எடுத்து அவன் வாயில் வைத்து, "நீ தின்­னுடா ஐயா...." என்று சொன்ன பிறகு தான் தின்­பான்.

விற­குச் சுமை இல்­லாத நேரங்­களில் கடைத்­தெ­ரு­வில் சென்று கடை­களில் தானி­யம் புடைப்­பாள்.

மாலை நேரத்­தில் அந்­தப் பெரிய தெரு­வின் ஒரு மூலை­யில், மரத்­த­டி­யில் மூன்று கற்­க­ளைச் சேர்த்து அடுப்பு மூட்­டிச் சோறு சமைத்­துத் தானும் தன் மக­னும் உண்­ட­பின் மாட்­டுக் கொட்­ட­கை­யில் வைக்­கோல் பரப்­பில் நித்­திரை கொள்­வாள்.

அந்­தத் தெரு­வில் எல்லா வீட்­டுக்­கும் அவள் வேலை செய்­வாள். அதி­லும் சுப்பு ஐயர் வீட்­டுக்­கா­ரர்­களுக்கு அவ­ளி­டம் தனிச்­ச­லுகை. அவ­ளும் மற்ற வீட்­டுக்­கா­ரர்­க­ளி­டம் செய்­யும் வேலைக்­குக் கூலி­யா­கக் காசு பெறு­வது உண்டு. சுப்பு ஐயர் வீட்­டில்... எப்­பொ­ழு­தா­வது அவர் மனைவி கொடுத்­தா­லும்­கூட வாங்கு­வ­தில்லை. அவள் செய்­யும் வேலை­க­ளுக்­காக மீந்­து­போன சோறு, கறி குழம்பு வகை­ய­றாக்­கள் அவ­ளைச் சாரும். சுப்பு ஐயர் வீட்­டில் அவ­ளா­கக் கேட்டு வாங்­கு­வது, மத்­தி­யான நேரத்­தில் ஒரு குவளை சோறு வடித்த கஞ்சி மட்­டும்­தான்.

அந்­தக் கஞ்­சி­யில் அவ­ளுக்கு அப­ரி­மி­த­மான சுவை. சுப்பு ஐயர் வீட்­டுக்­குக் கிரா­மத்­தில் இருந்து நெல் வரு­கிறது. நல்ல வீட்டு அரிசி; பச்­ச­ரி­சிக் கஞ்சி மணக்­கும்; அவ­ளுக்­குக் குடிக்க குடிக்க அது இனிக்­கும். எந்த வேலை எப்­ப­டிப் போனா­லும் பத்து பதி­னோரு மணிக்கு ஐயர் வீட்டு வாசற்­ப­டி­யில் தக­ரக் குவ­ளை­யும் கையு­மாய் வந்து நின்று விடு­வாள்.

சுப்பு ஐயர் திண்­ணை­ய­ருகே ஈசிச்­சே­ரில் சாய்ந்­தி­ருக்­கி­றார். கையி­லுள்ள விசிறி லேசாக அசை­கிறது.

திண்­ணை­யில் தக­ரக் குவ­ளை­யின் சப்­தம் கேட்­கவே ஐயர் நிமிர்ந்து பார்க்­கி­றார்.

"அடியே... ஒன் ஸ்வீ­கா­ரம் வந்­தி­ருக்கா; பாரு"

சுப்­பு­ஐ­ய­ருக்கு சிவப்­பி­யைப் பார்த்­தால் கொஞ்­ச­மும் பிடிக்­காது. மனைவி அவ­ளி­டம் பிரி­ய­மாய் இருப்­பதே அதற்­குக் கார­ணம். தனது வெறுப்பை எப்­ப­டி­யெப்­படி யெல்­லாமோ காட்­டிக் கொள்­வார்.

"என்­னடா பயலே, வயசு நாலாகு­தோன்னோ? இன்­னம் என்ன ஆயி இடுப்­பை­விட்டு எறங்­க­மாட்­டேங்­கறே. நீயும் போயி வெறகு தூக்­க­றது­தானே.... எப்­பப் பார்த்­தா­லும் சவா­ரி­தான்; நாளைக்கு நடந்து வர­லேன்னா ஒன்னெ என்ன செய்­றேன் பாரு...." என்று வேடிக்கை பேசவே சிவப்பி மகிழ்ந்து போனாள். ஐயர் தன் பிள்­ளை­யைக் கொஞ்­சி­விட்­டார் என்ற நினைப்­பில் சோணை­யாவை முத்­த­மிட்­டாள்.

அதற்­குள் சுப்பு ஐய­ரின் மனைவி உள்ளே இருந்து கஞ்­சி­யில் உப்­பைப் போட்­டுக் கலக்­கிக் கொண்டே வந்­தாள்.

திண்­ணை­யோ­ர­மாய் ஒதுங்கி, எட்டி நின்­ற­வாறே புட­வை­யைச் சேர்த்­துப் பிடித்­துக்­கொண்டு சிவப்பி கையி­லேந்தி நிற்­கும் தக­ரக் குவ­ளை­யில் அவள் கஞ்­சியை வார்க்­கும்­போது, ஈசிச்­சே­ரில் சாய்ந்­தி­ருந்த சுப்பு ஐயர் நிமிர்ந்து உட்­கார்ந்து கூர்ந்து கவ­னித்­தார்.

கஞ்­சி­யி­லி­ருந்து ஒரு பருக்கை விழு­வது தெரிந்­ததோ, போச்சு, அவ்­வ­ள­வு­தான்'.... ஐயர் வீட்டு அம்­மாள் இருந்த இருப்­பும், இந்­தக் கஞ்­சித்­தண்­ணிக்­குக்­கூட வக்­கில்­லா­மல் அவள் அப்­பன் அடித்த 'லாட்ரி'யும்.... வம்ச பரம்­ப­ரை­யா­கக் குல­முறை கிளர்த்த ஆரம்­பித்­து­விடு­வார்.

"என்­னடி அது 'லொடக்'னு கொட்­டித்தே?..." என்று புரு­வத்தை உயர்த்­தி­னார்.

அம்­மா­ளுக்கு எரிச்­சல் பற்­றிக்­கொண்டு வந்­தது.

"காட்­டுடீ...ஐயர்­கிட்டே கொண்டு­போய்க் காட்டு. கையை­விட்­டுத் துழா­விப் பாருங்கோ... இந்த ஆத்து சொத்­தெல்­லாம் கொண்­டு­போய்க் கொட்­டிட்­டே­னேன்னோ.... இவர் துப்­புக் கண்டு­பி­டிக்­கி­றார்...." என்று இரைந்­து­விட்டு உள்ளே போனாள்.

"ஒண்­ணு­மில்லே சாமி... வெறும் கஞ்சி ஆடை," என்று அதை விர­லால் எடுத்­துக் காட்டி தூக்கி எறிந்­தாள் சிவப்பி.

"அடி அசடே... அதை எறிஞ்­சுட்­டியே... அதி­லே­தான் 'வைட்ட­மின் பி' இருக்கு."

"எனக்கு அதொண்­ணும் வாணாம் சாமி...." என்று கஞ்­சிக் குவ­ளை­யு­டன் நகர்ந்­தாள் சிவப்பி.

அவள் போவ­தையே பார்த்­துக் கொண்­டி­ருந்­து­விட்டு ஐயர் தனக்­குள் சொல்­லிக் கொண்­டார்:

"ஹ்ம்... கஞ்­சித் தண்­ணி­யைக் குடிச்­சுட்டு என்ன தெம்பா, இருக்கா' அதி­லே­தான் சத்­தெல்­லாம் இருக்கு," என்று முண­கி­ய­பின், உரத்த குர­லில்...

"அடியே... இனிமே சோத்தெ வடிக்­காதே. பொங்­கிப்­பிடு. அதி­லே­தான் சத்­தெல்­லாம் இருக்கு. ஒடம்­புக்கு ரொம்ப நல்­லது...." என்று சொன்­னார்.

"ஆமா... இப்போ இருக்­கற சத்தே போறும்," என்று சலித்­துக்­கொண்டு உள்ளே போனாள் அம்­மாள்.

அம்­மாள் எத்­தனை தட­வை­கள் சலித்­துக் கொண்­டா­லும், ஐய­ருக்கு சிவப்­பி­யைப் பார்க்­கும் போதெல்­லாம்... லோகத்­தில் இருக்­கும் சத்­தெல்­லாம் தன் வீட்­டுக் கஞ்­சித் தண்­ணீ­ரில் தான் இருப்­ப­தா­கத் தோன்­றும்.

ராம­நா­த­பு­ரம் ஜில்­லா­வி­லி­ருந்து "பஞ்­சம் பிழைப்ப"தற்­காக மதுரை வந்­த­வள் சிவப்பி.

பெய­ர­ள­வில் சிவப்பி. கரிய ஆகி­ருதி... ஆரோக்­கி­ய­மும் திட­மான உடற்­கட்­டும் உடைய அவள் பஞ்­சத்­தி­ல­டி­பட்டு இந்த நக­ரத்­திற்கு வந்­த­வள்­தான் என்­றா­லும், இங்­குள்­ள­வர்­கள் கண்டு வியக்­கும்­ப­டி­தான் இருந்­தது அவள் உடல் வனப்பு. செழிப்­பாக இருக்­கும் பூமி­யில் வள­மாக வாழும் வாய்ப்­பும் கிட்­டி­யி­ருந்­தால் நிச்­ச­யம் இவ­ளால் முறம் கொண்டு புலியை விரட்டி இருக்க முடி­யும்'

ஆனால் இப்­போது...

முறம் கொண்டு தானி­யங்­கள் புடைப்­ப­தும், கூலிக்கு விறகு சுமப்­ப­து­மாய் உழைத்­துத் தானும் கருப்­பை­யாத்­தே­வ­னின் வாரி­சாக திகழ்ந்து, தன் சிரிப்­பி­லும் புன்­ன­கை­யி­லும் அவள் கண­வ­னின் சாயல் காட்டி, ஆறு­தல் தரும் நான்கு வயது மக­னான சோணை­யா­வும் வயிறு வளர்ப்­பதுதான் அந்த மறத்­தி­யின் உடல் வலு புரி­யும் மகத்­தான சாதனை.

இடுப்­புக் குழந்­தை­யும் தாயு­மாய் அவளை இங்கே விட்டு விட்டு, ஏதா­வது வேலை தேடி வரு­வ­தா­கச் சொல்லி, வடக்­குச் சீமைக்­குப் போன அவள் புரு­ஷன் கருப்­பை­யாத் தேவ­னின் முக­த­ரி­ச­னம் ஆறு மாச­மா­கி­யும் கிடைக்­க­வில்லை.

அன்று ஐய­ர­வர்­க­ளுக்கு பிறந்த தின வைப­வம். வீட்­டில் விசே­ஷ­மா­ன­தால் விருந்­தி­னர்­களும் வந்­தி­ருந்­த­னர். வந்­த­வர்­க­ளுக்­கெல்­லாம் பந்தி நடந்­த­தால் சிவப்பி கஞ்­சிக்­கா­கக் காத்­தி­ருக்க வேண்டி இருந்­தது.

பிள்ளை பசி­யால் துடித்­தான்.

அவ­னுக்கு 'பராக்கு'க் காட்­டிப் பேசிச் சிரித்து விளை­யா­டி­ய­வாறு கொட்­ட­கை­யின் ஓரத்­தி­லி­ருந்த மர நிழ­லில் குந்­தி­யி­ருந்­தாள் சிவப்பி.

"ஒங் ஐயா எங்­கலே...." என்று மக­னின் முக­வா­யைப் பிடித்­துக் கொஞ்­சி­னாள் சிவப்பி.

"ஐயா... ஓ.... போயித்­தாரு..."

"எப்­பலே வரும் ஒங்க ஐயா..." என்­ற­தும் அவன் அவள் மடி­யி­லி­ருந்து இறங்கி நடந்து, தெரு­வில் போய் நின்று இரண்டு பக்­க­மும் மாறி மாறிப் பார்த்­து­விட்டு வந்­தான்.

"ஆத்தா... ஐயா.... ஊம்" என்று இரண்டு கையை­யும் விரித்­தான். அவன் முகத்­தில் ஏமாற்­ற­மும் சோர்­வும் படர்ந்­தி­ருந்­தது.

"ஐயா நாளைக்கு வந்­து­டும். வாரப்போ ஒனக்கு முட்­டாயி, முறுக்கு, புதுச் சட்டை எல்­லாம் கொண்­ணாந்து குடுத்து... அப்­பு­றம் நாம்ப நம்ம ஊருக்­குப் போயி, நம்ம ஊட்லே இருக்­க­லாம்...." என்று கூறும்­போது அவள் குரல் தழு­தழுத்­தது; கண்­களில் நீர் துளிர்த்­தது. மக­னின் முகத்­தில் முத்­தம் கொடுக்­கும்போது அவன் முகத்­தி­லேயே கண்­ணீ­ரை­யும் துடைத்­துக் கொண்­டாள்.

இந்த சம­யத்­தில் ஐயர் வீட்டு வாச­லில் இலை வந்து விழும் சப்­தம் கேட்­டது.

"ஆத்தா... கஞ்சி.... கஞ்சி..." என்று குழந்தை பறந்­தான்.

மகனை தூக்கி இடுப்­பில் வைத்­துக்­கொண்டு, கையில் தக­ரக் குவ­ளை­யு­டன் போய் நின்­றாள் சிவப்பி.

சுப்பு ஐயர் அப்­பொ­ழு­து­தான் சாப்­பாடு முடிந்து, திண்­ணைக்­க­ருகே ஈஸி­சே­ரில் வந்து சாய்ந்து ஏப்­பம் விட்­டார்.

"என்ன சேப்பி?..."

"இன்­னக்கி விசே­ஸங்­களா சாமி?"

அவள் சாதா­ர­ண­மாய், உப­சா­ரத்­திற்­குத்­தான் கேட்டு வைத்­தாள்.

"என்­னத்தெ விசே­ஷம் போ....ஊர்­லேந்து பொண்ணு வந்­தி­ருக்­கா­ளோன்னா?... அதான்...ஹி...ஹி...."

இவ­ளுக்கு ஏதா­வது தர­வேண்டி இருக்­குமோ என்ற பயத்­தில் பூசி மழுப்­பி­னார் ஐயர்.

உள்­ளே­யி­ருந்து அம்­மா­ளின் குரல் மட்­டும் கேட்­டது.

"யாரது சேப்­பியா....?"

"ஆமாங்க."

"சித்தெ சந்­து­வ­ழியா கொல்­லப்­பு­றம் வாயேண்டி... ஒன்­னத்­தான் நெனச்­சிண்டே இருந்­தேன். தொட்­டி­யிலே.... ரெண்டு வாளி ஜலம் சேந்தி நெரப்பு... சாப்­பிட்­ட­வா­ளுக்­குக் கைய­லம்­பக்­கூட ஜலம் இல்லே.... சீக்­கி­ரம் வா...." என்று அம்­மா­வின் குரல் ஒலித்­த­தும் இடுப்­பி­லி­ருந்த குழந்­தை­யு­டன் உள்ளே போகும் சிவப்­பி­யைப் பார்த்து, "இடுப்­பை­விட்டு எறங்­காமே ஒன் உசிரை வாங்­க­றதே, சனி அத்தெ எறக்கி விட்­டுட்­டுப் போ'..." என்­றார் ஐயர்.

குழந்­தையை இறக்கி மர நிழ­லில் உட்­கார வைத்து "ஆத்தா போயி கொஞ்­சம் தண்ணி எறைச்சி ஊத்­திட்டு வாரேன்; அழு­வாமே குந்தி இருக்­கியா, ஐயா?..." என்று அவனை முத்­தம் கொஞ்­சி­னாள் சிவப்பி.

'சரி' என்று சமர்த்­தா­கத் தரை­யில் சம்­ம­ணம் கட்டி உட்­கார்ந்து கொண்­டான் சிறு­வன்.

சந்­துப் பக்­கம் போகும்போது சிவப்பி திரும்­பித் திரும்­பித் தன் மக­னைப் பார்த்­துச் சிரித்­துக் கொண்டே சென்­றாள். அவ­னும் சிரித்­த­வாறு உட்­கார்ந்­தி­ருந்­தான்.

பையன் அழா­மல் அடம் பிடிக்­கா­மல் இருந்­த­தில் ஐய­ருக்­குக் கொஞ்­சம் ஏமாற்­றம்; ஆத்­தி­ரம் என்று கூடச் சொல்­ல­லாம்.

உள்­ளே­யி­ருந்து ஆரோ­கண அவ­ரோ­கண கதி­க­ளி­லெல்­லாம் குரலை முழக்­கிக் கொண்டு வந்­தான் அவர் மகள் வயிற்­றுப் பேரன். அவ­னுக்­கும் வயது நான்­கு­தான் இருக்­கும். நான்கு விர­லை­யும் வாய்க்­குள் திணித்­த­வாறு சிணுங்­கிக் கொண்டே அவ­ருகே வந்­தான் பேரன்.

"ஏண்டா கண்ணா அழறே? இப்­படி வா... மடி­யிலே வந்து தாச்­சிக்கோ," என்று பேரனை அழைத்­தார்.

"மாத்தேன் போ....அம்மா... ஆ...ஆ" என்று வாயைப் பிளந்து கொண்டு அழ ஆரம்­பித்­தான் குழந்தை.

"அம்மா சாப்­பி­ட­றாடா கண்ணா...சாப்­டுட்டு வந்து ஒன்­னெத் தூக்­கிண்­டு­டுவா. சமத்­தோன்னோ?....அதோ பாரு, அந்­தப் பையனை...அவ அம்­மா­வும் எங்­கேயோ போயித்­தான் இருக்கா... ஒன்னெ மாதிரி அவன் அழ­றானோ?" என்று சோணை­யா­வைக் காட்­டி­னார் ஐயர்.

சோணையா கையைத் தட்­டிக்­கொண்டு ஐய­ரின் பேர­னைப் பார்த்­துச் சிரித்­தான்; அவனோ காலை உதைத்­துக் கொண்டு அழு­தான்'

தனது பேர­னுக்கு அவனை வேடிக்கை காட்­டப்­போய், தன் பேரன் அவ­னுக்கு வேடிக்­கை­யா­கிப் போனானே என்ற ஊமை ஆத்­தி­ரம் ஐய­ருக்கு...

"ஏண்டா சிரிக்­கிறே? அப்­ப­டியே போட்­டேன்னா..." என்று விளை­யாட்­டாய்க் கண்­டித்து தம் எரிச்­ச­லைத் தீர்த்­துக் கொண்­டார் ஐயர். "அந்­தப் பையன்­தான் அசடு... அவனை நன்னா அடிப்­போமா?"

அவர் பேச்­சைக் காதில் வாங்­கிக் கொள்­ளா­மல் கத்­தி­னான் பேரன்.

"இதெ­விட அசடு லோகத்­திலே உண்டோ.... நன்னா ஒதைக்­க­ணும்" என்று கரு­விக்­கொண்டே ஐய­ரின் மகள் எச்­சில் இலை­யு­டன் தெருப்­பக்­கம் வந்­தாள். இலை­யைப் போட்­டுக் கையைக் கழு­விய பின்,

"சனி­யனே, கத்­திப் பிரா­ண­னைத் தொலைக்­காதே' " என்று பல்­லைக் கடித்­துக் கொண்டு வந்து மக­னைத் தூக்­கிக் கொண்­டாள்.

"என்­னடி பொண்ணே, ஒன்­னும் சாப்­பி­டாம இலை­யைக் கொண்டு வந்து எறிஞ்­சி­ருக்கே... எல்­லாம் அப்­ப­டியே இருக்கு ...ஜாங்­கி­ரி­கூடன்னா அப்­ப­டியே கெடக்கு? இப்­படி 'வேஸ்ட்' பண்­ணு­வாளோ?..." என்று அரற்­றி­னார் ஐயர்.

"இந்த சனி என்னெ சாப்­பிட விட்­டாத்­தானே...?"

"சரி...அவ­னெக் கத்த விடாதே' அவ­னுக்கு ஒரு ஜாங்­கிரி குடு" என்று சொல்­லி­விட்டு சோணை­யா­வைப் பார்த்­தார்.

"ஏண்டா பயலே, நோக்கு ஜாங்கிரி வேணுமா?" என்­றார் கண்­க­ளைச் சிமிட்­டிக் கொண்டே.

பைய­னுக்கு புரி­ய­வில்லை.

"மிட்­டா­யிடா... மிட்­டாய், வேணுமா?"

மிட்­டாயி என்­ற­தும் பைய­னுக்­குப் புரிந்­து­விட்­டது. சந்­தோ­ஷத்­து­டன் தலையை ஆட்­டிக் கொண்டு எழுந்து வந்­தான்.

"அதோ, அதான்... மிட்­டா­யிடா... எடுத்­துத் தின்னு பாரு, இனிக்­கும்...." என்று நாக்­கைச் சப்­புக்­கொட்டி ஆசை மூட்டி எச்­சில் இலை­யைக் காட்­டி­னார் ஐயர்.

சோணையா தனது பிஞ்­சுக் கரங்­க­ளால் எச்­சி­லை­யில் கிடக்­கும் துண்டு ஜாங்­கி­ரியை எடுத்து வாயில் வைத்­துச் சுவைத்­தான்....

"எலே...எலே...போடுலே கீளே----தூ...." என்று கூவி­ய­வாறு சந்­தி­லி­ருந்து ஓடி­வந்த சிவப்பி அவன் கையி­லி­ருந்த ஜாங்­கி­ரி­யைத் தட்­டி­விட்­டாள். "துப்­புலே.... துப்பு..." என்று அவன் தலை­யில் 'நறுக்' கென்று குட்­டி­னாள். சோணையா அழு­தான்; அவன் பிளந்த வாய்க்­குள் விர­லை­விட்டு அந்த ஜாங்­கி­ரித் துண்டை வழித்து எறிந்­தாள்.

"நா எலும்பை முறிச்சி கஞ்சி ஊத்­த­றேன்.... எச்­சப் பொறுக்­க­றியா?..." என்று முது­கில் அறைந்­தாள்.

"கொழந்­தேயெ அடிக்­காதே சேப்பி..." என்­றார் ஐயர்.

"இல்லே சாமி... நாங்க இல்­லாத ஏளைங்க.... இப்­பவே கண்­டிக்­காட்டி நாளைக்கி எச்­சிக்­கலை பொறுக்­கி­யாவே ஆயி­டும்..." என்று சொல்­லி­விட்டு இடுப்­பில் இருக்­கும் சோணை­யா­வின் முகத்­தைத் துடைத்து "இனிமே எச்­சி­யெல்­லாம் எடுக்­காதே," என்று சமா­தா­ன­மாய்க் கேட்­டாள்.

பையன் விம்­மிக் கொண்டே ஐய­ரைக் காட்டி, "சாமி... சாமி­தான் எடுத்­துத் திங்­கச் சொல்­லிச்சு..." என்று அழு­தான். சிவப்­பிக்கு உடம்பு பதைத்­தது, கண்­கள் சிவக்க ஐய­ரைப் பார்த்­தாள்.

"ஏன் சாமி... ஒங்க புள்­ளையா இருந்தா சொல்­லு­வீங்­களா?... ஒங்க எச்சி ஒஸத்­தியா இருந்தா ஒங்­க­ளோட, எம் பைய­னுக்கு ஏன் அதைத் தர­ணும்..." என்று கோப­மாய்க் கேட்­டாள்.

"என்­னடி அது சத்­தம்?" என்று கேட்­டுக் கொண்டே பாத்­தி­ரத்­தில் கஞ்­சிக் கொண்டு வந்­தாள் வீட்டு அம்­மாள்.

"நீயே பாரும்மா... எம்­மூட்­டப் புள்­ளைக்கி எச்­சி­லைத் திங்­கப் பளக்­கிக் கொடுக்­கி­றா­ரும்மா, சாமி..." என்று கண்­ணைத் துடைத்­துக் கொண்­டாள் சிவப்பி.

"நான் என்ன பண்­ணு­வேண்டி...நேக்கு அவர் ஒரு பச்­சைக் கொழந்தை... ஒன் கொழந்­தையை நீ அடிக்­கறே; நா என்ன பண்­றது, சொல்லு?"

"ஏண்டி சேப்பி, நான்­தான் அவனை எடுத்­துத் திங்­கச் சொன்­னேன்னு சொல்­றயே, நான் சொன்­னதை நீ கண்­டையா?...." என்று எழுந்து வந்­தார் ஐயர்.

"எம்­ம­வன் வற­வ­னுக்கு பொறந்­த­வன். பொய் சொல்ல மாட்­டான் சாமி..." ஆக்­ரோ­ஷத்­தோடு இரைந்­தாள் சிவப்பி.

ஐயர் அசந்து போனார்'

"ஆமா; சொன்­னேன்­னு­தான் வச்­சுக்­கோ­யேன்... எங்க வீட்­டுக் கஞ்­சியெ தெனம் குடிக்­க­றயே, அது மட்­டும் எச்­சல் இல்­லியா?... அது­வும் எச்­சல்­தான் தெரிஞ்­சுக்கோ..." என்று பதி­லுக்கு இரைந்­தார் ஐயர்.

"இந்­தாங்க சாமி... ஒங்க எச்­சிக் கஞ்சி' நீங்­களே தான் குடிச்­சிக்­குங்க... இந்த எச்­சில் எனக்கு வாணாம்..." என்று தக­ரக் குவ­ளை­யைத் 'தடா'லெனச் சாய்த்­து­விட்டு, மக­னைத் தூக்கி இடுப்­பில் பொத்­தென இருத்­திக்­கொண்டு வேக­மாய் நடந்­தாள் சிவப்பி; இதை­யெல்­லாம் பார்த்­துக் கொண்­டி­ருந்து மனம் பொறுக்­கா­மல் "எல்­லாம் என் கர்­மம், என் கர்­மம்' " என்று தலை­யி­ல­டித்­துக் கொண்டு உள்ளே போனாள் ஐய­ரின் மனைவி.

உள்ளே தோட்­டத்­தில் தொட்டி நிறைய சிவப்­பி­யின் உழைப்­பால் நிறைந்­தி­ருந்த தண்­ணீ­ரை­யும் பாத்­தி­ரம் நிறைய அவ­ளுக்­காக எடுத்து வைத்­தி­ருந்த சோற்­றை­யும் குழம்­பை­யும் பார்த்த அம்­மா­ளுக்­குக் கண்­கள் கலங்­கிப் போயின.

"அடியே... பாத்­தையோ, நம்­மாத்­துக் கஞ்­சி­யெக் குடிச்சு வந்த கொழுப்­புடீ... இனிமே அவ­ளுக்கு கஞ்சி ஊத்­தப் படாது சொல்­லிட்­டேன்... நாளை­யி­லே­ருந்து சாதத்தெ வடிக்­காதே.... பொங்­கிப்­பிடு.... அதி­லே­தான், சத்து இருக்கு..." என்ற ஐய­ரின் வழக்­க­மான பல்­லவி திண்­ணை­யி­லி­ருந்து சற்­றுக் கண்­டிப்­பான குர­லில் ஒலித்­தது.

மறு­நாள் ஐயர் வீட்­டில் சோற்றை வடித்­தார்­களோ, பொங்­கி­னார்­களோ,.... ஆனால், வழக்­க­மா­கக் கஞ்சி வாங்க வரும் சிவப்­பியை மட்­டும் மறு­நாள்... மறு­நாள் என்ன, அதன் பிறகு ஒரு நாளும் அந்­தத் தெரு­வில் காண­வில்லை.

முற்­றும்

(ஜெய­காந்­தன் சிறு­க­தைத் தொகுப்­பில் இருந்து)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!