- இரா சத்திக்கண்ணன்
நீ நடந்துவரும்
திசைநோக்கி காத்திருக்கிறேன்
இருந்தும்
காற்றாகிறேன்
நீ எத்திசையிலும் வரலாமென்பதால்
உன் பாதம்படும்
புல்வெளிகளில்
பனித்துளிகளாகிறேன்
இருந்தும் மழையாகிறேன்
எத்திசையிலும்
நீ வரலாமென்பதால்
உன் கைகள்
தீண்டும் பூச்செடியாகிறேன்
இருந்தும்
வாசமாகிறேன்
எச்செடியையும் நீ
தீண்டலாமென்பதால்
உன் இதயத்தில்
சொற்களாகிறேன்
இருந்தும்
உன் உதடுகளில்
காத்திருக்கிறேன்
எப்போதாவது
நீ மௌனம்
கலைப்பாயென்ற
நம்பிக்கையில்
நீ உதிக்கும் ஆகாயத்தில்
வெளிச்சமாகிறேன்
இருந்தும்
நீலமாகிறேன்
நீ எங்குவேண்டுமானாலும்
உதிக்கலாமென்பதால்
நீ முகம் பார்க்கும்
ஆற்றில் நீராகிறேன்
இருந்தும்
குளிர்ச்சியாகவே இருக்கிறேன்
நீ எங்குவேண்டுமானாலும்
முகம் பார்ப்பதால்...

