சிறுகதை
ஷோபா குமரேசன்
வெளியே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க, சாளரத்தின் வழியே நான் வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். முகிலானது கதிவரனுக்கு வழிவிடாமல் தன் பங்கிற்கு அடம்பிடிக்க, காலை மணி எட்டை நெருங்கியும் சிங்கையே கறுப்புப் போர்வைக்குள் மூழ்கியிருந்தது.
எப்போதும் பரபரப்பாக இயங்கும் சாலை விடுமுறை எடுத்ததுபோல் வெறிச்சோடிக் கிடக்க, வீட்டிற்குள் திரும்பி நோட்டமிட்டேன். ஆம், கடந்த ஒரு வாரமாக என் வீட்டின் நிலைமைகூட இப்படித்தான் வெறுமையாக உள்ளது.
அதிலும் முக்கியமாக, மழலை மாறாத என் மகனின் முகத்தில் குடிகொண்டிருந்த அந்த வசீகரமான புன்னகையானது, வித்தை காட்டும் கோமாளியின் கையில் அகப்பட்டதைப் போல மாயமாய் மறைந்துபோனது.
"ஏம்மா என்கிட்ட பழகுறவங்க எல்லாம் என்னை விட்டுட்டு சீக்கிரமே பிரிஞ்சு போயிடுறாங்க?" என்று மகன் இன்று காலையில் பள்ளிக்குப் போகும் போது அப்பாவியாய் கேட்ட கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை.
யோசித்தவாறே மகனின் அறைக்குள் நுழைந்த என் பார்வை அங்கு சுவரை அலங்கரித்துக் கொண்டிருந்த புகைப்படத்தில் நிலைத்தது. அந்த புகைப்படம் என் மகனைப் பொறுத்தவரையில் ஓர் அரிய புதையல் எனலாம். அதில் என் மகன் தெத்துப்பல் தெரிய சிரித்தபடி மீனாட்சியை இறுக அணைத்திருந்தான்.
மெல்ல அருகில் சென்ற நான் மீனாட்சியை ஆசையுடன் வருட, என் உடல் சிலிர்த்து கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அதற்கு மேல் அங்கு நிற்க சக்தியற்று வெளியேறிய என் நினைவில் அந்த எதிர்வீட்டு மாது ஒரு கணம் வந்து போனார்.
'நல்லாதான் பழகுனாங்க.. நம்பகிட்டையே நேரடியா நடந்ததை விசாரிச்சிருக்கலாம்... ஏன் இப்படி செஞ்சாங்க?" என சிறிது நாள்களுக்கு முன்பே வீட்டைக் காலி செய்து விட்டுப்போன அந்த மாதுவை உள்ளுக்குள் மனம் வசைபாடியது.
மீனாட்சி எங்கள் வீட்டில் இருந்தது என்னவோ மூன்று மாத காலம்தான். விதிமுறைப்படி மீனாட்சியைத் தொடர்ந்து வீட்டில் வைத்து வளர்க்க அனுமதி இல்லைன்னு தெரிந்து நாங்களே அதை என்ன செய்றதுன்னு யோசனையில இருக்கும் போதுதான் இப்படி நடந்துடுச்சி.. ஆமாம், யார் இந்த மீனாட்சி?
ஏதோ நினைவுகள் தாக்க என் எண்ண அலைகளுக்கு முட்டுக்கட்டை போட முயன்று தோற்றுப்போனேன்.
*
ஒரு முறை மேலதிகாரி வீட்டிற்குச் சென்று திரும்பிய என் கணவர் தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தார். நான் அவரை கலகலப்பாக்க முயற்சி செய்து, "என்னங்க, கொரோனாவை எப்படி அடியோடு ஒழிச்சுக் கட்றதுன்னு யோசிக்கிறீங்களா?" என்றேன்.
கேட்ட அவர் ஒருவித குழப்பத்தோடு என்னைப் பார்க்க, அய்யய்யோ, நேரம் காலம் தெரியாமல் வாயைக் கொடுத்திட்டோமோ, என்ன பிரச்சினைன்னு தெரியலையே? என சற்றே பதற்றமானேன்.
"ம்ம்.. என்ன கேட்ட? சரியா கவனிக்கலை" என்று என்னவரிடமிருந்து பதில் வந்தது. எப்போதுமே அவர் அப்படித்தான். முதன்முறை நான் பேசும்போது காது கொடுத்து கேட்க மாட்டார். ஆனால் அன்று அதுவே எனக்கு சாதகமாகிப் போக, நல்லதாப் போச்சு, வழக்கம் போல நம்ப பேசுறதை காதுல வாங்கலை என அமைதியடைந்த நான்,
"இல்ல, என்னாச்சு வந்ததுலேர்ந்து ஒரே யோசனையா இருக்கீங்களேன்னு?" என்று ஆரம்பித்தேன்.
"இன்னக்கி மேலதிகாரியோட வீட்டுக்குப் போயிருந்தேம்மா. பெரிய பங்களா வீடு. அங்க சில கோழிகள் திரிஞ்சிக்கிட்டு இருந்துச்சி... எப்படின்னு விசாரிச்சேன். அவரு வீட்லேயே செயற்கை முறையில குஞ்சு பொரிக்கும் தானியங்கி முட்டை இன்கியூபேட்டரை வாங்கி வச்சிருக்காரு.."
"என்னது? வீட்ல கோழியா? இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே, ஒருவேளை பங்களா வீட்ல வளர்க்கலாமோ?" என்றேன் சந்தேகத்துடன்.
"அது என்னவோ, எனக்கு விவரம் தெரியலை. அந்த இன்கியூபேட்டர்ல முட்டைய வச்சா 21 நாள்ல குஞ்சு பொரிக்குமாம், என்கிட்ட கூட அது எப்படி வேலை செய்யும்னு காமிச்சாரு."
"ரொம்ப வித்தியாசமான ஆளா இருப்பாரு போலருக்கே," என்று ஆச்சர்யம் தாளாமல் கேட்டேன்.
"இதுல பாரு, இன்னொரு சுவாரசியம் என்னன்னா, கம்பெனியிலேந்து யார் விடுப்பு எடுத்துட்டு ஊருக்குப் போனாலும் அங்கேயிருந்து கோழி முட்டையை எடுத்துட்டு வரச்சொல்லி அதை குஞ்சு பொரிக்க வச்சு வளர்த்து இறைச்சிக்காகப் பயன்படுத்துவாராம்"
"நீங்க சொல்றதைப் பாத்தா உங்க மேலதிகாரி எல்லா நாட்டோட கோழியையும் ருசி பாத்திருப்பாருன்னு நினைக்கிறேன். வேற என்னங்க சொன்னாரு?"
"ம்ம்... நம்ப எப்ப இந்தியாவுக்குப் போறோம்னு கேட்டாரு," என்று கூறிய கணவர் என்னைப் பார்க்க அதற்குமேல் கேட்பதற்கு ஒன்றுமில்லாமல் வாயடைத்துப் போனேன்.
மேலதிகாரி கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்கள் அடுத்த விடுமுறையில் இந்தியா சென்றபோது பத்து முட்டைகளை சேகரித்து ஒரு டப்பாவினுள் தவிட்டையும் வைக்கோலையும் அடைத்து ஒன்றோடொன்று உரசாதபடி வைத்து பத்திரமாக எடுத்து வந்து மேலதிகாரியிடம் ஒப்படைத்தோம்.
இது முடிந்து ஒருமாத காலம் கழிந்தது. அன்று பள்ளியிலிருந்து திரும்பிய என் மகனின் முகம் மிகவும் சோர்வாகக் காணப்பட்டது. அவனுடைய தலையை ஆசையுடன் கோதியபடியே,
"என் செல்லத்துக்கு என்னாச்சு?" என்றேன். நான் கேட்டதுதான் தாமதம் அவன் கண்கலங்க என்னிடம், "அம்மா என் தோழி மீனாட்சி இருக்கால்ல, அவுங்க குடும்பத்தோட ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்து போறாங்களாம். இனிமே பள்ளிக்கு வரமாட்டா" என்றான்
"அம்மா என் பிறந்தநாளுக்கு மீனாட்சி பரிசு கொடுத்தா... நல்லவேளைம்மா இன்னக்கி கணித வகுப்பு புரியலை.. ஆசிரியருக்கிட்ட மாட்டியிருப்பேன்.. அப்புறம் மீனாட்சி சொல்லிக் கொடுத்துட்டா."
இப்படி கொஞ்ச நாளாகவே என் மகனின் நாவில் சரளமாக மீனாட்சியின் பெயர் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.
இப்போது அவனின் பிஞ்சு மனம் தோழியின் பிரிவைத் தாங்காமல் தவித்தது. என்ன சொல்லி எப்படி புரிய வைக்கிறது இவனுக்கு?
நான் சிந்திக்க அதற்குள் அவனோ அதே வருத்தத்துடனே உறங்கியும் போனான்.
அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த என் கணவரின் கையிலிருத்த சிறிய அட்டைப்பெட்டி என் கவனத்தை ஈர்த்தது.
"என்னங்க இது? உள்ளே எனக்கு ஏதும் பரிசுப்பொருள் இருக்கா என்ன?" என கையை நீட்டிய நான் உள்ளிருந்து ஏதோ லேசான சத்தம் கேட்க, சட்டென நீட்டிய கையைப் பின்வாங்கினேன்.
என் கணவர் அட்டைப்பெட்டியைப் பிரிக்க உள்ளே எட்டிப் பார்த்த என் கண்கள் வியப்பில் விரிந்தன. அட்டைப் பெட்டிக்குள் ஓர் அழகான வெள்ளை நிற கோழிக்குஞ்சு ஓர் ஓரத்தில் முடங்கிக் கிடந்தது.
"அட! எப்படிங்க இது? ஆர்வத்தில் வார்த்தைகள் தெறித்தன.
"நம்ப ஊர்லேந்து முட்டை எடுத்துட்டு வந்து மேலதிகாரிகிட்ட கொடுத்தோம்ல அதுல சில பொரிஞ்சிடுச்சாம். அதுல ஒண்ணு என்கிட்ட கொடுத்தாரு"
"அதுசரி, இதை இங்க எப்படி வச்சிக்கிறது? நாம வளர்க்க முடியாதே? அதோட நம்ப மகனைப் பத்தி தெரியாதா? அவன் கண்ணுல பட்டுட்டா அவ்வளவுதான், முதல்ல போய் உங்க மேலதிகாரிகிட்டையே கொடுத்துட்டு வந்துடுங்க" என அவசரமாக நான் கூற, அதற்குள் எங்களின் பேச்சுக் குரல் கேட்டு உறக்கம் கலைந்த என் மகன் கண்ணைக் கசக்கிக் கொண்டே அங்கு வந்தான்.
'அய்யய்யோ, சொல்லி வாயை மூடலை, அதுக்குள்ள வந்துட்டானே?' எனக்கு அடிவயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது.
அந்த அட்டைப் பெட்டிக்குள் அழகிய கோழிக்குஞ்சைப் பார்த்தவுடன் அவனின் வாடியிருந்த முகம் பரவசமாக மாறியதுடன், "அம்மா இதை நாம மீனாட்சின்னு அழைக்கலாமா?" என அவன் ஆசையுடன் மெல்ல அதை தடவியவாறே கேட்டான்.
மகனின் இந்த செய்கை எனக்கு சற்றே பயத்தைத் தர உள்ளுக்குள் தூக்கிவாரிப் போட்டது.
"சரி விடு, ஒரு வாரம் அவன் வச்சிக்கட்டும். பிறகு என்ன செய்யிறதுன்னு பார்ப்போம்," என கணவர் கூறினாலும், என் மனம் சமாதானம் அடைய மறுத்தது. 'இதைப் பிரியும்போது என்ன கலாட்டா பண்ணுவானோ?' எனக் கவலையடைந்த எனக்கு அந்த கோழிக்குஞ்சைக் கொண்டு வந்த கணவர் மீது ஒட்டுமொத்த கோபமும் திரும்பியது.
வாழ்க்கையில் நாம் நினைப்பது எல்லாம் அப்படியே நடந்துவிடுமா என்ன?
ஒரு வாரம் மட்டுமே மீனாட்சியை வைத்துக்கொள்ளலாம் என்ற என் கணவரின் வார்த்தை என் மகனிடம் எடுபடாமல் கடற்கரை மணலில் எழுதிய எழுத்துப் போல் மறைந்து போனதுதான் மிச்சம்.
வாரங்கள் மாதங்களாக உருண்டோட, என் மகனோடு சேர்ந்து மீனாட்சியும் வளர்ந்தது. விரைவில் மீனாட்சி எங்கள் குடும்பத்தின் அங்கத்தினராக, நான் சலவைத் துணிக்காக பயன்படுத்தி கூடை அதன் வீடாக மாறியது.
என் மகன் மீனாட்சியுடன் எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்கள் கடவுச்சீட்டு இல்லாமல் உலகிலுள்ள உறவினர் வீட்டிற்கெல்லாம் புலனத்தில் பறந்தன.
பள்ளிக்குப் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் என் மகன் மீனாட்சியுடனே பொழுதைக் கழிக்கத் தொடங்கினான். அவனிடம் மெதுவாக ஒரு நாள், "மீனாட்சியை நம்ப வீட்ல தொடர்ந்து வளர்க்க முடியாதுடா கண்ணு, நான் வேணும்னா உனக்கு மீன் தொட்டி வாங்கித் தர்றேன். நாம மீனை வளர்க்கலாம்..." என ஆரம்பித்தேன். அப்போது நடந்ததுதான் அதிசயம், நான் சொன்னது மீனாட்சிக்குப் புரிந்ததோ என்னவோ, என் மகனின் காலையே அது 'பக்..பக்...' என மெல்லிய சத்தத்தை எழுப்பிக்கொண்டு சுற்றிவர, எனக்கோ தலையைச் சுற்றத் தொடங்கியது. அவன் மேற்கொண்டு என்னிடம், "ஏம்மா நம்ப மீனாட்சியை வளர்க்கக் கூடாது? ஊருக்குப் போனப்ப தாத்தா வீட்ல கூட இருந்துச்சே?" என புரியாமல் எதிர்க் கேள்வி கேட்டான். போச்சு, இப்பவே ஆரம்பிச்சிட்டானே.. இதுக்கு சீக்கிரமா முடிவு எடுத்தாகணும் என எண்ணிய நான் கணவரிடம், "ஏங்க சமீபத்துல ஒரு செய்தி கண்ணுல பட்டுச்சி.
இப்போ ஆங்காங்கே சில கோழிகள் திரியிறதாகவும் அதுக்குன்னு சில அமைப்புகள் கோழிகளை அதனை புகலிடத்தில் விட உதவி வருதுன்னு கேள்விப்பட்டேன்.
சீக்கிரமா அந்த விவரத்தை கேளுங்க. நாம அங்க கூட ஒப்படைச்சிடலாமே?" என்றேன்.
"சரிம்மா விசாரிக்கிறேன், நானே நம்ப மகன்ட்ட பக்குவமாப் பேசி புரிய வைக்கிறேன்," என்று கணவர் நம்பிக்கை கொடுத்தார்.
அன்று முதலில் என் கணவருக்கும் மகனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை எழுந்து பிறகு வாக்குவாதமாக முற்றி இறுதியில் கோழிச்சண்டையில் முடிந்தது.
மகன் எதற்கும் ஒத்துவராமல் அழுது அடம்பிடிக்க, செய்வதறியாது விழித்தார் என் கணவர்.
இது ஒருபுறமிருக்க, அடுத்த நாள் மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியது. அன்று காலை அரசாங்க அதிகாரி ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார்.
அவர் என்னிடம், "உங்க வீட்டுல ஏதாவது பறவை வளர்க்குறீங்களா?" எனக் கேட்டார். அவரின் கண்கள் என் வீட்டுக் கூடத்தை அலச, நான் பதிலளிப்பதற்குள் மீனாட்சியே தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வது போல் அவரெதிரே வந்து நின்றது.
"உங்க வீட்லேந்து அடிக்கடி ஏதோ சத்தம் வருவதாக புகார் வந்திருக்கு" என்று அவர் திரும்பவும் கூற, தவறு எங்கள் மேல் இருப்பதால் அவரிடம் மன்னிப்புக் கேட்டு நடந்ததை விளக்கமாகக் கூறினேன்.
பிறகு அவரே கோழிகளுக்கான அமைப்புகளைத் தொடர்புகொள்ள உதவி எண்களைக் கொடுத்தார். நானும் அவரிடம் சீக்கிரமே தகுந்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தேன்.
என் வீட்டில் அப்போது நடந்ததை எல்லாம் அந்த எதிர்வீட்டு மாது பார்த்துக்கொண்டே இருந்தார்.
எப்போதும் அவர் முகத்தில் இருக்கும் புன்னகை அன்றைக்கு ஏனோ காணாமல் போயிருக்க. எனக்கும் புகார் கொடுத்தது யாராக இருக்கும் என ஓரளவு யூகிக்க முடிந்தது.
அடுத்த சில தினங்களில் வேலைகளைத் துரிதமாக்கி மகனுக்கு ஓரளவு புரியவைத்து, மீனாட்சியை அதற்கான அமைப்பிடத்தில் ஒப்படைத்தோம்.
இது நடந்து முடிந்து என்ன காரணத்தினாலோ என்னவோ போன வாரம் அந்த எதிர் வீட்டு மாதுவும் வீட்டைக் காலி செய்து விட்டுப் போய்விட்டார்.
மீனாட்சி எங்கள் வீட்டில் இருந்தது மூன்று மாதமாக இருந்தாலும், அது போனவுடன் வீடே அமைதியை விழுங்கிக்கொண்டு வெறிச்சோடிக் கிடந்தது.
ஏதோ ஒரு வெற்றிடம் என் மகனோடு சேர்த்து என்னையும் ஆட்கொண்டது. மீனாட்சியைக் கவிழ்த்து வைத்த அந்த சலவைக் கூடை வீட்டின் மூலையில் கேட்பாரற்றுக் கிடந்தது.
*
அப்போது அடித்த கடிகாரச் சத்தத்தில் நினைவுகளிலிருந்து மீண்ட நான், மணியைப் பார்க்க அது நண்பகல் ஒன்றைக் காட்டியது.
'பள்ளிக்குச் சென்று மகனை அழைக்கணுமே, தாமதமாயிடுச்சே?' என ஓட்டமும் நடையுமாக பள்ளிக்கு விரைந்தேன். அங்கு எனக்காக காத்திருந்த மகனை அழைத்துக்கொண்டு வீடு திரும்ப, என்னுடன் எதுவுமே பேசாமல் அமைதியாக வந்துகொண்டிருந்தான்.
முன்பெல்லாம் பள்ளியில் நடந்ததை என்னிடம் ஒன்றுவிடாமல் சொல்லிக்கொண்டே வரும் அவன் கடந்த ஒரு வாரமாகவே இப்படித்தான் இருக்கிறான்.
சற்று நேரத்தில் இருவரும் குடியிருப்பை அடைந்தோம். மின்தூக்கியின் உதவியோடு எங்கள் தளத்தை அடைய அப்போது பூட்டியிருந்த எதிர் வீட்டில் யாரோ புதிதாக குடிவந்திருப்பது புலப்பட்டது.
நாங்கள் அந்த வீட்டைக் கடக்க, எங்களைக் கண்டதும் உள்ளேயிருந்து ஒரு சிறுமி குடுகுடுவென ஓடி வந்தாள்.
எங்களைப் பார்த்து புன்னகைத்தவள் என் மகனிடம் கைநீட்டி, "ஹாய்...ஐ அம் மீனாட்சி" என்றாள்.

