மூதாட்டியின் கருணை மனு!

மூதாட்டியின் கருணை மனு!

1 mins read
76f9329b-ebcb-4816-a18b-26b0518546cf
-

சி கருணாகரசு

அந்தக் குடியிருப்புப் பேட்டையில்

நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு

குடையாய் நிற்கின்றன

அடர்ந்து வளர்ந்த மரங்கள்.

தன் பக்கவாட்டுக் கிளைகளை

அடுக்கக குடியிருப்பின்

சாளரங்கள் நோக்கி நீட்டுகின்றன.

வாழ்வின் பிடிப்புகள்

அறுந்துபோய்,

ஆறாம் தளத்தில்

தனித்து வாழும் மூதாட்டிக்கு,

ஒட்டிக்கொண்டது

அந்த மரங்களில் வாழும்

பறவைகளின் மீதான தீராக்காதல்.

அதிகாலை எழுகின்ற

பறவைகளின் ஒலிதான்,

மூதாட்டிக்குமான விடியல்.

இளங்காலை வெளிச்சத்தில்

கிளைக்குக்கிளை பறக்கும்

பறவைகளைக் காண

சாளரத்தின் அருகில்

கைத்தடி ஊன்றி நிற்பாள்.

திசைக்குத் திசை பறப்பதையும்

கிளைகளுக்குத் திரும்புவதையும்

பார்த்து ரசித்துதான்

பகலின் பெரும்பொழுதைக்

கடத்துகிறாள் மூதாட்டி.

அடர்ந்து வளர்ந்த மரங்கள்

முறிந்துவிழும் அபாயம்தவிர்க்க

கிளைகளை வெட்ட

வந்து நிற்கின்றார்கள்

வாகன கருவிகளுடன்.

இது,

வருடாந்திர நடைமுறைதான்.

இயந்திரக் கருவி

உயிர்ப்பெற்ற உறுமலுக்கு

மரத்தின் அடர்த்தி குறைகிறது.

பறவைகளுக்குக் கூடிவிடுகிறது

பதற்றத்தின் அடர்த்தி.

சாளரம் பக்கமாக

நீளும் கிளையொன்றில்

பார்வைக்கு எட்டுகிறது

சிலமுட்டைகளுடன் ஒருகூடு.

சாளரத்தின் ஓரம் நின்று

கைகளசைத்து

கவனம் ஈர்க்க முயல்கிறாள்

மூதாட்டி.

அனிச்சையாய்

ஆறாம்தளத்தைக்

கண்ணுற்ற மரவெட்டிக்கு

கூடு இருப்பதைச் சுட்டி

வெட்டிட வேண்டாமென்றும்

சைகைசெய்கிறாள்.

வெட்டுவதுதான் அவன்வேலை!.

இருந்தென்ன,

பரிதவித்த மூதாட்டியின்

கருணை மனுவை

நிராகரிக்கும் மனமின்றி

தப்பித்தது

கூடுசுமந்த அச்சிறுகிளை.

உடையாமல் பிழைத்தன

சிறகின் தலைமுறை.

ஆசுவாச பெருமூச்சுடன்

ஆறாம்தளத்தில் மூதாட்டி.