சிறுகதை
செ ப பன்னீர்செல்வம்
என்னது? சிவராமன் மீனாவைத் திருமணம் செய்யப் போவதில்லையா? ஏன் அவன் அந்த முடிவுக்கு வந்தான்? சிவகாமியம்மாளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
சிங்கப்பூரிலிருந்து வந்த தொலைப்பேசிச் செய்தி அந்த வயதான அம்மாளைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
உற்றார் உறவினர் ஒன்றுகூடி எடுத்த முடிவை இப்படியா மாற்றுவது? சிவா ஏன் அப்படியொரு முடிவுக்கு வந்தான்?
மீனாவை சிவராமனும், மைதிலியை மூர்த்தியும் திருமணம் செய்துகொள்வதாக மூத்தவர்கள் செய்த முடிவை சிவராமன் ஏன் மாற்றினான்?
சிவகாமி அம்மாள் அப்போது வீட்டிலிருந்த சொந்தக்காரர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டார்.
அந்த நேரம் பார்த்து, வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. இரண்டு பேர் அதிலிருந்து இறங்கினார்கள்.
"அம்மா, வணக்கம். என் பெயர் சரவணப் பெருமாள், நான் சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கின்றேன். சிவராமன் உங்களைப் பார்த்துவிட்டு வரச் சொன்னார்."
"அப்படியா வாருங்கள், இப்படி உட்காருங்கள்," என்று வந்தவர்களை அமரச் சொன்னார், சிவகாமி அம்மாள். இருப்பினும் அவரின் குரலில் மகிழ்ச்சி தொனிக்கவில்லை.
"சிவராமன் ஏதும் சொன்னானா தம்பி?" அவரின் குரலில் ஏதோ ஏக்கம் தொனித்தது.
"கூடிய விரைவில், உங்களையும் தன் தங்கையையும் சிங்கப்பூருக்கு அழைத்துக்கொள்ள ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருப்பதாகக் கூறச்சொன்னார் அம்மா."
"அப்படியா, என்னப்பா சொல்லுறீங்க?
"ஆமாம்மா, அவர் சொன்னததான் சொல்லுறேன், நீங்க இரண்டுபேரும் பாஸ்போர்ட்டை எடுத்து வச்சிக்கிங்க."
இதற்கிடையே, சரவணப் பெருமாள் தம்பதிகளுக்கு தேநீரும் வடையும் கொண்டுவரப்பட்டது.
"சாப்பிடுங்க," என்று கூறியவாறு, மைதிலி அவர்களுக்கு பரிமாறினாள்.
சிவகாமி அம்மாளுக்கு அதற்குள் ஏதேதோ சிந்தனைகள், "தம்பி நீங்க சிங்கப்பூருக்குப் போயி எத்தனை வருஷமாச்சுது?"
"நான் போயி பத்து வருஷமாச்சுதம்மா, அங்கே இருக்கிற என் மாமா மகளைத்தான் திருமணம் செய்துள்ளேன்," என்று தன் மனைவியை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
"அப்படியா?"
ஒரு விஷயம் சொல்லலாமா?
"என்னம்மா? சொல்லுங்க"
"நம்ம சிவராமனுக்கு இங்கேதான் கலியாணம் செய்ய முடிவு செய்திருந்தோம். என்கிட்டக்கூட சொல்லாம, திடீர்னு அந்த இடம் வேண்டாமுன்னு சிவா எங்க அக்கா வீட்டுக்குப் போன் செய்தானாம். எனக்கு ஒரே குழப்பமா இருக்குதப்பா?"
சிவகாமியம்மாள், தம்முடைய மனக்குறையை வெளிப்படுத்தினார்.
"பெரியவங்க எல்லாம் சேர்ந்து முடிவெடுத்திட்டு திடீர்னு அதை நிறுத்தினா மத்தவங்க என்ன சொல்லுவாங்க, அது மட்டுமல்லாம, தங்கச்சி மைதிலியோட திருமணத்தையும் நிறுத்தச் சொல்லியிருக்கிறானாம். எனக்கு ஒரே குழப்பமா இருக்குப்பா. என்கிட்ட பேசாம இப்படியெல்லாம் அவன் முடிவெடுக்கலாமா?
"நல்லவேளை, கலியாண பத்திரிகைகளை இன்னும் அச்சடிக்கல." - சிவகாமி அம்மாள் வேதனையுடனும் குழப்பத்துடனும் பேசினார்.
"அம்மா, நீங்க இப்படியெல்லாம் கவலைப்படக்கூடாது. சிவராமன் சின்னப்பிள்ளை இல்லை. நல்ல அறிவாளி. எது செய்தாலும் அதற்கு ஒரு நல்ல காரணம் இல்லாம செய்ய மாட்டார்னு எனக்குத் தெரியும்.
"நீங்க மனசை போட்டுக் குழப்பிக்காம, சிங்கப்பூர்ப் பயணத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிங்கம்மா," என்று அந்த அம்மாளுக்குப் பலவகையிலும் ஆறுதலைக் கூறிவிட்டு, "அப்ப, நாங்க புறப்படுறோம், எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். "நாங்க வரட்டுமா?" என்றவாறு சரவணப் பெருமாள் தம்பதிகள் புறப்பட்டனர்.
"சரிப்பா, சிங்கப்பூர் போனதும் என் மனக்கவலை பற்றி சிவாவுக்கு எடுத்துச் சொல்லுங்க. "முடிந்தா எனக்குப் போன் செய்யச் சொல்லுங்க," என்றார் சிவகாமி அம்மாள்.
சிவராமனின் ஏற்பாட்டில் ஒரு சில வாரங்களில் தாயாருக்கும் தங்கைக்கும் பாஸ்போர்ட் வந்து சேர்ந்தது.
மைதிலியின் மின் அஞ்சலில் விமான டிக்கட்டுகளும் வந்தன.
திருச்சியிலிருந்து சிங்கப்பூர் புறப்படும் அந்த நாளும் வந்தது. சிங்கப்பூர்ச் சாங்கி அனைத்துலக விமான நிலையத்தில் தாயும் தங்கையும் வந்து இறங்கியதைக் கண்டதும் சிவராமனுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி.
"வாங்கம்மா, வா மைதிலி" இவர்தான் ராமநாதன், அது அவரின் சகோதரி சாரதா!
அவர்களின் அப்பா கிருஷ்ணய்யாவும் அம்மா வைதேகியும் நமக்காக வீட்டில் காத்திருக்கிறார்கள்."
சிவராமனின் தாயரும் தங்கையும் ஊரிலிருந்து வருகிறார்கள் என்றதும் அவனுடைய நண்பர்களும் அவனுடைய சமூக நிலைய சகாக்களும் விமான நிலையத்தில் குழுமியிருந்தனர்.
சிவகாமி அம்மாளுக்குச் சொல்லமுடியாத வியப்பு. நம்ம பிள்ளைக்கு சிங்கப்பூரில் இவ்வளவு தோழர்களா என்று அவர் பார்த்துக்கொண்டிருந்தார்.
மைதிலியும் தன் அண்ணனுக்கு இங்கு இவ்வளவு செல்வாக்கா என்று எண்ணி மகிழ்ந்தாள்.
சிவராமன், ஒவ்வொருவராக தனக்கு வேண்டியவர்களை அம்மாவுக்கும் தங்கைக்கும் அறிமுகம் செய்துவைத்தான். அவர்களும் சற்றும் தயங்காமல் அனைவருக்கும் வணக்கம் கூறினர்.
சிவராமன் சிங்கப்பூர் குடிமகன் ஆனவுடன் உட்லண்ஸ் பகுதியில் ராமநாதனின் வீட்டுக்கருகிலேயே, வாடகை வீட்டை அமைத்துக்கொண்டார்.
அன்று கிருஷ்ணய்யாவும் அவர் மனைவி வைதேகியும் ராமநாதனுடன் சிவராமனைக் காண வந்திருந்தார்கள்.
எல்லாரும் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். சிவகாமியம்மாள் மட்டும் ஏதோ கவலை படர்ந்த முகத்துடன் இருந்தார்.
அந்த நேரம் பார்த்து அவர்களின் குடும்ப நண்பர் சரவணப் பெருமாள் தம் குடும்பத்தோடு அங்கு வந்து சேர்ந்தார்.
சிவராமனின் வீடு நான்கு அறை வீடு என்பதால், அங்கு அனைவருக்கும் இடம் தாராளமாக அமைந்திருந்தது. அவரைப் பார்த்ததும் சிவகாமி அம்மாளின் சோகம் மெதுவாக மறைந்தது.
"தம்பி சிங்கப்பூர் வந்ததும், சிவராமனை எனக்குப் போன் செய்ய சொன்னேன் சொல்ல மறந்திட்டீங்களா?"
"ஆங்... சொன்னேன் அம்மா, ஆனா எல்லாரையும் நேரில் பார்க்கப் போறதாலே எல்லாத்தையும் இங்கேயே பேசிக்கலாமுன்னு சிவா சொல்லிட்டாரு."
"அம்மா, ஊர் கல்யாணங்களை நான்தான் நிறுத்தச் சொன்னேன். எல்லாத்துக்குமே காரணம் இருக்கு."
"வாங்க, இங்கே உட்கார்ந்து பேசுவோம்," என்று மைதிலியையும் அழைத்துக்கொண்டு உள்ளே போனான் சிவராமன்.
"அதுதான் ஏன்பா?" அம்மா கேட்டது ஒரு மாதிரியாக இருந்தாலும், சிவராமன் மலர்ந்த முகத்துடன் தாயைப் பார்த்துப்பேசினான்.
"அம்மா, நெருக்கமான இரத்த தொடர்புள்ள கல்யாணங்களை நான் ஆதரிக்கமாட்டேன்மா, அது பிறக்கப் போற குழந்தைகளைப் பாதிக்குமுன்னு ஆய்வாளர்கள் கூறியிருக்கிறாங்க."
"என்னப்பா நீ, நானும் உங்க அப்பாவும் நெருங்கின சொந்தம்தானே..? நீங்க என்ன நல்லவிதமா பிறக்கிலையா?
"அம்மா, அதற்கு இன்னொரு காரணமும் உண்டு."
"அப்படியா , என்னப்பா அது?"
"அம்மா, மீனாவின் விருப்பத்தைக் கேட்காமல் அவளுடைய அப்பாவும் அம்மாவும்தான் நம்மகிட்ட பேசியிருக்காங்க, உண்மையிலே மீனாவுக்கு இந்தக் கல்யாணத்திலே விருப்பமே இல்லையாம்."
"என்னப்பா, அப்படி சொல்லுற? அவ என் அண்ணன் மகள், உன் தாய்மாமன் மகள் தெரியுமில்லை?"
"இருக்கலாம் அம்மா, ஆனா, அவ அவளுடைய வேலையிடத்தில் கேசவன் என்பவரை விரும்புவதாகவும் அந்தக் காதலை நிறைவேற்றி வைக்கும்படியும் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள். இதோ பாருங்க கடிதத்தை," என்றவாறு, தனக்கு வந்த கடிதத்தை அம்மாவிடம் நீட்டினான் சிவராமன்.
மகன் கொடுத்த கடிதத்தை வெகு வேகமாகப் படித்து முடித்தார் சிவகாமி அம்மாள்.
மீனாவை தம் மருமகளாக்கிக் கொள்ள வேண்டுமென்று அவர் பெரிதும் கனவு கண்டு வந்தார்.
கடிதத்தைப் படித்து முடித்ததும் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவளால் எதையும் நம்பமுடியவில்லை.
மகன் சிவராமன் மீது இப்போதுதான் அவருக்கு ஆழமான நம்பிக்கை பிறந்திருந்தது.
"இன்னொருவர் மீது இத்தனை அன்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணை எப்படியம்மா நாம் பிரிக்க முடியும்?" சிவராமன் கேட்ட கேள்வி சிவகாமி அம்மாளுக்கு நியாயமாகவே பட்டது.
"அது சரியப்பா, தங்கச்சி மைதிலிக்குப் பார்த்த மாப்பிள்ளையை எதற்காக வேண்டாமுன்னு சொன்னே, அவன் நல்ல பையன்தானே?"
அம்மா, உங்களுக்கு அவனைப்பத்தி சரியா தெரியலை. அவன் இதுவரை ஏங்கிட்ட பல லட்சங்களைக் கடனாக வாங்கிட்டான்.
"ஏதோ தொழில் செய்யப் போறதா சொல்லி சொல்லி எந்தத் தொழிலையும் முறையாத் தொடங்கல, சரியா செய்யலை."
"அந்தப் பையனைப் பற்றிப் பல இடத்திலே கேட்டுப் பார்த்தேன், அவன்கிட்ட பல கெட்ட பழக்கங்கள் இருப்பதா பலரும் வேதனையோட சொன்னாங்க. இப்பவே இப்படின்னா, கல்யாணம் ஆனா எப்படியோ?"
சிவகாமியம்மாளுக்கு, தன் மகன் இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது மேலும் மேலும் வியப்பை ஊட்டியது. அவரின் கண்கள் கண்ணீர் சொரிந்தன.
"அம்மா, இனிமேல் எந்தக் கவலையும் வேண்டாம். இனிமேல் ஆகவேண்டிய அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை நாம் கவனிப்பதுதான் நல்லது."
"என்னப்பா, சொல்லுறே?"
"ஆமாம்மா, மைதிலிக்கு சிங்கப்பூரிலேயே திருமணத்தைப் பதிவு செய்திட்டு. நம்ம ஊரிலே, போயி, குலதெய்வ கோயிலிலே முறையா கலியாணத்தை செய்திடலாம்," என்றான் சிவராமன்.
"ஆமாம்மா, ஜாதகமெல்லாம் பார்த்தாச்சு, மைதிலிக்கு இந்த இராமநாதனை கணவனாக்கிடலாமுன்னு நாங்க நினைத்தோம். நீங்க சம்மதிச்சா மற்ற ஏற்பாடுகளைச் செய்திடலாம்."
"அது சரி சிவராமா, உனக்கு கல்யாணம்?"
"பெண் பார்க்க வேண்டாமா?" - சிவகாமியம்மாள் சற்று வேகமாகவே கேட்டார்.
"இதோ சாரதாதான்மா, ஜாதகம் பார்த்தாச்சு பொருத்தமெல்லாம் பார்த்தாச்சு. ஏம்மா, இந்தப் பெண்ணை உங்களுக்குப் பிடித்திருக்குதா?" சிவராமனை அன்புடன் பார்த்தார் அம்மா.
"எப்படிப்பா பிடிக்காம போகும்? சிங்கப்பூருக்கு வந்ததும், ஒரு சிலரைப்போல தாயாரையும் தங்கச்சியையும் மறந்திட்டியோன்னு நினைச்சிட்டேன்."
"நான் எப்படிம்மா என் கடமையை மறக்க முடியும்?" என்றான் சிவராமன்.
"ஆனா, எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான்பா."
"என்னம்மா?" என்று வாஞ்சையோடு கேட்டான் சிவராமன்.
"ஆனா, இவுங்க எல்லாம் நம்ம வகையறாதானான்னு தெரியலையே அப்பா."
"என்னம்மா நீங்க, ஒன்றுபட்ட மனசு உள்ள எல்லாரும் நம்ம வகையறாத்தானேம்மா," என்று சிவா கூறியதும், அந்தத் தாயார் சற்று அமைதியானார்.
"சரி எல்லாமே நல்லபடியா முடிவாயிடுச்சி, இன்னைக்கு நல்ல நாளா இருக்கிறதாலே, பக்கத்திலே உள்ள சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் வழிபாடு செய்திட்டு, திருமண உறுதிப் பத்திரத்தை எழுதிகிட்டு பதிவுத் திருமண நாளையும் முடிவு செய்தால் என்ன?" சரவண பெருமாள்தான் கேட்டார். அங்கிருந்த எல்லாருடைய முகத்திலும் மகிழ்ச்சியின் சாயல் அழகுபட கோலமிட்டிருந்தது. அதற்குள் கிருஷ்ணய்யா வீட்டுப் பணிப்பெண் அனைவருக்கும் சிற்றுண்டி பரிமாறத் தொடங்கினார்.

