- அனுபமா உதிவ்
அப்போதெல்லாம்
'டிவி' அத்தி பூத்தாற்போல்
யாரிடமாவதுதான் இருக்கும்.
அவர்கள் வீட்டில்
உன் காற்பந்து விளையாட்டைப் பார்க்க
கெஞ்சி கூத்தாடி கூட்டத்தில் நின்று
எக்கி எக்கிப் பார்த்து ரசிப்போம்
கறுப்பு வெள்ளை
தொலைக்காட்சிப் பெட்டிகள்தான்
அன்று ரசித்த உன் விளையாட்டு மட்டும்
வண்ணக் காட்சிகளாய்
இன்றும் என் நினைவில்
நிழலாடுகிறது
மல்லாக்கப் பறந்து
"சிசர் சாட்" ஒன்று அடிப்பாயே
அதை நாங்கள் முயற்சி செய்து
விழுந்து அடிபட்ட தழும்புகளில்
இன்றும்
உன் விளையாட்டே படமாய் விரிகின்றது
நீ இறந்து விட்டதாய்ச்
செய்திகள்
அது பொய்யாக இருக்க வேண்டும்
நீ யாரோ
நான் யாரோ
இந்தச் செய்திகேட்டு
என் கண்கள் கலங்குகின்றன.

