சிறுகதை
ஆர் ராஜேந்திரம்
அந்தச் சாப்பாட்டுக் கடைக்குள் புகுந்ததும் என் கண்ணில் பட்டது, தூரத்தில் மேசையை ஈரத் துண்டால் துடைத்துக்கொண்டிருந்த முதியவர்தான். அவர் என் அப்பாவுடன் வேலை செய்த மாசிலாமணியைப்போல் காணப்பட்டார். அந்த பெரிய சிற்றுண்டிக் கடையின் மூலையில் அவர் இருப்பதால் என் கண்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. எனது மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டு மீண்டும் அவர் இருக்கும் திசையைப் பார்த்தேன். ஆமாம், அவரேதான்!
சனிக்கிழமைகளில் நானும் என் மனைவியும் காலைச் சிற்றுண்டியை இந்த சையது ஆல்வி சாலையில் உள்ள கடையில் சாப்பிடுவது வழக்கம். அன்றும் அவ்வாறே அங்கு சென்றோம். கூட்டம் அவ்வளவாக இல்லை. உணவுக்குச் சொல்லிவிட்டு பக்கத்தில் போடப்பட்டிருந்த மேசையருகே அமர்ந்தோம்.
"அவரு என் அப்பாவோட வேலை செய்தவரு, பேரு மாசிலாமணி," பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனைவியிடம் அவரைப் பற்றி அறிமுகம் செய்தேன்.
"பாரு... அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே வயசுதான். அப்பா இறக்கும்போது அவருக்கு எழுபது வயது... அப்படினா இவருக்கு... இப்போ எழுபத்தி ஐந்து வயது இருக்கணும்,' எனக்குள் ஒரு மனக்கணக்குப் போட்டு மனைவியிடம் கூறினேன்.
"நாங்களெல்லாம் ஒரே கம்பத்துல குடியிருந்தவங்க... தங்கமான மனுசன்.. ஆனா மனைவிதான்...," என்று கூறிக்கொண்டிருக்கும்போதே அவர் எங்கள் பக்கத்தில் உள்ள மேசையைச் சுத்தம் செய்ய வந்துவிட்டார்.
"என்ன தம்பி... நல்லா இருக்கீங்களா.." மாசிலாமணி புன்னகைத்தவாறே என்னை குசலம் விசாரித்தார்.
அவருக்குப் பதில் கூறுவதற்கு முன்னாலேயே, "இவரு அப்பா இருக்காரே... அவரும் நானும் சிங்கப்பூர் டிராக்சன் கம்பெனியில பேருந்து ஓட்டுனர்களாக வேலை செய்தோம்... சொற்ப சம்பளம்தான்... ஆனா நிறைவான வாழ்க்கை. அது ஒரு காலம்... ம்ம்ம..' என்று முன்பின் அறியாத என் மனைவியிடம் அவரது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்.
எதையும் ஒளிவுமறைவு இன்றி "படபட' என்று பேசும் அவரது குணம் எனக்குப் பிடிக்கும்.
கறுத்த தடித்த உருவம். ஆனால் மென்மையாகப் பேசும் சுபாவம் உடையவர்.
கடையில் குளிரூட்டி இருந்தும் அவரது முகத்தில் வேர்வைத்துளிகள் அரும்பியிருந்தன. அவை அவரது வேலையின் தன்மையைப் பறை சாற்றியது. இந்த வயதிலும் கடையிலுள்ள அனைத்து மேசை நாற்காலிகளையும் சுத்தம் செய்வது என்பது எளிதல்லவே!
"பல வருடங்களா எதிர்ல உள்ள கடையில விற்பனையாளராக இருந்தீங்களே.. என்ன ஆச்சு," என வினவினேன்.
"தம்பி.. கொரோனா நோய் பரவியதாலே வியாபாரம் சரியா நடக்கலையாம்... அங்கே ஆயிரத்துக்கு மேல விற்பனையாளர்கள் இருந்தாங்க... இப்போ நானூறு பேர்தான் வேலை செய்யுறாங்க.. அப்போ இருபத்து நான்கு மணி நேரமும் கடை திறந்திருக்கும்.
ஆனா இப்பொ பன்னிரெண்டு மணி நேரம்தான்... அதனால ஆளைக் குறைக்க ஆரம்பிச்சாங்க... என்னைபோல வயதானவங்களைத்தான் முதல்ல வேலையைவிட்டு நிறுத்தினாங்க...," பக்கத்தில் உள்ள மேசையை ஈரத்துண்டால் துடைத்தவாறே நான் கேட்ட கேள்விக்கு, நீட்டி முடக்கி நீண்ட பதிலளித்தார் மாசிலாமணி. "இங்க உள்ள முதலாளி தெரிஞ்சவரு, என் வயசுக்கு ஏற்றாற்போல சுத்தம் செய்யற வேலை கொடுத்தாரு..', என தொடர்ந்தார் மாசிலாமணி.
"வயசு ரொம்ப இருக்குமே.. நீங்க இன்னமும் வேலை செய்யணுமா... வீட்டுல இருந்து ஓய்வெடுக்கலாமே?'
"தம்பி... எனக்கும் ஆசைதான்... ஆன வீட்டுல நிம்மதி கிடைக்கறது இல்ல.. உங்களுக்குத்தான் எங்க வீட்டுக்கார அம்மா பத்தி தெரியுமே... அவளோட நச்சரிப்பைத் தாங்கமுடியாது... தொட்டா குற்றம் பட்டா குற்றம் என்பார்களே அப்படி தொணதொணன்னு ஏதாவது முணுமுணுத்தே என்னை கொன்னுடுவா... ஏன் இப்படி முனகுகிறாள்னு தெரியல... வயசு ஆகுதுல... நாற்பது வயசுல நாய்க் குணம், அறுபது வயசுல பேய்க் குணம்னு சொல்வாங்களே அப்படி... வயது ஆக ஆக தலைமுடி நரைத்துப்போய் பற்கள் விழுவதற்குப் பதிலாக அவளுக்கு பேச்சு குறைந்தால் எனக்கு எவ்வளவோ நிம்மதி', என்று இழுத்தார். பின், "கல்யாணம் செய்துகொள், நல்ல மனைவி வாய்த்தால் சந்தோஷமாய் இருப்பாய், மோசமான மனைவி கிடைத்தால் ஞானியாவாய் என்று யாரோ சொன்னது ஞாபகத்துக்கு வருது. அப்படி நான் ஞானியாய் வாழறேன். வீட்டுல அதிகமா தங்கறதில்லை....' என இந்த முதிய வயதிலும் தான் ஏன் வேலை செய்ய நேர்கிறது என்பதற்கு நீண்ட விளக்கம் கொடுத்தார் மாசிலாமணி.
திருமணம் சிலருக்கு பூந்தோட்டம். ஆனால் அதுவே பலருக்கு போர்க்களம். குடும்பம் ஒரு கதம்பம் என்பதைவிட குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று கூறுவதே சிறப்பு.
இதில் பெண்களின் பங்கு முதன்மையானது. எதற்கு எடுத்தாலும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான், கணவன் மனைவியின் மணவாழ்க்கையில் பிரச்சினை ஏற்படுகிறது.
தேவையில்லாத சண்டைகளும் வருகிறது. இதனால் மணவாழ்க்கை கசப்பாகி விடுகிறது. இதன் காரணமாகத்தான் உறவுகளில் விரிசல் ஏற்பட்டு, பலர் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுகின்றனர். கற்பனையோடு வாழாமல் காலத்தோடு ஒத்து வாழவேண்டும்.
கிடைத்ததை கடவுளின் வரமாக நினைத்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். அப்போது தான் ஒரு பெண் தனது மணவாழ்வில் மணம் வீசும் மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். இதனை பெண்கள் கவனத்தில் கொண்டு வாழும்போது இனிய குடும்பம் என்றும் தொடரும். இதை அவரது மனைவி அறிந்திருக்கவில்லையோ?
மீண்டும் தொடர்ந்தார். "முன்பெல்லாம் வீட்டுக்கார அம்மா வேலை செய்தாங்க, குற்றம் கண்டுபிடிக்க நேரம் கிடைக்கல. எப்போ அவங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றாங்களோ, அப்போ ஆரம்பிச்சுது. இது வியாதியா.. இல்ல நான் வாங்கி வந்த வரமான்னு தெரியல.' முடித்து விட்டு ஒரு புன்னகை புரிந்தார். அந்தப் புன்னகையில் ஒரு விரக்தி கலந்திருந்தது.
மாலை கோக்கும்போது, மலர்களை ஊசியினால் குத்திக் கோர்ப்பார்கள். அப்படிக் குத்தினாலும் மலர்கள் மலர்ந்தவாறு இருப்பதைப் பார்க்கலாம். அதுபோல எவ்வளவோ இம்சைக்கு ஆளானாலும் இன்றும் மலர்ந்த முகத்துடன்தான் இருந்தார்.
"உங்க அப்பா... புண்ணியவான்... போய்ச் சேர்ந்துட்டாரு... எனக்கு இன்னும் விடிவு காலம் வரலையே..' என ஆதங்கப்பட்டார். சிறிய வாளியில் இருந்த தண்ணீரில் துணியை அலசி பிழிந்து எங்களது மேசையைத் துடைத்தார்.
"தம்பி... என் வாழ்க்கை இருக்கே.. அது இந்த ஈரத்துண்டை போலத்தான். இது ஒரு அளவுக்குத்தான் அழுக்கை ஏற்றுக்கொள்ளும். பின்னர் தண்ணீரில் அலச வேண்டும். அதுபோல நானும் ஓரளவுக்குத்தான் இந்த இம்சைகளைத் தாங்கிக் கொள்ள முடியும். பின்னர் என்னை அலச முடியாது"
காலையிலேயே அவருக்கு தேவையில்லாமல் மனவேதனை கொடுத்துவிட்டோமே என்று கருதி, "ஐயா... இந்த வேலை முழுநேரமா... இல்ல..?," என கேட்டு திசை திருப்பினேன்.
"முழு நேரமா வேலை செய்ய கேட்டிருக்கேன்... இப்போ நாலு மணி நேரந்தான்.. அப்புறம் இந்த தேக்கா பக்கத்துல சுத்திகிட்டு, சாயுங்காலம் ஆறு மணிக்கு வீடு திரும்புவேன்," என சொல்லிக்கொண்டிருக்கும்போதே நாங்கள் கேட்ட உணவுகள் மின் இயந்திரம் மூலம் எங்கள் மேசையை வந்தடைந்தது.
"சரி... சாப்பிடுங்க.." எனக் கூறி நகர முயன்றவரிடம், "ஒன்னும் கவலைப்படாதீங்க, உங்க நல்ல உள்ளத்துக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்," என்றேன். "எல்லாம் அவன் விட்ட வழி," எனக்கூறி அண்ணாந்து மேலே பார்த்துவிட்டு பக்கத்து மேசையைத் துடைக்க நகர்ந்தார்.
அவரது இந்த நிலைமைக்கு கடவுளும் காலமும்தான் பதில் சொல்ல வேண்டும் என எண்ணியவாறு தோசையைக் கிள்ளி வாயில் வைத்தேன்.
காலை உணவு உண்டபிறகு, முதியவரிடம் சென்று, "ஐயா... நாங்க கிளம்புறோம்... கவலைப்படாதீங்க. நல்லவங்கள கடவுள் தண்டிக்க மாட்டான். எல்லாம் கடவுளுக்கிட்ட விட்டுடுங்க," என்றேன்.
"சரி... தம்பி, பார்த்துப் போங்க," எனக்கூறி விடைகொடுத்தார். ஆம், எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது. கடவுள் விரும்பினால் போர்க்களத்தில் கூட ஒருவனின் உயிரைக் காப்பாற்ற முடியும்.
மறுநாள் காலை. பொருள்கள் வாங்க சையது ஆல்வி சாலையில் உள்ள கடைத்தொகுதிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
முதலில் தேநீர் அருந்திவிட்டு பிறகு பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்து மாசிலாமணி வேலை செய்யும் அந்தச் சாப்பாட்டுக் கடைக்குள் நுழைந்தேன். தேநீருக்குச் சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்து கடையை நோட்டமிட்டேன்.
என் கண்கள் மாசிலா மணியைத் தேடின. அவரை எங்கும் காணவில்லை. வேலை முடிந்து வீட்டுக்குப் போயிருக்கலாம் என்று நினைத்து இயந்திரம் கொண்டு வந்த தேநீரை ஆற்றி மெதுவாக குடிக்க ஆரம்பித்தேன். கண்கள் மீண்டும் மாசிலாமணியைத் தேடியது.
பக்கத்து மேசையைச் சுத்தம் செய்ய வந்த பையனிடம், "தம்பி.. இங்க மாசிலாமணினு ஒரு முதியவரு இருந்தாரே... அவரு வீட்டுக்கு கிளம்பிட்டாரா?" என வினவினேன். "என்ன சார் சொல்றது... தங்கமானவரு... நேத்து..இங்க.. இங்கதான்," என்று நான் அமர்ந்திருக்கும் நாற்காலியின் பக்கத்து நாற்காலியைக் காண்பித்து, "நெஞ்சு வலின்னு சொல்லி உட்கார்ந்தவரு கடவுள்கிட்ட போயிட்டாரு," என கண் கலங்கினான்.
தேநீரை தொடர்ந்து குடிக்க முடியாமல், எழுந்து நின்றேன். கண்கள் குளமாயின. முதல் நாள் நன்றாக கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தவர் இன்று இல்லையே என மனம் விம்மியது.
உயிரோடு இருக்கும்போது யாருக்கும் ஒருவருடைய அருமை தெரியாது, இல்லாதபோதுதான் அது தெரியும். மாசிலாமணியின் அருமையை அவரது மனைவிக்கு இப்போதாவது தெரியுமா?
- முற்றும் -

