ஈரத்துண்டு

ஈரத்துண்டு

6 mins read
04260e04-7f59-45c1-9061-4b21be5c2a23
-

சிறுகதை

ஆர் ராஜேந்­தி­ரம்

அந்­தச் சாப்­பாட்­டுக் கடைக்­குள் புகுந்­த­தும் என் கண்ணில் பட்­டது, தூரத்­தில் மேசையை ஈரத் துண்­டால் துடைத்­துக்­கொண்­டி­ருந்த முதி­ய­வர்­தான். அவர் என் அப்­பா­வு­டன் வேலை செய்த மாசி­லா­ம­ணி­யைப்­போல் காணப்­பட்­டார். அந்த பெரிய சிற்­றுண்­டிக் கடை­யின் மூலை­யில் அவர் இருப்­ப­தால் என் கண்­க­ளுக்குச் சரி­யாகத் தெரி­ய­வில்லை. எனது மூக்­குக் கண்­ணா­டியைச் சரி செய்­துகொண்டு மீண்­டும் அவர் இருக்கும் திசையைப் பார்த்­தேன். ஆமாம், அவ­ரே­தான்!

சனிக்­கி­ழ­மை­களில் நானும் என் மனை­வி­யும் காலைச் சிற்­றுண்­டியை இந்த சையது ஆல்­வி சாலை­யில் உள்ள கடை­யில் சாப்­பி­டு­வது வழக்­கம். அன்­றும் அவ்­வாறே அங்கு சென்­றோம். கூட்­டம் அவ்­வ­ள­வாக இல்லை. உண­வுக்குச் சொல்­லி­விட்டு பக்­கத்­தில் போடப்­பட்­டி­ருந்த மேசை­ய­ருகே அமர்ந்­தோம்.

"அவரு என் அப்­பா­வோட வேலை செய்­த­வரு, பேரு மாசிலா­மணி," பக்­கத்­தில் உட்­கார்ந்­தி­ருந்த மனை­வி­யி­டம் அவரைப் பற்றி அறி­மு­கம் செய்­தேன்.

"பாரு... அப்­பா­வுக்­கும் அவ­ருக்­கும் ஒரே வய­சு­தான். அப்பா இறக்­கும்போது அவ­ருக்கு எழு­பது வயது... அப்­ப­டினா இவ­ருக்கு... இப்போ எழு­பத்தி ஐந்து வயது இருக்­க­ணும்,' எனக்­குள் ஒரு மனக்­க­ணக்குப் போட்டு மனை­வி­யி­டம் கூறி­னேன்.

"நாங்­க­ளெல்­லாம் ஒரே கம்­பத்­துல குடி­யி­ருந்­த­வங்க... தங்­க­மான மனு­சன்.. ஆனா மனை­வி­தான்...," என்று கூறிக்­கொண்­டி­ருக்­கும்­போதே அவர் எங்­கள் பக்­கத்­தில் உள்ள மேசையைச் சுத்­தம் செய்ய வந்­து­விட்­டார்.

"என்ன தம்பி... நல்லா இருக்­கீங்­களா.." மாசி­லா­மணி புன்­ன­கைத்­த­வாறே என்னை குச­லம் விசா­ரித்­தார்.

அவ­ருக்குப் பதில் கூறு­வ­தற்கு முன்­னா­லேயே, "இவரு அப்பா இருக்­காரே... அவ­ரும் நானும் சிங்­கப்­பூர் டிராக்­சன் கம்­பெ­னி­யில பேருந்து ஓட்­டு­னர்­க­ளாக வேலை செய்­தோம்... சொற்ப சம்­ப­ளம்­தான்... ஆனா நிறை­வான வாழ்க்கை. அது ஒரு காலம்... ம்ம்ம..' என்று முன்­பின் அறி­யாத என் மனை­வி­யி­டம் அவ­ரது நினை­வ­லை­களைப் பகிர்ந்து­கொண்­டார்.

எதை­யும் ஒளிவுமறைவு இன்றி "படபட' என்று பேசும் அவ­ரது குணம் எனக்குப் பிடிக்­கும்.

கறுத்த தடித்த உரு­வம். ஆனால் மென்­மை­யாகப் பேசும் சுபா­வம் உடை­ய­வர்.

கடை­யில் குளி­ரூட்டி இருந்­தும் அவ­ரது முகத்­தில் வேர்­வைத்­துளி­கள் அரும்­பி­யி­ருந்­தன. அவை அவ­ரது வேலை­யின் தன்­மையைப் பறை சாற்­றி­யது. இந்த வய­தி­லும் கடை­யி­லுள்ள அனைத்து மேசை நாற்­கா­லி­களையும் சுத்­தம் செய்­வது என்பது எளி­தல்­லவே!

"பல வரு­டங்­களா எதிர்ல உள்ள கடை­யில விற்­ப­னை­யா­ள­ராக இருந்­தீங்­களே.. என்ன ஆச்சு," என வின­வி­னேன்.

"தம்பி.. கொரோனா நோய் பர­வி­ய­தாலே வியா­பா­ரம் சரியா நடக்­க­லை­யாம்... அங்கே ஆயி­ரத்­துக்கு மேல விற்­ப­னை­யா­ளர்­கள் இருந்­தாங்க... இப்போ நானூறு பேர்­தான் வேலை செய்­யு­றாங்க.. அப்போ இரு­பத்து நான்கு மணி நேர­மும் கடை திறந்­தி­ருக்­கும்.

ஆனா இப்பொ பன்னிரெ­ண்டு மணி நேரம்­தான்... அத­னால ஆளைக் குறைக்க ஆரம்­பிச்­சாங்க... என்­னை­போல வய­தா­ன­வங்­க­ளைத்தான் முதல்ல வேலை­யை­விட்டு நிறுத்­தி­னாங்க...," பக்­கத்­தில் உள்ள மேசையை ஈரத்­துண்­டால் துடைத்­த­வாறே நான் கேட்ட கேள்­விக்கு, நீட்டி முடக்கி நீண்ட பதி­ல­ளித்­தார் மாசி­லா­மணி. "இங்க உள்ள முத­லாளி தெரிஞ்­ச­வரு, என் வய­சுக்கு ஏற்­றாற்­போல சுத்­தம் செய்­யற வேலை கொடுத்­தாரு..', என தொடர்ந்­தார் மாசி­லா­மணி.

"வயசு ரொம்ப இருக்­குமே.. நீங்க இன்­ன­மும் வேலை செய்­ய­ணுமா... வீட்­டுல இருந்து ஓய்­வெடுக்­க­லாமே?'

"தம்பி... எனக்­கும் ஆசை­தான்... ஆன வீட்­டுல நிம்­மதி கிடைக்­க­றது இல்ல.. உங்­க­ளுக்­குத்­தான் எங்க வீட்­டுக்­கார அம்மா பத்தி தெரி­யுமே... அவ­ளோட நச்­ச­ரிப்பைத் தாங்­க­மு­டி­யாது... தொட்டா குற்­றம் பட்டா குற்­றம் என்­பார்­களே அப்­படி தொணதொணன்னு ஏதா­வது முணு­மு­ணுத்தே என்னை கொன்­னு­டுவா... ஏன் இப்­படி முன­கு­கி­றாள்னு தெரி­யல... வயசு ஆகு­துல... நாற்­பது வய­சுல நாய்க் குணம், அறு­பது வய­சுல பேய்க் குணம்னு சொல்­வாங்­களே அப்­படி... வயது ஆக ஆக தலை­முடி நரைத்­துப்­போய் பற்­கள் விழு­வ­தற்­குப் பதி­லாக அவ­ளுக்கு பேச்சு குறைந்தால் எனக்கு எவ்­வ­ளவோ நிம்­மதி', என்று இழுத்­தார். பின், "கல்­யா­ணம் செய்­துகொள், நல்ல மனைவி வாய்த்­தால் சந்­தோ­ஷ­மாய் இருப்­பாய், மோச­மான மனைவி கிடைத்­தால் ஞானி­யா­வாய் என்று யாரோ சொன்­னது ஞாப­கத்­துக்கு வருது. அப்­படி நான் ஞானி­யாய் வாழ­றேன். வீட்­டுல அதி­கமா தங்­க­ற­தில்லை....' என இந்த முதிய வய­தி­லும் தான் ஏன் வேலை செய்ய நேர்­கிறது என்­ப­தற்கு நீண்ட விளக்கம் கொடுத்­தார் மாசி­லா­மணி.

திரு­ம­ணம் சில­ருக்கு பூந்­தோட்­டம். ஆனால் அதுவே பல­ருக்கு போர்க்­க­ளம். குடும்­பம் ஒரு கதம்­பம் என்­பதைவிட குடும்­பம் ஒரு பல்­க­லைக்­க­ழ­கம் என்று கூறு­வதே சிறப்பு.

இதில் பெண்­க­ளின் பங்கு முதன்­மை­யா­னது. எதற்கு எடுத்­தா­லும் மற்­ற­வர்­க­ளு­டன் ஒப்­பிட்டுப் பார்க்­கும்போதுதான், கண­வன் மனை­வி­யின் மண­வாழ்க்­கை­யில் பிரச்­சினை ஏற்­ப­டு­கிறது.

தேவை­யில்­லாத சண்­டை­களும் வரு­கிறது. இத­னால் மண­வாழ்க்கை கசப்­பாகி விடு­கிறது. இதன் கார­ண­மாகத்தான் உற­வு­களில் விரி­சல் ஏற்­பட்டு, பலர் தங்­கள் வாழ்க்­கையைத் தொலைத்து விடு­கின்­ற­னர். கற்­ப­னை­யோடு வாழா­மல் காலத்­தோடு ஒத்து வாழவேண்­டும்.

கிடைத்­ததை கட­வு­ளின் வர­மாக நினைத்து ஒரு­வ­ருக்கு ஒரு­வர் விட்­டுக்­கொ­டுத்து வாழ வேண்­டும். அப்­போது தான் ஒரு பெண் தனது மண­வாழ்­வில் மணம் வீசும் மாற்­றத்தைக் கொண்டு வர­மு­டி­யும். இதனை பெண்­கள் கவ­னத்­தில் கொண்டு வாழும்போது இனிய குடும்­பம் என்­றும் தொட­ரும். இதை அவ­ரது மனைவி அறிந்­தி­ருக்­க­வில்­லையோ?

மீண்­டும் தொடர்ந்­தார். "முன்­பெல்­லாம் வீட்­டுக்­கார அம்மா வேலை செய்­தாங்க, குற்­றம் கண்டு­பி­டிக்க நேரம் கிடைக்­கல. எப்போ அவங்க வேலை­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றாங்­களோ, அப்போ ஆரம்­பிச்­சுது. இது வியா­தியா.. இல்ல நான் வாங்கி வந்த வர­மான்னு தெரி­யல.' முடித்து விட்டு ஒரு புன்­னகை புரிந்­தார். அந்­தப் புன்­ன­கை­யில் ஒரு விரக்தி கலந்­தி­ருந்­தது.

மாலை கோக்­கும்போது, மலர்­களை ஊசி­யி­னால் குத்­திக் கோர்ப்­பார்­கள். அப்­ப­டிக் குத்­தி­னா­லும் மலர்­கள் மலர்ந்­த­வாறு இருப்­பதைப் பார்க்­க­லாம். அது­போல எவ்­வ­ளவோ இம்­சைக்கு ஆளா­னா­லும் இன்­றும் மலர்ந்த முகத்­து­டன்­தான் இருந்­தார்.

"உங்க அப்பா... புண்­ணி­ய­வான்... போய்ச் சேர்ந்­துட்­டாரு... எனக்கு இன்­னும் விடிவு காலம் வர­லையே..' என ஆதங்­கப்­பட்­டார். சிறிய வாளி­யில் இருந்த தண்­ணீ­ரில் துணியை அலசி பிழிந்து எங்­க­ளது மேசையைத் துடைத்­தார்.

"தம்பி... என் வாழ்க்கை இருக்கே.. அது இந்த ஈரத்­துண்டை போலத்­தான். இது ஒரு அள­வுக்­குத்­தான் அழுக்கை ஏற்­றுக்­கொள்­ளும். பின்­னர் தண்­ணீ­ரில் அலச வேண்­டும். அது­போல நானும் ஓரள­வுக்­குத்­தான் இந்த இம்­சை­களைத் தாங்­கிக் கொள்ள முடி­யும். பின்­னர் என்னை அலச முடி­யாது"

காலை­யி­லேயே அவ­ருக்கு தேவை­யில்­லா­மல் மனவேதனை கொடுத்­து­விட்­டோமே என்று கருதி, "ஐயா... இந்த வேலை முழுநேரமா... இல்ல..?," என கேட்டு திசை திருப்­பி­னேன்.

"முழு நேரமா வேலை செய்ய கேட்­டி­ருக்­கேன்... இப்போ நாலு மணி நேரந்­தான்.. அப்­பு­றம் இந்த தேக்கா பக்­கத்­துல சுத்­தி­கிட்டு, சாயுங்­கா­லம் ஆறு மணிக்கு வீடு திரும்­பு­வேன்," என சொல்­லிக்­கொண்­டி­ருக்­கும்­போதே நாங்­கள் கேட்ட உண­வு­கள் மின் இயந்­தி­ரம் மூலம் எங்­கள் மேசையை வந்­த­டைந்­தது.

"சரி... சாப்­பி­டுங்க.." எனக் கூறி நகர முயன்­ற­வ­ரி­டம், "ஒன்­னும் கவ­லைப்­ப­டா­தீங்க, உங்க நல்ல உள்­ளத்­துக்கு எல்­லாம் நல்­ல­தா­கவே நடக்­கும்," என்­றேன். "எல்­லாம் அவன் விட்ட வழி," எனக்­கூறி அண்ணாந்து மேலே பார்த்­து­விட்டு பக்­கத்து மேசையைத் துடைக்க நகர்ந்­தார்.

அவ­ரது இந்த நிலை­மைக்கு கட­வு­ளும் கால­மும்­தான் பதில் சொல்ல வேண்­டும் என எண்­ணி­ய­வாறு தோசையைக் கிள்ளி வாயில் வைத்­தேன்.

காலை உணவு உண்­ட­பி­றகு, முதி­ய­வ­ரி­டம் சென்று, "ஐயா... நாங்க கிளம்­பு­றோம்... கவ­லைப்­படா­தீங்க. நல்­ல­வங்­கள கட­வுள் தண்­டிக்க மாட்­டான். எல்­லாம் கட­வு­ளுக்­கிட்ட விட்­டு­டுங்க," என்­றேன்.

"சரி... தம்பி, பார்த்துப் போங்க," எனக்­கூறி விடை­கொ­டுத்­தார். ஆம், எல்­லாம் கட­வு­ளின் கையில் இருக்­கிறது. கட­வுள் விரும்­பி­னால் போர்க்­க­ளத்­தில் கூட ஒரு­வ­னின் உயி­ரைக் காப்­பாற்ற முடி­யும்.

மறு­நாள் காலை. பொருள்­கள் வாங்க சையது ஆல்­வி சாலை­யில் உள்ள கடைத்தொகுதிக்குச் செல்ல வேண்­டிய நிர்­ப்பந்­தம் ஏற்­பட்­டது.

முத­லில் தேநீர் அருந்­தி­விட்டு பிறகு பொருள்­களை வாங்­கிக்­கொள்­ள­லாம் என்று நினைத்து மாசி­லா­மணி வேலை செய்­யும் அந்­தச் சாப்­பாட்­டுக் கடைக்­குள் நுழைந்­தேன். தேநீ­ருக்குச் சொல்லி­விட்டு நாற்­கா­லி­யில் அமர்ந்து கடையை நோட்­ட­மிட்­டேன்.

என் கண்­கள் மாசி­லா­ மணியைத் தேடின. அவரை எங்­கும் காண­வில்லை. வேலை முடிந்து வீட்­டுக்­குப் போயி­ருக்­க­லாம் என்று நினைத்து இயந்­தி­ரம் கொண்டு வந்த தேநீரை ஆற்றி மெது­வாக குடிக்க ஆரம்­பித்­தேன். கண்­கள் மீண்­டும் மாசி­லா­ம­ணியைத் தேடி­யது.

பக்­கத்து மேசையைச் சுத்­தம் செய்ய வந்த பைய­னி­டம், "தம்பி.. இங்க மாசி­லா­ம­ணினு ஒரு முதி­ய­வரு இருந்­தாரே... அவரு வீட்­டுக்கு கிளம்­பிட்­டாரா?" என வின­வி­னேன். "என்ன சார் சொல்­றது... தங்­க­மா­ன­வரு... நேத்து..இங்க.. இங்கதான்," என்று நான் அமர்ந்­தி­ருக்­கும் நாற்­கா­லி­யின் பக்­கத்து நாற்­காலியைக் காண்­பித்து, "நெஞ்சு வலின்னு சொல்லி உட்­கார்ந்­த­வரு கட­வுள்கிட்ட போயிட்­டாரு," என கண் கலங்­­கி­னான்.

தேநீரை தொடர்ந்து குடிக்க முடி­யா­மல், எழுந்து நின்­றேன். கண்­கள் குளமா­யின. முதல் நாள் நன்­றாக கல­க­லப்­பாக பேசிக்­கொண்­டி­ருந்­த­வர் இன்று இல்­லையே என மனம் விம்­மி­யது.

உயி­ரோடு இருக்­கும்­போது யாருக்­கும் ஒரு­வ­ரு­டைய அருமை தெரி­யாது, இல்­லாதபோதுதான் அது தெரி­யும். மாசி­லா­ம­ணி­யின் அரு­மையை அவ­ரது மனை­விக்கு இப்­போ­தா­வது தெரி­யுமா?

- முற்­றும் -