புதுமை படைக்கும் பொங்கலடி!!

புதுமை படைக்கும் பொங்கலடி!!

2 mins read
d54ad4a5-6cb1-4f1d-a66d-fdec7877c353
இந்திய மாணவர்கள் ஒன்றுகூடி பொங்கல் சமைக்கும் நிகழ்வு. படம்:இபிஏ -

- சீர்காழி உ செல்வராஜு

மார்கழி மாதக் குளிரினிலே

மாதம் முழுதும் காலையிலே

மாதர் பரங்கிப் பூக்களினால்

மரபைக் காக்கும் கோலங்கள்

மனங்கள் ஈர்க்கும் வித்தகர்கள்!

போகிப்பண்டிகை நாள்முழுதும்

போகம் போன்ற அறுவடையாம்

ஊக்கத் தோடு பழையனவை

ஒவ்வொன்றாக ஓய்வின்றி

ஒதுக்குபுறம் இடம்பார்த்தே

ஒழித்திடுவர் அசுத்தங்கள்....

அகமும் புறமும் சுத்தத்தை

ஆழ்ந்த கருத்தினை சொல்லிடுதே!

கீற்று தடுக்குகள் வடிவமைத்தே

காலம் பார்த்து அடுப்புவெட்டி

புத்தம் புதிய பானையிலே

பச்சை மஞ்சள் கொத்துடனே

அலங்கரித்து

பச்சரிசிப் பொங்கலிட்டு

பகலவன் நோக்கி படையலிட்டே

பொங்கலோ பொங்கல் எனக்கூவி

புத்துயிராக்கும் பொங்கலிது!

கரும்பும் பொங்கலும் இனித்திடுதே

கழனியின் வியர்வை கலைந்திடுதே

உழவனின் வயல்களை உழுதிடவே

உற்றதுணைகள் எருதுகளே!

அம்மே... அம்மே என அழைத்திடுமே

அவனோ அருகில் இல்லையெனில்!

கதறும் எருதுகளை கேட்டவுடன்

கலங்கிடுவானே உழவனுமே!

ஒன்றிப்போய் வாழ்ந்தவனோ

ஓயாதுழைத்த எருதுகளை

உள்ளம் நிறைந்த கடவுளராய்

உரிமையோடு வணங்கிடுவர்!

நன்றி சொல்லிப் பழகிடவே

நல்ல கருத்தைச் செப்பிடுதே!

விதவிதமாய் கொம்புகளில்

வண்ணம் தீட்டி காளைகளை

விரட்டி விரட்டி ஓட்டியே

எட்டமுடியா எல்லையினை

எட்டிப்பார்க்க வீதியிலே

வீரத்தோடு முழக்கமிட்டு

வீதியெங்கும் பரவசமே!

உற்ற நண்பர்கள் எருதுகளாம்

உண்மை உழைப்பின் கைம்மாறு

உறவாய் தமிழின பெரும்பேறு!

காணும் பொங்கல் என்றாலே

கன்னியர் கூட்டம் களைகட்டும்

ஆரவாரமாய் ஒலியெழுப்பி

ஆடியும் பாடியும் மகிழ்ந்திடுவர்!

சீற்றங்கள் மாறிமாறி

சிதறியடித்ததே அவன் வாழ்வை

வளர்த்த பயிர்கள் நாசமாகி

வருத்தம் தோய்ந்து உருமாறி

கரும்புகூட கசப்பாகி

கழனியோ வெள்ளக்காடாகி

புயலும் மழையும் புரட்டிடவே

புதைந்தே போன உழவனுமே

கட்ட வட்டி பணமின்றி

கண்ணீர்க் கதைகள் பலவுண்டே!

மனம் உடைந்த போதிலுமே

மானம் காக்கும் உழவர்களாம்!

அயராதுழைக்கும் இவர்களையே

நன்றியோடு வணங்கிடுவோம்

நாளும் போற்றி மகிழ்ந்திடுவோம்!

சிங்கையில் கொண்டாடும் பொங்கலடி - பெண்ணே

சிந்தனை தூண்டிடும் பொங்கலடி

சிங்கம் இருந்ததைப் போற்றி மகிழும்

சிங்கையில் கொண்டாடும் பொங்கலடி

மாடுகள் ஆடுகள் இல்லாத நாட்டில்

மகிழ்ச்சி பொங்கும் பொங்கலடி

மாடுகள் வண்டிகள் பார்த்திடலாம் - நல்ல

மாக்கோலம் கண்டும் களித்திடலாம்

மன்றங்கள் போற்றும் பொங்கலடி - மக்கள்

மயிலாட்டம் பார்க்கும் பொங்கலடி

மண்பாண்டத் தில்செய்யும் பொங்கலடி - பெண்ணே

மரபைக் காத்திடும் பொங்கலடி

மாடு விரட்டும் பொங்கலடி - பெண்ணே

மீசை முறுக்கும் பொங்கலடி

மாடுகள் ஆழ உழுதெம்மை - மனம்

மலர்ந்து பொங்கும் பொங்கலடி

வீடுகள் தோறும் இன்பமடி - பல

வீதியில் வண்டிகள் ஓடுமடி

நாடுகள் போற்றும் பொங்கலடி - நாம்

நாடிடும் ஒற்றுமைப் பொங்கலடி

ஆடுவோம் பாடுவோம் ஒன்றாக - பெண்ணே

ஆயர் பிரான்போற்றும் பொங்கலடி

பாடுவோம் ஆடுவோம் வாருங்கள் - நம்

பைந்தமிழ் போற்றும் பொங்கலடி

பொங்கலோ பொங்கல் கூவிடுவோம் - பெண்கள்

புதுமைப் படைக்கும் பொங்கலடி

பொய்க்கால் குதிரை ஆட்டமுண்டு - பெண்ணே

பொன்விழாக் கண்ட சிங்கையிலே!