உழுது, உலகின் பசிப்பிணி போக்கும்
உன்னத உழவர் தம்மை
தொழுது, தைத்திரு நாளை ஏற்றல்
தமிழர் மரபெனக் கொள்வோம்.
பழுது அற்ற அரிசி தன்னில்
பாலும் வெல்லமும் சேர்த்து
பொழுதுவிடியும் நேரம் கூடி
பொங்கல் வைப்போம் வாரீர்!
மஞ்சள், இஞ்சி, கொத்து கொண்டு
மண்பா னையில் கட்டி
கொஞ்சம் மாவிலை வாசலில் தொங்க
கோலமும் போட்டு வைப்போம்
பிஞ்சுக் குழந்தைகள் ஒன்றாய்க் கூடி
பொங்கலோ பொங்க லென்று
வஞ்ச மின்றி கூவச் சொல்லி
வளமுடன் பொங்கிடு வோமே!
- கி. சுப்பிரமணியம்

