பொங்கல் சந்தைக்குப் போன மச்சான்

பொங்கல் சந்தைக்குப் போன மச்சான்

2 mins read
653f67fb-fc65-4b12-b742-16f04a99ffa6
பொங்கல் திருநாளுக்கு தயார் செய்யும் ஆடவர். படம்: இபிஏ -

- நெப்போலியன்

அவன்: அடி அத்த மவளே சொல்லு

மச்சான் பொங்க சந்தைக்குப் போறேன்...

வடி வொத்த நிலவே சொல்லு

மச்சான் பொங்க சந்தைக்குப் போறேன்...

அவள்: எங்கத்த மவனே நில்லு

நானும் பொங்க சந்தைக்கு வாரேன்...

தங்க சொத்து முகமே நில்லு

நானும் பொங்க சந்தைக்கு வாரேன்...

அவன்: கருத்தவளே உனக்கு கரும்பு வாங்கி வரவா

உங் கருப்பு மொகமும் மினுக்க மஞ்சக் கெழங்கு

வாங்கி வரவா...

பொங்க வைக்கப் பானை ஒன்ணு புதுசு வாங்கி வரவா

உந் தங்க முகத்துக்கேத்த ஸ்டிக்கர் பொட்டு வாங்கி வரவா...

அவள்: வண்டி கட்டிப் போற வர நேரம் ரொம்ப ஆவும்

சண்டிக்காள ஓட்டிப்போற தூர சாயங்கால நேரம்...

சந்தைக்குள்ள நிறையா நம்ம சாதி சனப் பொண்ணு

மொந்தைக்குள்ள கள்ளாய் உம் மேனி மேல கண்ணு...

அவன்: மதுரப் பக்க மல்லி நான் மடிச்சு வாங்கி வரவா

உன் அங்கமெல்லாம் கமக்க கட்டி சோப்பு வாங்கி வரவா...

சீனிச் சேவு போண்டா செலட்டூர் சீட வாங்கி வரவா

உங் கூந்தலள்ளி முடிக்க முசிறி சீப்பு வாங்கி வரவா...

அவள்: அச்சமுள்ள சாமம் அட அய்யனாரு வீரம்

பத்திரமா நீயும் பரிசப் பாலம் கடக்க வேணும்...

அடுப்புக்குள்ள நெருப்பா அல்லல் படும் மனசு

இடுப்பு முடிச்சக் காசு நீயும் இறுக்கிப் பாத்து ஓட்டு...

அவன்: பச்ச மஞ்ச சேல நல்லாப் பாத்து வாங்கி வரவா

அதுக்கேத்த செகப்பு ரவுக்க நானுந் தேடி வாங்கி வரவா...

காது கழுத்துக் கொள்ள கலரு கம்மல் வாங்கி வரவா

உங்கையிரண்டும் சிரிக்க கண்ணாடி வளையல் வாங்கி வரவா...

அவள்: வயலுக்குள்ள கதிரு நல்லா வளர்ந்துதானே கெடக்கு

உம் மனசு போலப் பரந்து நல்லா நெறஞ்சுதானே இருக்கு...

வருசம் பூரா உழைச்சு நீயும் வசதியாக ஆன

எம் புருசனாக நீயும் எந்தப் பொங்கல் வரப் போறே...