- அனுபமா உதிவ்
என்னுயிர்த் தோழியே!
எந்த ஊரில் எந்த நாட்டில்
எப்படி உள்ளாய்
என்னருமைத் தோழியே!
என் மகளின் பள்ளியிலே
பொங்கல் விழா கொண்டாட
பானை வாங்கும்போது
'தேக்கா' ஒளிபோல உன்நினைவு!
நாம் இருவரும் ஒன்றாகக்
கிளிப்பச்சை சேலை கட்டி
பொங்கல் கோலம் வரைந்தோமே
நம் கல்லூரி நினைவிருக்கா?
பொங்கல் பொங்கிவர
'பொங்கலோ பொங்கல்' என்று
கத்தி மகிழ்ந்தோமே
கண்மணியே நினைவிருக்கா?
இஞ்சியை மஞ்சளென்றும்
மஞ்சளை இஞ்சியென்றும்
மாற்றி மாற்றிச் சொன்னாயே!
மறக்குமா உன்நினைவு!
கருப்பு மூங்கிலென்று
கரும்பைச் சொன்னாயே!
எல்லோரும் சேர்ந்து
வாய்விட்டுச் சிரித்தோமே!
திசைமாறிப் போனாலும்
அழியாத உன்நினைவு
நரைவிழுந்தாலும்
திரைவிழாத நம்நினைவு!
எங்கே இருந்தாலும்
இனிதே வாழ்க!
பொங்கல்போல் இனிக்கட்டும்
பொங்கிவரும் நம்நினைவே!

