- அனுபமா உதிவ்
வாடி வாசல் திறக்குமே!
திமிறி காளை பறக்குமே!
திமில் பிடித்த காளையரை
உதறித் தள்ளி மிரட்டுமே!
ஜல்லிக் கட்டு காளைகளோ
துள்ளிக் கிட்டு ஓடுமே!
ஓடும் காளை தனையடக்க
வீரர் கூட்டம் கூடுமே!
வெற்றிபெறும் வீரர்களும் உண்டு
வீரமரணம் அடைவோரும் உண்டு
பரிசோடு புகழ்மழை பொழியும்
சிலநேரம் மணமகளும் அமையும்!
வீரனுக்கே தன்வாழ்க்கை என்று
தவமிருக்கும் தமிழ்மகளும்
உண்டு
அவள்வளர்க்கும் காளையினை
அடக்கும்
வீரனுக்கே அவளன்பு கிடைக்கும்!
அகம் என்னும் காதலைப்
புறம் என்னும் வீரத்தால்
அடையும் 'அறம்'மஞ்சு விரட்டு
சங்ககால இலக்கியத்தின்
திரட்டு!
குடும்பத்தில் ஒருவராகும் மாடு
தமிழர்கள் வளர்த்தார் அன்போடு!
பலகாலம் தொடரும் பண்பாடு!
உலகம் போற்ற விளையாடு!

