சிறுகதை
கணேஷ்பாபு
"இலக்கியவாதியக் கொண்டாடணும் நண்பா.. இதக்கூட இந்த சமூகத்துக்குச் சொல்லிக்கொடுக்கணுமா? ஒவ்வொன்னையும் எத்தன காலத்துக்கு சொல்லிக்கொடுத்துக்குட்டே இருக்குறது", என்றான் வண்டியோட்டி.
"நாமதான் புலம்பிக்கிட்டே இருக்குறோம். வேற ஒருத்தருக்கும் இதப் பத்தின அக்கறையே இல்லை. தமிழ்நாட்டுலதான் அப்படி இருக்காங்கன்னா இங்கயுமா?" என்றான் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவன்.
ஆளரவமற்ற சாலையில் அந்த கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. சாலையின் இரு பக்கமும் புதர் மண்டிய காடுகள். சாலையோரமாக இருந்த செடிகளின் பெரிய இலைகள் மண் நிறத்தில் இருந்தன. கடந்து சென்ற வாகனங்கள் தெறிக்க விட்டுச் சென்ற சேற்றுத் துளிகள் அவ்விலைகளில் இருந்து சொட்டிக்கொண்டிருந்தன.
வாகனச் சத்தம் தவிர்த்து அந்தப் பிராந்தியத்தில் எந்த அரவமும் இல்லை. முழுக்க இருளிலும் நிசப்தத்திலும் புதைந்திருந்த அந்தச் சாலை எந்தவொரு திடச் சித்தத்தையும் சற்றே அசைத்துப் பார்க்கும் அமானுஷ்ய சாயலை வரித்திருந்தது.
வண்டியோட்டி சத்தமாக ஏப்பம் விட்டான்.
"கருமம், மட்டமான ஐட்டத்த ஊத்திக் கொடுத்துருக்கானுவ," என்றான் உடனிருந்தவன்.
வண்டியோட்டி, "ஆமாம், நண்பா, இதுக்குத்தான் இந்த "சிந்தனையாளர் வட்டம்," கூட்டற எந்தக் கூட்டத்துக்கும் நான் வர்றதேயில்லை. இந்த தடவ விருது குடுக்குறாங்கன்னுதான் வந்தது. இல்லைன்னா எனக்கு இங்க என்ன வேல," என்றான் சாலையைப் பார்த்தபடி.
"இலக்கியம்னா என்னன்னே தெரியாத பசங்க. உங்களையும் என்னையும் மாதிரி ஆட்கள அப்பப்போ கூப்பிட்டு விருது குடுத்து எங்களுக்கும் இலக்கியம் தெரியும்ன்னு காட்டிக்கிறானுங்க," என்றான் உடனிருந்தவன்.
வண்டியோட்டி தன்முன்னிருந்த கண்ணாடியைப் பார்த்தபடி, "என்ன நண்பா, ரொம்ப அமைதியா வந்துட்டிருக்கீங்க. வண்டி ஏறுனத்திலிருந்து மௌனமா வந்திட்டிருக்கீங்க," என்றான்.
அதுவரை அமைதியாய் இருந்த பின்னிருக்கைக்காரன் வண்டியோட்டியைப் பார்த்துப் புன்னகைத்தான். தன் இருப்பைக் காட்டிக்கொள்ளக் கூடாது என்ற பிரக்ஞையுடன் இருந்தவனுக்கு இந்த உரையாடலில் தன்னை எவ்விதம் பொருத்திக்கொள்வது எனத் தெரியவில்லை. தீவிர இலக்கிய வாசகன் அவன். அவனுக்கு இது போன்ற மேனாமினுக்கிகளோடு பழக்கமில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்நாளில் கெட்ட நேரம் என்பது ஒன்று வரும். அதிலிருந்து எவரும் தப்பமுடியாது. அதைப் போன்ற கெட்ட நேரத்தில் அவன் அன்று மாலை மாட்டிக்கொண்டான். அருகில் இருக்கும் நகரத்தில் இருந்து இந்த ஊருக்கு நண்பனைப் பார்க்க வந்திருந்தான். அவனோடு சேர்ந்து ஓர் அசட்டு தைரியத்தில் அந்த இலக்கியக் கூட்டத்துக்கு வந்திருந்தான். வந்தபின்தான் தெரிந்தது. அது வெறும் "கூட்டம்"தான். இலக்கியத்திற்கும் அந்தக் கூட்டத்துக்கும் தொடர்பில்லை. கூட்டத்தின் முடிவில் நண்பனுக்கு வேறு ஒரு அவசர வேலை வந்துவிட்டதால், இவர்களின் காரில் இவனை ஏற்றிவிட்டுவிட்டான். இன்னும் ஒரு மணி நேரம் மட்டும் வாயை மூடிக்கொண்டிருந்துவிட்டால் போதும், ஊருக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்திருந்தவனை இந்த மொண்ணைகள் தங்கள் உரையாடலுக்குள் வலிய இழுக்கிறார்களே என்று கவலைப்பட்டான். ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதால், " எனக்கு எதுவும் சொல்லத் தோணலீங்க நண்பா," என்றான்.
முன்னிருக்கையாளன், "சும்மா பேசுங்க நண்பா, நாங்க ரெண்டு பேரும் பிரபலமான எழுத்தாளருங்கதான். ஆனாலும், எளிய மக்கள்ட்ட இறங்கி வந்து பழகுவோம்," என்றார்.
பின்னிருக்கையாளனுக்கு இதைக் கேட்டதும் கோபம் வந்துவிட்டது. சரிதான், இன்றைய பொழுது சுபமாகத்தான் முடியப்போகிறது என்று நினைத்துக் கொண்டு "நான் பிரபலமான எழுத்தாளருங்களப் படிக்கிறதில்லீங்க. சமகால எழுத்தாளர்கள்ல நான் வில்லாழியான், கொற்றவன் மாதிரி எழுத்தாளருங்ளதான் படிப்பேன்," அவர்களின் பெயரை ஒருவித கர்வத்துடன் உச்சரித்தான்.
"சரிதான்.. நீங்க தீவிர இலக்கியக் கும்பலா? பத்து பேருக்குள்ள படிச்சுக்குவெய்ங்க, பத்து பேருக்கு எழுதுவீங்க. கேட்டா தீவிர இலக்கியம்னு சொல்வீங்க," நக்கலாகச் சொன்னான் வண்டியோட்டி.
"அவங்க சாகுறதுகூட பத்து பேருக்குத்தான் தெரியும்" என்று சிரித்தான் அருகிலிருந்தவன்.
"ஆனா, செத்த பிறகு அவங்களோடு பேரக் காலம் எடுத்துக்கும் நண்பா. இன்னும் நூறு வருசம் கழிச்சு உங்க பேரயெல்லாம் காலம் மறந்துரும். அவங்க அப்பவும் பசுமையா வாசிக்கப்படுவாங்க," என்றான் பின்னிருக்கையாளன்.
"செத்த பிறகு எவன் எப்படிப்போனா என்ன நண்பா, வாழும்போதுதானே நாலு பேரு நம்மள கவனிக்கனும். ஈதல் இசைபட வாழ்தல்ன்னுதானே வள்ளுவரு சொல்லியிருக்காரு.. வாழும்போது நம்மள வாசிக்காதவன் செத்த பிறகு வாசிச்சா என்ன வாசிக்கலன்னா என்ன," என்றான் முன்னிருக்கையாளன்.
"ஈதல் இசைபட வாழ்தல்ன்னு வள்ளுவர் சரியாத்தான் சொல்லியிருக்காரு, அத ஏன் நீங்க ஒரு குறுகிய காலத்துக்குள்ள அடைக்கிறீங்க. இசைபட வாழ்தல்ங்கறது, தான் ரத்தமும் சதையுமா உடம்புக்குள்ள வாழ்ற காலமில்ல. அது அடுத்து வரும் பல தலைமுறைகளோட காலத்துக்கும் பொருந்தும்," என்றான் பின்னிருக்கையாளன். இருளில் அவன் முகத்தை மற்ற இருவரால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஆனால், இருளையும் மீறி அவன் குரல் மட்டும் கூர்மையாக ஒலித்தது.
"இந்தத் தீவிர இலக்கியக் கும்பலே இப்படித்தான் நண்பா. வழக்கமான அர்த்தத்துக்கு மாறா புதுசா ஏதாவது ஒரு அர்த்தத்தக் கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டிருப்பாங்க. இவரோட பேசுறது நேர விரயம்," என்றான் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவன்.
"அப்டி விட்ற முடியாது நண்பா, அவருக்கும் நாம இலக்கியத்த விளங்க வைக்கணும்," என்று சொன்ன வண்டியோட்டி பின்னிருக்கையாளனைப் பார்த்து, "நண்பரே, இப்பப் பாத்தீங்கன்னா, நானெல்லாம் ஒரு கவித எழுதி ஃபேஸ்புக்ல போட்டேன்னா, எத்தன லைக் வரும்னு தெரியுங்களா, உங்களால அத யோசிக்கவே முடியாது. குறைஞ்சது ரெண்டாயிரம் லைக் வரும். போன மாசம், காதல் தோல்வியக் குறிச்சு ஒரு கவிதை எழுதினேன். அந்த நெடுங்கவித இப்படி முடியும், "போனால் போடி.. நான் இனி அழமாட்டேன், தோல்வி எனக்கென்றால் அழலாம். ஆனால், தோற்றது காதலடி. நான் ஏன் அழவேண்டும்". இந்த வரிய வாசிச்சு எத்தன இளைஞர்கள் என்னப் பாராட்டுனாங்க தெரியுமா. ஒரு ரெண்டு நாள் என் ஃபோன ஆஃப் பண்ணி வச்சுட்டேன். வாட்ஸ்ப் ஸ்டேட்டஸுல இந்த வரிய வச்சிருந்த ஒரு நூறு பேரையாவது எனக்குத் தெரியும்," என்றான் வண்டியோட்டி.
"அதுக்குத்தான் கூப்பிட்டு விருது குடுக்குறான்", நீங்க என்னடான்னா, ஒரு கவிதை எழுதறீங்க. அது ஒருத்தனுக்கும் புரியறதில்ல. பத்துப் பேருக்குப் புரிஞ்சா அதிகம். அந்தப் பத்து பேரும் அத பத்து விதமாப் புரிஞ்சுக்குறான். கேட்டா, படிமம், தொன்மம்ன்னு ஏதாவது கலைச்சொல்லப் போடுறது. ஏண்டா உங்களையும் ஏமாத்திக்கிட்டு, உங்களச் சுத்தியுள்ளவனையும் ஏமாத்திகிட்டு இருக்கீங்க. காலம் தாண்டி நிப்போம்னு வேற பேசுறீங்க. எங்களயெல்லாம் பாத்தா உங்களுக்கு நக்கலா இருக்கா?" என்று இரைந்தான் முன்னிருக்கையாளன்.
"நக்கல்லாம் இல்ல நண்பா, உங்களப்பாத்தா பரிதாபமா இருக்கு," என்றான் பின்னிருக்கையாளன். "ஒருத்தரும் படிக்கலன்னாலும் இலக்கியம் வாழும் நண்பா. தஸ்தாயெவ்ஸ்கியையோ, எமிலி பிராண்டையோ அவங்க வாழ்ந்த காலத்துல எத்தனப் பேரு படிச்சாங்க. புதுமைப்பித்தனையோ, மௌனியையோ எத்தன பேரு படிச்சாங்க. இன்னிக்கும் அவங்க நிக்கிறாங்கல்ல, அவங்க காலத்துல எழுதுன எத்தனையோ பொது வாசிப்பு எழுத்தாளருங்க என்ன ஆனாங்க. ராக்கெட் வெடி மாதிரி சொற்ப நேரத்தில் மின்னி மறைஞ்சுட்டாங்க. இலக்கியம் ராக்கெட் வெடியில்ல நண்பா, அது மலைமேல ஏத்தப்பட்டிருக்கிற தீபம். அது மின்னாது. ஆனாலும், ஒவ்வொரு தலைமுறையிலயும் அந்த ஒளியத் தேடி எவனாவது ஒருத்தன் வந்துகிட்டுத்தான் இருப்பான்," என்றான்.
"நீங்க சொல்ற ஆளுங்கெல்லாம் புரியாத மாதிரியே எழுதறவங்க நண்பா," என்றான் வண்டியோட்டி.
பின்னிருக்கையாளன், "உங்களுக்குப் புரியலன்னு சொல்லுங்க நண்பா, எதுக்கு எல்லாருக்குமே புரியாதுன்னு நீங்களே நினைச்சுக்கிறீங்க," என்றான்.
வண்டியோட்டிக்கும் இப்போது கோபம் பற்றிக்கொண்டு வந்துவிட்டது.
"எல்லாருக்கும்தான் புரியலய்யா, இந்த நாட்டுல எத்தனையோ பேரு எத்தனையோ காலம் எழுதிக்கிட்டு வர்றோம். எழுத்துன்னா புரியணும்யா, உம் பக்கத்துல ஒருத்தன் வந்து ஒக்காந்துக்கிட்டு ஏதோ ஒரு பாஷையில பேசிக்கிட்டு, நானும் தமிழ்தான் பேசுறேன். உனக்குத்தான் புரியலன்னு சொன்னா, தமிழ் தெரிஞ்ச உனக்கு எப்படி இருக்கும், அப்படித்தான்யா இருக்குது நீ சொல்றது," என்றான்.
முன்னிருக்கையாளன், "இப்படித்தான் நண்பா, எதையாவது புரியாம எழுதிக்கிட்டே இருப்பானுங்க. கேட்டா நமக்கு அதப் புரிஞ்சுக்குற தகுதி இல்லைன்னுவானுங்க". பின்னால் திரும்பி, "நாங்களும் இலக்கியவாதிங்கதான்யா. இல்ல, நான் தெரியாமத்தான் கேக்குறேன், தமிழ் பேராசிரியருங்களே நீங்க எழுதறது புரியலன்னு சொல்றாங்க, சாதாரண மக்களுக்கு அப்புறம் எப்படிப் புரியும்? எங்களுக்குக் கிடைக்கக்கூடிய புகழும், கவனிப்பும் உங்கள மாதிரி ஆட்களத் தொந்தரவுக்குள்ளாக்குது. பொறாமைல என்னன்னவோ பேசிக்கிட்டு திரியறீங்க," என்றான்.
சக்கரை போடாத காபியைக் குடித்தது போல பின்னிருக்கையாளனின் முகம் கசந்து சுருங்கியது. மெல்லிய குரலில், "நீங்க எல்லாருக்கும் புரியற மாதிரியே எழுதுங்க நண்பா. அதுல எனக்கு எந்தப் பிரச்சனையுமில்ல. ஆனா, எல்லோரும் ஏத்துக்குற மாதிரி எழுதுறவன் இலக்கியவாதியில்ல. கரும்பத் தின்னக் கொடுங்க. சக்கைய ஏன் தின்னக் கொடுக்கிறீங்க," என்றான்.
இப்போது முன்னால் இருந்தவர்கள் இருவருக்கும் வெறியேறியது. ஓட்டுனன் வண்டியை நிறுத்தினான், பின்னால் திரும்பிப் பார்த்து, "ஒழுங்கு மரியாதையா இறங்கிப் போயிடு" என்றான்.
உடனிருந்தவன், "நீ போற இடத்துக்கு வண்டில போனாலே ஒரு மணி நேரம் ஆகும். வேற வண்டியும் இந்தப் பக்கம் வர்ற மாதிரி தெரியல. இப்ப நடக்க ஆரம்பிச்சா, விடிகாலைல போயி சேர்ந்திரலாம். தஸ்தாயெவ்ஸ்கிய நெனச்சுக்கிட்டே போய்ச் சேரு," என்றான்.
இருவரும் உரக்கச் சிரித்தார்கள்.
பின்னிருக்கையாளன் இதை எதிர்பார்த்திருந்ததைப் போல எழுந்து கொண்டான். இது எப்போதும் இப்படித்தானே இருக்கும் என்றும் அவனுக்குத் தோன்றியது. ஒன்றும் சொல்லாமல், இறங்கி நடந்தான். நடந்துகொண்டே இருந்தான், இருளைத் துணைக்கழைத்தபடி. இருளில் அவனது உருவம் சிறுபுள்ளியாகத் தெரிவது வரை மற்ற இருவரும் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள்.
சிறிது நேரம் கழித்து, வண்டியைக் கிளப்பிய ஓட்டுனன், "இவனோட பேசிப் பேசி, போதை தெளிஞ்சிருச்சு," என்றபடி பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய பாட்டிலைத் திறந்தான்.
உடனிருந்தவன், பாட்டிலைப் பார்த்தபடி, "இலக்கியவாதியக் கொண்டாடணும் நண்பா," என்றான்.
*

