ஆளில்லா கடையின் சன்னலோர மேசையில்
எண்ணங்களைப் பருகிக்கொண்டு
தேநீரின் துணைகொண்டு அமர்ந்திருக்கும்
மாலைகள்
திகட்டும் இனிப்பாய் மங்குகின்றன
விடியல்களைக் கற்பனை செய்வது
இனிப்பின் முடிவில்
அடிநாக்கில் கசப்பதுபோல்
உறுத்துகிறது
மாலையின் அனைத்து வண்ணங்களையும்
ஊற்றினால்கூட
இந்தத் தேநீர் இனிக்கப்போவதில்லை
இருந்தும் நான் காத்திருக்கிறேன்
என் எண்ணங்கள் ஒருவேளை
மனதில் தீராது கலங்கும்
இந்த வெறுமையை
நிரப்பும் என்று.
- விஷ்ணு வர்தினி

