மாண்­ட­ரின் ஆரஞ்சு

மாண்­ட­ரின் ஆரஞ்சு

9 mins read
3aa1ee31-0370-4f78-a12f-8ef0547f64b5
-

சிறு­கதை

மலையரசி சீனிவாசன்

"சின்-யன் ஹவ் ல" என இரு ஆரஞ்­சு­க­ளோடு வாழ்த்­திக்­கொண்டே வீட்­டிற்­குள் நுழைந்­தார்­கள் அஞ்­ச­லி­யும் அவள் தோழி­யும். அஞ்­சலி, குண­சுந்­த­ரி­யின் தங்கை மகள். கல்­லூரி மாண­வி­யான அவள் சிங்­கப்­பூ­ரின் முதிர்ச்சியடைந்த வட்­டா­ரங்­க­ளின் மறந்த கதை­க­ளைத் தொகுத்து ஒப்­ப­டைக்க வேண்­டிய ஒரு 'புரா­ஜெக்ட்­டு'க்­காக குண­சுந்­த­ரியை சந்­திக்க தோழி­யு­டன் சென்­றி­ருந்­தாள்.

வழக்­க­மான எளிய ஒப்­ப­னை­யு­டன் நீல நிறச் சேலை­யில் கைப்­பேசி கேமரா முன் அமர்ந்­தார் குண­சுந்­தரி.

அஞ்­சலி கட்டை விரலை உயர்த்­திக்­காட்டி 'ரெடி' என்­ற­தும் தனது இளமைக் காலத்­திற்­குள் நுழைந்­தார்.

"ஹேவ்லாக் ரோடு வட்­டா­ரத்­தில் ஓர­றை­யும் சிறிய சமை­ய­ல­றை­யும் கொண்ட வீட­மைப்பு கழக வீட்­டில் ஒன்­பது பேரும் வாழ்ந்­தோம்."

"வாவ்... எப்­படி ஒரே அறை­யில் ஒன்­பது பேரும் இருந்­தீர்­கள்?" என்ற அஞ்­ச­லி­யின் கேள்­விக்­குச் சிரித்­த­படி "அப்­போ­தெல்­லாம் ஓர­றை­யாக இருந்­தா­லும் பெரி­தா­கத்­தான் இருந்­தது," என்­றார்.

"மறந்த விச­யம்?"

"ஒவ்­வொரு பண்­டிகை காலத்திலும் பல இன மக்­களும் சேர்ந்­து கொண்­டா­டு­வ­தைப் பற்­றிக் கேள்­விப்­பட்­டி­ருப்­பீர்­கள். அதி­லும் நாங்­கள் இருந்த மாடி­யில் வாழ்ந்­த­வர்­களில் சிலர் ஒரு விச­யத்­தைச் செய்­தார்­கள்.

ஆர்­வம் தாங்­கா­மல் குறுக்­கிட்டு "என்ன அது?" என்­ற­வ­ளின் துரு­து­ருப்பை ரசித்­த­ப­டியே தொடர்ந்­தார்.

"இப்­ப­தான் உணவை வீணாக்­கக் கூடா­துனு விளம்­ப­ரங்­க­ளெல்­லாம் போடு­றாங்க. ஆனால், அப்­பொ­ழுதே நாங்­கள் உணவை வீணாக்­கா­மல் வீட்­டிற்கு வெளியே அம்மா வைத்­தி­ருக்­கும் ஒரு 'பிளாஸ்­டிக்' வாளிக்­குள் போட்­டி­ருக்­கும் நெகிழிப் பைக்­குள் மீத­மி­ருக்­கும் உண­வைப் போட்­டு­விடு­வோம்."

"நெகி­ழிப் பை என்­றால்?"

"ஆங்­கி­லத்­தில் 'பிளாஸ்­டிக் பேக்'" "ஓ.." என்­ற­வள் புன்­மு­று­வ­லு­டன் "சொல்­லுங்க!" என்­றாள்.

"அதை, கால்நடைப் பண்­ணைக்­குச் சொந்­தக்­கா­ர­ரான ஒரு சீன அங்­கிள் ஒவ்­வொரு நாளும் அப்­ப­டியே அவர் கொண்டு வரும் பெரிய பானை போன்ற வாளிக்­குள் கொட்­டிக்­கொள்­வார். அதி­லி­ருந்து வரும் புளித்த வாடையைப் பொருட்­ப­டுத்­தி­ய­தில்லை அவர். அதற்கு ஈடாக சீனப் புத்­தாண்­டுக்கு ஒரு மாதத்­திற்கு முன்பே எங்­க­ளுக்கு முப்­பது அல்­லது இரு­பது முட்­டை­க­ளோடு மாண்­ட­ரின் ஆரஞ்­சை­யும் சேர்த்­துக் கொடுப்­பார்.

நாங்­கள் ஓடி ஆடி வானில் பட்­டம் விட்டு விளை­யா­டிய பொற்­கா­லத்தை இன்­றைக்கு நினைத்­தா­லும் மனம் இனிக்­கத்­தான் செய்­கிறது!" என்று முடித்­தார்.

"வாவ் கிரேட்! தேங்ஸ்!"

"இது போதுமா?"

"ஓ... இதற்கு முன் நாங்­கள் சேக­ரித்­தி­ருக்­கும் தக­வல்­க­ளை­யும், நீங்­கள் கூறி­ய­தை­யும் சேர்த்து ஒரு கட்­டு­ரை­யாக எழுதி ஆசி­ரி­ய­ரி­டம் ஒப்­ப­டைத்­து­வி­டு­வோம்."

குண­சுந்­த­ரி­யின் வாடிய முகம் அவளை என்­னவோ செய்­தது. அவ­ரி­டம் கார­ணத்­தைக் கேட்­ப­தற்­குள் தேநீ­ரு­டன் கேக் தட்­டை­யும் மேசை மீது வைத்­தார். அஞ்­ச­லி­யின் தோழி­யும், "ஏன் கவ­லை­யு­டன் இருக்­கி­றார்?" என்று வின­வி­னாள். தெரி­ய­வில்லை என்று உதட்­டைப் பிதுக்­கி­ய­வள் மெல்ல அவ­ரி­டம், "ஏன் என்ன ஆச்சு ஒரு மாதி­ரியா இருக்­கீங்க?"

"ஒண்­ணு­மில்ல அஞ்­சலி. மாண்­ட­ரின் ஆரஞ்­சைப் பார்த்­த­தும் மனசு பார­மாச்சு. அதான்"

பால்ய பரு­வத்­தின் செல்­ல­மான தோழி­யின் பிரி­வை­யும், வலி­யை­யும் அதி­க­மாக வெளியே கூறி­ய­தில்லை.

"ஏன் உம்­முன்னு இருக்கே?" என்று அம்மா கேட்­ட­போ­தும். "ஏன் மாண்­ட­ரின் ஆரஞ்சை அவ்­வ­ளவா சாப்­பிட மாட்­டேங்­கிறே?" என்று கண­வர் கேட்­ட­போ­தும் "சும்­மா­தான்!" என்று ஒரே வார்த்­தை­யில் பதி­ல­ளித்­து­வி­டு­வார்.

"என்ன நடந்­த­துன்னு சொல்­லுங்க?"

"...ம்ம் சின்ன வய­தில் என் தோழி­யி­டம் அதி­கப் பிர­சங்­கித்­த­னமா நடந்­துக்­கிட்­டேன்," என்று நிறுத்­தி­னார்.

அஞ்­சலி லேசா­கக் கையை வரு­டி­ய­தும் நெகிழ்ச்­சி­யு­டன் உரிக்­காத மாண்­ட­ரின் ஆரஞ்­சின் தோலை உரிக்­கத்­தொ­டங்­கி­னார்.

"இப்ப மாதிரி வாசற்­க­த­வைப் பூட்­டியே வைத்­தி­ருக்க மாட்­டோம். எங்­கள் தளத்­தில் மின்தூக்­கிக்கு எதிரே இருந்த முயல்­குட்­டி­யு­டன் சிறு வய­சு­லே­யி­ருந்து ரொம்­ப­வும் நெருக்­கமா பழ­கி­னேன். அவ சீனப் பெயர் எனக்­குச் சட்­டென்று நினை­விற்கு வராது. அத­னால அவ பிறந்­தது முயல் ஆண்டு என்று தெரிந்­த­தும், அவளை முயல்­குட்டி என்று செல்­லமா கூப்­பிட்­டேன்.

அவ­ளும் என் பெய­ருக்­குப் பதி­லாக அடிக்­கடி ரெட்டைச் சடை­யு­டன் பார்த்­த­தால் 'ரெட்டைச்சடை' என்றே அழைப்­பாள்.

எங்க இரு­வ­ருக்­கும் ஒரே வய­தென்­ப­தால் பெரும்­பா­லான நேரங்­களில் அவ­ளு­டன் தான் 'ஸ்கிப்­பிங்' விளை­யா­டு­வேன்.

முதல்ல சொன்­னனே அந்த அங்­கிள் முட்டை கொடுத்­துட்­டுப் போன­தும் அவர் பின்­னா­லேயே ஓடிச்சென்று இன்­னும் முட்டை கிடைக்­குமா? என்று இடுப்­பில் கையை வைத்­துக்­கொண்டு நிற்­போம். அவர் சிரித்­துக்­கொண்டே முட்டை இருந்­தால் கொடுப்­பார் அல்­லது மாண்­ட­ரின் ஆரஞ்­சு­கள் கிடைக்­கும். "ஹே...!" என்று மகிழ்ச்­சி­யு­டன் வீட்­டிற்கு ஓடு­வோம்.

ஒரே தொடக்­கப்­பள்­ளி­யில் படித்­த­தால் எங்­க­ளின் நட்பு இன்­னும் நெருக்­க­மா­னது.

ஒரு­நாள் ஸ்கிப்­பிங் செய்­வ­தற்கு வராண்­டா­விற்கு வந்­தேன், அதே­நே­ரம் அவ­ளும் கத­வைத் திறந்­தாள்.

எனக்கு ஒரே மகிழ்ச்­சி­யா­கி­விட்­டது. அவ­ளை­யும் விளை­யாட அழைத்­தேன். "இப்போ முடி­யாது. கணக்கு நோட்டை மறந்­து­விட்ட அண்­ணன் பத்து நிமி­சத்­துல கீழே வரச்சொல்­லி போன் பண்­ணி­னான்," என கூறிக்­கொண்டே மின்தூக்­கிக்­கா­கக் காத்­தி­ருந்­தாள்.

அவ அண்­ண­னைப் பார்த்­தால் எனக்­கும் கொஞ்­சம் பயம்­தான். ஒரு­நாள் மதிய வேளை­யில் இரு­வ­ரும் படி­யில் அமர்ந்­து பேசிக் கொண்­டி­ருப்­ப­தைப் பார்த்­த­தும் "போய்ப் படி!" என்று விரட்­டி­னான்.

மின்தூக்­கி­யின் கதவு திறந்­தது.

"உன் அண்­ணன் வர இன்­னும் பத்து நிமி­சம் இருக்கே," அவள் கைக­ளைப் பிடித்­தி­ழுத்­தேன்.

பல நாட்­கள் நான் ஸ்கிப்­பிங்­கில் குதிக்க ஆரம்­பித்­த­தும், அவ­ளும் உள்ளே வந்­து­வி­டு­வாள். இரு­வ­ரும் சேர்ந்து ஒரே ஸ்கிப்­பிங்­கில் குதித்து விளை­யா­டு­வோம்.

"என்­னை­விடு. அண்­ணன் வந்­து­வி­டப் போறான்," என்று கையை உத­றி­னாள்.

"இன்­னும் நேர­மி­ருக்கு" என்று மின்தூக்­கிக்­குள் நுழை­ய­வி­டா­மல் தடுத்­தேன். இரு­முறை மின் தூக்­கி­யின் கதவு திறந்து மூடி திறந்­தது.

விளை­யா­டும் புத்­தி­யோடு சிரித்­துக்­கொண்டே "நீயும் வா.." என்று ஸ்கிப்­பிங் குதிக்க ஆரம்­பித்­தேன்.

அப்­பொ­ழுது "எவ்­வ­ளவு நேரமா கீழே நிற்­கி­றேன். கொடுத்துவிட்டு வந்து விளை­யாட வேண்­டி­ய­து­தானே," என்று கோபத்­து­டன் அவள் தலை­யில் இருமுறை ஓங்­கிக் குட்­டி­னான் அவ­ளது அண்­ணன்.

கையி­லி­ருந்த ஸ்கிப்­பிங் கயிறு தரை­யில் விழுந்­தது.

"அய்யோ வலிக்­குது. நான் விளை­யா­டல' அழு­கை­யு­டன் அவள் கூறு­வ­தைக் கேட்­கா­மல் மின்தூக்­கி­யின் கதவு மூடி­யது.

எங்­க­ளைப் பிரிப்­ப­தைப்­போ­லத் தரை­யில் விழுந்த ஸ்கிப்­பிங் கயிறு நடு­வில் ஒரு கோடாகக் கிடந்­தது.

செய்­வ­த­றி­யாது தயக்­கத்­து­டன் "சோரி!" என்று கையைப் பிடித்­தேன்.

"ச்சீ போ ஐ டோன் லைக் யூ. உன்னை எனக்­குப் பிடிக்க வில்­லைன்னு" தலை­யைத் தேய்த்­துக் கொண்டே சென்­றாள். அதைச் சற்­றும் எதிர்­பார்க்­காத நானும் "போ போ இனிமே யாரு­டன் சேர்ந்து விளை­யாடப் போறே?" என்று வீட்­டிற்கு ஓடி­னேன்.

சில நாட்­களில் கோபம் சரி­யாகி­வி­டும். பழை­ய­படி சேர்ந்து விளை­யா­ட­லா­மென்று காத்­தி­ருந்­தேன்.

வகுப்­பி­லும் என்­னு­டன் பேச­வில்லை. இடை­வே­ளை­யி­லும் சேர்ந்து சாப்­பி­ட­வில்லை. அவள் முன் போய் நின்­றா­லும் என்­னைக் கவ­னிக்­கா­த­வ­ளைப்­போ­லவே நடந்­து­கொண்­டாள்.

"வா விளை­யா­ட­லாம்" என்று மற்ற தோழி­கள் அழைத்­த­போது கண்­கள் அவ­ளையே தேடின. நாட்­கள் செல்­லச் செல்ல அவளே வந்து பேசட்­டும் என்று இருந்­து­விட்­டேன்.

தங்­கை­கள் ஸ்கிப்­பிங் கயிறு தாண்­டு­வதை ஏக்­கத்­து­டன் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தேன்.

ஒரு வாரத்­தில் முயல் ஆண்­டுப் பிறக்க இருந்­தது. அப்­பொழுது நான் அடைந்த மகிழ்ச்­சிக்கு எல்­லையே கிடை­யாது.

ஒவ்­வொரு சீனப் புத்­தாண்­டி­லும் என் கையில் இரண்டு மாண்­ட­ரின் ஆரஞ்­சைக் கொடுப்­ப­தை­யும் "ஹாப்பி நியூ இயர்!" என்று இரு­வ­ரும் கைக் குலுக்­கி­ய­தை­யும், இறுக்­க­மாக அணைத்து மகிழ்ந்­த­தை­யும் நினைக்­கும்­போது நெஞ்­சம் உவ­கை­யில் ஸ்கிப்­பிங் ஆடும்.

அவள் உற­வி­னர்­கள் வீட்­டுக்­குச் சென்று வந்­த­வு­டன் "இதைப் பாட்டி கொடுத்­தாங்க. எங்­க­ளுக்கு மாண்­ட­ரின் ஆரஞ்சு ரொம்ப முக்­கி­ய­மாம்!" என்­றாள்.

"ஏன் முக்­கி­யம்?" பழங்­க­ளைத் தூக்­கிப்­போட்­டுப் பிடித்து விளை­யா­டி­னேன்.

"ம்ம்... அது என்­னமோ மாண்­ட­ரின் ஆரஞ்­சின் நிறம் அதிர்ஷ்­டம் தரு­மாம். மத்­த­வங்­க­ளுக்­குக் கொடுக்­கும்­போது அவங்­க­ளுக்கு இன்­ப­மான வாழ்க்­கை­யோடு ஆரோக்­கி­யம், செல்­வம் எல்­லாம் கிடைக்­கு­மாம்!"

"எனக்கு எது­வும் வேணாம். நீ மட்­டும் போதும் முயல் குட்டி!" என்­றேன்.

"ஆமா ரெட்ட சட," என்று கூறும்­போதே ஒரு­வ­ரை­யொ­ரு­வர் நட்­பின் நெருக்­கத்­து­டன் அமை­தி­யாக மாண்­ட­ரின் ஆரஞ்­சின் தோலைத் தரை­யில் போடா­மல் எங்­கள் மடி­யில் போட்­டுக்­கொண்­டோம்.

நீண்ட நேரம் பேசிக்­கொண்டே சாப்­பிட்­ட­தெல்­லாம் மறக்­க­மு­டி­யாத அற்­பு­த­மான தரு­ணங்­கள்.

நெருக்­க­மாக இருந்த பழத்­தின் தோலை உரித்­த­தும் பிரிந்து சிதறி விடு­வ­தைப்­போல முயல் குட்­டி­யின் நட்பை இழக்­கக்­கூ­டா­தென்று மனம் கூறிக்­கொண்டே இருந்­தது.

*

அந்த ஆண்­டின் புத்­தாண்­டைச் சாக்­காக வைத்து எப்­ப­டி­யும் அவ­ளு­டன் சேர்ந்­து­விட வேண்டு­மென்று வீட்­டுக் கத­வைத் தட்­டி­னேன். 'ஆண்டி' தான் கத­வைத் திறந்­தார். வழக்­கம்­போல் அன்­பு­டன் வர­வேற்­றார். ஆவ­லு­டன் எட்­டிப்­பார்த்­தேன்.

வெறிச்­சோடி கிடக்­கும் வர­வேற்­ப­றை­யில் ஆள் உயர குளிர்­சா­த­னப்­பெட்டி மட்­டும் தெரிந்­தது.

"வேய்.." என்று இழுத்­தேன். "பாட்டி வீட்­டுக்­குப் போயி­ருக்கா. புது வரு­சத்­தைப் புது வீட்­டில்­தான் கொண்­டா­டப்­போ­றோம். அவ சொல்­ல­லையா?" ஆமாம் என்று தலையை மட்­டும் ஆட்­டி­விட்­டுக் கிளம்­பி­னேன். அவள் என்­னு­டன் பேச­வில்லை. விளை­யா­ட­வில்லை, ஆனால், எப்­ப­டி­யும் ஒரு முறை­யா­வது அவ­ளைப் பார்த்­து­வி­டு­வேன்.

இனி அது­வும் கிடை­யா­தென்று நினைத்­த­தும் இத­யம் வெடித்­து­வி­டு­வ­தைப்­போல இருந்­தது. தாங்­காப்­ப­டி­யில் அமர்ந்து அழு­து­கொண்டே இருந்­தேன். அதன் பிறகு நாங்­களும் வீடு மாறி­னோம்.

என்­னைக் கடந்துசெல்­லும் அவ­ளைப்­போல தோன்­றும் பெண்­க­ளி­லும், மாண்­ட­ரின் ஆரஞ்­சி­லும் என் முயல் குட்­டி­யைத் தேட ஆரம்­பித்­தேன்."

மாண்­ட­ரின் ஆரஞ்­சின் பெரு­மை­க­ளைக் கூறிய முயல் குட்டி கடை­சி­யில் பழத்­தின் புளிப்புத் தன்மை மட்­டும் உள்­ளத்­தைப் பதம்பார்க்­கும்­படி செய்­து­விட்­டாள்.

படிப்பு, வேலை, திரு­ம­ணம், குடும்­பம் என்று காலம் ஓடி­விட்­டது. ஆனா, எல்­லாம் நேத்து நடந்த மாதி­ரி­தான் இருக்­குது என்று பெரு­மூச்சு­விட்டார்.

வர­வேற்­ப­றை­யில் வழிந்­தோ­டிய பிரி­வின் வேத­னை­யைக் கலைத்­தாள் அஞ்­சலி.

"பெரி­யம்மா! அவங்­கப் பெயர் நினை­வி­ருந்­தால் சொல்­லுங்க, முகநூலில் தேடிப் பார்க்­கி­றேன்," என்­றாள்.

"பே...ரா?" யோசிக்­கும்­போது அஞ்­ச­லி­யு­டன் வந்­தி­ருந்­த­வள் "ஆண்டி.. இவங்­க­ளாப் பாருங்க?" என்று கைப்­பே­சியை நீட்­டி­னாள். அதில் அணைத்­த­படி இருக்­கும் பெண்­ம­ணியை உற்­றுப் பார்த்­தார்.

"...." எது­வும் கூறா­மல் படத்­தையே கூர்ந்து பார்த்­துக்­கொண்­டி­ருந்­தார்.

"சரியா தெரி­யல. அவ மாதிரி தான் இருக்கு. இடது நெற்­றி­யில் அடி­பட்ட காயத்­தின் தழும்­பி­ருக்­கும்."

ஒரு­நாள் இரு­வ­ரும் தாங்­காப்­ப­டி­யில் ஓடி விளை­யா­டும்­போது கால் இடறி விழுந்­த­வ­ளுக்கு நெற்­றி­யில் அடி­பட்­டு­விட்­டது.

இரத்­தம் வழி­யும் நெற்­றி­யைப் பார்த்­த­தும் கதறி அழு­து­விட்­டார். அப்­போது அவள் அண்­ணன் போட்ட சத்­தம் இப்­போ­தும் காதில் கேட்­ப­தைப்­போல இருந்­தது.

"இப்ப பாருங்க" என்று படத்­தைப் பெரி­தாக்­கிக் காட்­டி­னாள். "என் முயல் குட்­டி­யே­தான்!" என்­ற­வர் ஆனந்­தத்­தில் குதித்­தார். "இவங்க என் பெரி­யம்மா!" என்­ற­வளை அணைத்­துக் கன்­னத்­தில் முத்­த­மிட்­டார்.

"அவங்­கக்கிட்ட அஞ்­ச­லி­யைப் பத்­திக் கூறி­னேன். அப்போ அவங்­களும் எனக்­கும் ஒரு தமிழ் தோழி இருந்தா. அவ என்னை வெறுப்­பேத்தி விட்­டுட்டா அத­னால கோபத்­தோட அவள் கூட பேசு­வ­தில்லை. புது வீட்­டுக்­குப் போகும்­போது கூட சொல்­லா­மல் வந்­து­விட்­டேன். இப்போ எங்கே இருக்­கான்னு தெரி­யாது. அவ பேர் கூட என்­னவோ கு...குணா சரியா நினை­வில இல்ல. ஆனா, அவளை ரெட்டை சடைன்னு செல்­லமா கூப்­பி­டு­வேன்," தங்­க­மான தோழி­யைத்­ தன் முன் கோபத்­தால் இழந்­த­தைக் கூறி வருந்­தி­ய­தா­கக் கூறி­னாள்.

அதைக் கேட்­ட­தும் நம்ப முடி­யா­மல் திகைத்­த­வர் சில நொடி­க­ளுக்கு மூச்­சற்று நின்­றார்.

"அன்­னைக்கு நான்தான்! நான்தான்! தப்பு பண்­ணிட்­டேன்," என்­றார். "பதற்­ற­ம­டை­யா­தீங்க" அருந்த நீர் கொடுத்­தாள் அஞ்­சலி.

இரண்டு வாய் அருந்­தி­ய­தும் "என் முயலு என் முயலு" என்று அழு­த­வர் தனது இளமை பரு­வத்­தின் மகிழ்ச்­சி­யில் ஒரு கணம் பல­மா­கக் கைத்­தட்­டிச் சிரித்­தார்.

கைகளில் ஸ்கிப்­பிங் கயிற்­றைப் பிடித்­தி­ருப்­ப­துப்­போல "வா முயலு...வா" என்று குதிக்க ஆரம்­பித்­தார்.

இரண்டு மூன்று முறை குதித்­த­தும் மூச்சு வாங்­கி­யது. ஆச்­ச­ரி­யத்­து­டன் அஞ்­ச­லி­யும் அவள் தோழி­யும் பார்த்­துக் கொண்­டி­ருந்­தார்­கள்.

"முய­லைக் கூப்­பிட முடி­யுமா?" மூச்சு இரைக்­கக்­கேட்­டார்.

"அவ­ரைப் பார்த்­துப் பேச­லாம்" என்று 'ஃபேஸ் டைம்' செய்ய முயற்சி செய்­தாள் அஞ்­ச­லி­யின் தோழி.

எவ்­வ­ளவு அவ­ச­ர­மான வேலை­யாக இருந்­தா­லும் வெளியே செல்­வ­தற்கு முன் தன்னை ஒரு­முறை கண்­ணா­டி­யில் பார்த்து ஒப்­ப­னை செய்­துக்­கொள்­வார் குண­சுந்­தரி.

இப்­போது அழுத முகத்­து­டன் கலைந்­து­விட்ட ஒப்­ப­னை­யைப் பற்­றிக் கவ­லைப்­ப­டா­மல் கைப்­பேசி­யின் முன் அமர்ந்­தார்.

அவர்­க­ளின் பிரி­வுக்­குப் பிறகு வந்த முயல் ஆண்­டு­க­ளைக் கணக்­குப் போட்­டுப் பார்த்­த­வ­ருக்கு அதி­ச­ய­மாக இருந்­தது.

அவர் கண் முன் முயல்­கள் தாவித் தாவி அறு­பது ஆண்­டு­க­ளை­யும் தன்­னு­டன் இழுத்­துக் கொண்டே ஓடி மறைந்­தன. நீண்ட பெரு­மூச்சை விட்­டுக்­கொண்­டார்.

"ஃபேஸ் டைம்' சரியா வரல"

"...." பேச்­சற்று மீண்­டும் காட்­டில் தொலைந்­த­தைப்­போல தவித்­தார்.

"சரி. நான் பார்க்­கி­றேன் நீ போ," என்­ற­தும் அஞ்­ச­லி­யின் தோழி கிளம்­பி­னாள். மேசை­யில் இருக்­கும் தேநீ­ரும் கேக்­கும் அவ­ளையே பார்த்­தன.

"என் போனும் சரியா வேலை செய்­யல. ம்ம்..சார்ஜ் இல்ல," என்று எதையோ போனில் டைப் செய்துகொண்டே அறைக்­குச் சென்­றாள்.

இதென்ன காட்­டில் தொலைந்­தது மட்­டு­மல்­லா­மல் இந்­தப் பெண்­கள் கண்­க­ளை­யும் சேர்த்­துக் கட்­டி­விட்­டார்­களே? என்­றி­ருந்­த­வ­ருக்கு ஒரு மணி நேரம் கடந்­தது கூட தெரி­ய­வில்லை.

வாசல் மணி அடித்­தது; தடு­மா­றி­ய­படி சென்று கத­வைத் திறந்­தார்.

கையில் இரண்டு மாண்­ட­ரின் ஆரஞ்­சு­டன் "ரெட்­டச் சட!" என்று எதிரே நின்­றாள் முயல் குட்டி.