சிறுகதை
மலையரசி சீனிவாசன்
"சின்-யன் ஹவ் ல" என இரு ஆரஞ்சுகளோடு வாழ்த்திக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்கள் அஞ்சலியும் அவள் தோழியும். அஞ்சலி, குணசுந்தரியின் தங்கை மகள். கல்லூரி மாணவியான அவள் சிங்கப்பூரின் முதிர்ச்சியடைந்த வட்டாரங்களின் மறந்த கதைகளைத் தொகுத்து ஒப்படைக்க வேண்டிய ஒரு 'புராஜெக்ட்டு'க்காக குணசுந்தரியை சந்திக்க தோழியுடன் சென்றிருந்தாள்.
வழக்கமான எளிய ஒப்பனையுடன் நீல நிறச் சேலையில் கைப்பேசி கேமரா முன் அமர்ந்தார் குணசுந்தரி.
அஞ்சலி கட்டை விரலை உயர்த்திக்காட்டி 'ரெடி' என்றதும் தனது இளமைக் காலத்திற்குள் நுழைந்தார்.
"ஹேவ்லாக் ரோடு வட்டாரத்தில் ஓரறையும் சிறிய சமையலறையும் கொண்ட வீடமைப்பு கழக வீட்டில் ஒன்பது பேரும் வாழ்ந்தோம்."
"வாவ்... எப்படி ஒரே அறையில் ஒன்பது பேரும் இருந்தீர்கள்?" என்ற அஞ்சலியின் கேள்விக்குச் சிரித்தபடி "அப்போதெல்லாம் ஓரறையாக இருந்தாலும் பெரிதாகத்தான் இருந்தது," என்றார்.
"மறந்த விசயம்?"
"ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் பல இன மக்களும் சேர்ந்து கொண்டாடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதிலும் நாங்கள் இருந்த மாடியில் வாழ்ந்தவர்களில் சிலர் ஒரு விசயத்தைச் செய்தார்கள்.
ஆர்வம் தாங்காமல் குறுக்கிட்டு "என்ன அது?" என்றவளின் துருதுருப்பை ரசித்தபடியே தொடர்ந்தார்.
"இப்பதான் உணவை வீணாக்கக் கூடாதுனு விளம்பரங்களெல்லாம் போடுறாங்க. ஆனால், அப்பொழுதே நாங்கள் உணவை வீணாக்காமல் வீட்டிற்கு வெளியே அம்மா வைத்திருக்கும் ஒரு 'பிளாஸ்டிக்' வாளிக்குள் போட்டிருக்கும் நெகிழிப் பைக்குள் மீதமிருக்கும் உணவைப் போட்டுவிடுவோம்."
"நெகிழிப் பை என்றால்?"
"ஆங்கிலத்தில் 'பிளாஸ்டிக் பேக்'" "ஓ.." என்றவள் புன்முறுவலுடன் "சொல்லுங்க!" என்றாள்.
"அதை, கால்நடைப் பண்ணைக்குச் சொந்தக்காரரான ஒரு சீன அங்கிள் ஒவ்வொரு நாளும் அப்படியே அவர் கொண்டு வரும் பெரிய பானை போன்ற வாளிக்குள் கொட்டிக்கொள்வார். அதிலிருந்து வரும் புளித்த வாடையைப் பொருட்படுத்தியதில்லை அவர். அதற்கு ஈடாக சீனப் புத்தாண்டுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே எங்களுக்கு முப்பது அல்லது இருபது முட்டைகளோடு மாண்டரின் ஆரஞ்சையும் சேர்த்துக் கொடுப்பார்.
நாங்கள் ஓடி ஆடி வானில் பட்டம் விட்டு விளையாடிய பொற்காலத்தை இன்றைக்கு நினைத்தாலும் மனம் இனிக்கத்தான் செய்கிறது!" என்று முடித்தார்.
"வாவ் கிரேட்! தேங்ஸ்!"
"இது போதுமா?"
"ஓ... இதற்கு முன் நாங்கள் சேகரித்திருக்கும் தகவல்களையும், நீங்கள் கூறியதையும் சேர்த்து ஒரு கட்டுரையாக எழுதி ஆசிரியரிடம் ஒப்படைத்துவிடுவோம்."
குணசுந்தரியின் வாடிய முகம் அவளை என்னவோ செய்தது. அவரிடம் காரணத்தைக் கேட்பதற்குள் தேநீருடன் கேக் தட்டையும் மேசை மீது வைத்தார். அஞ்சலியின் தோழியும், "ஏன் கவலையுடன் இருக்கிறார்?" என்று வினவினாள். தெரியவில்லை என்று உதட்டைப் பிதுக்கியவள் மெல்ல அவரிடம், "ஏன் என்ன ஆச்சு ஒரு மாதிரியா இருக்கீங்க?"
"ஒண்ணுமில்ல அஞ்சலி. மாண்டரின் ஆரஞ்சைப் பார்த்ததும் மனசு பாரமாச்சு. அதான்"
பால்ய பருவத்தின் செல்லமான தோழியின் பிரிவையும், வலியையும் அதிகமாக வெளியே கூறியதில்லை.
"ஏன் உம்முன்னு இருக்கே?" என்று அம்மா கேட்டபோதும். "ஏன் மாண்டரின் ஆரஞ்சை அவ்வளவா சாப்பிட மாட்டேங்கிறே?" என்று கணவர் கேட்டபோதும் "சும்மாதான்!" என்று ஒரே வார்த்தையில் பதிலளித்துவிடுவார்.
"என்ன நடந்ததுன்னு சொல்லுங்க?"
"...ம்ம் சின்ன வயதில் என் தோழியிடம் அதிகப் பிரசங்கித்தனமா நடந்துக்கிட்டேன்," என்று நிறுத்தினார்.
அஞ்சலி லேசாகக் கையை வருடியதும் நெகிழ்ச்சியுடன் உரிக்காத மாண்டரின் ஆரஞ்சின் தோலை உரிக்கத்தொடங்கினார்.
"இப்ப மாதிரி வாசற்கதவைப் பூட்டியே வைத்திருக்க மாட்டோம். எங்கள் தளத்தில் மின்தூக்கிக்கு எதிரே இருந்த முயல்குட்டியுடன் சிறு வயசுலேயிருந்து ரொம்பவும் நெருக்கமா பழகினேன். அவ சீனப் பெயர் எனக்குச் சட்டென்று நினைவிற்கு வராது. அதனால அவ பிறந்தது முயல் ஆண்டு என்று தெரிந்ததும், அவளை முயல்குட்டி என்று செல்லமா கூப்பிட்டேன்.
அவளும் என் பெயருக்குப் பதிலாக அடிக்கடி ரெட்டைச் சடையுடன் பார்த்ததால் 'ரெட்டைச்சடை' என்றே அழைப்பாள்.
எங்க இருவருக்கும் ஒரே வயதென்பதால் பெரும்பாலான நேரங்களில் அவளுடன் தான் 'ஸ்கிப்பிங்' விளையாடுவேன்.
முதல்ல சொன்னனே அந்த அங்கிள் முட்டை கொடுத்துட்டுப் போனதும் அவர் பின்னாலேயே ஓடிச்சென்று இன்னும் முட்டை கிடைக்குமா? என்று இடுப்பில் கையை வைத்துக்கொண்டு நிற்போம். அவர் சிரித்துக்கொண்டே முட்டை இருந்தால் கொடுப்பார் அல்லது மாண்டரின் ஆரஞ்சுகள் கிடைக்கும். "ஹே...!" என்று மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு ஓடுவோம்.
ஒரே தொடக்கப்பள்ளியில் படித்ததால் எங்களின் நட்பு இன்னும் நெருக்கமானது.
ஒருநாள் ஸ்கிப்பிங் செய்வதற்கு வராண்டாவிற்கு வந்தேன், அதேநேரம் அவளும் கதவைத் திறந்தாள்.
எனக்கு ஒரே மகிழ்ச்சியாகிவிட்டது. அவளையும் விளையாட அழைத்தேன். "இப்போ முடியாது. கணக்கு நோட்டை மறந்துவிட்ட அண்ணன் பத்து நிமிசத்துல கீழே வரச்சொல்லி போன் பண்ணினான்," என கூறிக்கொண்டே மின்தூக்கிக்காகக் காத்திருந்தாள்.
அவ அண்ணனைப் பார்த்தால் எனக்கும் கொஞ்சம் பயம்தான். ஒருநாள் மதிய வேளையில் இருவரும் படியில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் "போய்ப் படி!" என்று விரட்டினான்.
மின்தூக்கியின் கதவு திறந்தது.
"உன் அண்ணன் வர இன்னும் பத்து நிமிசம் இருக்கே," அவள் கைகளைப் பிடித்திழுத்தேன்.
பல நாட்கள் நான் ஸ்கிப்பிங்கில் குதிக்க ஆரம்பித்ததும், அவளும் உள்ளே வந்துவிடுவாள். இருவரும் சேர்ந்து ஒரே ஸ்கிப்பிங்கில் குதித்து விளையாடுவோம்.
"என்னைவிடு. அண்ணன் வந்துவிடப் போறான்," என்று கையை உதறினாள்.
"இன்னும் நேரமிருக்கு" என்று மின்தூக்கிக்குள் நுழையவிடாமல் தடுத்தேன். இருமுறை மின் தூக்கியின் கதவு திறந்து மூடி திறந்தது.
விளையாடும் புத்தியோடு சிரித்துக்கொண்டே "நீயும் வா.." என்று ஸ்கிப்பிங் குதிக்க ஆரம்பித்தேன்.
அப்பொழுது "எவ்வளவு நேரமா கீழே நிற்கிறேன். கொடுத்துவிட்டு வந்து விளையாட வேண்டியதுதானே," என்று கோபத்துடன் அவள் தலையில் இருமுறை ஓங்கிக் குட்டினான் அவளது அண்ணன்.
கையிலிருந்த ஸ்கிப்பிங் கயிறு தரையில் விழுந்தது.
"அய்யோ வலிக்குது. நான் விளையாடல' அழுகையுடன் அவள் கூறுவதைக் கேட்காமல் மின்தூக்கியின் கதவு மூடியது.
எங்களைப் பிரிப்பதைப்போலத் தரையில் விழுந்த ஸ்கிப்பிங் கயிறு நடுவில் ஒரு கோடாகக் கிடந்தது.
செய்வதறியாது தயக்கத்துடன் "சோரி!" என்று கையைப் பிடித்தேன்.
"ச்சீ போ ஐ டோன் லைக் யூ. உன்னை எனக்குப் பிடிக்க வில்லைன்னு" தலையைத் தேய்த்துக் கொண்டே சென்றாள். அதைச் சற்றும் எதிர்பார்க்காத நானும் "போ போ இனிமே யாருடன் சேர்ந்து விளையாடப் போறே?" என்று வீட்டிற்கு ஓடினேன்.
சில நாட்களில் கோபம் சரியாகிவிடும். பழையபடி சேர்ந்து விளையாடலாமென்று காத்திருந்தேன்.
வகுப்பிலும் என்னுடன் பேசவில்லை. இடைவேளையிலும் சேர்ந்து சாப்பிடவில்லை. அவள் முன் போய் நின்றாலும் என்னைக் கவனிக்காதவளைப்போலவே நடந்துகொண்டாள்.
"வா விளையாடலாம்" என்று மற்ற தோழிகள் அழைத்தபோது கண்கள் அவளையே தேடின. நாட்கள் செல்லச் செல்ல அவளே வந்து பேசட்டும் என்று இருந்துவிட்டேன்.
தங்கைகள் ஸ்கிப்பிங் கயிறு தாண்டுவதை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஒரு வாரத்தில் முயல் ஆண்டுப் பிறக்க இருந்தது. அப்பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.
ஒவ்வொரு சீனப் புத்தாண்டிலும் என் கையில் இரண்டு மாண்டரின் ஆரஞ்சைக் கொடுப்பதையும் "ஹாப்பி நியூ இயர்!" என்று இருவரும் கைக் குலுக்கியதையும், இறுக்கமாக அணைத்து மகிழ்ந்ததையும் நினைக்கும்போது நெஞ்சம் உவகையில் ஸ்கிப்பிங் ஆடும்.
அவள் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று வந்தவுடன் "இதைப் பாட்டி கொடுத்தாங்க. எங்களுக்கு மாண்டரின் ஆரஞ்சு ரொம்ப முக்கியமாம்!" என்றாள்.
"ஏன் முக்கியம்?" பழங்களைத் தூக்கிப்போட்டுப் பிடித்து விளையாடினேன்.
"ம்ம்... அது என்னமோ மாண்டரின் ஆரஞ்சின் நிறம் அதிர்ஷ்டம் தருமாம். மத்தவங்களுக்குக் கொடுக்கும்போது அவங்களுக்கு இன்பமான வாழ்க்கையோடு ஆரோக்கியம், செல்வம் எல்லாம் கிடைக்குமாம்!"
"எனக்கு எதுவும் வேணாம். நீ மட்டும் போதும் முயல் குட்டி!" என்றேன்.
"ஆமா ரெட்ட சட," என்று கூறும்போதே ஒருவரையொருவர் நட்பின் நெருக்கத்துடன் அமைதியாக மாண்டரின் ஆரஞ்சின் தோலைத் தரையில் போடாமல் எங்கள் மடியில் போட்டுக்கொண்டோம்.
நீண்ட நேரம் பேசிக்கொண்டே சாப்பிட்டதெல்லாம் மறக்கமுடியாத அற்புதமான தருணங்கள்.
நெருக்கமாக இருந்த பழத்தின் தோலை உரித்ததும் பிரிந்து சிதறி விடுவதைப்போல முயல் குட்டியின் நட்பை இழக்கக்கூடாதென்று மனம் கூறிக்கொண்டே இருந்தது.
*
அந்த ஆண்டின் புத்தாண்டைச் சாக்காக வைத்து எப்படியும் அவளுடன் சேர்ந்துவிட வேண்டுமென்று வீட்டுக் கதவைத் தட்டினேன். 'ஆண்டி' தான் கதவைத் திறந்தார். வழக்கம்போல் அன்புடன் வரவேற்றார். ஆவலுடன் எட்டிப்பார்த்தேன்.
வெறிச்சோடி கிடக்கும் வரவேற்பறையில் ஆள் உயர குளிர்சாதனப்பெட்டி மட்டும் தெரிந்தது.
"வேய்.." என்று இழுத்தேன். "பாட்டி வீட்டுக்குப் போயிருக்கா. புது வருசத்தைப் புது வீட்டில்தான் கொண்டாடப்போறோம். அவ சொல்லலையா?" ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டுக் கிளம்பினேன். அவள் என்னுடன் பேசவில்லை. விளையாடவில்லை, ஆனால், எப்படியும் ஒரு முறையாவது அவளைப் பார்த்துவிடுவேன்.
இனி அதுவும் கிடையாதென்று நினைத்ததும் இதயம் வெடித்துவிடுவதைப்போல இருந்தது. தாங்காப்படியில் அமர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். அதன் பிறகு நாங்களும் வீடு மாறினோம்.
என்னைக் கடந்துசெல்லும் அவளைப்போல தோன்றும் பெண்களிலும், மாண்டரின் ஆரஞ்சிலும் என் முயல் குட்டியைத் தேட ஆரம்பித்தேன்."
மாண்டரின் ஆரஞ்சின் பெருமைகளைக் கூறிய முயல் குட்டி கடைசியில் பழத்தின் புளிப்புத் தன்மை மட்டும் உள்ளத்தைப் பதம்பார்க்கும்படி செய்துவிட்டாள்.
படிப்பு, வேலை, திருமணம், குடும்பம் என்று காலம் ஓடிவிட்டது. ஆனா, எல்லாம் நேத்து நடந்த மாதிரிதான் இருக்குது என்று பெருமூச்சுவிட்டார்.
வரவேற்பறையில் வழிந்தோடிய பிரிவின் வேதனையைக் கலைத்தாள் அஞ்சலி.
"பெரியம்மா! அவங்கப் பெயர் நினைவிருந்தால் சொல்லுங்க, முகநூலில் தேடிப் பார்க்கிறேன்," என்றாள்.
"பே...ரா?" யோசிக்கும்போது அஞ்சலியுடன் வந்திருந்தவள் "ஆண்டி.. இவங்களாப் பாருங்க?" என்று கைப்பேசியை நீட்டினாள். அதில் அணைத்தபடி இருக்கும் பெண்மணியை உற்றுப் பார்த்தார்.
"...." எதுவும் கூறாமல் படத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
"சரியா தெரியல. அவ மாதிரி தான் இருக்கு. இடது நெற்றியில் அடிபட்ட காயத்தின் தழும்பிருக்கும்."
ஒருநாள் இருவரும் தாங்காப்படியில் ஓடி விளையாடும்போது கால் இடறி விழுந்தவளுக்கு நெற்றியில் அடிபட்டுவிட்டது.
இரத்தம் வழியும் நெற்றியைப் பார்த்ததும் கதறி அழுதுவிட்டார். அப்போது அவள் அண்ணன் போட்ட சத்தம் இப்போதும் காதில் கேட்பதைப்போல இருந்தது.
"இப்ப பாருங்க" என்று படத்தைப் பெரிதாக்கிக் காட்டினாள். "என் முயல் குட்டியேதான்!" என்றவர் ஆனந்தத்தில் குதித்தார். "இவங்க என் பெரியம்மா!" என்றவளை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டார்.
"அவங்கக்கிட்ட அஞ்சலியைப் பத்திக் கூறினேன். அப்போ அவங்களும் எனக்கும் ஒரு தமிழ் தோழி இருந்தா. அவ என்னை வெறுப்பேத்தி விட்டுட்டா அதனால கோபத்தோட அவள் கூட பேசுவதில்லை. புது வீட்டுக்குப் போகும்போது கூட சொல்லாமல் வந்துவிட்டேன். இப்போ எங்கே இருக்கான்னு தெரியாது. அவ பேர் கூட என்னவோ கு...குணா சரியா நினைவில இல்ல. ஆனா, அவளை ரெட்டை சடைன்னு செல்லமா கூப்பிடுவேன்," தங்கமான தோழியைத் தன் முன் கோபத்தால் இழந்ததைக் கூறி வருந்தியதாகக் கூறினாள்.
அதைக் கேட்டதும் நம்ப முடியாமல் திகைத்தவர் சில நொடிகளுக்கு மூச்சற்று நின்றார்.
"அன்னைக்கு நான்தான்! நான்தான்! தப்பு பண்ணிட்டேன்," என்றார். "பதற்றமடையாதீங்க" அருந்த நீர் கொடுத்தாள் அஞ்சலி.
இரண்டு வாய் அருந்தியதும் "என் முயலு என் முயலு" என்று அழுதவர் தனது இளமை பருவத்தின் மகிழ்ச்சியில் ஒரு கணம் பலமாகக் கைத்தட்டிச் சிரித்தார்.
கைகளில் ஸ்கிப்பிங் கயிற்றைப் பிடித்திருப்பதுப்போல "வா முயலு...வா" என்று குதிக்க ஆரம்பித்தார்.
இரண்டு மூன்று முறை குதித்ததும் மூச்சு வாங்கியது. ஆச்சரியத்துடன் அஞ்சலியும் அவள் தோழியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"முயலைக் கூப்பிட முடியுமா?" மூச்சு இரைக்கக்கேட்டார்.
"அவரைப் பார்த்துப் பேசலாம்" என்று 'ஃபேஸ் டைம்' செய்ய முயற்சி செய்தாள் அஞ்சலியின் தோழி.
எவ்வளவு அவசரமான வேலையாக இருந்தாலும் வெளியே செல்வதற்கு முன் தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்து ஒப்பனை செய்துக்கொள்வார் குணசுந்தரி.
இப்போது அழுத முகத்துடன் கலைந்துவிட்ட ஒப்பனையைப் பற்றிக் கவலைப்படாமல் கைப்பேசியின் முன் அமர்ந்தார்.
அவர்களின் பிரிவுக்குப் பிறகு வந்த முயல் ஆண்டுகளைக் கணக்குப் போட்டுப் பார்த்தவருக்கு அதிசயமாக இருந்தது.
அவர் கண் முன் முயல்கள் தாவித் தாவி அறுபது ஆண்டுகளையும் தன்னுடன் இழுத்துக் கொண்டே ஓடி மறைந்தன. நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டார்.
"ஃபேஸ் டைம்' சரியா வரல"
"...." பேச்சற்று மீண்டும் காட்டில் தொலைந்ததைப்போல தவித்தார்.
"சரி. நான் பார்க்கிறேன் நீ போ," என்றதும் அஞ்சலியின் தோழி கிளம்பினாள். மேசையில் இருக்கும் தேநீரும் கேக்கும் அவளையே பார்த்தன.
"என் போனும் சரியா வேலை செய்யல. ம்ம்..சார்ஜ் இல்ல," என்று எதையோ போனில் டைப் செய்துகொண்டே அறைக்குச் சென்றாள்.
இதென்ன காட்டில் தொலைந்தது மட்டுமல்லாமல் இந்தப் பெண்கள் கண்களையும் சேர்த்துக் கட்டிவிட்டார்களே? என்றிருந்தவருக்கு ஒரு மணி நேரம் கடந்தது கூட தெரியவில்லை.
வாசல் மணி அடித்தது; தடுமாறியபடி சென்று கதவைத் திறந்தார்.
கையில் இரண்டு மாண்டரின் ஆரஞ்சுடன் "ரெட்டச் சட!" என்று எதிரே நின்றாள் முயல் குட்டி.

