- அனுபமா உதிவ்
அகழ்வாரைத் தாங்கும் நிலமே
உன் பொறுமை எங்கே?
வள்ளுவரின் வாய்மொழி
பொய்த்துப் போனதோ?
'மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்' என்றாரே
முரஞ்சுயூர் நாகனார்
இன்று
பிணந்திணிந்த நிலனாய்
நிலனேந்திய இடுகாடாய்
மாறிப் போனதேன்?
தர்மமும் நீதியும்
விதைக்கப்பட்ட
இந்த பூமியைக்
கொலைகார பூமியாக
மாற்றியது ஏன்?
பொறுமைக்கு இலக்கணமான பூமியே
உனக்குத் தலைக்கனம்
வந்தது எப்போது?
வாரி வாரி வழங்கிய பூமியே
எல்லோரையும்
வாரி எடுத்துக் கொண்டு போனதேன்?
ஆழ்ந்த பெருமையும்
எதையும் தாங்கும் உறுதியும்
பரந்த உள்ளத்தின் பொறுமையும்
அளவின்றிப் படியளக்கும் கொடைகுணமும் கொண்ட நிலமே
உன் பெருமைகள் எங்கே?
பவணந்தி முனிவரின் நன்சொல்
பயனற்றுப் போனதோ?
இரக்கம்கொள் நிலமே!

