- அனுபமா உதிவ்
விமானத்தின் ஜன்னல் வழியே
உன்னைத் தேடுகின்றேன்
மேகக் கூட்டங்கள்
என் கண்களை மறைக்கின்றன
மேகங்கள் உன் தோழிகளா?
அவர்களை நீதான்
தூது அனுப்பி வைத்தாயோ?
நான் சிங்கப்பூருக்குப்
புறப்பட்டு வந்தபோது
உன்னைத் தேடினேன்
உன் வீட்டு வாசலில்
கோலம் மட்டுமே இருந்தது
அழகே எங்கே சென்றுவிட்டாய்?
உன் இதயத்தில் தங்க
மோதிரம் வாங்கினேன்
அந்த அழகான தங்க மோதிரம்
உன் கைவிரல்களின் அழகில்
மச்சம் குறைந்து போனது
மாலை வெயில்
மஞ்சள் நிறமானதே
உன் கொஞ்சும்
விரல்களால்தான்!
விமானங்கள் வழக்கமாக
மீண்டும் பறக்கத் தொடங்கும்
என்றபோதுதான்
எனக்கு உயிரே வந்தது
உன்னைக் காண்பேன் என்று
நாம் சந்தித்துக்கொண்ட
யானை மலையும்
கல்லிச்சி மரங்களும்
மலைத்தொடர்ச்சி ஓடைகளும்
என்னை எங்கே என்று கேட்கும்?
வந்துவிடுவேன் என்று சொல்
காட்டுமலைக்கோவில்
பிள்ளையார் முன்
சத்தியம் செய்தாயே
நினைவிருக்கிறதா?
குரங்குகள் ஏறி
புளியை உலுக்கும் புளியமரங்களும்
புளியை உண்ணவரும்
புள்ளிமான்களும்
நம்மைத் தேடும்
சந்திக்க வருவோம்
என்று சொல்
உறுதியோடு!
அய்யனாரின்
குதிரைக்கு அடியில்
மழைக்கு ஒதுங்கினோமே
இவையெல்லாம்
நினைவிருக்கிறதா?
ஓராண்டுக்குள்
ஒப்பந்தம் முடிந்துவிடும்
வருவேன் பெண்கேட்க
காத்திருப்பாய்!

